பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

பி.கே. சிவகுமார்


(வடக்கு வாசல் – மார்ச் 2006 இதழில் பிரசுரமான கதை.)

கதவைத் திறந்து செருப்பைக் கழற்றினான் ரமேஷ். அரவம் கேட்டு வந்த புவனா கையிலிருந்த சாப்பாட்டுப் பையை வாங்கிக் கொண்டாள். ஹாலில் டி.வி. ஓடிக் கொண்டிருந்தது. அம்மாவோடு சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருப்பாள். டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாலும் வாசல் கதவின் பக்கம் ஒரு கவனம் எப்போதும் புவனாவுக்கும் அம்மாவுக்கும்.

“துரை வந்திருக்காராம். நீங்க வந்ததும் உங்களை வரச் சொன்னார்” என்றாள்.

“எப்ப வந்தானாம்? மத்தியானமே வந்துட்டானா? கடைக்கு வரச் சொல்றதுதானே,” என்றான்.

“இல்லை. ·ப்ளைட் லேட்டாயிடுச்சாம். மத்தியானம்தான் மெட்ராஸ் வந்தாராம். அங்கேயிருந்து இங்கே வர மணி எட்டு ஆயிடுச்சாம். வந்ததும் உங்களுக்கு போன் பண்ணினார்.”

துரையோட அப்பா ஏர்போர்ட்டுக்குக் கூப்பிட்டார். “ரமேஷ், கார்த்தால அஞ்சு மணிக்கே ·பிளைட் வந்துருது. வாடகைக்கு டாடா சுமோ சொல்லியிருக்கேன். நைட் பத்து மணிக்கெல்லாம் வண்டி அனுப்பிடறேன் சார்னு சொன்னான். நீ ராத்திரி கடை மூடினபிறகு, ஒரு பதினோரு மணிக்குக் கிளம்பினா, கார்த்தால நாலுமணிக்கெல்லாம் மெட்ராஸ் போயிடலாம். துரை வந்ததும் சுமோவை ஒரு அழுத்து அழுத்தினா, கார்த்தால பத்து பதினோரு மணிக்கெல்லாம் திரும்பி வந்துடலாம். கார்த்தால ஒரு ரெண்டு மணிநேரம் கடையைக் கடைப்பையனைப் பார்த்துக்கச் சொல்லிட்டு வாயேன். எங்களுக்குத் துணையாவும் இருக்கும். உன் ஸ்நேகிதனைப் பார்த்த மாதிரியும் இருக்கும்” என்று ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சொன்னார்.

மெட்ராஸ¤க்கு டாடா சுமோவில் போகிற வாய்ப்பு கொஞ்சம் அவன் சபலத்தைக் கிளப்பியது. அவன் வியாபார விஷயமாக மட்டும்தான் மெட்ராஸ் போவான். அவன் ஏஜன்ஸி எடுத்திருக்கிற இரண்டு மூன்று பொருட்களின் ஹெட்-ஆபிஸ் அங்கே இருக்கிறது. அதுசார்ந்த வேலையென்று வரும்போது ஒருநாள் காலை மெட்ராஸ் போய், வேலையை முடித்துவிட்டு அன்று இரவே திரும்பி விடுவான். அடுத்த நாள் கடை திறக்க வேண்டுமே. போகும்போதெல்லாம் ராத்திரி பதினொன்றரைக்குக் கிளம்புகிற பஸ்ஸிலோ அல்லது விடியற்காலை ஐந்து மணிக்குக் கிளம்புகிற ரயிலிலோதான். ராத்திரி போவதென்றால், கடை மூடிவிட்டு வீட்டுக்கு வந்து குளித்து முடித்து ரெடியாகி, பதினொன்றரை மணி பஸ்ஸ¤க்கு பத்தரை பத்தே முக்காலுக்கெல்லாம் பஸ் டிப்போவுக்கு ஓட வேண்டும். டிப்போவை விட்டு பஸ், பஸ் ஸ்டேண்டுக்கு வர வெளியே வரும்போதே அங்கேயே ஏறிவிட வேண்டும். அப்போதுதான் வசதியாக உட்கார இடம் கிடைக்கும். பஸ் ஸ்டாண்டில் இந்த பஸ்ஸ¤க்கு கூட்டம் இருக்கும். ஏன், டிப்போவுக்கு வெளியேகூட ஒரு பத்துப் பதினைந்துபேர் எப்போது அந்த பஸ் டிப்போவைவிட்டு வெளியே வரும் என்றும் காத்திருப்பார்கள். அந்த பஸ் சரியாக காலை ஐந்து மணிக்கெல்லாம் மெட்ராஸ் போய்ச் சேர்ந்துவிடும் என்பதால் பலருக்கும் வசதியான பஸ் அது. வேலை விஷயமாகப் போகிறவர்களாலும், வார விடுமுறையில் வீட்டுக்கு வந்துவிட்டு மெட்ராஸ் போகிற உத்யோகஸ்தர்களாலும் அந்த பஸ் எப்போதும் ஜேஜே என்று இருக்கும். அந்த பஸ் இல்லையென்றால், எட்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ரயில்வே ஸ்டேஷனிலிருந்து விடியற்காலை ஐந்து மணிக்குக் கிளம்புகிற ரயிலைப் பிடித்தால், ஒன்பதரைக்குச் சென்னை சென்ட்ரலில் கொண்டுபோய்விடும். அந்த ரயிலைப் பிடிக்க மூன்று மணிக்கு எழுந்து ரெடியாகி, டவுன்பஸ் பிடித்து ஜங்ஷனுக்கு ஓட வேண்டும். இந்தக் கஷ்டங்கள் இல்லாமல், டாடா சுமோவில் உட்கார்ந்து கொண்டு, பாட்டுக் கேட்டபடி மெட்ராஸ் போய் வருவது நன்றாகத்தான் இருக்கும். பஸ் மாதிரி அஞ்சு ஆறு மணி நேரமும் ஆகாது. நாலு மணி நேரத்தில் போய்விடலாம். வழியில் இரண்டு இடத்தில் வண்டியை நிறுத்தி பாத்ரூம், சாப்பாடு, இளநீர் என்று ரிலாக்ஸ¤ம் செய்து கொள்ள முடியும். போய்வருகிற கஷ்டமே தெரியாது.

