பாகிஸ்தானிய இயக்கத்தில் இருந்த முதலாளித்துவ இழை

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

ஷாரிஃப் அல் முஜாஹித்


வெகுகாலமாக பாகிஸ்தான் இயக்கம், நிலப்புரபுகளுடைய வேலையாக தாழ்வாகப் பேசப்பட்டு வந்தது. இவர்களால் உருவாக்கப்பட்டு, இவர்களால் தலைமை தாங்கப்பட்டு, முஸ்லீம்களுக்காக உருவாக்கப்பட்ட நாட்டில் தங்களை உறுதியாக பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள இந்த பாகிஸ்தான் இயக்கத்தை நிலப்பிரபுகள் தாங்கினார்கள் என்றே பேசப்பட்டு வந்தது.

இதனால், காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு நிறைய சாதகமாகப் போய்விட்டது. முதலில் பாகிஸ்தானில் இருந்த வெகுஜன ஆதரவை புறக்கணிக்கவும், 1940களில் வந்த முதலாளிகள் ஆதரவை உதாசீனம் செய்யவும் வசதியாகப் போய்விட்டது. இது கடந்த 50 வருடங்களில் பேசப்படவே இல்லை.

பாகிஸ்தானிய இயக்கத்தில் இருந்த முதலாளித்துவ இழைக்கு உதவியவர்கள் ஆதம்ஜீ குடும்பத்தினர், தாவூது குடும்பத்தினர், ஹபீப் குடும்பத்தினர் இன்னும் சில முஸ்லீம் வியாபார பணக்காரர்கள். இவர்கள் ஜின்னாவுடன் இணைந்து பல முஸ்லீம் நிதியுதவி மற்றும் வியாபார நிறுவனங்களை உருவாக்கினார்கள். இதில், ஆல்-இந்தியா ஃபெடரேஷன் ஆஃப் முஸ்லீம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (1943). முஸ்லீம் கமர்ஷியல் பேங்க் (1947), முகமதி ஸ்டாம்ஷிப் கம்பெனி (1940களில் நடுவே), ஓரியண்ட் ஏர்வேஸ் (1946) ஆகியவையும் பல செய்திப்பத்திரிக்கைகளும், பல சிறு தொழிற்சாலைகளும் அடங்கும். இவை பல முஸ்லீம்களுக்கு உடனடி பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவந்தாலும், இவற்றின் முக்கிய நோக்கம், பாகிஸ்தான் உருவான பின்னர் அங்கிருக்கும் முஸ்லீம்களுக்கு பல பொருளாதார வாய்ப்புக்களை அளிப்பதுதான்.

1945-46இல் நடந்த பொது தேர்தலை முஸ்லீம் லீக் சந்திக்க வேண்டியிருந்தபோது, இந்திய முஸ்லீம்களுக்கு அது வாழ்வா சாவா பிரச்னையாக இருந்தபோது, முஸ்லீம் தொழிற்சாலை அதிபர்களும், வியாபாரிகளும், ஜின்னா கேட்டுக்கொண்டதற்கிணங்கி தாராளமாக கொடுத்த நிதி உதவி பாகிஸ்தான் இயக்கத்தில் முதலாளிகளுக்கு ஒரு பெரும் இடத்தைப் பெற்றுத்தந்தது.

