பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

(தமிழில்) புதுவை ஞானம்


மீண்டும் உயிர்த்தெழுந்து வா….
என்னுடன்
என் சகோதரனே ‘

துயரங்களால் ஆழப்புதைக்கப்பட்ட
உனது கரங்களை நீட்டு
கருங்கல்லால் மூடப்பட்ட
கல்லறையில் இருந்து
திரும்பி வரப்போவதில்லை நீ….

பூமிக்கு அடியில் புதையுண்டு போன
காலத்திலிருந்து
எழுந்து வரப்போவதில்லை.

உனது கோபக் குரல் மீண்டும்
ஒலிக்கப் போவதில்லை – அல்லது
தோண்டப்பட்ட உன் விழிகள்
இமை திறக்கப் போவதில்லை.

பூமியின் அடியாழத்திலிருந்து
என்னைப் பாருங்கள் ….
நிலத்தை உழுதவர்களே
நெசவாளிகளே அதிகம் பேசாத
ஆட்டிடையர்களே – நம்
இனமரபுக் கடற்பறவையின்
இனிய குஞ்சுகளே ‘
சதிகாரர்களின் கருங்கல் பலிபீடங்கள்
உயர்ந்து எழுந்துவிட்டன….
நீங்கள் புதையுண்ட இடத்தின்மேல்.

ஆண்டியன் மலைத்தொடரின்
கண்ணீரில் உறைந்து போன
பணி மனிதர்களே ‘

விரல்கள் நசிப்பிக்கப்பட்ட
ஆபரணக் கலைஞர்களே ‘
நாற்றங்காலில் விசனமாய்
அமர்ந்திருக்கும் நலிந்த உழவர்களே ‘
களி மண்ணோடு களி மண்ணாய்
உருச்சிதைந்த குயவர்களே
பிசையப்பட்டு
இந்தப் புதிய வாழ்வின் குவளைக்குள்
புதைக்கப்பட்ட ஆண்டாண்டு காலச்
சோகத்தைக் கொண்டு வாருங்கள்.

உங்கள் குருதியையும் அது
பாய்ந்த ஆழத்தையும்
என்னிடம் சொல்லுங்கள்.

இங்கேதான் நாங்கள்
சவுக்கடி பட்டோம் ….

வைரம் ஜொலிக்கவில்லை – சரியாகப்
பட்டை தீட்டப்படவில்லை
அல்லது
பூமி பொய்த்து விட்டது
சோளம் விளையாமலோ
வைரக்கற்கள் வழங்காமலோ
ஏமாற்றிவிட்டது என்பதற்காய்.

நீங்கள் தடுக்கி விழுந்த அந்த
பாறையை காட்டுங்கள் – உங்களை
அறைவதற்காய் சிலுவை தந்த அந்த
மரங்களை காட்டுங்கள்.

மூதாதையர்களின் தீபத்தை ஏற்றி வைக்க
சக்கி முக்கிக் கற்களை உரசுங்கள்
நூற்றாண்டு காலமாய் உங்களை
விளாசிக் காயமூட்டிய அந்த
சாட்டைக்குத் தீமூட்டுங்கள் – உங்கள்
குருதிபட்டுச் ஜொலிக்கும்
கோடாரியைக் கொளுத்துங்கள்.

இறந்துபோன உங்களின் குரலாய்ப்
பேச வந்திருக்கிறேன் நான்
அண்டம் முழுமையிலும்
மாண்ட உதடுகள் கொக்கரிக்கட்டும்
ஆழத்திலிருந்து – இந்த இரவைப்
பின்னி நூற்று நீட்டட்டும்.
உங்களுடன் பயணித்து நான் இங்கே
நங்கூரம் பாய்ச்சப்பட்டது போல்.

மாலை மாலையாக
கணுக் கணுவாக
படிப்படியாக
எல்லாவற்றையும்
என்னிடம் சொல்லுங்கள்
நீங்கள் ஒளித்து வைத்த
வாட்களைத் தீட்டுங்கள் – அவற்றை
என் நெஞ்சினில் சூட்டுங்கள் –
என் கைகளில் ஒப்படையுங்கள்.
சூரியக் கற்களின் வெள்ளம் போல்
புதைக்கப்பட்ட
அமேசான் பள்ளிச் சிறுத்தைகள் போல்
என்னைக் கர்ஜிக்க விடுங்கள்
மணிக் கணக்காய்
நாட்கணக்காய்
மறைந்த யுகங்களாய்
தாரகைகளின் நூற்றாண்டுகளாய்.

எனக்குத் தாருங்கள்
அமைதியை
தண்ணீரை
நம்பிக்கையை
யுத்தத்தை
துவக்குகளை
எரிமலையை.

உடல்கள் என்னுடல் மேல்
காந்தம் போல் கவ்வட்டும்
எனது நாடி நரம்புகளுள்
எனது வாய்க்குள்
விரைந்து வாருங்கள்
என் குரலில் பேசுங்கள்
என் குருதியாய் பேசுங்கள்.

—-
மூலம் : பாப்லோ நெரூடா
(12.7.1904 – 23.9.73)

Series Navigation