துரை அமெரிக்கா போனபோது இப்படித்தான் ஒரு குவாலிஸில் துரை குடும்பத்தாரோடுபோய் வழியனுப்பிவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வருகிறது. ‘ஆனா, அது ஞாயித்துக் கிழமை. கடை லீவ். அதனால போய் வர முடிஞ்சது. இது திங்கட் கிழமை வருது. சந்தை நாள் அன்னிக்கி. எப்பவுமே வியாபாரம் ஒரு அஞ்சாயிரம் ரூபாவரைக்கும் அதிகம் ஆகிற நாள் அது. நேரத்துக்குத் திரும்ப முடியலைன்னா என்ன ஆவறது. இப்பதான் கடையை வேற பெரிசு பண்ணியிருக்கு. அதுக்கு வாங்கன பேங்க் லோனை நினைச்சா ராத்திரில சீக்கிரம் தூங்க முடியறதில்லை. முழுமூச்சா ஒரு மூணுவருஷம் கடையைப் பார்த்தா கடனிலிருந்து மீண்டு வந்துடலாம். அதுனாலேயே, புவனா அவள் அம்மா வீட்டுக்குப் போவதென்றாலும், ஞாயித்துக் கிழமைல கொண்டுபோய் விட்டதும் உடனே திரும்பிடறது வழக்கம். திரும்பி வரும்போது, புவனாவின் அப்பாவோ தம்பியோ அவளைக் கொண்டுவந்து விடுவார்கள். இதுல ரெண்டு வருஷம் முன்னாடி அமெரிக்கா போன ·பிரெண்டை வரவேற்க பொழைப்பை விட்டுட்டு ஏர்போர்ட்டுக்கு எங்க ஓடறது? துரை ஒண்ணும் சாதாரண ·பிரெண்ட் இல்லை. ஸ்பெஷல் ·பிரெண்ட்தான். அமெரிக்கா போய்கூட இரண்டு மூணு முறை போன் பண்ணி ரொம்ப நேரம் பேசினான். உனக்கு மீட்டர் ஓடப்போகுது. போதும் வெச்சிடு என்று சொன்னபோதும் பரவாயில்லை சும்மா பேசு என்று பேசினான். அப்புறம் பாவம், அவனுக்கும் செலவு, குடும்பம், போன் பண்ண வேண்டிய இடங்கள்னு நிறைய இருக்குமே. அவ்வளவா போன் பண்றதில்லை. ஆனாலும், எப்போ துரையோட அப்பா அம்மாவைப் பார்த்தாலும், போனமுறை போன் செய்தப்போ துரை அவனை விசாரித்ததை மறக்காமல் சொல்வார்கள். நானும் ரொம்பக் கேட்டேன்னு சொல்லுங்க’. அவன் நினைவுகள் சுழன்றன.

‘அதுவுமில்லாம, ரெண்டு வருஷம் கழிச்சு துரை வரான். அவனைப் பார்க்க அவன் வீட்டுல, அவன் பெண்டாட்டி வீட்டுலனு நிறைய பேர் ஆசையாக் காத்துட்டு இருப்பாங்க. அவனுக்கும் அவங்களைப் பார்க்கற ஆசை இருக்கும். நம்ம ஞாபகமோ, நாம ஏர்போர்ட்டுக்கு வரணும்னோ அவன் எதிர்பார்ப்பானா என்ன?’ என்ற நினைப்பும் மனதுக்குள் ஓடியது. அப்படியெல்லாம் சுலபமாக அவனை மறந்துவிடுகிற நண்பன் இல்லை துரை என்பதும் அவனுக்குத் தெரியும். போக முடியாததற்கு அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற சமாதானம் இது என்று அவனுக்குத் தோன்றியது.

“அப்பா, அன்னிக்குச் சந்தை நாள் வேற. எங்கப்பா என்னால அங்க இங்க நவுர முடியப் போவுது. நீங்க போயிட்டு வாங்க. துணைக்கு யாரு வராங்க. யாரும் வரலன்னா, யாராவது துணைக்குக் கூட வர ஏற்பாடு பண்றேன்பா. என்னால வர முடியலைன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. கடையைப் பெரிசு பண்ணதுக்கு அப்புறம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர முடியலை. புவனா வீட்டுக்குக் கூட போறதில்லை அவ்வளவா. அதான். ” என்றான் அவன்.

“நானு, அம்மா, மலர் வீட்டுக்காரருனு மூணு பேரு போலாம்னு இருக்கோம். நீயும் வந்தா நல்லா இருக்குமேன்னு சொன்னேன். சரி பரவாயில்லை விடு. பொழைப்பு முக்கியம். ·ப்ரெண்ட் எங்கப் போய்டப் போறான். இங்க வந்ததும் பார்த்துட்டாப் போறது,” என்றார் அவர் பெருந்தன்மையாக.

மலர் துரையோட இரண்டாவது தங்கை. முதல் தங்கை ராஜீ கல்யாணமாகி மூணு மணிநேரத் தொலைவில் சேலத்தில் இருக்கிறாள். மலர் உள்ளூரில் வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். அவர் வீட்டுக்காரர் பக்கத்துக் கிராமம் ஒன்றில் வாத்தியார் உத்தியோகம் பார்க்கிறார். டீச்சர்ஸ் யூனியன் விஷயமாய் அடிக்கடி மெட்ராஸ் போய் வருகிறவர்.

“ஓ.. ராமு வர்றாரா? அவர் ஏர்போர்ட் என்ன அமெரிக்காவையேகூட தனியா ரவுண்ட் அடிச்சுட்டு வர்ற அளவுக்குத் திறமைசாலி. பத்திரமா போயிட்டு வாங்க. இங்க வந்ததும் பார்க்கிறேன்” என்றான் அவன்.

·ப்ளைட் லேட் என்று இப்போது தெரிய வந்ததும், மெட்ராஸ¤க்குப் போகாதது நல்ல வேலை என்று நினைத்துக் கொண்டான். சந்தை நாள் என்பது பெயருக்குத்தான். முன்பு மாதிரியெல்லாம் ஊரில் சந்தை வாரத்துக்கு ஒருமுறை மும்முரமாகக் கூடுவதில்லை. சந்தைப் பேட்டையைப் புது பஸ் ஸ்டாண்ட் ஆக்கிவிட்டார்கள். சந்தையை ஊருக்கு வெளியே மூணு கிலோமீட்டர் நகர்த்தி விட்டார்கள். அதனால், சந்தையில் கடைகளும் நிறைந்திருப்பது இல்லை. ஆனால், சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சந்தை நாள் என்பது டவுனுக்குப் போய் பொருட்களை வாங்குகிற நாள் என்பது இன்னும் மறக்கவில்லை. எனவே, அந்த நாளில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதுவுமில்லாமல், சரக்குப் போடுபவர்கள் சந்தை நாளன்று காலை புதுச்சரக்குகளைக் கொண்டு வருவார்கள். அப்போது அவன் கடையில் இருந்தாக வேண்டும். இல்லையென்றால், மூவ் ஆகாததைத் தலையில் கட்டிவிட்டுப் போவார்கள். மூவ் ஆவதைக் குறைத்துக் கொடுப்பார்கள். அவன் இருந்தால் பேசி, மல்லுகட்டிக் காரியம் சாதிக்கலாம்.

“துரையைப் பார்க்கப் போறதுன்னா, சாப்பிட்டுட்டுப் போங்க.” என்றாள் புவனா.

“கடை சாத்தியாச்சா, யாவாரம் பரவாயில்லையா” என்றாள் அம்மா. தினமும் கேட்கிற கேள்விதான். அதைக் கேட்பதில் அம்மாவுக்கு ஒரு திருப்தி.

