பாண்டிச்சேரி பிரகஸ்பதிகள் கதை

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

ரா.கிரிதரன்


எங்க ஊரிலே சொல்லிக்கொள்ளக்கூடிய இடங்களில் காந்தி சிலையும் ஒன்று. பீச்தெருவில் நட்ட நடுவில் நின்றிருப்பார் எங்க காந்தி தாத்தா. வழக்கமான கோவணம். இடுப்பில் கடியாரம். கையில் குச்சி. தண்ணியிலிருந்து வெகுண்டு ஊரை நோக்கி எழுந்து வருவதுபோன்ற நடையில் சிலை;ஆனால் முகத்தில் மட்டும் பால் சிரிப்பு. அவருக்கு நேர் எதிரே நேரு மாமாவின் சிலை. சட்டையில் ரோஜா குத்தியிருக்கும். இருவரையும் நடக்கவிட்டால் மோதிக்கொண்டிருப்பார்கள்.நடுவே புகுந்த கடற்கரைச் சாலை இவர்களிருவரையும் பிரித்திருந்தது.

பாண்டிச்சேரியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அங்கிருக்கும் இடங்களைவிட பல மனிதர்களே அதிகமாக நினைவிற்கு வருகின்றனர். இவர்களை நான் சந்தித்தது என் தாத்தாவுடன் காலை நடைக்காக கடற்கரை வரை நடக்கும்போதுதான்.பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்த காலமது. அதற்குப்பிறகு நண்பர்களுடன் ஊர் சுற்றத் தொடங்கிய பின் அனுபவங்கள் குறைந்து போனது என்றே சொல்ல வேண்டும். டீன் ஏஜ் பருவம் மிக சுவாரஸ்யமானது – விஷேசமாக எதிர்பாலைப் பார்க்கும் குறுகுறுப்பு தவிர, நம் பார்வையும் விசாலமடைவது அப்போதுதான். தனிப்பட்ட சிந்தனைகள், கேளிக்கை, எதையும் விட்டேரித்தனத்துடன் பார்க்கும் பார்வை, அதிர்ச்சி செயல்பாட்டுக்காக செய்தவை (புரிந்தோ புரியாமலோ பெரியார் புத்தகங்களை ஆசாரமான என் தாத்தா முன் படித்தல்)

`நம்ம ஊருக்குள்ள வர எத்தனை வழிடா தெரியும் உனக்கு ` – அழகு கடலையை கொறித்துக்கொண்டே வந்து சேர்ந்தான். என் பள்ளி நண்பர்கள் கூட்டம் நான்கும் ஒன்றாக சேருமிடம் எங்க கடற்கரை. பாண்டிச்சேரி பீச்சுன்னா சும்மாவா.காற்று அடித்து ஆளையே தள்ளிவிடும். சும்மா, வெள்ளென பொங்கும் அலை வந்து காலில்பட்டால் உச்சிமுடி வரை சிலிர்க்கும். ஆனால் எந்த ஊரில் இல்லாத ஒரு குறை ஒன்றுண்டு. எங்க பீச்சில் மணல் கிடையாது. பிரெஞ்சுக்காரன் தூக்கி வித்துட்டான் என தாத்தா சொல்லிக் கேள்வி. அந்த சின்ன வயதிலேயே இவ்வளவு மணலை எப்படிஎடுத்துப் போனான் எனக் கேட்டு தாத்தாவின் நண்பர்கள் மத்தியில் சுட்டிப்பயல் எனப் பேர் வாங்கினேன்.

என் தாத்தாவோ ஒரு விஷயத்தை சும்மா விடமாட்டார்.அது நல்லதாயிருந்தாலும் சரி, கெட்டதாயிருந்தாலும் சரி. எங்கோ தொடங்கி எப்படி வந்து எந்த இடத்திற்கு வந்துவிட்டேன். என் கோஷ்டி நண்பர்களைப் பற்றி சொல்லும்போது தாத்தா எங்கே வந்தார்? எங்கூரிலே கோஷ்டி எனச் சொல்லமாட்டோம், செட் என ஸ்டைலாக விளிப்போம். எங்க செட்டுக்குன்னு கடற்கரையில ஒரு இடமுண்டு. அரவிந்தர் ஆசிரமத்திற்குப் எதிரில், டுபே பூங்காவிற்கும் அரசு தலைமைச் செயலகத்திற்கும் எதிரில் இருக்கும் கற்குவியலே எங்கள் இடம்.

`வந்துட்டார்யா அறிவுப்பய, டேய் அழகு பஸ்ல வரலாம், ஓடியே வரலாம், உன்ன மாதிரி M80 வெச்சிருந்தா சூப்பர் ஸ்பீடுல வரலாம்` – அழகு ஏற்றப்போகும் அறிவுமணிச்சுடரைப் கிண்டல் செய்தேன்.எங்க ஊர்ல இதுக்குப் பேரு வெடைக்கறது.