சர்தார் வல்லபாய் பட்டேலின் கடிதங்களைக் காணும் போது, பிர்லாக்களும் டால்மியாக்களும் இருக்கும் வரையில், காங்கிரசுக்கு நிதி என்பது பிரச்னையே இல்லை என்பது தெரிகிறது. 1945, அக்டோபர் 14இல், ஆர்.கே நேரு அவர்கள் பேகம் ஷாநவாஸ் அவர்களிடம், பஞ்சாபில் யூனியனிஸ்ட் கட்சி சுமார் 40 லட்சம் ரூபாயை சேர்த்திருக்கும்போது, அதனை தோற்கடிக்க எப்படி ஏழை முஸ்லீம்லீகால் முடியும் என்று கேட்டார். வேவல் அவர்களும் முஸ்லீம் லீகிடம் குறைந்த அளவே நிதி இருந்தது என்பதைக் குறித்திருக்கிறார். அதேபோலவே வடமேற்கு எல்லைப் பிரதேசத்தில் முஸ்லீம்லீகிடம் குறைவாக பணம் இருந்தது என்று குறித்திருக்கிறார். ‘எப்படியும் பணம் இல்லாமல் தேர்தலில் போட்டியிடமுடியாது ‘ என்று சிம்லா மாநாடு முடிந்ததும் ஜின்னா அவர்கள் நிதி உதவிக்காக கோரிக்கை வைத்தார். பம்பாயில் அவர் முஸ்லீம் லீக் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியபோது, முஸ்லீம் மர வியாபாரிகள் சங்கம் அவருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியது. ஆறு நாட்களுக்குப் பின்னர் ரூபாய் 311,100 பெற்றார். ‘என்னிடம் வெள்ளிகளைக் கொடுங்கள், முஸ்லீம் லீக் வேலையை முடிக்கும் ‘ என்று சர்ச்சில் போல உறுதி அளித்தார்.

அவரது வேண்டுகோளுக்கு, எதிர்பாராத முறையில் வரவேற்பு இருந்தது. அகமதாபாத் முஸ்லீம்களிடமிருந்து அக்டோபட் 17இல் சுமார் 2 லட்சம் பெற்றார். மஜ்லிஸ் இஹ்தேஹால் முஸ்லீமீன் என்ற டெக்கான் ஹைதராபாத் அமைப்பிலிருந்து 2 லட்சம் பெற்றார். பம்பாயில் டிஸம்பர் 21இல் மெமான் சேம்பர் ஆஃப் காமர்ஸிடமிருந்து 147000 ரூபாய் பெற்றார். 1946 ஜனவரியில் கல்கத்தா முஸ்லீம் சேம்பர் ஆஃப் காமர்ஸிடமிருந்து 1 லட்சம் பெற்றார். இன்னும் பல இந்திய பிரதேசங்களில் இருந்த முஸ்லீம் வியாபாரிகளிடமிருந்தும், தொழிலதிபர்களிடமிருந்தும் பலத்த நிதிஉதவிபெற்றார்.

கடயநல்லூர் (மெட்ராஸ்) அவருக்கு 80 வெள்ளிக்குண்டுகளையும் ராஜமுந்திரி (மெட்ராஸ்) அவருக்கு 70 வெள்ளிக்குண்டுகளையும் அளித்தன. பெப்ரவரி 1946இல் சிலோன் முஸ்லீம்கள் அவருக்கு 70 வைரவைடூரியங்களை பரிசளித்தனர். ஜனவரி 1946இல் ட்ரான்ஸ்வால் முஸ்லீம் லீக் அவருக்கு 500000 பவுண்டு ஸ்டெர்லிங் அளித்தது.

எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்த பலத்த வரவேற்பை அவர் மிகுந்து பாராட்டினார். அகமதாபாத் முஸ்லீம்களிடையே அவர் பேசும்போது, ‘இது (ரூ 200,000) பிர்லாக்களும், டால்மியாக்களும், அம்பாலால்களும் கஸ்தூர்பாய்களும் கொடுத்தவை அல்ல. இவை ஏழை முஸ்லீம்களால் கொடுக்கப்பட்டவை. இது இந்த பணத்தின் மதிப்பை பல மடங்கு உயர்த்தி ஒரு கோடி ஆக்கி விடுகிறது. ‘ இந்த பணத்தின் இன்றைய மதிப்பை அளவிட சுமார் 100 ஆல் பெருக்கிக்கொள்ளலாம். 1940களில் 1 அமெரிக்க டாலர் ரூபாய் 3 ஆக இருந்தது. பவுண்ட் ஸ்டெர்லிங் ரூபாய் 10ஆக இருந்தது.