“ஆச்சி. பரவாயில்லை” என்று வழக்கமான பதிலைச் சொன்னபடி, பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

துரை அவன் பால்ய சிநேகிதன். சிநேகிதன் என்றால் ரொம்ப நெருக்கம். ஒன்னா ஸ்கூல் போய், ஒன்னா டியூஷன் போய், ஒன்னா கான்வென்ட் போற பெண்பிள்ளைகள் பின்னாடி போய், ஒன்னா சினிமாவுக்குப் போய், ஒன்னா வாலிபத்தின் சின்ன சின்ன தப்புகள் செய்யப் போய், என்று எல்லாம் ஒன்னாப் போனவர்கள். ரெண்டு தெரு தள்ளி அவன் வீடு. ஹை-ஸ்கூலில் இருந்து உள்ளூர் காலேஜ் வரைக்கும் ஒன்றாகப் படித்தார்கள். துரை நன்றாக வரைவான். பயாலஜி வகுப்புகளில் டீச்சர் அவன் வரைகிற படத்தைப் பார்த்தே மார்க் போடுவார். கோட்டோவியம், வண்ண ஓவியங்கள் என்று எப்போதும் ஏதும் வரைந்து கொண்டிருப்பான். தபால் வழியாக ஓவியமும் கொஞ்ச நாள் படித்தான். ஆனால், காலேஜில் துரை பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் எடுத்தான். கம்ப்யூட்டருக்குத்தான் ·ப்யூச்சர் என்று துரை அப்பாவின் டி.இ.ஓ. சொன்னாராம். அவன் பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரியில் சேர்ந்தான். அதில்தான் அவனுக்கு இடம் கிடைத்தது. அவன் அப்பாவுக்கு அவனை எப்படியும் காலேஜ் படிப்புப் படிக்க வைத்துவிட வேண்டும் என்று ஆசை. அதனால், “கெமிஸ்ட்ரினா என்ன பரவாயில்லை, சேர்!” என்று சொல்லிவிட்டார். ஒரு மளிகைக் கடையில், பொட்டலம் கட்டுபவராக ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குமாஸ்தாவாக உயர்ந்தவர் அவர். காலேஜ் படிப்பை முடித்துவிட்டால் மகன் தன்னைப்போல வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதில்லை என்ற நம்பிக்கை அவருக்கு. “நம்ம குடும்பத்திலே யாரும் ஹைஸ்கூலைத் தாண்டலை. நான் எட்டாவது பெயில். உன் சித்தப்பன் எஸ்.எஸ்.எல்.சி. பெயில். நீயாவது ஒரு டிகிரி வாங்கணும்” என்று அவனிடம் தன் வாழ்நாளின் ஆசையைச் சொல்லிக் கொண்டேயிருந்த அவருக்காகவே அவன் சிரமப்பட்டு கெமிஸ்ட்ரியைப் படித்தான். அவன் டிகிரிப் படிப்பின் கடைசி வருடத்தில் இருந்தபோது, மளிகைக் கடையில் உட்கார்ந்தபடியே அவர் ஒருநாள் திடீரென்று இறந்து போனார்.

ஹைஸ்கூல் படிக்கிற நாள்களிலிருந்து உள்ளூர் காலேஜ் முடிக்கிறவரை, அவன் துரை வீட்டுக்குப் போவதுபோலவே, துரையும் அடிக்கடி அவன் வீட்டுக்கு வருவான். துரை வீட்டில் அவனுக்குக் கிடைக்கிற உபசாரம்போலவே, துரைக்கும் அவன் வீட்டில் உபசாரம் நடக்கும். துரையின் அப்பா வாத்தியார் என்பதால் அந்தக் குடும்பம் மீதே அவன் அப்பாவுக்குத் தனிமதிப்பு. துரையோடு சேர்ந்தால் தன் மகன் உருப்பட்டுவிடுவான் என்று அவர் நம்பினார்.

கல்லூரி நாள்களில் துரையைப் பார்க்கும்போதெல்லாம் அப்பா அவனிடம், “துரை, நீதான் நல்ல ஆர்ட்டிஸ்ட் ஆச்சே. ‘S. இரமேஷ் B.Sc.’-ன்னு எனக்கு உன்கையால ஒரு போர்டு எழுதிக் கொடேன்” என்று கேட்பாராம். துரையும் எழுதித் தருவதாகச் சொல்வானாம். ஆரம்பத்தில் அவனுக்கு இது தெரியவரவே இல்லை. அப்பா அவன் முன்னிலையில் இல்லாத சமயங்களில் கேட்டிருக்கிறார். அப்புறம் ஒருநாள், “துரை, அந்த போர்டு விஷயம் என்னாச்சுபா?” என்று அவன் முன்னிலையில் கேட்டார். “இதோ இந்த செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சதும் செஞ்சுடலாம்” என்றான் துரை. அப்போதுதான் இதுபற்றி அவனுக்குத் தெரியவந்தது. அப்பாவின் அப்ஷஸன் மேலும் இன்னசென்ஸ் மேலும் கொஞ்சம் எரிச்சலாக வந்தது. என்னத்தைப் படிச்சுக் கிழிச்சோம் போர்டு மாட்டிக்கற அளவுக்கு என்று தோன்றியது. “டேய், அவருதான் கேட்கிறாருன்னா உனக்கு எங்கடா அறிவு போச்சி. பி.எஸ்.ஸி முடிக்கறதுக்கு முன்னயே, பி.எஸ்.ஸி.ன்னு போர்டா. இதென்ன பெரிய ஐ.ஏ.எஸ். கலெக்டர் படிப்பா, அதுக்கு ஒரு போர்டா. நீ ஏதும் போர்டு கீர்டு எழுதிக் கொடுத்தா நடக்கறதே வேற!” என்று துரையிடம் எச்சரித்தான். “டேய், அவருக்கு ஆசைடா, உன்னைப் பட்டதாரியாப் பார்க்கணும்னு. நீ என்னைக்கு டிகிரி வாங்கறியோ அன்னிக்கு உன் பேரு போட்டு ஒரு நேம் போர்டு எழுதி அவர்கிட்ட கொடுக்கப் போறேன்” என்று துரை சொல்லிக் கொண்டிருந்தான். அப்புறம் அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் அவன் பொருட்டு, இதோ அதோ என்று துரை சமாளிப்புகள் செய்வான். அப்பாவும் “சரிப்பா, ஒண்ணும் அவசரமில்லை” என்று சொல்லிவிடுவார். கடைசியில் அவன் பி.எஸ்.ஸி வாங்குவதைப் பார்க்காமலேயே அவன் அப்பா போய்விட்டார். பி.எஸ்.ஸி.. முடித்தும் வேலைதேடிக் கிடைக்காமல், அவன் சின்னதாக ஒரு பெட்டிகடை மாதிரி ஆரம்பித்து, கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து…

பழைய ஞாபகங்கள் கொணர்பவை சந்தோஷமா துக்கமா என்றெல்லாம் இப்போது ஒன்றும் இனம்பிரித்து அறிய முடிவதில்லை. துரையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து, அப்பாவுக்குப் போய், டிகிரி வாங்குவதற்கு முன்னால் அப்பா போய்விட்டதற்குப் போய் என்று ஏதேதோ நினைவுக்கு வருகிறது. என்னதான் யோசித்து, மனதைப் பயிற்றுவித்துச் சோகமான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று விரும்பினாலும், இறந்த காலத்துக்குப் போகும்போது ஸ்பாண்டேனியஸாக எல்லாம் கலந்து வந்து நிற்கின்றன.

திரும்பி வந்து கிச்சனுக்குள் நுழைந்தான். தலை வலிக்கிற மாதிரி தோன்றியது. “கொஞ்சமாப் போடு. பசிக்கலை” என்றான் புவனாவிடம்.

“ஏன் துரையோட எங்கும் வெளிய சாப்பிடப் போறீங்களா? மணி பத்து ஆச்சே. எந்தக் கடை திறந்து இருக்கும். சாப்பிட்டுட்டுப் போங்க. இல்லை சந்தை நாள் பிஸின்னு மத்தியானச் சாப்பாட்டை சாயந்திரம் சாப்பிட்டீங்களா.. எவ்ளோ வேலை இருந்தாலும் ஒரு கால் மணிநேரம் சாப்பாட்டுக்குச் செலவு பண்ணிட்டு அப்புறம் வேலையைப் பார்க்கறதுக்கு என்ன?” என்றாள் புவனா.

