பாசமா ? பாசிசமா ?

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

ஞாநி


தமிழ்நாட்டில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பெற்ற அமோக வெற்றிக்குக் காரணம் ஜெயலலிதாவின் அலட்சிய, அராஜக, மக்கள் விரோத ஆட்சிதான் என்பதில் இப்போது யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

அ.தி.மு.க- பி.ஜே.பி அணிக்கு 34.9 சதவிகிதம் வாக்குகள். அதற்கெதிராக மீதி சுமார் 60 சதவிகிதம் வாக்குகள் . அ.தி.மு.க பெற்றது 29.8 சதவிகிதம். பி.ஜேபிக்கு 5.1 தான். தி.மு.க அணியில் காங்கிரசுக்கு 14.4. பா.ம.கவுக்கு 6.7. ம.தி.மு.கவுக்கு 5.8. கம்யூனிஸ்ட்டுக்கு 3. மார்க்சிஸ்ட்டுக்கு 2.9. தி.மு.கவுக்கு 24.6.

விசித்திரமாக இல்லையா இந்தக் கணக்கு ?

அ.தி.மு.க அரசுக்கு எதிராகக் கடும் கோபம் மக்கள் மத்தியில் நிலவிய தேர்தலில் அ.தி.மு.கவுக்கு 29.8 சதவிகித வாக்கு. தி.மு.கவுக்கோ 24.6 சதவிகிதம்தான். இரு கட்சிகளும் போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை வெவ்வேறு என்பதால், இந்த ஒட்டு எண்ணிக்கையை ஒப்பிட க்கூடாது என்பது உண்மைதான். அதற்கு இடமளித்து கணக்கிட்டால் கூட, அ.தி.மு.கவுக்கு 25 சதவிகிதம் ஒட்டும் தி.மு.கவுக்கு 30 சதவிகிதம் ஒட்டும் கிட்டியதாக அனுமானிக்கலாம்.

இத்தனை துயரங்கள், இத்தனை அராஜகங்கள் ஜெயலலிதா ஆட்சியில் அனுபவித்த பிறகும், அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையே சுமார் ஐந்து சதவிகித ஒட்டு வித்யாசம்தான் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ? ஏன் சுமார் 25 சதவிகிதம் வாக்காளர்கள் இன்னமும் தி.மு.கவை எதிர்த்து ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் ?

கலைஞர் கருணாநிதிக்கு மாற்றாக ஒருபோதும் ஜெயலலிதாவைப் பலராலும் கருத முடியாதது போலவே ஜெயலலிதாவுக்கு மாற்றாக கருணாநிதியை ஏற்க முடியாத வாக்காளர்கள் இன்னும் கணிசமாக இருப்பதையே இது காட்டுகிறது.

இத்தனை அராஜகத்துக்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு கணிசமான ஒட்டு கிடைக்கச் செய்பவர் கருணாநிதியும் குட்டிக் கருணாநிதியாக உருவாகி வருகிற ராமதாசும்தான்.

பிரதமர் பதவி வேண்டாம் என்று கூறிய சோனியாவும், தன்னை விட அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர்கள் கட்சியில் பலர் உண்டு என்பதால் கட்சிப் பணியையே தான் இப்போது விரும்புவதாகச் சொல்லும் ராகுல் காந்தியும் இருக்கும் அதே கூட்டணியில் நாமும் இருக்கிறோமே என்ற வெட்க உணர்ச்சி துளியும் இல்லாதவர்களாக கருணாநிதியும் ராமதாசும் உள்ள வரை ஜெயலலிதாவுக்கு 24 சதவிகித வாக்குகள் உத்தரவாதம்.

தன் குடும்ப நலனைத் தவிர கருணாநிதிக்கு வேறு எந்த பொது அக்கறையும் கிடையாது என்று அவர் மீது பல காலமாகவே இருந்து வரும் விமர்சனம் அப்படியொன்றும் அநியாயமானதல்ல என்று தன்னுடைய 80வது வயதிலும் அவர் தளராமல் நிரூபித்திருக்கிறார்.

கருணாநிதி தன் மகன் மு.க ஸ்டாலினை இப்போது எம்.பியாக்கி கேபினட் அமைச்சராகவும் ஆக்கியிருந்தால் அது அநியாயமானது என்று கருதப்பட முடியாது. ஸ்டாலின் நெருக்கடி நிலை சிறைவாசம் தொடங்கி சுமார் இருபதாண்டுகளாக கட்சியின் இளைஞர் அணியை வலுப்படுத்தி, பிறகு மேயராக ஓரளவு நிர்வாக அனுபவம் பெற்றவர் என்ற நியாயமாவது உண்டு.

