பரிமளவல்லி தொடர் , அத்தியாயம் 3. அறுபதுவயதுக் கன்னி

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

அமர்நாத்


‘ரான்டம் அன்ட் சான்ஸி’ற்கு ஒருவிதத்தில் காரணமாக இருந்த மிஸ் பார்க்கர் திருமணமாகி அட்லான்ட்டா சென்றுவிட்டாள். மைசூர் பாக் பீடரின் கட்டுரை இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாட என்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள். மறுநாள் நேரம் செல்லச்செல்ல, புத்தகத்தைக் கையிலெடுத்ததும் வந்த பரவசம் பரிமளாவுக்குக் கொஞ்சம்கொஞ்சமாகத் தணிந்தது. பள்ளியிலிருந்து கிளம்பியபோது அதை யாரிடமாவது சொல்லவேண்டுமென்ற ஆசை. செய்தியைக் கேட்டதும் தயக்கமில்லாமல் அவளுக்காக சந்தோஷப்படும் நண்பர்கள் யார் இருக்கிறார்களென யோசித்தபோது சட்டென்று யாரும் ஞாபகத்திற்கு வரவில்லை. ஸ்ரீஹரிராவையே கூப்பிட்டுச் சொல்லலாம். ஆனால், அதில் அவ்வளவு சுவாரசியமில்லை. ஒன்று, புத்தகம் அவருடைய யோசனை, அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டமும் அவருக்குத் தெரியும். இரண்டு, அதன் மூன்றாம் பக்கத்தில் அவருக்கு அவள் அதை சமர்ப்பித்திருந்தாள். வீட்டிற்கு வரும்வழியில் அஞ்சலகத்தில் இறங்கி அவள் அனுப்பிய ஒருபிரதி திங்கட்கிழமை கையில் கிடைத்து அதைப் பிரிக்கும்போது அவர் ஆச்சரியப்படட்டும்!
தெரிந்தவர்கள் யாரையாவது தொலைபேசியில் அழைத்து விஷயத்தை உடைப்பதற்கு அவசியமில்லாமல் அன்றுமாலை சரோஜாவின் வீட்டில் விருந்து. அவள் பையன் கோவிந்த் பரிமளா நடத்தும் கால்குலஸ் வகுப்பில் இருந்தான். விருந்தின்போது நேரில் சொன்னால் போகிறது. அவள் புத்தகம் எழுதியது மற்றவர்களுக்குத் தெரியாது. அது வெளிவராது போனால் முகத்தைத் தொங்கப்போட வேண்டுமே என்கிற பயத்தில் அவள் யாரிடமும் சொல்லவில்லை.

ஆறரைமணிக்கு பரிமளா வீட்டிலிருந்து கிளம்பினாள். பத்துமணிக்குமேல் திரும்பிவரும்போது குளிராக இருக்குமென்ற வானிலை அறிக்கையால் தலையைமூடும் மேல்ஜாக்கெட் அணிந்தாள். அவளுடன் கைப்பை, அவள் புத்தகத்தின் ஒருபிரதி மட்டும்தான். சரோஜா உடுப்பி உணவகத்திலிருந்து சாப்பாடு தருவித்திருப்பாள். முன்காலமென்றால் ஒவ்வொருவரும் எதாவது தளிகைசெய்து விருந்திற்கு எடுத்துவருவது வழக்கம். நாற்பதுஐம்பது பூரிகள் பொரிக்கும் வேலை எப்போதும் அவள் தலையில் விழும். கணவனும் குழந்தைகளும் இல்லாத அவள் நேரத்தை என்னசெய்வதென்று தெரியாமல் முழிப்பதாக மற்றவர்களுக்கு நினைப்பு.
அவளிடம் முன்பு கணக்கு படித்த, அல்லது தற்போது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை சரோஜா விருந்துக்கு அழைத்திருந்தாள். அப்படியென்றால் ராஜஸ்ரீ வருவாளோ? ஆரம்பத்திலிருந்தே அவளுடன் ஒத்துப்போகவில்லை. இரண்டு வருஷங்களுக்குமுன் ப்ரீ-கால்குலஸ் நடத்திய மிசஸ் மால்னர் பிரசவ விடுமுறையில் சென்றபோது, அந்த வகுப்பும் பரிமளாவின் பொறுப்பில் விழுந்தது. அவள் அதை நடத்த ஆரம்பித்து ஒருவாரம்கூட ஆகவில்லை. அதற்குள் ராஜஸ்ரீயிடமிருந்து தொலைபேசியில் அதட்டலான கேள்வி.