“இப்போ எனக்கு அவ்வளவா பசிக்கல. அதான். லன்ச்சை மத்தியானமே சாப்பிட்டுட்டேன். பத்து மணி என்ன, நடுராத்திரி வரைக்கும் எல்லாக் கடையும் திறந்துதான் இருக்கும். துரை இன்னிக்குதான் வந்திருக்கான். இன்னிக்கே எங்கே வெளியப் போகப் போறோம். அதெல்லாம் இன்னும் ரெண்டொரு நாள் ஆகும். அவனும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். அவன் குடும்பத்தோட டைம் செலவு பண்ணனும். அவங்க அம்மா அவன் வர்றான்னு ஆளு வெச்சி முறுக்கு, ஸ்வீட்னு பண்ணாங்கன்னு சொன்னியே. அதையெல்லாம் அவன் சாப்பிட வேண்டாமா,” என்றான்.

“துரை வந்திருக்கானாமே!” என்றபடி சமையலறைக்குள் வந்தாள் அம்மா. “ஆமாம்மா, சாப்பிட்டுட்டுப் போய்ப் பார்க்கணும்” என்றான்.

“மணி பத்து ஆவுதே, கார்த்தாலே போய்ப் பார்த்தா என்னா? இந்நேரத்துக்குப் போயி.. எப்ப வந்து.. தூங்கி… காலைல கடை திறக்கப் போக வேணாமா. நாளைக்குக் கார்த்தால நானும் புவனாவும் போய்ப் பாக்கப் போறோம். நீயும் அப்ப போறது?” என்றாள் அம்மா.

“இல்லைம்மா. ஒரு அஞ்சி நிமிஷம் ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வந்துடறேன். நீங்க தூங்குங்க. பார்த்து எவ்ளோ நாளாவுது. எவ்ளோ நேரம் ஆனாலும் வரச்சொல்லியிருக்கானாம். அவன் அப்பா வேற ஏர்போர்ட்டுக்குக் கூப்பிட்டார். அதுவும் என்னால போக முடியலை. இப்போ போகலன்னா நல்லா இருக்காது,” என்றான்.

“ஆமா, அந்தக் காலத்தில இருந்து இப்படி ஜோடி சேர்ந்து ஆடினவங்கதானே நீயும் அவனும். ராத்திரில கூட வூட்டுக்கு வராம, ரெண்டாவது ஆட்டம் பார்த்துட்டு அவங்க வூட்டு மாடில தூங்கினவன் ஆச்சே நீ. பழசு விட்டுப் போயிடுமா? ஜாக்கிரதையாப் போயிட்டு வா” என்ற அம்மா, திடீரென்று நினைவு வந்தவள்போல, “துரைகிட்ட குங்குமப் பூ வாங்கிட்டு வரச் சொன்னியா? சொல்லியிருந்தால் வாங்கி வந்திருப்பானே” என்றாள்.

“குங்குமப் பூக்கு என்ன அவசரம்? நம்ம கடையிலேயே கிடைக்குதே. தேவைப்படும்போது எடுத்துகிட்டாப் போச்சு” என்றான்.

“நம்மூரு குங்குமப் பூ வெளிநாட்டுக் குங்குமப் பூ மாதிரி வராது. நம்மூர்ல எல்லாத்திலயும் கலப்படம். ராஜி மாசமா இருந்தப்போ துரை அங்க இருந்துதான் குங்குமப் பூ வாங்கி அனுப்பினானாம்” என்றாள் அம்மா.

“சரி, அதுக்கு இப்ப என்ன அவசரம். இப்பவே குங்குமப்பூ வாங்கி வச்சிட்டு, அடுத்த மாசமே புவனா குழந்தை பெத்துக்கப் போறாளா? நடக்கும்போது அதெல்லாம் நடக்கும். எப்ப வேணுமோ அப்ப வாங்கிக்கலாம். நீ திரும்ப குழந்தை புராணத்தை ஆரம்பிச்சுடாதே,” என்றான் கொஞ்சம் கடுகடுவென்று…

“சரி, என்னவோ பண்ணு” என்றபடி அம்மா தூங்கப் போனாள்.

“அம்மா ஏதோ அவங்க ஆசைக்குச் சொல்றாங்க. ஏன் அப்படிப் பேசறீங்க. விடுங்க. என்ன வாங்கிட்டு வந்திருக்கார் உங்க ·ப்ரெண்ட் உங்களுக்கு” என்றாள் சாப்பிட்டுக் கொண்டே புவனா.

என்ன வாங்கிட்டு வந்திருப்பான் தனக்குத் துரை என்று ஒரு நிமிஷம் யோசித்தான். அவன் கடை கஸ்டமர்கள் ரெண்டு மூணு பேரின் பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அந்தக் கஸ்டமர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். இப்போ எல்லாம் ·பாரின் போயிட்டு வரவங்க, எலெக்ட்ரிக் ரேஸர், ஆர்கனைசர், லாப்டாப் கம்ப்யூட்டர், செண்ட், டிவிடி ப்ளேயர், எம்.பி. த்ரி ப்ளேயர், வீடியோ கேம்ஸ், வைட்டமின் மாத்திரைகள், டாய்ஸ் என்று அள்ளிக் கொண்டு வருகிறார்களாம். சிங்கப்பூர், மிடில் ஈஸ்ட்டிலிருந்து வருகிறவர்கள் என்றால் பெரிய ஸ்கிரீன் டி.வி.கூட வாங்கி வருகிறார்கள். இதுகூட, ட்ரிபிள் ·பைவ், மார்ல்பரோ, பென்சன் ஹெட்ஜஸ் என்று விதவிதமான சிகரெட்டுகள், பகார்டி, ப்ளாக் லேபிள், கோனியாக் என்று லிக்கர்ஸ¤ம் சரளமாகப் புழங்குகிறதாம். அமெரிக்காவிலிருந்து ஒருத்தரோட பிள்ளை ஏ-ஒன் குவாலிட்டி முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, திராட்சை, பட்டை, கிராம்பு எல்லாம்கூட வாங்கிக்கொண்டு வந்தாராம். “எல்லாம் இம்போர்ட்டட் குவாலிடி சரக்கு. இந்தியாவில் அந்த மாதிரி முந்திரி, திராட்சையை நான் பார்த்ததேயில்லை” என்று அந்த கஸ்டமர் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.

“என்ன வாங்கிட்டு வந்திருப்பான்? தெரியலையே. சிகரெட்டும் ட்ரிங்சும் கொண்டாந்திருப்பான் ·பிரண்ட்ஸ் எல்லாருக்கும்னு நினைக்கறேன். வேற என்ன வாங்கிட்டு வரப் போறான். அவன் வீடு, அவன் தங்கச்சிங்க வீடு, மாமியார் வீடுன்னு அவனுக்கு வாங்கிட்டு வர வேண்டிய வீடுங்க நிறைய இருக்கே. நம்மளையெல்லாம் ஞாபகம் வெச்சிட்டுப் பழய மாதிரி பழகறானே அது போதாதா,” என்றான் புவனாவிடம்.

