பதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

ஹெச்.ஜி.ரசூல்


அந்த இரவு தன்னை
மூத்திரவாடையால் நிரப்பிக் கொண்டது
தூக்கம்வராமல் புரண்டு
மூத்திரம் பெய்ய எழுந்து செல்வதற்குள்
படுக்கையில் மூத்திரம் சென்றுவிடுகிறது.
உடுத்த கைலியில் ஈரம் படிந்திருக்க
ஒவ்வொருதடவையும்
எழுந்து நடக்க திராணியற்ற கால்களோடு
சாய்ந்துகிடத்தல் நிகழ்கிறது.
கனவில்வந்த ஹூருலீன் பெண்
மூத்திரவாடையை பொறுக்கமாட்டாமல்
முகம் மறைத்து
மூக்கைப் பொத்திக் கொண்டு சென்றாள்
எழுந்துநடக்க ஏலில்லை என்பதற்காய்
பாதுகாப்பாய் அருகே வைக்கப்பட்டிருந்த
யூரின்கேனின் வாய்ப்பகுதியில்
தளர்ந்துபோன
எழுபதுவயசுகுஞ்சைவைத்து
மூத்திரமெடுத்து வைப்பதற்கும்
வலதுகை ஒத்துழைக்கவில்லை.
படுக்கையின் தலக்காணி மட்டும்
அன்றாட துணையானது.
நேற்றைய இரவு
பதினேழுதடவை
மூத்திரம் பெய்த இரவாகிப் போனது.

Series Navigation