“சென்ற தேர்வில் அர்ஜுனுக்கு ஏன் எண்பது பாய்ன்ட்தான்?”
பரிமளா அவனுடைய பதில்-தாளை எடுத்துப்பார்த்து, “நான்காவது கேள்விக்கு பொருத்தமான விடை தரவில்லை” என்றாள்.
“நானும் அதைப்பார்த்தேன். கேள்வியில் ஒரேகுழப்பம். அது தெளிவாக இருந்திருந்தால் அர்ஜுன் சரியாக செய்திருப்பான். அதைத்தள்ளிவிட்டு அவனுக்கு முழுபாய்ன்ட் தரவேண்டும்.”
“மிசஸ் மால்னர் திருத்திய தேர்வுத்தாளை நான் மாற்றமுடியாது. அவள் இன்னும் இரண்டு மாதத்தில் வேலைக்குத் திரும்பிவிடுவாள். அவளிடம் கேட்டுக்கொள்!”
“நீங்களெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்க மாட்டீர்களே!” என்று ராஜஸ்ரீ தீர்ப்பு வழங்கினாள். அதற்குப்பிறகு, பரிட்சையில் அர்ஜுன் நூறுக்குக் குறைவாக எடுத்தால் அவள் குரலை எதிர்பார்க்கலாம்.
பிரசவத்தில் படுசிக்கல். பள்ளிஆண்டு முடியும்வரை மிசஸ் மால்னர் வேலைக்குத் திரும்பவில்லை. பரிமளாவே பாடத்தை நடத்திமுடித்து மாணவர்களின் இறுதி மதிப்பீடுகளையும் கணக்கிட்டாள்.
“அர்ஜுன் வாங்கிய எல்லா மதிப்பெண்களையும் தவறாமல் ஒருநோட்டில் எழுதிவைத்திருக்கிறேன். அவனுக்கு ஏ-ப்ளஸ் தரலாம்” என்பது ராஜஸ்ரீயின் அபிப்பிராயம்.
“வகுப்பில் ஏழெட்டுபேர் அவனளவுக்குச் செய்திருந்தார்கள். அதனால், ஒருவனுக்கு மட்டும்தான் ஏ-ப்ளஸ்.”
“யாரந்த ஒருவன்?”
“சொல்வதற்கில்லை.”
“அவனுக்கு மட்டும் ஏன் ஏ-ப்ளஸ்?” ராஜஸ்ரீ விடவில்லை.
“நான் கொடுத்த அதிகப்படியான கணக்குகளை அவன் அக்கறையெடுத்து செய்தான்.”
“அர்ஜுனுக்கு ஹார்வார்டில் இடம் கிடைக்காமல் போனல் நீதான் காரணம்” என்ற குற்றச்சாட்டுடன் உரையாடல் முடிந்தது.
கிட்டத்தட்ட அவளை மறந்துவிட்டபோது ராஜஸ்ரீ மறுபடி அழைத்தாள்.
“பள்ளியில் ஆராய்ச்சி செய்தால் தரமான கல்லூரியில் இடம்கிடைக்குமென்று சொல்கிறார்களே.”
“ஓரளவு உண்மைதான்.”
“நீ ஒருத்திதான் நம் பள்ளியில் பிஎச்.டி. வாங்கியவள். அர்ஜுனை…”
“மன்னிக்க வேண்டும். நான் ஏற்கனவே சிலமாதங்களாக ஒருமாணவனின் ஆராய்ச்சிக்கு உதவுகிறேன். அதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது.”
ஏமாற்றமடைந்த ராஜஸ்ரீ தொலைபேசியை வைக்குமுன், “பெரிய பிஎச்.டி. தீசிஸா என்ன? ரெண்டுபேரை எடுத்துண்டா என்னவாம்? தனியாத்தானே இருக்கா” என்று குறைசொன்னது தெளிவாகக் கேட்டது.