“அழுத்தமான ஆளு நீங்க. அவர் என்ன வாங்கிட்டு வருவார்னு ஐடியா இருந்தாலும் வெளியே சொல்லுவீங்களா என்ன? உங்கள மாதிரி ஸ்பெஷல் ·பிரெண்டுக்கு அவர் ஏதும் ஸ்பெஷலா வாங்கிட்டு வராமலா இருப்பார். சிகரெட் ட்ரிங்க்ஸ் எல்லாம் மத்தவங்களுக்கும் வாங்கறது. அதும் உங்களுக்கு இருக்கும். அது இல்லாம எதுவும் ஸ்பெஷலா உங்களுக்கு வாங்கி வந்திருப்பார் பாருங்க.” என்றாள் புவனா.

“அப்படியெல்லாம் எதிர்பார்த்தோம்னா, ஏமாந்துதான் போயிடுவோம். ஏதோ அமெரிக்கா போயும் ·பிரெண்ட்ஷிப்பை ஞாபகம் வச்சிட்டுப் பழகறானேன்னு சந்தோஷப்படுவியா.. என்ன வாங்கிட்டு வந்திருப்பான்னு கணக்கு போடுவியா” என்றபடி புறப்படத் தயாரானான் அவன்.

“ஆமா, நாங்க கணக்கு போடறதை வெளியில சொல்லிடறோம். நீங்க மனசுக்குள்ளவே வெச்சுக்குவீங்க. வியாபாரத்துல காட்டுற அழுத்தத்தை வீட்டுலயும் காட்டணுமா என்ன” என்று சிணுங்கிக் கொண்டாள் புவனா. தொடர்ந்து, “எனக்குத் தெரியாதா உங்களைப் பத்தி, வீட்டுலயே என்ன வேணும்னு வாய் தொறந்து சொல்லாத ஆளு நீங்க. யாராவது பார்த்துப் பார்த்துச் செஞ்சா, ஒண்ணும் சொல்லாம எடுத்துக்குவீங்க. செய்யலைன்னாலும் அலட்டிக்க மாட்டீங்க. கடையைப் பெரிசு பண்றதுக்கு துரைகிட்ட கொஞ்சம் கேஷ் கடனாக் கேளுங்கன்னு சொன்னப்போகூட, வேணாம்னு சொன்னீங்களே. சும்மா உங்க ·பிரெண்ட் வந்திருக்காரேன்னு உங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்காருன்னு உங்களைக் கிண்டல் பண்ணேன். அதுக்காக என்மேல கணக்குப் போடுறேன்னு பழியா? நான் ஒண்ணும் மாமியார் வீட்டுக்குக் கூட போகாத அளவுக்கு வியாபாரி இல்லைப்பா… யாரும் வாங்கித் தந்து ஓடுற நிலைல நம்ம பொழைப்பு இல்லை என்பதே எவ்ளோ சந்தோஷமான விஷயம்னு எனக்குத் தெரியாதா” என்றாள் அனுசரணையாகவும் புகார் சொல்கிற பாணியிலும்.

“ஆமா ஆமா. நான் என்ன சின்னக் குழந்தையா. எதுவும் வாங்கிட்டு வரலைன்னா அழறதுக்கு” என்று சிரிக்க முயன்றான் அவன்.

பேச்சை மாற்றும் விதமாக, “ட்ரிங்க் சாப்பிட்டீங்கன்னா, பைக்கைப் பார்த்து ஓட்டுங்க.” என்றாள் மெதுவாக புவனா.

“வண்டி எடுத்துட்டுப் போகலை. ரெண்டு தெருதானே. அஞ்சு நிமிஷத்துல குறுக்கால நடந்திடுவேன். சாப்பிட்ட பிறகு நடந்த மாதிரி ஆச்சு” என்றவன், “எனக்காகக் காத்திருக்காதே. நான் சாவியெடுத்துட்டுப் போறேன். அப்பா படத்தோட லைட் தவிர மத்ததெல்லாம் வழக்கம்போல அணைச்சிட்டு நீ தூங்கு. நான் சீக்கிரம் வந்துருவேன்னு டி.வி. முன்னால உட்கார்ந்திருக்காதே. அங்க எப்படி நிலவரம்னு தெரியலை. அதனால நான் வர லேட்டாகலாம்” என்றபடி செருப்பை மாட்டியபடி படியிறங்கினான்.

“சரி. பத்திரம். சீக்கிரமா வாங்க” என்றபடியே கதவைச் சாத்தினாள் புவனா.

***** ***** *****

வழியெல்லாம் துரை என்ன வாங்கி வந்திருப்பான் என்று அவன் மனம் யோசித்துக் கொண்டேயிருந்தது. வீட்டுக்கு வரும்வரை நினைக்கவே தோணாத விஷயத்தை புவனா ஞாபகப்படுத்தி விட்டாளே என்று சற்று எரிச்சலாகவும் இருந்தது. துரை நமக்கு என்ன வாங்கி வந்திருப்பான் என்று அறிந்து கொள்ள துறுதுறுப்பாகவும் இருந்தது. ஒரு வியாபாரியாக எல்லாவற்றிலும் லாபம் எதிர்பார்ப்பதுபோல் துரையிடமும் லாபம் எதிர்பார்க்கிறேனோ என்று தன்னையே கேட்டுக் கொண்டான். க்ளோஸ்-·பிரெண்ட்கிட்ட எதிர்பார்க்கிறதுல என்ன தப்பு? நாம ஒண்ணும் வாய்விட்டுக் கேட்கலையே என்றும் சமாதானம் சொல்லிக் கொண்டான். உரிமையாய்க் கேட்டு வாங்குகிற அளவுக்கு துரை நல்ல ·பிரெண்ட்தான். ஆனாலும், நண்பனைப் பார்க்க போகிற இந்த நேரத்தில், அவனைச் சந்திக்கிற மகிழ்ச்சியில் திளைக்காமல், என்ன வாங்கி வந்திருப்பான் என்று யோசிக்கிற அபத்தத்தில் சிக்குண்டிருப்பதை நினைக்கும்போது ஒருபுறம் வேடிக்கையாகவும் இன்னொருபுறம் வருத்தமாகவும் இருந்தது. இதில் என்ன தவறு? வெளிநாடுகளிலிருந்து வருகிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் எல்லாரும் வைக்கிற எதிர்பார்ப்புதானே இது என்று தனக்குள் சமாதானம் செய்து கொண்டான். துரை என்ன தந்தாலும் சந்தோஷமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கூடவே, தன்னைப் போல முக்கிய நண்பனுக்கு மோசமான பொருள் எதையும் துரை வாங்கி வந்திருக்க மாட்டான் என்றும் நம்பிக்கையூட்டிக் கொண்டான். என்ன வாங்கி வந்திருப்பான் என்பது மட்டும் ஏனோ சரியாக யோசனைக்குப் பிடிபடவே இல்லை. துரை ஒன்றுமே வாங்கி வந்திருக்காவிட்டாலும், துரையோட நட்புதான் முக்கியம் என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டான். அதனால், இதுகுறித்த எந்த ஏமாற்றத்துக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டான்.

