பாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

சி. ஜெயபாரதன், கனடா


1987 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி, ‘கனடாவின் அணுவியல் விஞ்ஞானப் பிதா ‘ எனப் பெயர் பெற்ற, W.B. லூயிஸ், அண்டாரியோவில் உள்ள டாப் ரிவர் [Deep River] என்னும் ஊரில் காலமானார். கனடாவின் முத்திரை மாடலான ‘கான்டு ‘ [CANDU] அணு மின்சக்தி நிலையம் உருவாக ஆராய்ச்சிகள் செய்தவர், அவர். உலகிலே மிகச் சிக்கன நியூட்ரான் அணுஉலை, மிக மலிவான எரிக்கோல் அணுஉலை, விலை மிக்க அழுத்தக்கலன் [Pressure Vessel] இல்லாத அணுஉலை, என்றெல்லாம் புகழ் பெற்றது, கான்டு அணுஉலை! இந்தியாவில் அணுயுகத்தின் நுழைவாயிலைத் திறந்து வைத்த டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா F.R.S. இவரது இணைபிரியா நண்பர். இந்தியா அணுவியல் துறையில் வளர்ச்சி அடையக் கனடாவிலிருந்து மிகவும் உதவி செய்தவர், டாக்டர் லூயிஸ்.

கனடா அணுசக்தித் துறையகத்தின் [Atomic Energy of Canada Ltd.] சாக் ரிவர் ஆய்வுக் கூடத்தில் [AECL, Chalk River Research Laboratories] நுணுக்க ஆய்வுகள் செய்து, வெற்றி அடைந்த விஞ்ஞான மேதை லூயிஸைப் பற்றி பலருக்குத் தெரியாது! கான்டு அணுசக்தி நிலையங்கள் அகில உலகில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, அர்ஜென்டைனைா, ருமேனியா, சைனா போன்ற பல நாடுகளில், வெற்றிகரமாய் இயங்கிவர விதையிட்ட விஞ்ஞானி லூயிஸ் யாரென்று பலர் அறிய மாட்டார்கள்! 1988 ஆம் ஆண்டில் அகில உலகில் 400 மேற்பட்ட அணுசக்தி நிலையங்களில் உச்சத் திறத்தோடு சிறப்புடன் இயங்கிய முதல் நிலையம், கனடாவின் பிக்கரிங்! மேலும் அந்தப் பட்டியலில், முதல் பத்தில் ஐந்து கனடாவின் கான்டு நிலையங்கள்! இவ்வாறு அகிலப் பேர் பெற்று, அத்துடன் பாரதத்தின் முதல் கான்டு அணுசக்தி நிலையம் நிறுவக் காரண கர்த்தாவாய் இருந்தவர், டாக்டர் லூயிஸ் என்பது இந்தியர் பலருக்குத் தெரியவே தெரியாது!

1908 ஆம் ஆண்டு லூயிஸ் இங்கிலாந்தில் உள்ள கம்பர்லாந்து மாநிலத்தின் காஸில் காரக் என்னும் ஊரில் பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்து, பெளதிக விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டதாரி ஆகி, காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் 1930 முதல் ஏழு ஆண்டுகள், நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரூதர்ஃபோர்டுடன், அணுக்கருவின் ஆல்ஃபா துகள் கதிரியக்கம் பற்றி ஆராய்ச்சி செய்தார். ரூதர்ஃபோர்டு தான் முதன்முதலில் செயற்கை அணுக்கருச் சிதறலைக் [Artificial Disintegration of Atomic Nucleus] கண்டு பிடித்து, அணுவின் உட்கரு அமைப்பை விளக்கியவர். லூயிஸ் அங்கே நிறுவப் பட்ட ‘சுழல் விரைவாக்கியை ‘ [Cyclotron] இயக்கி, அதிவேகப் பரமாணுக்களைக் [Sub Atomic Particles] கணையாய் ஏவி, கன அணுக்களைத் தாக்குதலால் நிகழ்ந்த, அணுக்கருச் சிதறல்களைப் [Nuclear Disintegration] பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டார். பிற்காலத்தில் [1946] கனடாவில், கான்டு அணுஉலையில் சீராக நியூட்ரான்கள் தாவி யுரேனிய அணுக்கருவைப் பிளந்து சக்தியை வெளியாக்க, இந்த ஆய்வுகள் அவருக்கு மிகவும் பயன்பட்டன.