`இப்படி வெடைச்சு வெடைச்சே விளங்காம போப்போறீங்க. நம் காந்தி சிலைக்கீழ ஒரு சுரங்கப் பாதை இருக்காம்டா தெரியுமா?`

இது எனக்கு புது கதையே கிடையாது. என் தாத்தா சொன்னது பாண்டிச்சேரியின் மறு சரித்திரம். அதை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். ஒவ்வொரு ஊருக்கும் தொடக்க கதை இருக்கும். அந்த கதையிலுள்ளே பல கதை மாந்தர்களும், அவர்கள் ஆட்டுவிக்கும் காலமும் புதைந்திருக்கும். மக்கள் புழங்க புழங்க ஊர் மாறியதா, அல்லதா ஊர் மாறியதால் மக்கள் பழக்கங்களும் மாறியதா எனத் தெரியாது. காலையில் தெரியும் ஓஸோனில் நடை பழகும் சில சீனியர்கள். அவர்களுக்காக மட்டுமே ஓடும் பதநீர், அருகம்புல் சூஸ் போன்ற தள்ளுக் கடைகள். பதநீர் மிக விஷேசமான பாண்டிச்சேரி சரக்கு. நூறு சதவிகிதம் பாண்டிச்சேரி சரக்காகும். காலையில் இதற்காகவே தென்னை மரத்திலேரி மாலைக்கள்ளாவதற்குள் இறக்க வேண்டிய பானம்.காலையில் குடித்தால் குளிர்ந்த பதநீர்; மாலையில் கள்ளு. ஆகா, அதனை பனைஓலையில் ஊற்றி சின்ன சின்ன டம்பளர்களிலும்,குவலைகளிலும் தருவார்கள்.விலை ஐம்பது பைசா இருக்கும்.அதற்கு இணையான ருசிகர பானத்தை நான் இதுவரை குடித்ததில்லை.

இதெல்லாம் எனக்கு தாத்தாவுடன் நடை பழக்கத்திற்காக தினமும் பீச்சுக்கு செல்லும்போது கிடைக்கும் முத்துக்கள்.தாத்தா ரிடையர்ட் பாங்க் மேனேஜர். அவர் வாயிலிருந்து கேள்விப்பட்ட சரித்திரம் நூறு சதவிகிதம் உண்மையானது என்றால்,அதற்கு இணையான பொய்களும் கலந்திருக்கும்.ஆனால், அந்த பொய்களும் போதை தரும். அந்த மோகனக் கதைகளை கேட்டபடி பல நாட்கள் நடந்திருக்கிறேன்.

வெள்ளை குதிரையில் வந்த வீரன் இசைத்த சிகப்பு சங்கு, சிகப்பு் குதிரையில் வந்த வீரம் இசைத்த வெள்ளைச் சங்கு – இதன்வழியே தோன்றியதுதான் பாண்டிச்சேரி.

இதில் மாசோசான் செட்டி, மாணிக்கம் செட்டிகளின் கதையும் அடங்கும். வட்டிக்கு பிரெஞ்சு மன்னர்களே கடன் வாங்கும் செட்டிக்கள் இருந்த ஊர்.

மூன்று விதமான சித்தர்கள் காத்த ஊர்.

நான் பார்த்த சாதாரண மக்களின் அசாதாரணக் கதையே அந்த மண்ணுக்கு உரமிட்டது.

கடற்கரைக்கருகே இருந்த ஒரு பங்களாவிலிருக்கும் அறுவைக்கும் தாத்தாவைப் பார்த்தாலே பிடிக்கும். இத்தனைக்கும் தாத்தாவை சில நாட்களாகவே அவருக்குத் தெரியும். ஆனால் பல நாட்கள் பழகியது போல் எங்களை அவர் வீட்டுக்குள் தினமும் அழைத்து டீயும் , நவு நவு என்றிருக்கும் பிஸ்கெட்டும் தருவார். அவர் வீட்டின் வாசலிலிருக்கும் பூந்தொட்டியிலிருந்து என் அம்மா,சித்தி போன்றோருக்கு பிச்சுப் பூவைப் பறிக்கும்போது தான் எங்களை முதலில் பார்த்தார்.முதலில் என் தாத்தா வழிந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் `உள்ள வாங்க,மிஸ்ஸே` என்றார்.

இந்த `மிஸ்ஸே` எங்களூரில் பிரெஞ்சுக்காரன் விட்டுச் சென்ற மிச்சம். மிஸ்டர் என்றால் மரியாதை குறையுமா என்ன? அன்றிலிருந்து தினமும் எங்களுக்காக பீச்சில் காத்துக்கொண்டிருக்கத் தொடங்கினார் அறுவை. சும்மா விடமாட்டார். யுத்த கதை, அவர் தன் பங்களாவை பிரெஞ்சு காரணிடமிருந்து தந்திரமாய் விலை குறைத்து வாங்கியது, சொல்தாவாக பிரான்ஸில் செய்த வேலைகள், பிரெஞ்சு மனைவி தன் ஊரையும் (Roen) விட்டு தனக்காக இங்கு வந்து சேர்ந்தது, தன் பிள்ளைகள் சண்டையில் பிரான்சிலேயே இருப்பது என தினமும் வகை தொகையாக பிஸ்கெட்டுடன் கதை கேட்போம்.