ஸ்டாலினை விட தனக்கு, தன் குடும்ப நலனுக்கு சன் டிவி மீடியா பலம்தான் முக்கியம் என்ற அடிப்படையும் மாறனை தன் மூத்த மகன் போல பாவித்த பாசமும் மட்டுமே கருணாநிதியின் முடிவுக்குக் காரணம். இதில் கட்சிக்கோ, கொள்கைகளுக்கோ, சித்தாந்தங்களுக்கோ துளியும் இடமில்லை.

செ.குப்புசாமி போல கட்சியின் தொழிற்சங்க அமைப்பில் சுமார் நாற்பது ஆண்டுகள் பணி புரிந்த சீனியரெளக்கு அமைச்சர் பதவி மறுத்து , ஆயிரம் விளக்கு உசேன் போன்று நீண்ட காலமாக கட்சிக்கு விஸ்வாசமாக உழைத்து வரும் சிறுபான்மையினருக்கு எம்.பி பதவியைக் கூட மறுத்து கருணாநிதி எடுக்கும் முடிவுகளுக்கு எந்த சித்தாந்த முலாமும் பூச முடியாது.

இதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்கவேண்டிய மீடியா அசல் பிரச்சினைகளை விட்டுவிட்டு ரஜினி வாய்ஸ் போன்ற வெத்துவேட்டு விஷயங்களுக்கே முக்கியத்துவம் தருகிறது. வட இந்தியாவில் பத்திரிகை நிருபர்கள் சுதந்திரமாகவும் துணிச்சலுடனும் அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்கும் சூழல் தமிழகத்தில் இல்லை. இதற்குக் காரணம் எம்.ஜி.ஆரும் கருணாநிதியும்தான். எம்.ஜி ஆர் பத்திரிகையாளர்களை சந்திப்பதையே தவிர்த்து ஒதுக்கினார். அதனால் அவரைப் பற்றி என்ன எழுதினாலும் அவர் பெரும்பாலும் அலட்சியப்படுத்தினார். எம்ஜிஆரின் வழியைப் பின்பற்றுபவர் ஜெயலலிதா. கருணாநிதியோ பல பத்திரிகையாளர்கள் அவரிடம் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்காமலே தவிர்க்கும் அளவுக்கு அடிக்கடி அவர்களை சந்தித்தார். அதே சமயம் அச்சில் சின்ன விமர்சனம் வந்தால் கூட அதிகாலையில் பத்திரிகையின் ஆசிரியர்களை போனில் அழைத்து கடிந்து கொள்வார்.

இந்தச் சூழலில் யாரும் துணிந்து கருணாநிதி ஏன் தயாநிதிக்கே எல்லா பதவிகளையும் அள்ளி வீசினார் என்று அவரிடம் நேரடியாகக் கேட்கவில்லை. கேட்ட ஒரே ஒருவருக்கு ( இந்தியா டுடே நிருபர் அருண் ராம் ) கருணாநிதி அளித்த பதில் ஒவ்வொரு கழகக் கண்மணியும் தொல்காப்பியப் பூங்காவை விட ஊன்றிப் படித்து ஆராயத்தக்கது.

‘வயதானவர்களுக்குக் கொடுத்தால் இளைஞர்களுக்குக் கிடையாதா என்கிறீர்கள். இளைஞர்களுக்குக் கொடுத்தால் வயதானவர்களுக்குக் கிடையாதா என்கிறீர்கள். ‘

முதலில் கட்சியில் இருக்கும் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளையெல்லாம் இளைஞர்களுக்குக் கொடுக்கலாமே.

‘காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி அமைய மையமாக இருந்து செயல்பட்டவர் ‘ தயாநிதி மாறன் என்று இன்னொரு காரணம் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. கூட்டணிக்கான சமிக்ஞை காங்கிரசிலிருந்து வந்ததும் சோனியாவை சந்திக்க இவர்தானே தயாநிதியை அனுப்பினார். கழகத்துக்குள் 37வயதில் தயாநிதியின் தகுதி உடைய வேறு எவரும் இல்லையென்ற நிலையில் பாவம் என்ன செய்ய முடியும். பேரனை அனுப்ப வேண்டியதாயிற்று. கழகக் கண்மணிகள் எல்லாம் கலைஞரின் கல்லக்குடி போர்ப் பரணியால் உந்தப்பட்டு இந்தி ‘அரக்கி ‘யை தழுவ மறுத்து துரத்தியடித்தபோது மாறன் வழிப் பேரனை மட்டும் ரகசியமாக தொலை நோக்குப் பார்வையுடன் இந்தி படிக்கவைத்த ராஜ தந்திரத்தை என்ன சொல்ல ? அப்படிச் செய்திருக்காவிடில் இப்போது சோனியாவுடன் இந்தியில் பேசி கூட்டு ஏற்படுத்தி ஜெயலலிதா ‘அரக்கி ‘யை வீழ்த்தியிருக்க முடியாதே.

