பணக்காரரும் ஏழையும்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)


அனல் வீசுகிற, ஈரப்பதம் பிசுபிசுக்கிற மாலைப் பொழுது. பெரிய நகரத்தின் இரைச்சல் காற்றை நிறைத்தது. கடற்காற்று வெதுவெதுப்பாக வீசிக் கொண்டிருந்தது. எங்கும் பெட்ரோல் மற்றும் தாரின் வாசம். தூரத்தில், கடலுக்கடியில் செஞ்சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இன்னமும் தணிய மறுக்கிற வெப்பம். அறையை நிரப்பியிருந்த பெருங்குழு சீக்கிரத்திலேயே அகன்றது. அப்புறம், நாங்கள் வீதிக்கு வந்தோம்.

கிளிகள் – பிரகாசமான, பச்சைநிற ஒளிக்கீற்றுகளைப் போல – இரவில் அடங்க, வீடு திரும்பி கொண்டிருந்தன. அதிகாலையில், அவை – பழத்தோட்டங்களும், பசுமையான வயல்களும், திறந்தவெளிகளும் கொண்ட – வடதிசை நோக்கிப் பறந்து சென்றன. மாலை நேரத்திலே, நகரத்து மரங்களிலே இரவைக் கழிக்க அவை திரும்பி வந்தன. அவற்றின் பயணம் சமச்சீராக இல்லாமல், மேலும் கீழுமாகவும், அஜாக்கிரதையாகவும், இரைச்சல் நிறைந்ததாகவும், ஆனால் பொலிவாகவும் இருந்தது. மற்றப் பறவைகளைப் போல அவை நேராக ஒரே கோட்டில் பறக்கவில்லை. மாறாக – அவற்றின் பயணம், எப்போதும் இடமும் வலமும் மாறி மாறித் திரும்புவதாகவும், திடாரென ஒரு மரத்தில் அமர்வதாகவும் இருந்தது. பறக்கிறபோது, அவைதான் மிகவும் அமைதியற்ற பறவைகள். ஆனால், சிவந்த அலகுகளுடனும், ஒளியின் புகழைச் சொல்லும் மின்னுகிற பச்சை நிறத்துடனும், அவை எவ்வளவு அழகாய் இருக்கின்றன! விகாரமான, உருவில் பெருத்த கழுகுகள் வட்டமிட்டுப் – பின்னர் – கிளையற்று, உயர்ந்து நின்ற பனைமரங்களிலே இரவிற்காக குடிகொண்டன.

புல்லாங்குழலை வாசித்தபடி ஒருவர் நடந்து போனார்; அவர் எங்கோ, ஏதோ செய்கிற ஒரு பணியாள். புல்லாங்குழலை வாசித்தபடியே அவர் மேட்டுபாங்கான பகுதியை நோக்கி நடந்தார். நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம். பக்கத்திலே இருந்த ஒரு தெருவை நோக்கி அவர் திரும்பினார் – வாசிப்பை நிறுத்தாமலேயே. இரைச்சலும் சந்தடியும் மிகுந்த நகரத்திலே, புல்லாங்குழலின் நாதம் கேட்பது வித்தியாசமாக இருந்தது; அதன் ஒலி இதயத்தை ஊடுருவி ஆழ உள்சென்றது. அது மிகவும் ரசிக்கத்தக்க அழகுடையதாக இருந்தது. நாங்கள் புல்லாங்குழல் வாசிப்பவரைப் பின்தொடர்ந்து இன்னும் சற்று சென்றோம். நாங்கள் பல தெருக்களைக் கடந்து – கடந்த தெருக்களை விட அளவில் பெரிய, விளக்குகளின் வெளிச்சத்தில் நிறைந்த – ஒரு தெருவில் நுழைந்தோம். தூரத்தில், ஒரு குழுவினர், சப்பணமிட்டுச் சாலையின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தனர். புல்லாங்குழல் வாசிப்பவர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அதனால் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். அவர் வாசித்துக் கொண்டிருக்கும்போது நாங்கள் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் பெரும்பாலோர் டிரைவர்கள், வேலைக்காரர்கள், வாட்ச்மேன் உத்தியோகம் பார்ப்பவர்கள். அவர்களுடன் நிறைய குழந்தைகளும் ஒன்றிரண்டு நாய்களும். கார்கள் கடந்து சென்றன. அவற்றுள் ஒன்றை டிரைவர் ஓட்டிச் சென்றார். உள்ளே ஒரு பெண்மணி, அழகான உடையணிந்து ஆனால் தனிமையாக, உள்விளக்கை எரிய விட்டபடி அமர்ந்திருந்தார். இன்னொரு கார் எங்களை நோக்கி வந்தது. அதிலிருந்து டிரைவர் கீழிறங்கி, எங்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டார். அவர்கள் எல்லோரும் பேசியும், சிரித்தும், அபிநயம் செய்தும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆனால், புல்லாங்குழலின் இசை – ஒருபோதும் சுருதி குறையவில்லை, தடம் மாறவில்லை. அங்கே பரவசம் நிறைந்திருந்தது.