சரோஜா வீட்டில் பரிமளா மேல்ஜாக்கெட்டை எடுத்ததும் மாங்காய் டிசைன் போட்ட அவளுடைய நீல பட்டுப்புடவையைப் பார்த்து சங்கீதா, “இப்ப இந்தமாதிரி யாரும் கட்டறதில்லை” என்றாள். ‘நான் சமீபத்தில் இந்தியா போகவில்லை, போனவர்களும் எனக்குப் புடவை வாங்கிவரவில்லை’ என்பதை பரிமளா புன்னகையில் வெளிப்படுத்தினாள்.
முதலில், பீடர் பெல்லானி பற்றித்தான் பேச்சு. அவன் போட்டியில் என்ன செய்ய வேண்டும், என்ன பரிசு கிடைக்கும் என்றெல்லாம் கேள்விகள்.
“மார்ச் முதலில் நாற்பது மாணவர்களும் வாஷிங்டனில் தங்கள் ஆராய்ச்சியை எடுத்துச்சொல்ல வேண்டும். நான் மத்த முப்பத்தொன்பது பேருடைய ரிசர்ச் ரிபோர்ட்டின் தலைப்பையும் பார்த்தேன். பீடர் முதல் பத்திலே வருவான்னு தோணலை. போனதுக்கு ஐயாயிரம் டாலர் கிடைக்கும். பணத்தைவிட பெருமைதான் அதிகம்” என்றாள் பரிமளா.
அதைக்கேட்டதாலோ என்னவோ ராஜஸ்ரீ பரிமளாவை எதிர்ப்பட்டபோது முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாள்.

பூரி, பட்டாணி, உருளைக்கிழங்கு கறி, தக்காளிசாதம், குருமா, கோப்பையில் தயிர், குலாப்ஜாமுன் – இத்தனை வகைகளை பரிமளா சுவைப்பது விருந்தின்போதுதான். தனியாகத் தனக்கென்று தளிகைசெய்யும்போது ஒன்றிரண்டு பதார்த்தங்களிலேயே அலுப்பு தட்டிவிடும். சாப்பாட்டுக்கடை முடியப்போகிறது. இன்னும் அவள் யாரிடமும் நல்லசெய்தியைச் சொன்னபாடில்லை.
பாதிபேர் மேஜையிலமர்ந்து சாப்பிட, மற்ற பாதிபேர் இரண்டாவதுமுறை உணவை எடுத்துக்கொள்ள வரிசையில் நிற்க, சரோஜா கையில் பிடித்த தட்டைக் கரண்டியால் தட்டி கொஞ்சம் அமைதியை நிலைநாட்டினாள். “எல்லோரும் கவனமாகக் கேளுங்கள்! கோவிந்திற்கு பெர்க்கிலியில் இடம் கிடைத்திருக்கிறது” என்று அறிவித்ததும் பலத்த கைதட்டல். “கன்கிராஜூலேஷன் கோவிந்த்!” “கோ! கோல்டன் பேர்ஸ் கோ!” என்று பலவிதமான கூக்குரல்கள். அந்த சமயத்தில் தானுமெழுந்து, ‘நான் எழுதிய புத்தகம் வெளிவந்திருக்கிறது’ என்று ஒத்துப்பாட பரிமளாவுக்குப் பிடிக்கவில்லை. அவள் எதிர்பார்த்தது தனியாக ஒருத்தியுடன் இந்தமாதிரியான உரையாடல்.
“என்ன பரிமளா! உன்னைப் பாக்கவே முடியறதில்லை. வேலையைத்தவிர வேறே என்னதான் பண்ணறே?”
“ஓ! அதுவா? ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஸ்கூல்லே ஒருபொண்ணு சந்தேகம் கேட்டா. அதை வைச்சு ஒருபுஸ்தகம் எழுத ஆரம்பிச்சேன். முடியறதுக்கு தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு பத்துவருஷம் ஆயிடுத்து.”
“அப்படியா? அது எப்போ வெளிலே வரும்?”
“நேத்திக்கிதான் வந்துது. கார்லே ஒரு காப்பி வச்சிருக்கேன்.”