1945 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அவருக்கு F.R.S [Fellow of the Royal Society] விருது அளித்தது. அதன்பின் அவருக்கு 1946 இல் கனடாவின் சாக் ரிவர், அணுசக்தி ஆய்வுத் தளத்தில் [Atomic Energy Research, Chalk River] வேலை கிடைத்து, அணுக்கரு ஆய்வுக் குழுவின் ஆணையராக [Director] நியமிக்கப் பட்டார். 1952 இல் AECL தோன்றியதும், லூயிஸ் அணுக்கரு ஆராய்ச்சி வளர்ச்சித் துறைக்குத் [Research & Development] துணை வேந்தரானார்.

டாக்டர் லூயிஸ் கனடாவில் அணுக்கரு ஆய்வில் சாத்தித்தவை என்ன ? ‘யுத்தம் என்பது அழியியல் விஞ்ஞானம் ‘ என்று ஒரு மேதை கூறியது மெய்யான வாய்மொழி! 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடக்கையில், அணு ஆயுதம் உருவாக்க பல ஐரோப்பிய விஞ்ஞானிகள் அமெரிக்காவில் கூடிய போது, இரண்டு கன உலோகங்கள் தேவைப் பட்டன. ஒன்று U-235 என்ற யுரேனியம். அடுத்தது Pu-239 என்ற புளுடோனியம். புளுடோனியம் கனடாவில் தயாரிக்க பிரிட்டன் ஒப்புக் கொண்டு பல விஞ்ஞானிகளை இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்தது. அவர்களில் ஒருவர் டாக்டர் லூயிஸ். புளுடோனியத் திட்டம் முடிந்தபின், பலர் பிரிட்டனுக்குத் திரும்பிடும் போது, போகாமல் கனடாவிலே தங்கியவர் லூயிஸ்.

லூயிஸ் இராப் பகலாக ஆர்வமோடு ஆய்வில் ஈடுபடும் நுழைபுல விஞ்ஞானி. அவரது வேதம், அணுக்கரு நியூட்ரான் சிக்கனம்! அணுஉலைக் கலனாய் [Reactor Core] அமையும், எந்த உறுப்பு உலோகமும் நியூட்ரானை விழுங்கக் கூடாது! அவரது ஆய்வு நியதி முறையில் முழுமையாய் உருவானதுதான், கான்டு [CANDU-CANada Uranium Deuterium] அணுஉலை! இயற்கை யுரேனிய எரு [Natural Uranium Fuel], மலிவான எரி பொருள்! கனநீர் மிதவாக்கி[Heavy Water Moderator] . நியூட்ரான் சிக்கனம், அவரது கருத்துக்களுக்கு உருவம் தந்து அணுஉலையைக் கட்டிய இஞ்சியர்களில் முக்கியமானவர், லார்ன் கிரே [J.L. Gray]. கனடாவில் முதலில் தோன்றிய ஆய்வு அணுஉலைகள் NRX[40MWt], NRU[100MWt], அணு மின்சக்தி நிலையங்கள் NPD[20MWe], Douglas Point[200MWe], Pickering [4000MWe], Bruce [4800Mwe], Darlington [3200MWe], Gentilly[600MWe], Point Lepreau [600MWe], மற்றும் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, அர்ஜென்டைனா, ருமேனியா, சைனாவில் உள்ள பல அணு உலை, அவரது கான்டு மாடல்களே! அவரது ஆய்வில் எழுந்த ‘வேகப் பெருக்கி அணுஉலை ‘ [Fast Breeder Reactor], ஆர்கானிக்-தணிப்புக் கனநீர்-மிதவாக்கி அணு உலை ‘ [Organic-Cooled Heavy Water-Moderated Reactor] ஆகியவை, AECL வசம் போதிய நிதி இல்லாமையால், வர்த்தக ரீதியில் உருவாக வில்லை!