விரைவிலேயே நாங்கள் அங்கிருந்து கிளம்பி – கடலை நோக்கி எங்களை அழைத்துச் செல்கிற, நன்கு ஒளியூட்டப்பட்ட பணக்காரர்களின் வீடுகளைக் கடந்து செல்கிற – சாலையில் நடக்க ஆரம்பித்தோம். பணக்காரர்கள் அவர்களுக்கே உரித்தான ஒரு விசித்திரமான சூழ்நிலை கொண்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் நாகரிகமும், தலையிடாத் தன்மை கொண்ட விநயமும், தொன்மையும், மெருகும் கொண்டிருந்த போதிலும் – பணக்காரர்கள், ஓர் ஊடுருவ இயலாத மற்றும் நிச்சயமான, அந்நியத்தன்மை நிறைந்த ஏகாந்தத்தில் ஆழ்ந்தவர்களாய் இருக்கிறார்கள். அந்த ஏகாந்தமென்கிற தீட்டுப்படாத நிச்சயத் தன்மை – கடினத்தன்மை – உடைக்க இயலாதது. அவர்கள் செல்வத்தை ஆள்பவர்களோ அனுபவிப்பவர்களோ அல்ல, செல்வத்தால் அனுபவிக்கப்படுபவர்கள்; ஆளப்படுபவர்கள். அது மரணத்தை விடவும் கொடுமையானது. தயாள குணமும், பரோபகாரமும் அவர்களின் அகந்தையாக இருக்கிறது. அவர்களுடைய செல்வத்தின் தர்மகர்த்தாவாக அவர்கள் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தர்ம ஸ்தாபனங்களும், அறக்கட்டளைகளும் உருவாக்குகிறார்கள். அவர்கள் தான் ஆக்குபவர்கள், கட்டுபவர்கள், கொடுப்பவர்கள். அவர்கள் தேவாலயங்கள் கட்டுகிறார்கள்; கோயில்கள் புனரமைக்கிறார்கள். அவர்களின் கடவுள், அவர்கள் வைத்திருக்கிற தங்கம் சொல்கிற கடவுள் ஆவார். இவ்வளவு வறுமையும், தாழ்வும் நிறைந்த உலகிலே, ஒருவர் பணக்காரராக இருப்பதற்கு, அவர் உணர்ச்சியற்றவராக இருக்க வேண்டும். அவர்களில் சிலர் கேள்வி கேட்கவும், தர்க்கம் செய்யவும், உண்மைநிலையை அறியவும் விழைகிறார்கள். பணக்காரர்களுக்கு, ஏழைகளைப் போலவே, உண்மை நிலையை அறிவது மிகவும் கடினமாகும். ஏழைகள் – பணக்காரர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் ஆவதற்கு யாசிக்கிறார்கள். ஆனால், பணக்காரர்கள், ஏற்கனவே, தங்களின் செல்வமழைத்துச் செல்கிற செயல்கள் என்னும் வலையில் அடைபட்டிருக்கிறார்கள்; ஆனாலும், அவர்கள் பாசாங்கு செய்கிறார்கள், சாகசம் செய்கிறார்கள். அவர்கள் அனுமானிக்கிறார்கள் – சந்தையை மட்டுமல்ல, இறுதிமுடிவையும் கூட. அவர்கள் இரண்டுடனும் விளையாடுகிறார்கள். ஆனால், அவர்கள் இதயத்தில் என்ன உள்ளதோ அதிலே மட்டுமே வெற்றியடைகிறார்கள். அவர்களின் இதயங்கள் வெறுமையாக இருக்கிற காரணத்தால் – அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள் – அவர்களின் எதிர்பார்ப்புகள், பயங்கள் – எதுவுமே உண்மை நிலையுடன் கிஞ்சித்தும் தொடர்புடையது அல்ல. எந்த அளவுக்கு புறவயமான பகட்டும் ஆடம்பரமும் தெரிகிறதோ, அந்த அளவுக்கு அகவயமான ஏழ்மை அதிகமாக இருக்கிறது.