“நீ கையெழுத்துபோட்டுக் கொடு! படிச்சுப்பாக்கறேன். எனக்குப் புரியுமோ?”
“முன்பாதி கதைமாதிரி இருக்கும். படிக்கும்போது தொந்தரவா இருக்கப்படாதுன்னு கணக்கு சம்பந்தப்பட்ட விளக்கங்களை புஸ்கத்தின் கடைசிலே தனியா சேத்துருக்கேன். இஷ்டப்பட்டவா மட்டும் அதைப் பாத்துக்கலாம்.”
தனியாக வாழும் பரிமளா ஓய்வுநேரத்தை எப்படி செலவழிக்கிறாளென்று யாரும் அக்கறையாகக் கேட்கவில்லை.
சாப்பாட்டுக்குமுன், பக்கத்தில் அமர்ந்திருந்த சுகந்தி, “பாருங்க, பரிமளா! பையன் ட்யூக்லே மெடிகல். பொண்ணு சான்டியாகோலே டென்டல் ஸ்கூல் போறா. ரெண்டு பேருக்கும் சேத்து வருஷத்துக்கு லட்சம் டாலர் வைக்கவேண்டியிருக்கு. ரொம்பநாளா மிச்சம்பிடிச்சு சேத்துவச்ச பணமெல்லாம் கரைஞ்சு போகுது” என்று புலம்பினாள். கண்ணீர்விடாத குறை. சந்தோஷச்செய்தியை அப்போது அவளிடம் எப்படிச் சொல்வது?
சாப்பிடும்போது, “நீ காலேஜ்லே ஃபிசிக்ஸ் படிச்சியே, அன்செர்டென்டி ப்ரின்சிபல் ஞாபகம் இருக்கோ?” என்று பரிமளா நைசாக வசுந்தராவிடம் பேச்சை எடுத்தாள்.
கேள்வி வசுந்தராவின் அக்கா பையனின் காதில் விழுந்துவிட்டது. அவளைப் பேசவிடாமல் “சித்திக்கு எல்லாம் நிச்சயம். வாழ்க்கைலே அன்செர்டன்னு எதுவுமே இருந்தது கிடையாது. அன்செர்டென்டி ப்ரின்சிபல் எப்படி ஞாபகம் இருக்கும்?” என்று சிரித்தான். உண்மைதான். வசுந்தரா வசதியான குடும்பத்தில் அண்ணனுக்கும் அக்காவுக்கும் பிறகு நிறைய இடைவெளிவிட்டுப் பிறந்த செல்லப்பெண். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் திருமணமாகி யூ.எஸ்.ஸில் காலடிவைத்தபோதே நிரந்தரவாசி. கணவர் மோனார்க்கோ கெமிகல் கம்பெனியின் பெரிய புள்ளிகளில் ஒருவர். காலாகாலத்தில் இரண்டு குழந்தைகள். சொற்ப சம்பளத்தில் மாணவ வாழ்க்கையோ, விசா கிடைக்குமோ கிடைக்காதோ என்று அரசாங்கத்தின் தயவுக்குக் காத்திருப்பதோ, கையகல வாடகை வீட்டில் வாழ்வதோ, மக்கர்செய்யக் காத்திருக்கும் புராதன காரை ஓட்டுவதோ அவளுக்குத் தெரியாது. அவளிடம் ‘ரான்டம்’, ‘சான்ஸ்’ போன்ற நிச்சயமற்ற தத்துவங்களைப் பேசுவதில் அர்த்தமில்லை.
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், அரசியலில் ஈடுபாடுகொண்ட ஆனந்தி கையிலொரு எழுதம்அட்டையுடன் ஞாயிறுமதியம் ஏற்பாடுசெய்திருந்த தொலைபேசி விருந்துக்கு ஆள்சேர்த்தாள். வரப்போகிற கலிNஃபார்னியா முன்தேர்தலில் ஓபாமாவை ஆதரிக்கும்படி பெண் வாக்காளர்களைக் கூப்பிட்டு மசிக்க வேண்டும். அவளுடன் கிட்டச்சென்று பேசினால் அதற்கு வரச்சொல்லிக் கட்டாயப்படுத்துவாளோ என்று பரிமளா ‘ஹாயோ’டு நிறுத்திக்கொண்டாள்.