துரை வீட்டு வாசற்படிக்கு இரண்டு புறமும் தெருவைப் பார்த்தமாதிரி திண்ணைகள். வாசற்படி, திண்ணையில் பல்புகள் எரிந்து கொண்டிருந்தன. இடதுபுறத் திண்ணையில் பாய் விரித்து, துரையின் அப்பா அவர் சகாக்களோடு உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரோடு வேலை செய்து ரிடையர் ஆன, ரிடையர் ஆவதற்கு இன்னும் ஓரிரு வருடங்கள் இருக்கிற ஆசிரியர்கள். இவனைப் பார்த்ததும், “வா வா, என்ன இவ்ளோ நேரம். துரை வந்ததும் கேட்டான்,” என்றார். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. அவருடைய வழக்கமான சிஸர்ஸ் பிராண்ட் மாதிரித் தெரியவில்லை. ·பாரின் சிகரெட்டோ? பென்சன் ஹெட்ஜஸா மார்ல்ப்ரோவா? பக்கத்தில் எவர்சில்வர் க்ளாசில் ஏதோ திரவம். துரை வாங்கி வந்ததாக இருக்க வேண்டும். ரம் வாசனை மாதிரி அடிக்கிறதே. அவர் ரொம்ப சந்தோஷமாகவும் ரிலாக்ஸ்டாகவும் இருப்பது தெரிந்தது. “வரேன்பா. எப்படி இருக்கீங்க. மெட்ராஸ் பிரயாணம் எப்படியிருந்தது. ·ப்ளைட் லேட் ஆயிடுத்து போல இருக்கே!” என்றான் அவன். “ஆமா, பிரயாணம் நல்லா இருந்தது. நமக்கு என்ன லேட்டு. ஏர்போர்ட்டை வேடிக்கை பார்த்ததுல டைம் போனது தெரியல.” என்றார். தொடர்ந்து, “கொஞ்சம் சாப்பிடுறியா?” என்றார் உபசரிப்பாக. எதை என்று அவரும் சொல்லவில்லை. அவனும் கேட்கவில்லை. “இல்லைப்பா, நீங்க சாப்பிடுங்க. நான் இப்போதான் ராத்திரிச் சாப்பாடு சாப்பிட்டேன்.” என்றவன், “எங்க துரை உள்ளே இருக்கானா?” என்றபடியே வாசற்படி தாண்டி உள்ளே நுழைந்தான். “ஆமாமாம். போய்ப் பாரு. நான் இதோ வந்துடறேன்” என்றபடியே, மறுபடியும் தன் சகாக்களுடன் ஐக்கியமானார் அவர்.

துரை வீட்டில் இரண்டு திண்ணைகளுக்குப் பின்னால் இரண்டு படுக்கையறைகள். இடதுபுறத் திண்ணைக்குப் பின்னால் இருக்கிற அறைதான் துரையின் படுக்கையறையாகவும் படிக்கும் அறையாகவும் அந்தக் காலத்தில் இருந்தது. துரை வெளியூர் போனபின், வீட்டுக்கு வருகிற மருமகன்கள், விருந்தாளிகள் அந்த அறையில் தங்குவதை அவன் பார்த்திருக்கிறான். இரண்டு அறைகளையும் தாண்டியபின் பெரிய நடை. நடையை ஒட்டி ஒரு ஹால். வருகிறவர்கள் உட்கார்ந்து பேச அந்த நடையும் ஹாலும் வசதியாக இருந்தன. அதற்குப் பின்னால் இரண்டு அறைகள். வலதுபக்கம் இன்னொரு படுக்கையறை. இடதுபுறம் கிச்சன். இரண்டுக்கும் நடுவில் போனால், பின்புறமாக பாத்ரூம், புழக்கடை.

வீடு ஒரே கலகலப்பாக இருந்தது. எல்லா லைட்களும் எரிந்து கொண்டிருந்தன. துரையின் அம்மாவும் அப்பாவும் மட்டும் இருக்கிற நாளில் வாசற்படி லைட் எரியும்; அப்புறம் உள்ளே நடை லைட்டும் கிச்சன் லைட்டும் மட்டும் எரிவது தூர இருந்து பார்க்கும்போது தெரியும். உள்ளூரில் இருக்கிற துரையின் அத்தை, தங்கை மலர், மலர் வீட்டுக்காரர் ராமு, மலரின் இரண்டு குழந்தைகள் என்று வீடு இரைச்சலும் சந்தோஷமும் நிரம்பியதாக இருந்தது. துரையின் இன்னொரு தங்கை ராஜீயைக் காணோம். ஊரிலிருந்து நாளை நாளன்னைக்கு வரப்போகிறாளோ என்னவோ. அவனுக்குப் பள்ளிக்கூட நாள்களின் ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் துரையின் வீடு இப்படித்தான் எப்போது ஆட்கள் நிரம்பியதாகவும் ஓய்வற்றதாகவும் இருக்கும். துரையின் அம்மா எப்போதும் கிச்சனில் எதாவது செய்தபடியே இருப்பார். அவன் போகும்போதெல்லாம், அங்கே சாப்பிடாமல் வந்ததே கிடையாது. தூர் வாரிய கிணறுபோல துரையின் வீட்டுக்குள் நுழைந்ததும் பழைய ஞாபகங்கள் ஊற்றெடுத்தன அவனுக்குள்.

அவனைப் பார்த்ததும், “வாங்கண்ணா. இப்பதான் உங்களுக்கு வழி தெரிஞ்சுதா. எங்கண்ணன் அமெரிக்கால இருந்து வரும்போதுதான் உள்ளூர்ல இருக்கிற உங்களைப் பார்க்க முடியும் போல இருக்குதே” என்றபடியே வரவேற்றாள் துரையின் தங்கை மலர்.

“என்னம்மா, நல்லா இருக்கியா. எங்க உன்னைக்கூட பார்க்கவே முடியறதில்லை. முன்ன எல்லாம் அட்லீஸ்ட் கடைவீதிப் பக்கம் பார்ப்பேன். இப்போ அவ்வளவா வெளியவே வரது இல்லை போல இருக்கே” என்றான் அவன்.

“வெளியே போனா டி.வி.யிலே சீரியல் மிஸ்ஸாயிடுமே. அதனால மலர் கிச்சனுக்குக் கூடப் போறதில்லை” என்று சிரித்தபடியே சொன்னார் ராமு. மற்றவர்களிடம் முகமன் விசாரித்துவிட்டு, ராமு உட்கார்ந்திருந்த பெஞ்சில் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான் அவன்.

“அம்மாவும் புவனாவும் நல்லா இருக்காங்களா?” என்றபடியே கையில் முறுக்குத் தட்டுடன் துரையின் அம்மா வந்தார். “நல்லா இருக்காங்கம்மா. காலைல வருவாங்க. உங்களுக்குக் கால்வலி இப்போ பரவாயில்லையா? இது என்ன, துரை வரதுனால ஸ்பெஷல் சமையலா? திருப்பி சமைக்கிறதுல இறங்கிட்டீங்களா? ரெஸ்ட் எடுத்தாதானே கால் வலிக்கு நல்லது,” என்றான் அவன்.

“நீ வாங்கித் தந்த அந்தப் புத்தூர் எண்ணெய் தடவினப்பொறகுதான் கால் வலி கொஞ்சம் பரவாயில்லைப்பா. இல்லைன்னா, நான் பட்ட பாடு இருக்கே. இப்பவும் வலிக்குது. ஆனா, அந்த எண்ணெய் தடவினா நல்லாக் கேட்குது.” என்றார் துரையின் அம்மா.