ஒப்பிடப் போனால், செல்வம், வசதி, மற்றும் அந்தஸ்து நிறைந்த உலகத்தை உதறித் தள்ளுவது ஓர் எளிய விஷயமே. ஆனால் – ஒன்றாக ஆகிற, ஒன்றாக மாறுகிற ஆவலைப் புறந்தள்ளி வைப்பதற்கு – பெரிதான அறிவு நுட்பமும், புரிந்து கொள்ளும் தன்மையும் தேவைப்படுகின்றன. செல்வம் கொடுக்கிற அதிகாரமும், சக்தியும் உண்மை நிலையைப் புரிந்து கொள்வதற்கான தடைக்கற்கள் ஆகும். அங்ஙனமே – வெகுமதியும், ஆற்றலும் கூட உண்மை நிலையை அடைவதற்கான தடைக்கற்களே. இந்த வடிவங்களினாலே வருகிற நம்பிக்கையானது, சுயத்தின் – நான் என்கிற நிலையின் – தெளிவான செயற்பாடே ஆகும். அடைவதற்குக் கடினமானது என்றாலும் கூட, இத்தகைய உத்திரவாதங்களையும், அதிகாரங்களையும், சக்திகளையும் புறந்தள்ளி வைக்கிற நிலை, அடையக் கூடியதே ஆகும். ஆனால், எது மேலும் நுண்மையானது, எது மேலும் மறைந்துறைவது என்றால், ‘ஒன்றாக ஆகவேண்டும் ‘ என்கிற எண்ணத்தில் இருக்கிற சக்தியும், ஆற்றலும், நோக்கமுமே ஆகும். சுய-விரிவாக்கம் – அது, செல்வத்தின் வழியாக, நற்பண்புகளின் வழியாக என்று – எந்த வழியில் ஏற்பட்டாலும் – அது, எதிர்ப்பினையும் குழப்பத்தையும் உருவாக்குகிற முரண்பாட்டின் இயக்கமே ஆகும். ஒன்றாக மாறவேண்டும் என்கிற சுமையேற்றப்பட்ட மனம் எப்போதும் சலனமற்ற அமைதியடைய முடியாது. சலனமற்ற அமைதியானது (Tranquility), புரிந்து கொள்கிற நிலையாகும். ஆனால், ஒன்றாக ஆவது புரிந்து கொள்வதைத் தடுக்கிறது. ஒன்றாக ஆவது, காலம் குறித்த உணர்வை உருவாக்குகிறது; அது நிஜத்தில் புரிந்து கொள்வதை ஒத்திப் போடுவதே ஆகும். ‘நான் இப்படி ஆக வேண்டும் ‘ என்கிற எண்ணமே, சுய-முக்கியத்துவத்தால் பிறக்கிற மாயை ஆகும்.

நகரத்தைப் போலவே கடலும் அமைதியற்று இரைந்து கொண்டிருந்தது; ஆனால் கடலின் இரைச்சலுக்குள்ளே ஆழமும், பொருளூம் இருந்தது. நிலவு தொடுவானத்தில் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் பஸ்கள், கார்கள் மற்றும் ஜனங்களின் நெரிசல் மிகுந்த சாலையின் வழியாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தோம். சாலையோர பிளாட்பாரத்தில் ஒரு மனிதர் நிர்வாணமாகக் கிடந்து, உறங்கிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பிச்சைக்காரர். களைப்புற்று, போஷாக்கான உணவின்மையால் மோசமாக பலவீனமுற்றுக் கிடந்த அவரை எழுப்புவது கடினம். அவருக்குப் பின்னால், தொலைவில், பூங்காவின் – விரிந்த புல்வெளிகளும், பொலிவுமிக்கப் பூக்களும் கிடந்தன.

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – வரிசை: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living – Series: 1 – J. Krishnamurthi])

***

pksivakumar@worldnet.att.net

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்