“யாருக்கெல்லாம் காப்பி வேணும்?” என்று சரோஜா கேட்டதற்கு, “இன்னும் கொஞ்சநேரம் போகட்டும்” என்ற பதில் வந்ததால், கூடத்தின் அறுபதங்குலத் திரையில் படம் பார்க்க நிச்சயமாயிற்று. எதைப்பார்ப்பது என்றுதான் விவாதம். ‘ஃபார்டி இயர் ஓல்ட் வர்ஜின்’ வென்றது.
“நீ அதைப் பார்த்திருக்கியா?” என்று சரோஜா கேட்டாள்.
அதுதான் சாக்கென்று பரிமளா ஆரம்பித்தாள். “படம் பார்க்க எனக்கு எங்கேடி நேரம்? ஒரு புஸ்தகம் எழுதணும்னா அதுக்கு வேணுங்கற சமாசாரங்களை ஒண்ணொண்ணா சேகரம்பண்ணி-”
“நீ பார்! உனக்குப் பிடிக்கும்.” பரிமளாவுக்கு நீ, உனக்கு இரண்டிலும் அழுத்தம் விழுந்ததாகப் பட்டது. மற்றவர்கள் பார்வையிலிருந்து அவர்களுக்கும் அந்த அபிப்பிராயம்போல் தோன்றியது. பரிட்சை முடிந்ததைக் கொண்டாட சினிமாவுக்குப் போவதுபோல் புத்தகம் வெளிவந்ததற்காக படம் பார்த்தால் போயிற்று. சந்தோஷச் செய்தியைச் சொல்ல இன்னொரு வாய்ப்பு வரலாம். தரையில் டீன்-ஏஜ் கும்பல். சோஃபாவில் பெரியவர்கள். பரிமளா தன் இடுப்புக்கு இதமாக முதுகுயர்ந்த நாற்காலியில் இடம்பிடித்தாள்.
படத்தின் பெயரிலிருந்து எதிர்பார்த்ததுபோல், நாற்பதுவயதுவரை உடலுறவைக் காணாத ஒருவன். அவனை அவன் நண்பர்கள் செய்யும் கீழ்த்தரமான கேலி. அதைப்பார்த்து மற்றவர்களுக்கு சிரிப்பு. பரிமளாவுக்கு நெஞ்சில் முள் குத்துவதுபோல் வலி. நிமிஷத்துக்கு நாலு நான்கெழுத்து வார்த்தை. உடலுறவை நாசுக்காகக் குறிப்பிட ஆங்கிலத்தில் வேறு வார்த்தைகளா இல்லை? தமிழில் அழகாக ஐந்து வார்த்தைகள், சமஸ்கிருதத்தில் அதைவிட இன்னும் அதிகமாக அவளால் சொல்லமுடியும். ஒரே வாக்கியத்தில் இரண்டு கெட்ட வார்த்தைகள் வந்தபோது எழுந்துசெல்லத் துடித்தாள். அவளுக்கு உதவிசெய்வதுபோல் அவள் அலைபேசியில் ஒரு அழைப்பு. கூடத்திலிருந்து வேகமாக வெளியேறி பையிலிருந்து அதை எடுத்துப் பிரித்ததும், அவள் யாரென்றுகூடக் கேட்காமல், படபடவென்று ஸ்பானிஷ் வார்த்தைகள் கொட்டின. “நான் இப்போதே கிளம்பிவருகிறேன், கவலைப்படாதே!” என்று பதில்சொல்லிவிட்டு மூடினாள். “ஒரு அவசர வேலை. எல்லோருக்கும் பை!” என்று அவள்பக்கம் முகத்தைத் திருப்பியவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்றாள். படத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் மற்றவர்கள் கையசைப்போடு நிறுத்திக்கொண்டார்கள். தன்னுடைய மேல்ஜாக்கெட்டையும், காலணிகளையும் பொறுக்கியெடுத்து மாட்டிக்கொண்டு வேகமாக வெளியேறினாள். குளிர்கூட இதமாக இருந்தது.