“துரை மாமா வாங்கியாந்தாங்க” என்றபடியே மலரின் ஐந்து வயது மகன் ஒரு பொம்மையுடன் ஓடிவந்து அவனிடம் ஆசையாகக் காட்டினான். “அப்படியா, என்னது இது” என்றான் அவனும் குழந்தையிடம் பதிலுக்கு. அவன் கேட்ட கேள்வியில் உற்சாகமடைந்த குழந்தை, “கீ கொடுத்தா பறக்கிற கெலிகாப்டர்” என்று சிரித்தான். தொடர்ந்து, “இது மட்டும் இல்லை. எனக்கு இன்னும் வீடியோ கேமும் இருக்கு. தம்பிக்கு லைன் கிங் டாய் வாங்கி வந்திருக்காங்க. ராஜீ பெரிம்மா வீட்டுச் சுந்தரிக்கு கீபோர்டு எல்லாம் வாங்கி வந்திருக்காங்க துரை மாமா” என்று பட்டியல் ஒப்படைத்தான் குழந்தை.

“அண்ணன் வந்ததும் ‘எனக்கு என்ன வாங்கினு வந்த மாமா?’ன்னு அவரை நச்சரிச்சு, உடனேயே பெட்டியத் திறக்க வெச்சிட்டான்.” என்றாள் மலர்.

“மலர், உன் பையனா, கொக்கா?” என்று சிரித்தான் அவன். மலர் சந்தோஷமாகச் சிரித்தாள்.

“இரு, துரை பின்னாடி இருக்கற பெட்ரூம்ல இருக்கான். வரச் சொல்றேன்” என்றபடி “துரை! துரை!! யாரு வந்திருக்காங்க பாரு..” என்று கிச்சனுக்குத் திரும்பிப் போகும் வழியில் குரல் கொடுத்தார் துரையின் அம்மா.

“குழந்தை ·ப்ளைட்ல ஒரே அழுகையாம். சாப்பாடு எதுவும் சரியா சாப்பிடலையாம். சாப்பிட்டாலும் உடனே வாந்தியாம். அதான் அண்ணியும் ரொம்ப டயர்டா இருக்காங்க. குழந்தையோட தூங்கப் போனாங்க. குழந்தையைத் தூங்க வெச்சிட்டு வரேன்னு போனார் அண்ணன்” என்றாள் மலர்.

“வாப்பா, எப்படியிருக்கே. அம்மா, புவனா எல்லாம் சௌக்கியமா? இப்பதான் எட்டு மணிக்கு வந்தேன். நீ வரலைன்னா, கொஞ்சம் செட்டிலானபிறகு நானே ஒரு பத்து பத்தரைக்கு வரதா இருந்தேன்” என்றபடியே வந்த துரை, கையைப் பிடித்துக் குலுக்கினான்.

“வாப்பா, நல்லாயிருக்கியா, நல்லா இருக்கேன். ·ப்ளைட் எல்லாம் எப்படியிருந்தது” என்றான் அவன் பதிலுக்கு.

துரை கொஞ்சம் பூசினாற்போல ஆகியிருந்தான். கன்னங்கள் உப்பியிருந்தன. தொப்பை எட்டிப் பார்த்தது.. நிறைய பியர் குடிப்பானோ?. தலைமுடி கொஞ்சம் கொட்டியிருக்கிறதா அல்லது முடிவெட்டியதால் அப்படித் தெரிகிறதா என்று தெரியவில்லை. துரையைப் பார்க்கும்போது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கையைக் குலுக்குவதற்காகப் பிடித்த துரை இன்னும் கைகளை விடாமல் அன்யோன்யமாகப் பேசிக் கொண்டிருந்தான். கடை எப்படிப் போகிறது என்றான். அம்மாவும் புவனாவும் நல்லா இருக்காங்களா என்றான். புதியதாக இன்றைக்குத்தான் பார்த்த உற்சாகத்தில் துரை பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. தன் பெற்றோரிடமும் குடும்பத்திடமும்கூட துரை இவ்வளவு அன்யோன்யமாகப் பேசினானா என்று தெரியவில்லை. ஆனால், தன்னிடம் முன்னைவிட அன்யோன்யமாகப் பேசுவது நன்றாக இருந்தது. நெருங்கிய நட்பு என்றாலும், பிடித்த கையை விடாமல் எல்லாம் துரை இதற்குமுன் பேசியதில்லை. அமெரிக்காவுக்கு விமானம் ஏறுவதற்கு முன்கூட, “போயிட்டு வரேன்பா. அப்பா அம்மாவை டைம் கிடைக்கறப்போ கொஞ்சம் பார்த்துக்கோ” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போனவன்தான். துரை இப்படிப் பிடித்த கையை விடாமல் பேசுவதும் அந்த ஸ்பரிசமும் அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தாலும் தர்மசங்கடமாகவும் இருந்தது. கையை விடுவித்துக் கொண்டால் ஏதும் தவறாக நினைத்துவிடப் போகிறான் என்றும் தோன்றியது. இத்தனைக்கும் அந்த வீட்டில் யாரும் அவனுக்குப் புதியவர்கள் இல்லை. ஆனாலும், கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது. எல்லார் முன்னிலையிலும் கவனம் பெறுகிற தர்மசங்கடமா அல்லது வெளிநாட்டுப் பழக்கம்போல, கையைப் பிடித்துப் பேசுகிறானோ என்ற தர்மசங்கடமா என்று தெரியவில்லை. நல்லவேளை, வெளிநாடு போலத் தோளோடு சேர்த்து அணைக்காமல் இருந்தானே என்று தோன்றியது. அணைத்திருந்தாலும் அதை, தான் உள்ளூர விரும்பித்தான் இருந்திருப்போம் என்று அவனுக்குத் தோன்றியது.

“உங்க வீட்டுல, குழந்தை எல்லாம் எப்படி இருக்காங்க. என்ன உன் பையனைக் காட்டாம இப்படி ஒளிச்சு வெச்சுட்டு இருந்தால் நாங்க எல்லாம் எப்போ பார்க்கறது” என்றான் சிரித்தபடி.

“ஜெட்லேக், டயர்ட்னஸ். காலைல சரியாடுவாங்க. இப்பதான் தூங்கப் போனாங்க. காலைல பார்த்துட்டா போச்சு” என்றான் துரை.

“ஆமாமா, நல்லாத் தூங்கினா சரியாயிடும். தூங்கட்டும் இப்போ. டிஸ்டர்ப் பண்ண வேணாம்” என்றான். ஆனால், வீட்டில் எரிகிற லைட்களின் வெளிச்சத்திலும், பேச்சுகளின் இரைச்சலிலும் ரூமுக்குள் கதவைச் சாத்திக் கொண்டும் தூங்க முடியாது என்று தோன்றியது.

“செட் சேர்ந்தாச்சு. துரை இருக்கறவரைக்கும் ஊரைப் பழைய மாதிரி கலக்கப் போறீங்கன்னு சொல்லுங்க” என்றார் ராமு சிரித்தபடியே.

“அதுக்கென்ன. கலக்கிட்டாப் போச்சு” என்றான் அவனும் சிரித்தபடி.