நாளாவட்டத்தில் அவர் கதைகளுக்கு `ஊம்` என்று கூடச் சொல்ல வேண்டாம்.நான் அவர் வீட்டில் மேலும், கீழும் அலைந்து கொண்டிருப்பேன். என் தாத்தா அவர் பேச்சில் ஒரு காது, ஓசி தினசரியில் ஒரு கண் என விட்டேரித்தனமாய் இருப்போம்.எங்களால் போகாமலும் இருக்க முடியவில்லை.அவர் சொல்லும் சம்பவங்களில் இருக்கும் கவர்ச்சி , அவர் உபயோபப்படுத்தும் வார்த்தையிலும் இருக்கும்.

`அந்த கம்மணாட்டி ஜெனரல், எனக்கு குழந்தை பிறந்திருக்கு எனத் தெரிந்தும் லீவு குடுக்கல.சரிதான் மசுரான்னு நான் உதறிவிட்டு கப்பலேறி வந்துட்டேன்`

`திரும்ப போனீங்களா?`

`தேவைப்படாம என்னய கூப்பிதுவானா? முத வருஷம் முழுக்க பீலயே மூழ்கணுமில்ல. எவன் செய்வான்?`

இந்த பீ கதை என்னை இழுக்க,மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

`ஆமாண்டா மொளகா குஞ்சான், கழுத்து வரை பீல ஒரு கம்பில தொங்கணும். இதுக்குதான் ஃபிராங்கு கொடுத்தான்`

அப்போதுதான் காந்தி சிலைக்கு கீழேயிருந்த சுரங்கப்பாதையை பற்றிக் கூறினார். அது சென்று முடியும் இடம் செஞ்சிக் கோட்டை. செஞ்சி மன்னன் பதினேழாம் நூற்றாண்டில் தன் தற்காப்புக்காகவும், தன் தலைமை அமைச்சர்கள் உடனடியாகத் தப்பிப்பதற்காகவும் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அது. இப்போது மூடி விட்டதாகச் சொல்லப்பட்டாலும், அதன் வழியே பல காலமாய் மன்னர்கள் சென்றுவந்து கொண்டிருந்தனர் என பெரிய பிரசங்கம் கொடுத்தார். அதை இன்றும் நான் நம்பவில்லை.

அவர் வீட்டில் பெரிய பியானோ ஒன்று இருந்தது. அதன் மூலைகளில் தங்கம் போல் இழைக்கப்பட்டிருக்கும்.காலை வெயில் கடற்கரையிலிருந்து எழும்பிப்படும் போது பியானோவே ஜொலிக்கும். அதை நோண்டிக் கொண்டிருப்பதும் என் வேலைதான். அறுவைக்கு கூட யாருமே இல்லை. சமைக்க ஒரு வேலைக்காரி இருந்தாள். காலையில் வந்து நாள் முழுக்க சாப்பிடுவதற்காக சமைத்துப்போய்விடுவாள்.

எனக்குத் தெரிந்த வரையில் அறுவையைப் பார்க்க யாருமே வரமாட்டார்கள்.நாள் முழுக்க அவர் வாழ்வது தன் நினைவுகளிலிருக்கும் மனிதர்களுடன் மட்டுமே. பத்து வருடங்களுக்கு முன்னர் அவர் மனைவி சோஃபியாவும் இறந்து விட்டிருந்தார்கள். அவர் நினைவுகளுடன் மட்டுமே வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் காலையில் அவர் வீட்டுக்குப் போனோம். வழக்கத்திற்கு மாறாக வீட்டின் வாசல் கதவு உட்புறமாய் பூட்டியிருந்தது.காலிங்பெல்லை பலமுறை அழுத்தியபின்னரே மெதுவாகக் கதவைத் திறந்தார்.

சிவந்த கண்களுடன் எங்களை எதிர் கொண்டார். சரி, சோஃபியா நினைவாக அழுகிறார் என நினைத்தோம்.

மெதுவாக தன் மகனிடமிருந்து வந்த கடிதத்த்தை காட்டினார்.

அதில், தன் வியாபாரம் சரியாகப்போகாததால், தன் குடும்பத்துடன் அறுவையின் வீட்டிற்கே வருப்போவதாகத் எழுதியிருந்தான்.படித்து முடித்ததும் நிமிர்ந்து பார்த்தேன். அறுவை தேம்பித் தேம்பி அழத் தொடங்கியிருந்தார்.

Series Navigation