வீடுதிரும்பப் பிடிக்கவில்லை. பரிமளா செல்லக்கூடிய இடங்கள் அதிகமில்லை. நகரநூலகம் வெள்ளிமாலையென்று ஆறுமணிக்கே மூடியிருக்கும். கடைகளில் டீன்-ஏஜ் கும்பலைத்தான் பார்க்கலாம். வழியில் ‘பார்டர்ஸ்’ புத்தகக்கடை கண்ணில்பட்டது. காரை நிறுத்திவிட்டு உள்ளேசென்றாள். சர்க்கரையும், பாலாடையும் கலந்த ஒரு பெரியஅளவு காப்பி வாங்கி சோஃபாவில் அமர்ந்து நிதானமாகக் குடித்தாள். உலகத்தில், ‘சான்ஸே’ இல்லையென்று அடித்துச்சொல்கிற எவ்வளவோ அதிசயங்கள் தினமும் நிகழும்போது நாற்பதுவயதுவரை ஒருவன் பெண்ணுறவைத் தவிர்த்தது ஒருபெரிய விஷயமா? அத்தனை காலமும் அவன் மற்ற முயற்சிகளில் மனதை செலுத்தி யிருக்கலாம். மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் அது ஒன்றுதானா? ஒரு பள்ளிக்கூடப் பெண்ணுக்குக் குழந்தையைக் கொடுத்து அவள் வாழ்க்கையை குட்டிச்சுவராக்கவில்லை. ஒருத்தியிடமிருந்து இன்னும் பலபெண்களுக்கு எய்ட்ஸைப் பரப்பவில்லை. கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு குழந்தைகளாகப் பெற்றுத்தள்ளவில்லை. இதெல்லாம் செய்யாததே அவனுடைய சாதனைகள்தான்.
அடுத்த வருஷம் வந்தால் அவளொரு அறுபதுவயதுக் கன்னி. அவளுக்குமுன் எண்ணற்ற பெண்கள் ஏழ்மையினாலோ, அழகுக்குறைவாலோ, அல்லது சமூகத்தின் கொடுமையாலோ அவளைப்போல் இருந்திருக்கிறார்கள். அத்தனைபேருடைய வாழ்க்கையும் அர்த்தமில்லாமலா போய்விட்டது? ஒரு ஆண், இந்தக்காலத்தில், அதுவும் அமெரிக்காவில் அப்படி இருப்பதுதான் ஆச்சரியம்போல் இருக்கிறது. அதற்காக அவனுடைய சொந்த வாழ்க்கையில் அவன் அநாகரிக நண்பர்கள் தலையிடுவதும், அவர்கள் பெண்களை இழிவுபடுத்துவதும்தான் ஹாலிவுட்டின் நகைச்சுவை போலிருக்கிறது. ஆனால், எனக்கு இதெல்லாம் பிடிக்குமென்று எப்படி எதிர்பார்க்கலாம்? இத்தனை வருஷங்கள் என்னுடன் பழகிய இவர்கள் என்னைத் தெரிந்துகொண்டது இவ்வளவுதானா?
மனம் அடங்கவில்லை.

அன்றிரவு தலைவலிக்கும் மனவலிக்கும் சேர்த்து இரண்டு அட்வில் பிஎம் மாத்திரைகளை விழுங்கிய பிறகுதான் பரிமளாவுக்கு தூக்கம் வந்தது. மறுநாள் அவள் எழுந்தபோது காலைநேரத்தில் அதிகம் மிச்சம் இருக்கவில்லை. காபி போட்டுக் குடித்ததும் தூக்கக் கலக்கம் மறைந்து உடலில் கொஞ்சம் புத்துணர்ச்சி. வியாழக்கிழமையின் நல்லசெய்திகளும், முதல்நாள்மாலை சரோஜா வீட்டிற்குச் சென்றுவந்த ஏமாற்றமும் சிறிதுசிறிதாக மனதில் உருவெடுத்தன. சமையலறையின் ஜன்னல் திரைகளை விலக்கினாள். சூரியனின் பிரகாசமான கதிர்கள் முகத்தில் இதமாகப் பாய்ந்ததும் மனதுக்கு உற்சாகம் தட்டியது. கண்கள் வெளிச்சத்துக்குப் பழக்கப்பட்டதும் அடுத்தவீட்டுப் பெண் அலிசன் வீட்டின்முன் சைக்கிள் ஓட்டுவது தெரிந்தது. ஒன்பதுவயது அலிசனுக்குப் பரிமளாவுடன் காரிய சிநேகிதம். விளையாட அவள் வயதுப்பெண் யாரும் கிடைக்கவில்லை யென்றால்தான் பரிமளாவின் வீடுதேடி வருவாள். இந்தநேரத்தில் அவள் சகபாடிகள் இன்னும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை போலிருக்கிறது.