சில நிமிடங்களுக்குப் பின், துரை “வா, நாம மொட்டை மாடிக்குப் போயிடலாம். ·ப்ரியாகப் பேசலாம்” என்றான்.. மாடிக்குப் போனதும், சிகரெட் என்று பாக்கெட்டை நீட்டினான். “சரி, கொடு” என்று அவன் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனின் சிகரெட்டை லைட்டரால் பற்ற வைத்தபின், துரை தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். லைட்டர் கூட ஏதோ புது டிசைனில் அழகாக இருப்பது அதன் வெளிச்சத்தில் அவனுக்குத் தெரிந்தது. அந்த மொட்டை மாடி அவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை. பள்ளிக்கூட கல்லூரி நாள்களில் பல சாயங்காலங்களையும் இரவுகளையும் துரையும் அவனும் அங்கே பேசிக் கழித்திருக்கிறார்கள். அவர்களின் சிறுவயது, துரையின் அமெரிக்க வாழ்க்கை, தன் குழந்தை என்று துரை பேசப் பேச அவன் கேட்டுக் கொண்டிருந்தான். துரை எப்போதெல்லாம் அவர்களின் பால்யகால விஷயங்களைப் பேசினானோ அப்போதெல்லாம் மட்டும் அந்த உரையாடலில் அவனும் உற்சாகமாகச் சரிசமமாகக் கலந்து கொண்டான். மொட்டை மாடி பழைய ப்ரியத்துடன் தாங்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.

நள்ளிரவு தாண்டி நெடுநேரம் ஆகியிருக்கும். “சரி, நானும் கொஞ்சம் தூங்கறேன், நீயும் நாளைக்குக் கடை திறக்கணுமே. நாளைக்குக் கடைக்கு வரேன். அங்கே பேசுவோம்” என்றான் துரை திடீரென்று.

“சரிப்பா நாளைக்குப் பேசலாம்.” என்றபடி மாடியிலிருந்து துரையுடன் கீழே இறங்கினான். தனக்குத் துரை என்ன வாங்கி வந்திருக்கிறான் என்பது நாளைக்குத்தான் தெரியும் என்று தோன்றியது. கீழே குழந்தைகள் தூங்கி விட்டிருந்தன. துரையின் அப்பா இன்னமும் திண்ணையில் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. துரையின் அத்தையும் அம்மாவும் உட்கார்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். மலரும் ராமுவும் திண்ணைக்கருகில் இருந்த அறைக்குள் தூங்கப் போய்விட்டார்கள். பேசாமல் ராவோடு ராவாக இன்றைக்கே வராமல், நிதானமாக நாளைக்கு வந்து துரையைப் பார்த்திருக்கலாம் என்று ஏனோ இப்போது அபத்தமாகத் தோன்றியது. ரொம்ப அற்பமாகச் சிந்திக்கிறோமோ என்றும் அவனுக்குக் குற்றவுணர்வாக இருந்தது. “இரவு எட்டுமணி சுமாருக்குத்தான் ஊரிலிருந்து வந்திருக்கிறான், ·ப்ளைட்டில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை, இன்னும் இங்கே செட்டிலாகவில்லை, மலர் பையன் நச்சரித்ததில் பெட்டியைத் திறந்து அவர்களுக்கான பொருட்களை எடுத்துத் தந்திருக்கிறான், மற்றவர்களுக்கெல்லாம் நிதானமாகத் தருவான்” என்று தோன்றியது.

அவன் விடைபெற்றுக் கிளம்புவதற்கு முன், “கொஞ்சம் இரு, இதோ வரேன்” என்று சொல்லியபடியே உள்ளே சென்ற துரை, சில நிமிடங்களில் கையில் பெரிய பொருளொன்றுடனும் சிறிய பை ஒன்றுடனும் திரும்பி வந்தான்.

‘ஏதோ ப்ரேம் போட்ட படம் மாதிரி தெரியுதே. ஆர்ட்டில் இன்ட்ரஸ்ட் என்பதால், எதாவது மாடர்ன் ஆர்ட் வாங்கிட்டு வந்துட்டானா எனக்கு? புவனா கிண்டல் செய்யப் போகிறாள்’ என்று தோன்றியது. திரும்பி வந்த துரையின் கையில் இருந்தது, ஓவியமோ சிற்பமோ இல்லை.

நல்ல ரோஸ் வுட்டில், ஒரு பெயர்பலகை நீளத்துக்கும் அகலத்துக்கும், மாடர்ன் ஆர்ட் மாதிரியான வர்ணக்கலவைகளின் பின்புலத்தில் பொன்னிறத்தில் “S. இரமேஷ் B.Sc.” என்ற பெயர் பதித்த போர்டு இராத்திரியிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

“உனக்கு ஞாபகம் இருக்கா, உங்க அப்பாகிட்ட உன் நேம் போர்டு எழுதித் தரேன்னு சொல்லி நான் தரவேயில்லையே. எனக்கு அதை நினைக்கும்போதெல்லாம் ரொம்ப வருத்தமா இருக்கும். அமெரிக்கால ரொம்ப நாள் அதை நினைச்சுப் பார்த்திருக்கேன். பாவம் அவரோட ஒரு சின்ன ஆசையை, நம்ம யூத்தோட டேஸ்ட்டுக்கு ஒத்துவரலைன்னு நிறைவேத்தாமலேயே போயிட்டோமேன்னு. அதுக்காக, இதை நானே டிசைன் செய்து, அங்கே ஸ்பெஷலாகத் தயாரிச்சுட்டு வந்தேன். ·ப்ளாரஸண்ட் பெயிண்ட். நைட்டிலும் தெரியும். கூடவே, பையில் உன் பெயர் போட்ட லெட்டர் ஹெட், உன் கடை ப்ரிட்ஜ்ல மாட்ட நேம்போட்ட மேக்னடிக் ஸ்ட்ரிப் எல்லாம் கூட இருக்கு. எப்படியிருக்கு? உனக்குப் பிடிச்சிருக்கா? நீ ஒண்ணும் சும்மா போர்டு போட்டுக்கலையே. படிச்சு வாங்கின பட்டத்தைத்தானே போடுறாய். அதுவும் உன் அப்பா ஆசைப்பட்டபடி. அதனால எந்தத் தயக்கமும் இல்லாம, உன் வீட்டு என்ட்ரன்ஸ்ல இந்த நேம் போர்டை வை” என்றான் துரை.

“நல்லா இருக்கு. தேங்க்ஸ்!” என்றான் சம்பிராதயமாக. “சரி, நாளைக்குப் பார்க்கலாம் குட்நைட்” என்று சட்டென்று விடைபெற்றுக் கொண்டு படியிறங்கினான். துரையின் அப்பாவிடம் “வரேன்பா” என்று சொல்லிவிட்டு, அவர் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தான். ஊர் தூங்கிக் கொண்டிருந்தது. தன் பெயர்ப்பலகையைத் தானே தூக்கிக் கொண்டு நள்ளிரவில் நடப்பது விசித்திரமாக இருந்தது. அவன் வீட்டுக்குள் நுழையும்போது, புவனா விழித்துக் கொண்டிருந்திருந்து, உங்க ·பிரெண்ட் என்ன வாங்கிட்டு வந்தார் உங்களுக்கு என்று கேட்காமல், தூங்கிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதே நேரத்தில், இந்த மாதிரி ஒரு பொருளைத் துரையைத் தவிர வேறு யாரால் தர முடியும் என்ற ப்ரியமும் அவனுள் எழுந்தது. அந்தக் கணம் அவனுக்கு அப்பாவின் முகம் கண்களுக்குத் தெரிந்தது. இரவின் நிசப்தத்தை அவன் குரல் கலைக்க மெல்லிய குரலில் விசும்ப ஆரம்பித்தான்…

pksivakumar@yahoo.com

நன்றி: வடக்குவாசல் மாத இதழ்.

Series Navigation

author

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

Similar Posts