பாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது ?

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue


பாகிஸ்தான் சமீபத்தில் வெளியோட்டம் விட்ட ஏவுகணைகள் கன்யாகுமரி வரைக்கும் வரக்கூடியவை. போர் ஆரம்பித்தால் சென்னை, பங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா ஆகிய நகரங்களை ஒரே நேரத்தில் தாக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. ஆகவே, இந்தச் சூழ்நிலையில் நாம் பொதுப் பாதுகாப்பு விவரங்களையும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எப்படி என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்.

அணுசக்தி துறை Department of Atomic Energy ஆலோசனைகள் நாடெங்கும் உபயோகப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள்.

இந்தியாவில் அணுகுண்டு வெடித்தால், என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று ஆலோசனைகளை அளித்து வந்திருக்கிறது.

உங்கள் அருகாமையில் ஒரு அணுகுண்டு வெடித்தால் என்ன செய்யவேண்டும்.

கீழ்க்கண்டவற்றைச் செய்யுங்கள்.

1) வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். வீட்டின் உள்ளேயே இருங்கள்.

2) ரேடியோ, டெலிவிஷன் போன்றவற்றை கேளுங்கள். மாநில அரசோ, மத்திய அரசோ, நம் அருகாமை நகராட்சியோ, ராணுவ அதிகாரிகளோ ஏதேனும் முக்கியமான அறிவிப்புகளைச் செய்யலாம்.

3) கதவுகள், ஜன்னல்களை ஆகியவற்றை மூடி வையுங்கள்

4) சாப்பாட்டுப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை மூடி வையுங்கள். மூடி வைக்கப்பட்ட பொருட்களை மட்டும் உண்ணுங்கள்.

5) வெளியே செல்லும்படி கட்டாயம் இருந்தால், உங்கள் முகத்தையும், வாயையும் ஒரு நனைந்த கைக்குட்டையாலோ, துணியாலோ (புடவை, வேஷ்டி) மூடிக்கொள்ளுங்கள். வெளியே செல்லவேண்டுமென்றால் ஈர உடையோடு செல்வது நல்லது. வீட்டுக்கு வந்ததும், துணிகளை மாற்றி புதுத் துணியை உடுத்துங்கள். பழைய துணிகளை ஓடும் தண்ணீரில் முழுமையாகத் துவைத்துவிட்டே உபயோகப்படுத்துங்கள்.

6) அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுங்கள். அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கட்டளைகளாகக் கொண்டு சொல்படி கேளுங்கள். மருந்து சாப்பிடுவதோ, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறுவதோ, எதனைச் சொன்னாலும் கேளுங்கள். ஆனால், அவர்கள், சரியான அதிகாரிகள்தானா என்பதை அறிந்த பின்னரே கேளுங்கள்.

கீழ்க்கண்டவற்றைச் செய்யாதீர்கள்

1) பயப்படாதீர்கள். அலறாதீர்கள்.

2) வதந்திகளை நம்பாதீர்கள். அதிகாரிகள் சொல்வதை மட்டுமே கேளுங்கள்.

3) வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்.

4) முடிந்தவரை, திறந்த கிணற்றின் தண்ணீரையோ, குளத்தையோ, வயலில் இருக்கும் பொருட்களையோ, காய்கறிகளையோ பயன்படுத்தாதீர்கள். வெளியே இருந்து கொண்டுவந்த பால், தண்ணீர், உணவு ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள். வீட்டின் உள்ளே இருப்பவற்றையே பயன்படுத்துங்கள்.

5) மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் சண்டை போடாதீர்கள். அவர்கள் உங்கள் நன்மைக்காகச் சொல்லும் விஷயங்களைக் கேளுங்கள்.

இந்தியாவில் அணுகுண்டு வெடித்தால் எப்படி அதனை சமாளிப்பது என்பதை ஆராயவும், அவ்வாறு சமாளிப்பதற்கும், ஒரு குழுவை 1987இல் இந்திய அணுத்துறை உருவாக்கியது.

அணுகுண்டு இந்தியாவின் எந்தப்பகுதியில் வெடித்தாலும், இந்த குழு உடனே அங்கு வரும்.

அணுக்கதிரியக்கம் இருக்கும் ஆபத்தான பொருட்களை சமாளிப்பதற்கும், எப்படி கையாளவேண்டும் என்பதை விளக்கவும், ஒரு கையேட்டை இந்த குழு எழுதி எல்லா மாநில, மாவட்ட அதிகாரிகளுக்கும் ஏற்கெனவே அனுப்பியிருக்கிறது.

ஒரு அணுகுண்டு வெடித்தால், எப்படி அருகாமையிலுள்ள அணுசக்தி கட்டுப்பாட்டு குழுவுக்கு தகவல் அனுப்புவது என்பதும் இந்த கையேட்டில் இருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட முகவரியை அணுகுங்கள்.

http://www.dae.gov.in/cmgweb.htm#Respond

Series Navigation