சென்ற ஜூன் மாதத்தில் ஒருநாள் மாலை அலிசன் அந்த சைக்கிளை அவளிடம் பெருமையாகக் காட்டியது நினைவுக்கு வந்தது.
“எப்படி என் பைக்?”
“ரொம்ப அழகு. எங்கே வாங்கியது, வால்-மார்ட்டா?”
“நோ! நோ! அங்கே இதுமாதிரி உசத்தியாகக் கிடைக்காது. பைசிகிள் மட்டுமே விற்கும் ‘கெலான்ட்டி’ கடையில் வாங்கியது” என்றாள் பிரகாசமான குரலில்.
“நீயும் அப்பாவுடன் கூடச்சென்றாயா?”
“யெஸ்! கடைக்காரன் எல்லா பைக்கையும் எங்களுக்குக் காட்டினான். இதைப் பார்த்ததும் எனக்குப் பிடித்துவிட்டது. மெஜன்ட்டா நிற பைக் இங்கே வேறு எந்தப் பெண்ணிடமும் இல்லை. என் அப்பாவின் க்ரெடிட் கார்டைக் கொடுத்து நானே வாங்கினேன். புத்தகங்கள் வைக்க ஒருகூடை, தண்ணீர் பாட்டில் வைப்பதற்கு ஒருதனி இடம்” என்று ஒவ்வொன்றாகக் காட்டினாள்.
“வெரி குட்!”
“உன் வீட்டிற்கு முன்னால்தான் வேலி இருக்கிறதே. நான் இங்கே ஓட்டலாமா?”
“தாராளமாக. எதற்கும் உன் அம்மாவை ஒருவார்த்தை கேட்டுவிடு!”
அலிசன் ஜன்னல் வழியாக பரிமளாவைப் பார்த்ததும் கையசைத்துச் சிரித்தாள். பரிமளா வாசற்பக்கம் வந்து முன்கதவைத் திறந்தாள். “அலிசன்! நான் நேற்று ப்ளுபெர்ரி மஃபின் செய்தேன். வேண்டுமா?” என்று கேட்டதும்தான் தாமதம், சைக்கிளை நிறுத்திவிட்டு அலிசன் உள்ளே ஓடிவந்தாள்.
“எனக்கு இரண்டு தருகிறாயா?”
“ஷ_ர், மேஜையில் உட்கார்!”
“தாங்க்ஸ், பரி! அத்துடன் ஒருகோப்பை பால்.”
பரிமளா தருவதைச் சாப்பிட அலிசனின் அம்மா தடைசொல்வதில்லை. இரண்டாவதைச் சாப்பிட ஆரம்பிக்குமுன், பரிமளா தன் புத்தகத்தை எடுத்துவந்து அவள் முகத்துக்குமுன் நீட்டினாள். “அலிசன்! இதைப்பார்த்தாயா? என்ன வழவழப்பான வண்ண அட்டை! யார் எழுதியதென்று சொல் பார்க்கலாம்!”
அட்டையில் எழுதியவரின் பெயரைப் படித்ததும் அலிசனின் முகத்தில் பிரகாசம்.
“நீயே முழுக்க எழுதியதா?” என்று கண்களை விரித்தாள்.
“ஆமாம்.”
“எவ்வளவு பக்கங்கள்?”
“முன்னூற்றி ஐம்பது.”
“அவ்வளவா? புத்தகத்தில் கார்ட்டூன் படங்கள் உண்டா?”
“நிறைய. பிரித்துப்பார்!”

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்