இந்தியா டுடே நிருபர் விடாமல் கேட்கிறார். பேச்சு வார்த்தைக்கு தயாநிதியின் தாத்தாவாக இல்லாமல் தி.மு.கவின் தலைவராக அவரை இந்தப் பேச்சு வார்த்தைக்கு தேர்ந்தெடுத்தது ஏன் ?

கலைஞரின் பதில் திராவிட இயக்கத்துக்கே அவமானம் சேர்ப்பது.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது தயாநிதி மாறன் விஷயத்தில் உண்மையாகியிருக்கிறதாம். அது எப்படி என்று கலைஞர் விளக்கவில்லை. குழந்தையாக கோபாலபுரத்தில் தவழும்போதே தாத்தாவின் துண்டைப் பிடுங்கிக் கொண்டு அது தனக்குத்தான் என்று தயாநிதி அடம் பிடித்து, முளையிலேயே தன் விளைச்சல் வீரியத்தை அடையாளம் காட்டியிருந்தால் அது நமக்குத் தெரியாதல்லவா.

இனி கழகத்தின் லட்சோபலட்சக் கண்மணிகள் குறிப்பாக் சீனியர்கள் எல்லாம் தங்கள் வீட்டுக் பேரக் குழந்தைகளை கோபாலபுரத்திலோ, சி.ஐ.டி காலனியிலோ கொண்டு போய் தொட்டிலில் போட்டுவிட்டு வரவேண்டியதுதான். அப்பொதுதான் அந்தப் பயிர்களெல்லாம் முளையிலேயே கருணாநிதியின் கடைக்கண் கடாட்சம் பெற முடியும்.

இப்படிப்பட்ட அணுகுமுறைகள்தான் தொடர்ந்து கருணாநிதி எதிர்ப்பு ஓட்டுக்களை குறையாமல் வைத்திருக்கின்றன.

ஜெயலலிதாவுக்கு ஒட்டு சேகரித்துத் தருவதற்கு அடுத்த தலைமுறையின் கருணாநிதியாக மலர்ந்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். கருணாநிதியை விடவீராவேசமாக, என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றெல்லாம் முழக்கமிடக் கூடியவர் ராமதாஸ்.

தன் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கோ பதவிகளுக்கோ வரமாட்டார்கள் என்று அவர் சொன்னதை சில நிருபர்கள் நினைவூட்டியபோது, அன்புமணி அமைச்சராக வந்திருப்பது கட்சியின் வற்புறுத்தல், விருப்பம் இவற்றால்தான் என்று பதிலளித்தார் டாக்டர்.

பாவம் அன்புமணி. அப்பா சொன்ன கட்சி என்பது யார் என்பதை அவர் போட்டு உடைத்துவிட்டார். ‘எங்கள் தலைவர் டாக்டர் அய்யாதான் கட்சி, கட்சிதான் அய்யா. ‘ என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டார். வற்புறுத்தியது, விரும்பியது எல்லாம் யார் என்பது தெளிவு.

வன்னிய ஜாதியினரின் கட்சி என்ற இமேஜிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியை விடுவித்து எல்லா ஜாதிகளிடமும் கட்சிக்கு நற்பெயரை சம்பாதித்தவர் ரயில்வே அமைச்சராக இருந்த ஏ.கே.மூர்த்தி. அவரை மறுபடியும் அமைச்சராக்கவில்லை. ஆனால் தேர்தலிலேயே நிற்காத அன்புமணியை கேபினட் அமைச்சராக்குகிறார் ராமதாஸ். ரஜினியின் முறைகேடுகளைக் கேள்வி கேட்பதற்கான தார்மிக ஒழுக்கம் ராமதாசுக்கு இல்லை.

தயாநிதியும் அன்புமணியும் , கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரை விட திறமைசாலிகளாகவும் அறிஞர்களாகவும் கூட இருக்கலாம். இன்னும் மேலான தலைவர்களாகக்கூட தங்களை எதிர்காலத்தில் நிரூபித்துக் கொள்ளலாம். ஆனால் இன்று கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகளைப்பெற அவர்கள் பின்பற்றியிருக்கும் ஒரே பாதை பிறப்பின் சலுகைதான். கட்சிப்பணியின் மூலம் தங்களைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ளும் பொறுமை ஸ்டாலினைப்போல அவர்களுக்கு இல்லை என்பது தமிழக அரசியல் குடும்பங்களின் அடுத்த தலைமுறையின் மன நிலைக்கு ஓர் அடையாளம்.

