பழைய சைக்கிள் டயர்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன்


முதலும் முடிவுமில்லாத
மீனாக வழுக்குகிற,
சக்கரம் உதிர்த்த மழுங்கிய
பழைய சைக்கிள் டயர் நான்.

நெளிந்த பூஜ்யம்
தசை நடுங்கும் சூன்யம் தான்.
அதற்காக,
மாடத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள
நேரம் வந்துவிட்டதாக அர்த்தமில்லை.

மூன்று கால் நாற்காலியும்
ஈயென்று காதுவரை இளிக்கும்
இடது கால் பூட்சும் துணையாக,
வீடில்லாத நத்தையொன்று
என் அந்தரங்க உள்மடிப்புகளுக்குள்
அடைபட்டிருக்க,
பூஞ்சைக் காளான் படர்ந்த
கூரைமேல் கிடந்து செல்லரிக்கவும்
எனக்கு வயதாகவில்லை.

மர உச்சிகளில் கூட்டமாகக் குடியிருந்து
அமாவாசை ராத்திரிகளில்
ஆகாயத்துக்குப் பறந்து சுற்றிச் சுழன்று
தொடுவானத்திலிருந்து தொடுவானம்வரை
ஓடிப் பிடித்து விளையாடி,
இரவு முழுக்கச் சுதந்திரமாகப் புணர்ந்து
வானக் கேளிக்கை எல்லாம் ஆடி மகிழ்ந்து
விடிகாலையில் மரவீட்டுக்குத் திரும்பி
அடுத்த அமாவாசைவரை
அசைவில்லாமல் கிடக்கும்
அசட்டு சைக்கிள் டயர் சாமியார்க் கூட்டம்
எதிலும் நான் சேரமாட்டேன்.

வெளவால் அப்பிய ஆலமரத்து மேலோ
பெரிய மழைமர உச்சியிலோ
என்னால் இருக்க முடியாது.
சில்வண்டு என்மேல் மூத்திரம் போகவோ
வெளவால் எச்சமிடவோ
இடம்கொடுக்க மாட்டேன்.

ஓரங்குல வயலின் அலகோடு
ஒற்றைச் சுவர்க்கோழி இரைச்சலிட,
அல்லது சுவர்க்கோழி இசைக்குழு
இசைமேதையைப் போலிசெய்து
நட்சத்திரங்களின் கீழே சேர்ந்திசைக்கக்
கேட்டுக் கொண்டு கிடப்பதைவிட,
பனிக்கால ராத்திரியில் தெருவோரம் தீக்குளித்து
குளிரில் நடுங்கும் குண்டிகளுக்குச் சூடேற்றிப்
பொசுங்கி நாறி எரிந்து போவதே மேல்.

எனக்குள்ளே ஓட்டம் மிச்சம் இருக்கும்வரை
என்னை அடித்து ஓட்டுகிற சின்னப் பையன்
கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல்
ஓடியபடி இருப்பேன்.
என் புட்டத்தில் ஓங்கித் தட்டித்
அப்புறம் தொடர்ந்து தட்டித் தட்டி
ஓடவைக்கும் சின்னப் பையன்கள்
உலகில் இருக்கும் வரை
ஓடிக்கொண்டே இருப்பேன்.
ஒவ்வொரு அடி மேலே விழும்போதும் நடுங்குகிறேன்.
ஆனால் அடிமேல் அடி வைத்தால்தான்
நான் நகர்ந்து போக முடியும்.
நகரத்தான் நான் இருக்கிறேன்.
இயக்கம் மட்டுமே எனக்குத் தெரியும்.

என் வயது உங்களுக்கு ஆகும்போது,
இப்படி எத்தனை பையன்கள்
உங்கள் பின்னால் ஓடிவருவார்கள்
சொல்லுங்கள் பார்ப்போம், அம்மணி.

அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – An old Bicycle Tyre –
மொழியாக்கம் இரா.முருகன் நவம்பர் 17 ’04

Series Navigation