பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


தின்ணை ஆசிரியர் குழுவினருக்கு

பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம் செல்லுமேன உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட பிரிவு தீர்ப்பளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சில மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள்/ஆணைகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள் உச்சநீதிமன்றம் அவற்றை தடை செய்ய மறுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. நான் இன்னும் முழுத் தீர்ப்பினைப் படிக்கவில்லை. இத்தீர்ப்பு தமிழுக்கும் தமிழக அரசிற்கும் கிடைத்த வெற்றி என்று கருதப்படுகிறது. தமிழ்மநாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக இளங் கலை/அறிவியல்/வணிகவியல் படிப்புகளில் ஆக்க வேண்டும் என்று ஒரு குழு பரிந்துரைத்துள்ளாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையும் பல அரசியல் கட்சிகளும், தமிழ் அறிஞர்களும் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. இங்கு மொழி என்பதை குறித்த அரசியல் ஒரு புறம் இருந்தாலும், அரசு எதைக் கட்டாயமாக்கலாம், எதற்காக என்ற கேள்விகள் எழுகின்றன. தடுப்பூசியை கட்டாயமாக்குவதை புரிந்து கொள்ள முடியும், ஆனால் ஒரு மொழியை பள்ளியிலும், கல்லூரிகளிலும் கட்டாயமாக்க வேண்டுமா, தனி நபர்/பெற்றோர் தெரிவுகள் முக்கியமானவை இல்லையா. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் அவர்கள் தமிழை கட்டாயம் படித்துத்தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தனி நபர் உரிமையில் தலையிடுவதாகாதா போன்று பல கேள்விகள் எழுகின்றன. உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் இந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளது என்பதையும் விரிவாக ஆராய வேண்டும். மொழிச் சிறுபான்மையினர் குறித்த பிரச்சினையாக இதைக் குறுக்கக் கூடாது. அடிப்படை உரிமைகள், அரசின் அதிகார வரம்பு குறித்த கேள்விகளாக இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்த மொழியையும் எந்த மாநில அரசும் இப்படித் திணிப்பதை நான் எதிர்க்கிறேன்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழைப் படித்தவர்களை அரசு சமமாக நடத்துகிறதா. இட ஒதுக்கீடு என்ற பெயரில் 69% இடங்களை சாதி,மத ரீதியாக ஒதுக்கி பாகுபாடு காட்டும் அரசுக்கும், அதை ஆதரிப்போருக்கும் தமிழை திணிக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது. என் கருத்து தார்மீக உரிமை இல்லை என்பதே. மேலும் ஒருவர் கல்லூரிப் படிப்பிலும் எதற்காக தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும். அதற்கான தேவை என்ன இருக்கிறது. கல்லூரிப் படிப்பில் ஆங்கிலமும், தமிழல்லாத வேறொரு மொழியும் படிப்பது எப்படி தவறாக முடியும். தமிழ்ப் பற்று என்ற பெயரில் மொழி வெறியையும், அரசின் எதேச்சதிக்காரத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது நாளை அரசு இதை விட மோசமான முடிவுகளை எடுக்க தூண்டுதலாகவே அமையும். எனக்கு எந்த அளவிற்கு தாய் மொழி அறிவும்/பயிற்சியும் தேவை என்பதை தீர்மானிக்கும் உரிமை எனக்குத்தான் இருக்க வேண்டும், அரசுக்கல்ல என்று ஒருவர் நினைப்பதை தவறு என்று கருத முடியுமா.

இது குறித்தெல்லாம் விரிவாக எழுத நினைக்கிறேன். இப்போது அதைச் செய்ய இயலாது என்பதால் என் முதற்கட்ட கருத்துக்கள் சிலவற்றை இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ்


ravisrinivas@rediffmail.com

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்