கருணாநிதியும் ராமதாசும் கட்சித்தலைவர்களாக நடந்து கொள்ளாமல் குடும்பத்தலைவர்களாக இப்படி நடந்து கொண்டிருப்பதைப் பற்றி இரு கட்சிகளிலும் துளி முணுமுணுப்பு கூட இல்லை. எதிர்ப்பு இல்லை. இன்னும் துல்லியமாக சொல்லப்போனால், ஜெயலலிதாவின் அ.தி.மு.கவில் எப்படி அம்மாவின் சொல்லுக்கு எதிர் சொல்லோ, மறு சொல்லோ கிடையவே கிடையாதோ அதே போலத்தான் தி.மு.க, பா.ம.கவிலும் கூட என்பதையே இது நிரூபிக்கிறது.

தங்கள் விரும்புகிறபடி கொள்ளையடித்துச் செல்ல வசதியாக, தலைவருக்கு அதி தீவிர விஸ்வாசமாக இருந்து காலில் விழுந்து காரியத்தை நடத்திக் கொள்ளும் உத்தி அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கி ஜெயலலிதா காலத்தில் கூர்மைப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதே உத்தியைத்தான் தி.மு.கவிலும் பா.ம.கவிலும் தலைமைக்கு எதிராக மெளனம் சாதிப்போரும் பின்பற்றத்தொடங்கியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

உட்கட்சி ஜனநாயகத்தில் இந்தக் கட்சிகளுக்குள் ஒரே ஒரு வித்யாசம்தான். அ.தி.மு.கவில் எல்லாரும் வெளிப்படையாகக் காலில் விழுகிறார்கள். கலைஞரின் ஒவ்வொரு தொலைக்காட்சி பத்திரிகையாளர் சந்திப்பிலும் சினிமாவின் அட்மாஸ்பியர் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் போல மட்டுமே தோன்றுகிறார்கள் அன்பழகனும் ஆற்காடு வீராசாமியும். இதை விட அவர்கள் மெகா சீரியலில் தாத்தா, அப்பா வேடங்களில் நடித்தால் பேசுகிற வாய்ப்பாவது கிடைக்கும் .

தமிழ்நாட்டின் பிரதானக்கட்சிகளான தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, பா.ம.க மூன்றிலும் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பது ஒட்டு மொத்த தமிழக அரசியல் சூழலுக்கே ஆபத்தானது.

இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா என்ற நெருக்கடி கால பாசிச கருத்துக்கு சமமானது கலைஞர்தான் தி.மு.க; தி.மு.கதான் கலைஞர், டாக்டர் அய்யாதான் பா.ம.க; பா.ம.கதான் டாக்டர் அய்யா என்ற நிலைகளும்.

பிறப்புதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதுதான் பார்ப்பனீயம். பிறப்பின் அடிப்படையில்தான் தகுதிகள், வாய்ப்புகள் எல்லாம் என்பதுதான் பார்ப்பனீயம். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து அதை நிலை நிறுத்துவதுதன் பார்ப்பனீயம்.

நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்காதே; கேட்கமுடிய ாது என்பதுதான் பாசிசம். என் முடிவுகளே இறுதியானவை என்பதுதான் பாசிசம். மக்களும் கட்சியும் நான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்பதுதான் பாசிசம். நான் செய்வது உன் நன்மைக்காகத்தான் என்று நம்பவைப்பதும், செய்வதெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டேதான் என்று காட்டிக் கொள்வதும் பாசிசத்தின் அதி உச்ச மோசடி.

ஏற்கனவே அ.தி.மு.கவும் பாரதிய ஜனதாவும் பார்ப்பனீய பாசிசக் கட்சிகள் என்பது நிரூபிக்கப்பட்ட செய்தி. தி.மு.கவும் பா.ம.கவும் சாராம்சத்தில் அதேதான் என்பதுதான் தயாநிதி, அன்புமணி மூலமாக கருணாநிதியும் ராமதாசும் நமக்கு உணர்த்தும் புதிய செய்தி.

வேட்பாளரின் சொத்து விவரங்களை வெளியிட்டாகவேண்டும் என்று சட்டப்படி நீதி மன்றம் நிர்ப்பந்தித்தது போல, ஒவ்வொரு கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் பெயரளவில் இல்லாமல் நிஜமாக செயல்பட வேண்டுமென்று உறுதி செய்தாலன்றி ஜனநாயகத்தின் பெயராலேயே கட்சிகள் நம்மை பாசிசம் நோக்கி இழுத்துச் செல்வதை தடுக்க முடியாமல் போய்விடும்.

dheemtharikida june 2004

dheemtharikida @hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி