பளிங்கு காகிதம்

This entry is part [part not set] of 11 in the series 20000723_Issue

ருத்ரா


1
அந்த புத்தகத்தை
புரட்டியபோது
அதை அவன் பார்த்தான்.
அதை பார்த்ததும்
அவன் மனம் விம்மியதில்
புத்தகத்திற்குள்
வானமே வந்திருந்தது.

2

கரடு முரடாய்

கணித சமன்பாடுகளில்
புடைத்திருந்த
அந்த கல்லூாிப் புத்தகம்
இன்று
ஒரு அன்னத்தூவியை
செருகியிருந்ததால்
அவன் ஆகாசத்தில் மிதந்தான்.

3

நேற்று வரை
அந்த புத்தகம்
நூலாம்படை வாிகளில்
மண்டிக்கிடந்தது.
இன்று
மூலைக்கு மூலை
‘மத்தாப்புக் காடுகளாய் ‘
உற்சாகம் கொண்டு
எாிந்ததில்
அவன் மனக்குகைகளில்
‘வர்ண வெளிச்சங்கள். ‘

4

அவளா

அதை எழுதியது ?
அந்த
பிஞ்சுவிரல்களா
இந்த
பிரளயத்தை உண்டாக்கியது ?
ஆம்
அவள் அவனுக்கு எழுதிய
காதல் கடிதம் அது.
அவள்
அந்த காகிதச் சுருளில்
சுருட்டி மடக்கி
சுருதி சேர்ந்திருந்தாள்.
அவன் நரம்பின்
அதிர்வுகளில்
அட்லாண்டிக் அலைவிாித்தது.

5

தொல்லை தரும்

தொல்காப்பியமா வேண்டும் ?

‘மெல் ‘ காப்பியத்தின்

அந்த மின்னல் எழுத்துக்களை

புாிந்து கொள்வதற்கு.

காதல் நெருப்பில்

ஆகுதியாய்

அவன் விழுந்துவிட்ட பிறகு

அவள் வார்த்தைக்கு

‘பகுதி-விகுதி ‘ இலக்கணத்

தகுதிகள் தேவையில்லை.

6

அந்த ஆர்வத்தின்

அசுரவேகத்தில்

அவன் படித்தான்.

முதல் பக்கத்தை

படிக்காமல்

மறுபக்கத்திலிருந்து

அவன் ஆரம்பித்தான்.

7

‘லிக்கிறேன்…. ‘

முதல் பக்கத்தின்

மிச்சம் தொடர்ந்த

அந்த எழுத்துக்களில்

அவன் சுரங்கம் வெட்டி

சுகமாய்க் கிடந்தான்.

அந்த ‘லிக்கிறே ‘ ‘ன்

அர்த்தம் என்ன ?

உங்கள் காதலை

‘எதிரொ ‘லிக்கிறேன் ‘

‘மறுத ‘லிக்கிறேன் ‘

‘இன்னும் குழப்பத்தி ‘லிருக்கிறேன் ‘

‘ஆனாலும் நான்

உங்கள் இதயத்தி ‘லிக்கிறேன் ‘

எதை எடுத்துக் கொள்வது ?

எப்படி எடுத்துக்கோள்வது ?

முழு வாக்கியத்துள்

நுழைய

அவனுக்கு தெம்பில்லை.

8

அந்த ஒடிந்த வாிகளில்

ஒளிர்ந்து கொண்டு

ஒளிந்து கிடக்கின்றான்.

வாக்கியத்தின்

அந்த மறுமுனையில்

அவள் எழுதிய ‘ஸ்பாிசத்தில் ‘

மறைந்திருப்பது என்ன ?

9

பூமி அதிர்ச்சிகளின்

பூக்கள் அர்ச்சனையா ?

சூாியனைத் தொட்டு வரும்

சோப்புக் குமிழிகளா ?

அவன் ‘பிராந்தி ‘ நினைவுக்கு

அண்ட்டார்ட்டிகா கண்டத்தை

நறுக்கிப் போட்ட

ஐஸ் கியூப் களா ?

உள்ளத்தில் தோய்ந்திருக்கும்

ஒரு உடல்

அல்லது

உள்ளத்தில் ஊற்றெடுக்கும்

ஒரு உணர்ச்சியை

வய்துகளின் பயணத்தில்

மைல் கல் ‘பதினாறிலிருந்து ‘

மயங்கவைக்கும் போதை இது!

10

ஒரு வழியாய்

அந்த அணுகுண்டு

அவனுக்குள் விழுந்தது.

‘உங்களை நான்… ‘

‘காதலிக்கிறேன் ‘

என்ற அவள் எழுத்துக்களின்

இன்பக் கதிர்வீச்சு

அவனது

பொக்ரான் பாலைவனத்தில்

ஒரு பூஞ்சோலையை

புதையல் ஆக்கியது.

11

ஓடினான்

நடந்தான்

நின்றான்

மீண்டும் ஒடினான்.

மேகங்களில்

தார் ஊற்றி

போட்ட ரோட்டில்

அவன் மிதந்தான்.

குவித்துக் கிடந்த

கருங்கல் ஜல்லிகூட

அவன் கால் பட்டு

‘ஜொள்ளு ‘ விட்டது!.

12

‘ஏண்டா அம்பி!

பாத்துப் போப்படாதோ ? ‘

அவன் செதுக்கி வைத்திருந்த

‘ஃபி ஃப்டி கே.ஜி தாஜ்மாகால் ‘

நினைப்பில்

எதிரே வந்த

ஒரு ‘ஃபிஃப்டி ஏஜ்ஜின் தாஜ்மகால் ‘

மாமியை மோதிவிட்டான்.

ஒரு காதல் கடிதம்

படுத்தும் பாடு இது.

13

காகிதம்கிடைக்கவில்லை

என்பதற்காக

நிலவை ‘சரக் ‘கென்று

கிழித்து ..அதில்

எழுதி அனுப்பியிருக்கிறாள்.

அதனால் அவன் உள்ளம்

இப்போது

குற்றாலத்துப் பொங்குமாங்கடல்.

14

ஒரு வானம்

ஒரு சூாியன்

கொஞ்சம் நீர்த்துளி

இவையெல்லாம் வேண்டும்

என்று யார் சொன்னது ?

வானவில் தோன்ற

அவள் மூச்சு பட்ட

அந்த காகித துண்டு போதுமே!.

15

‘அன்…பே..! ‘

என்று நீண்டு அழைத்திருந்தாளே

அது எத்தனை மாத்திரை ?

என்று அவனுக்கு பெருங்கவலை.

குறில் நெடில் மாத்திரை

அல்ல அது.

அவன் உயிர் காத்த.

மாத்திரை அது!

16

‘இப்படிக்கு உன் இதயம் ‘

என்று எழுதி

அவள் கையெழுத்தை

போட்ட பின்னும்

………………

புள்ளிகளின் ஊர்வலம்

தொடர்ந்தது.

முற்றுப்புள்ளிக்கு

அவசரப்படாத கடிதம் அது.

மீண்டும் மீண்டும் பார்த்தான்.

செவியை நுழைத்து

நுட்பமாய் கேட்டதில்

அவள் உரசல் சப்தங்கள்

காகிதம் முழுவதும் ஒலித்தது.

அவள் உதட்டையே

விரல் ஆக்கி எழுதியதாய்

அவன் உணர்ந்ததால்

அவனுக்கு

அந்த எழுத்துக்களெல்லாம்

இனித்தது.

17

இந்த

காகித கசக்கலில்

நட்சத்திரப் பூப்போட்ட

ஒரு வானக் கைகுட்டையின்

மடிப்பு வாசனை வீசுகிறது.

அவள் கைப்பைக்குள்..அது

கொஞ்ச நேரம் உறங்கி

திடாரென்று விழித்ததில்

கனவு கலைந்த சுவடு

அவனுக்கு தொிகிறது.

அவள்இதயமே

அவள் ரவிக்கையாகிப் போனதில்

அந்த மாணிக்கப் பேழைக்குள்

‘யாரும் பார்த்து விடக்கூடாது ‘

என்று..அவள்

பத்திரப்படுத்திய போது

புல்லாித்துப் போன

சொல்லருவி யல்லவா

அந்த கடிதம்.

18

தமிழ் எழுத்துகளுக்கு

உயிர் எழுத்து என்று

ஏன் பெயர் வைத்தார்கள்

என்று

இப்போது புாிந்து கொண்டான்.

அவள் எழுதியது

அவனது ‘உயிரெழுத்து ‘ அல்லவா!

அந்த ‘எழுத்து அதிகாரத்தையும் ‘

‘பொருள் அதிகாரத்தையும் ‘

புாிந்து கொள்ள

தொல்காப்பியத்தைத் தேடி

இப்போது அவன் ஓடினான்.

19

காதல் என்பது

‘கானல் நீாில் ‘ எழுதிய

‘பொய் எழுத்து ‘..என்று

பொறி மயங்கிக் கிடந்தவனை

பொறி தட்டி எழுப்பியது

அந்த கடிதம் !

இரண்டு உள்ளங்கள்

ஒன்றிய ஒரு ‘மை ‘யில்

எழுதிய …காதல்

அந்த ‘மெய்யெழுத்து ‘!

20

பொன்னெழுத்தில் ‘

பெயர் பொறித்திருந்த

அவள் பேனா

அவசரத்துக்கு கிடைக்கவில்லை.

எழுதாமல் விட்டெறிந்த

கடைக்குட்டி தம்பியின்

குட்டைப் பென்சிலில்

தகிக்கும் வெப்பத்தில்

தழல் பூத்து எழுதியிருந்தாள்.

அவனும் ..

காதல் அக்கினியை வளர்த்த

அந்த

கட்டைப்பென்சிலில்

உடன்கட்டை ஏறினான்.

உள்ளுக்குள்

வேள்வி வளர்த்தான்.

21

அந்த கடிதத்தை

திரும்ப திரும்ப

அவன்

படித்துக்கொண்டிருந்தான்.

அவளது

படிக நினைவோட்டத்தின்

காதல் எனும் தாமிரவருணியில்

முங்கி முங்கி

முக்குளி

போட்டுக்கொண்டேயிருந்தான்.

அது அவனது

பளிங்கு காகிதம் அல்லவா.

===================================ருத்ரா

Series Navigation

ருத்ரா

ருத்ரா