உலகிலே, ராஜஸ்தான் சாம்பல் நதிக் கரையில், முதல் கான்டு அணு மின்சக்தி நிலைய நிர்மாணத்திற்கு ஆணை கொடுத்த அன்னிய நாடு, இந்தியா என்பது இங்கு குறிப்பிடத் தக்கது! இன்று பாரதத்தில் பனிரெண்டுக்கும் மேற்பட்ட கான்டு அணுசக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன! அகில உலகில் பல தேசங்களில் கான்டு அணு மின்சக்தி நிலையங்கள் சீரும், சிறப்புடன், பேரும் புகழுடன் பெருகி வருகையில், கான்டு பிறந்த கனடா நாட்டில், தற்போது தேவை இருந்தும் பெருகாமல், அவற்றின் எண்ணிக்கைச் சிறுத்துக் கொண்டு போவது மிக மிக வருந்தத் தக்கதே! இந்த வெட்க நிலையை அறிந்தால், காலம் சென்ற டாக்டர் லூயிஸ் ஆத்மா கூடக் கண்ணீர் விடும்!

இந்தியாவில் அணுயுகத்தின் நுழைவாயிலைத் திறந்து வைத்தவர், டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா F.R.S [H.J. Bhabha]. பாரதத்தில் விஞ்ஞானி பாபாவைக் கண்டு பிடித்தவர், பண்டிட் ஜவஹர்லால் நேரு! இந்தியா அணுவியல் துறையில் வளர்ச்சி அடையக் கனடாவிலிருந்து மிகவும் உதவி செய்தவர், டாக்டர் லூயிஸ். அவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்கள். ஒரே சமயத்தில் இங்கிலாந்து லண்டனில் இருவரும் F.R.S விருது பெற்றவர்கள். டாக்டர் பாபா அண்டவெளிக் கதிர்ப் பொழிவில் [Cosmic Rays] ஆய்வுகள் புரிந்தவர். 1956 இல் பம்பாயில், கனடா இந்திய ஆய்வு அணுஉலை [Canada India Reactor] நிறுவ, கனடா நிதி உதவவும், AECL விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்கள் பெறவும் ஏற்பாடு செய்தவர், டாக்டர் லூயிஸ். கனடாவுக்கும் இந்தியாவுக்கும் முதன் முதல் அணுவியல் துறை நட்பிணைப்பை உண்டாக்கியவர், டாக்டர் லூயிஸ். அடுத்து AECL ராஜஸ்தான் அணுசக்தி நிலையத்தை 1964 இல் நிறுவ ஏற்பாடுகள் தயாராகின. எதிர்பாராத வாறு 1966 இல் வியன்னா அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளப் போகும் போது, டாக்டர் பாபா விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது திடார் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகியது! பம்பாயில் அவர் ஆக்கிய ‘டிராம்பே அணு ஆய்வுக் கூடத்திற்குப் ‘, ‘பாபா அணு ஆய்வு மையம் ‘ [Bhabha Atomic Research Centre] என்று புதுப் பெயர் சூட்டினார்கள். பிறகு 1974 மே மாதம் பாரத அரசு, ராஜஸ்தான் ‘பொக்ரான் ‘ பாலை நில பூமிக்குள் ‘சமாதான அணு வெடிப்பைப் ‘ [Peaceful Atomic Explosion] போட்டுப், பாபா-லூயிஸ் கட்டிய அரிய பாலத்தைத் துண்டாக்கியது!

1967 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ‘அமைதிப் பணிக்கு அணுசக்தி ‘ [Atoms for Peace] விருதை டாக்டர் லூயிஸ் பெற்றார். பாரத தேசம் டாக்டர் பாபாவுக்கு ‘பாரத ரத்னா ‘ பட்டம் சூட்டியது. இருபதாம் நூற்றாண்டு பெற்றெடுத்த, ஆக்கப் பணி விஞ்ஞானிகள் பட்டியலில் டாக்டர் பாபா, டாக்டர் லூயிஸ் இருவரும் உச்ச இடம் பெறுவது நிச்சயம்! அவர்களைப் போன்ற ஒப்பிலா அணுவியல் விஞ்ஞானிகள், உலகினில் இனி எப்போது பிறப்பார்கள் ?

Series Navigation