பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

தேவமைந்தன்“அதென்ன, நேரடியாகச் சிந்திப்பவர் என்றோ சுற்றி வளைத்துச் சிந்திக்காதவர் என்றோ கவிஞர்கள் சிலரைப் பற்றித் தலைப்பிடுகிறீர்கள்?” என்று நண்பர் கேட்டார். எனக்கு செர்வாண்டெசின் டான் குவிசோட்’டில் வருமொரு வாக்கியம் நினைவுக்கு வந்தது. “என் சிந்தனைகள் [கம்பளி சேகரிப்பதுபோல்] ஞாபகமறதியில் எங்கெங்கோ ஓடிவிடுகின்றன!”(My thoughts ran a wool-gathering. – CERVANTES –Don Quixote. ‘கம்பளி சேகரிப்பதுபோல்’ என்று ஒரு வசதிக்காக இடைப்பிறவரல் அடைப்பில் கொடுத்துள்ளேன். wool gathering என்பது மொழிமரபுப்படி absent-mindednessஐக் குறிக்கும்) செர்வாண்டெசின் புலப்பாடுபோல, படைப்பாளர்கள் பலர் தாங்கள் எதைச் சொல்ல வருகிறார்களோ அதில் நிலைக்காமல் எங்கெங்கோ சுற்றி விட்டு ‘அடடா! எங்கோ போய் விட்டோமே..” என்று தன்னிரக்கம் கொண்டு, மீண்டும் தாங்கள் விட்ட புள்ளியிலிருந்து தொடர்வார்கள்.

பாரதியார் அப்படிப்பட்டவர் அல்லர். சொல்ல வந்த செய்தியைச் சுளைபோலக் கொடுப்பவர். ‘வெட்டொன்று துண்டிரண்டாக’ச் சொல்பவர். பாரதியாரின் கட்டுரைகள் தொடக்கத்தில் நான்கு பகுதிகளாக வெளிவந்தன. பின்னர், ‘பாரதி நூல்கள் என்று’ தனித்தனியாக – பகுதிகள் பலவாகப் பதிப்பிக்கப் பெற்றன. பின்னர் சென்ற எழுபதுகளில்தாம் அவை முழுவதும் கொண்ட தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின.

களத்திலிருந்து பொறுக்குமணிகளாகச் சிலவற்றை முதலிலும், கதிர்களாகச் சிலவற்றைப் பின்னாலும் – அவற்றிலிருந்து, இங்கே தருகிறேன்.

****

ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க்கொருவர் பயப்படல் இல்லை. மானிடரே, இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி.
**
கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும், தேவர்களே – எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!
**
எதிலும், எப்போதும், யாருக்கும் பயந்தும், மனம் வேறு செய்கை வேறாக நடிக்கலாகாது.
**
பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும், தெய்வத்தை நம்பவேண்டும்.
**
யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் கல்லை விட்டுப் போய் விடுவார்.
**
பரிபூரண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம் கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல, உனக்குள்ளிருந்தே தெளிந்த அறிவும், தீரத்தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். உன் இஷ்டசித்திகள் எல்லாம் நிறைவேறும். இது சத்தியம். அநுபவத்திலே பார்.
**
எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும் போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும்.
**
தைரியமாக, நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள்.
**
சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணியத் தலங்களுமே ஜீவன் முக்திச் சின்னங்கள்.
**
இகலோக இன்பங்கள், பரலோக இன்பங்கள் இரண்டுமே இறைவனிடம் வேண்டலாம். இகலோகத்தில் நமக்குத் தெய்வம் தர வேண்டிய மூன்று சக்திகள்:
1. அறிவு
2. செல்வம்
3. தைரியம்
தெய்வம் எல்லாம் செய்யும்.
**
நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரமெலாம் கொடுக்கும்.
நம்பினார் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு.
**
மனிதனைக் கெடுக்கும் உட்பகை – நம்பிக்கைக் குறைவு.
**
தற்கால அசௌகரியங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும்.
**
நம்பு; கேள், ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும்.
**
தனக்குத் தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது.
**
திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது. பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறுபணக்காரர் வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலே பாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வகோலமாக வந்து சுடுகின்றது.
**
பசி வந்தால் கோபம் வருகிறது. பசி அடங்கினால் கோபம் அடங்குகிறது. அன்னதானமே உத்தம தர்மம்.
***
மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்து போனதாக வைத்துக் கொள்ளுவோம்.அவர் திரும்பவும் பிறப்பாரா? தெரு வழியாக ஒருவன் நடந்துபோகும்போது காலிலே ஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக் கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? இதையெல்லாம் பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன. அவற்றிலே படித்துக் கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்ல வந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம் ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம்.

‘ஹிந்து ஸ்தானம்’ என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இது நமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக்கூட்டத்திற்கும் பெயர். இந்த ஜனக்கூட்டத்திற்கு ‘பாரத ஜாதி” என்று பெயர் சொல்வதுண்டு.
**
கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி! தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, காக்கை, புழு, எறும்பு ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், “ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி” என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன்மீது சகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் சந்தேகமே கிடையாது.
**
நடந்தது எல்லாம் போக; இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும்.

கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
“கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லையென்று நம்பலாமா?

கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.
இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. ‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை — எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.
ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள்.

ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக.

கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.

ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண்மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன.

சிவன் நீ ; சக்தி உன் மனைவி .
விஷ்ணு நீ ; லக்ஷ்மி உன் மனைவி.
பிரம்மா நீ ; சரஸ்வதி உன் மனைவி .

இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம்.
இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள்.

கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது.
**
இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகிச் சிதறுகின்றன. பல அநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழுகிறார்கள்.

இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.
**
இன்னும் எத்தனை எத்தனையோ சிந்தனை அலைகள் பாரதி எனும் கடலின் வாசிப்புக் கரையில் வந்து மோதுகின்றன. அவை, ஆழமிக்க நடுக்கடலுக்குச் சென்று பார்க்க உதவும் தூண்டுதல்கள் மட்டுமே.

****
annan_pasupathy@hotmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்