இப்படிப்பட்ட பெரும் நிதி உதவி இருந்தும், முஸ்லீம் லீகின் நிதி நிலைமை காங்கிரஸ் அளவுக்கோ அல்லது யூனியனிஸ்ட் அளவுக்கோ இல்லை. சர்தார் பட்டேல் அக்டோபர் 1945இலிருந்து பெப்ரவரி 1946வரை எழுதிய கடிதங்களிலிருந்து எவ்வளவு நிதி வினியோகம் செய்யப்பட்டது என்பதை அறியலாம். பிராந்திய முஸ்லீம் லீக் கட்சிகளின் தேவையை சரிக்கட்ட ஜின்னா பெரிதும் கஷ்டப்பட்டார். அதுவும் பெரும்பான்மை முஸ்லீம் பிரதேசங்களில் கூட.

பஞ்சாப் முஸ்லீம் லீகுக்கு டிஸம்பருக்குள் சுமார் 8 லட்சம் ரூபாய்களை சேமித்து கொடுத்தார். இருந்தும் சுமார் 3 லட்சம் ரூபாய் துண்டு விழுந்தது. இதனால், பம்பாய் முஸ்லீம்கள் போலவும், தென்னாப்பிரிக்க முஸ்லீம்கள் போலவும் பஞ்சாப் முஸ்லீம்களும் முஸ்லீம் லீகுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கோரினார். பஞ்சாப் முஸ்லீம் லீக் போராடுவதற்கு மிகவும் கடினம் என்பதால் தன் பணத்தை கடனாக 3 லட்சம் பஞ்சாப் முஸ்லீம் லீகுக்குக் கொடுத்தார்.

சிந்து மாகாணத்தின் நிலை இன்னும் சிக்கலாக இருந்தது. ஜி.எம்.சையது முஸ்லீம் லீகிலிருந்து பிரிந்து வந்ததும், முஸ்லீம் லீக் பணத்தையும், அலுவலகம் நாற்காலிகளிலிருந்து பேப்பர் வரை எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும், முஸ்லீம் லீகின் நிலைமை மோசமாக ஆகிவிட்டது. இதனால் மொகம்மது அயுப் குஸ்ரோ அவர்கள் மத்திய முஸ்லீம் லீக் நிதியிலிருந்து சுமார் 1 லட்சம் கொடுக்க கோரினார்.

வங்காளத்திலும் பணத்தட்டுப்பாடு இருந்தது. சுஹ்ராவர்தி அவர்கள் ஜின்னாவிடம் பணம் கோரினார். ‘ஒவ்வொரு மாகாணமும் தன் முஸ்லீம் லீக் வேலைக்கு தங்கள் மாகாணத்திடமிருந்தே பணத்தை வசூல் செய்து கொள்ள வேண்டும் ‘ என்று பொதுப்படையாக பேசினார். ‘ இஸாபாஃனி பிரதமராக இருக்கும் வங்காளத்தில் நிறைய பிராந்திய மற்றும் மத்திய முஸ்லீம் லீகுக்கு நிறைய நிதி உதவி செய்யவேண்டுமில்லையா ? ‘ என்று கேட்டார். ‘பம்பாயைப்போல வங்காளமும் நிறைய மத்திய முஸ்லீம் லீகுக்கு உதவவேண்டும் ‘ என்று கேட்டுக்கொண்டார்.

முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் இயக்கம் ஒரு முதலாளித்துவ இழையை பெற்றதே இந்த பணத்தட்டுப்பாட்டின் விளைவு. இந்தியாவின் பொருளாதார நிதி மற்றும் தொழில் துறையில் இந்து மேலாண்மை காரணமாகவும், பிரிட்டிஷ் மேலாண்மை காரணமாகவும், முஸ்லீம் முதலாளிகள் பின் தங்கியே இருந்தனர்.

***

கராச்சியிலிருந்து வெளிவரும் டான் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை.

***

Series Navigation