படித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

விஜயன்பதிமூன்று வாரங்களாக படித்ததும் புரிந்ததில் நான் புரிந்த கொண்ட சமூக, அரசியல் அவலங்களைப் பற்றி மட்டுமே எழுதினேன். தீடீரென்று, எனக்கே எழுதுவது அலுப்புத்தட்ட ஒரு இடைவெளி விடலாமா என்று யோசித்த போது, என் பழைய நினைவுகளில் ஆச்சரியங்களை ஏன் எழுதக்கூடாது என்று தோன்றவே என் ஆச்சரியங்களின் மூலமான எங்கள் குடும்பத்தில் மூத்தவரான என் தந்தையின் பெரிய அண்ணா மாயாவரம் பெரியப்பாவைப்பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.
என் சிறு வயதில் என் பெரியப்பாவை பற்றிய பிம்பம் எனக்கு முதலில் ஏற்பட்டது என் தந்தை எடுத்த நிழற்படத்தில் ஆஸ்டின் காருடன் மாயவரம் அருகே உள்ள தரங்கம்பாடியில் கிட்டத்திட்ட “சத்யா படத்தில்” உள்ள கமல் ஜாடையில் மொட்டையடித்து சிறிதே முடிவளர்ந்த தோற்றத்தில் கம்பீரமான உருவம். அதில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது, கார்களே அதிகமாக பார்க்காத ஒரு காலகட்டத்தில் ஆஸ்டின் கார் எனக்கு சொந்தமான ஒருவர் வைத்திருப்பதும், அதற்கு முன்னால் அவர் போட்டோவும்தான்.
பெரியப்பா தொழிலில் ஒரு டாக்டர் மாயவரத்தில் எல்லோராலும் மதிக்கப்பட்டவர், குடும்பத்தில் மூத்தவர் அதனால் கூட்டுக் குடும்ப வழக்கங்களில் ஒட்டிக் கொண்டிருந்த காலத்தில் “தலை மரியாதை” பெற்றவர்; பெறும் விதத்தில், பெருந்தன்மையாக நடந்துக் கொண்டவர்.
முதலில் நான் மாயவரம் சென்றபோது தற்போது லாட்ஜ்டி மேக்ஸ் உள்ள “சத்திரவீடு” விடும் கிளினிக்கும் ஒருங்கே உள்ள வீடு. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் முதல் மாடியில் ஒண்டுக் குடியிருந்த என் தந்தையின் வாடகை வீட்டை ஒப்பிடும்போது சத்திரவீடு பெரிய கட்டுகளுடன் கூடிய வீடு. கார் ஷெட் 100 அடி நீளம், பந்தைத் தூக்கி எறிந்தால் ஓடி சென்று பிடித்து வரும் அல்சோஷன் நாய் என்று அடுத்த ஆச்சரியம். முதன் முதலில் கம்பீரமான அல்சேஷன் நாய் பரிச்சயமானது என் பெரியப்பாவை ஒட்டிய பிம்பத்தில் தான். அதற்குப் பின்னால் வீட்டில் ஆர்மோனியப் பெட்டிவைத்து தன் பிள்ளைகளுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தது, நவராத்திரியில் பெண்வேடம் அணிந்து என் கஸின் (தற்போது மூத்த வக்கீல்) அசோக்குமார் “பச்சைக்கிளிபாடுது பக்கம் வந்தே ஆடுது” என்ற பாட்டுக்கு நடனம் ஆடியதைப் பார்த்தது; இப்படி என் சிறுவயது ஆச்சிரியங்களில் பலவும் பெரியப்பாவுடன் சம்பந்தப்பட்டது தான்.
பின்னால் சுமார் 10 வயதில் அவர் புது வீட்டிற்கு போனபோது “சினிமா தியோட்டர்” பாணியில் கட்டிய பெரிய வீட்டைப் பார்த்தது அடுத்த அதிசயம் வீட்டிற்கு முன்னே வராண்டாவில் ஒரு திண்ணை அதில் முகப்பு சுவரில் பெரிய வட்ட ஓட்டைகள், அழகான வடிவத்தில் ராமர் கலர் பியட் கார், ஒவ்வொருவருக்கும் ஒரு அறை, மொஸைக் தரை. ராமர் கலர் நிறத்தில் நிறத்தில் வீட்டுக் கதவுகளின் பெயிண்ட், டைனிங் டேபிலில் சாப்பிடும் வழக்கம். பேச்சு பற்றியும், சாப்பாடு பற்றியும் ஆத்திச்சூடி பிரிண்ட் செய்து ஒட்டியுள்ள கிச்சன் தடுப்பு இப்படிப் பல. பெரியப்பாவுடன் அதிகம் பேசாத காரணத்தால், அந்த காலங்களில் பேசிப் புரிந்து கொள்வது பெரியோரை மதிப்பதாக இல்லாத காரணத்தால் பெரியப்பா பற்றி என் பிம்பங்கள் பெரும்பாலும் விஷீவல் கம்ய+ணிக்கேஷன்தான்.
என் அப்பா சொல்ல, நான் பார்த்ததில் பெரியப்பா “ஒரு பன்முகக் கலைஞர்” ஓவியம், எழுத்து ரசனை, ஆன்மீகம், தஞ்சை ஜில்லாவில் வாழ்க்கையில் மேல் தட்டில் உள்ளவர்கள் ஈடுபட்ட பல அரிய விஷயங்களில் ஈடுபாடு, தொழிலில் கௌரமான இடம், ஊரில் மதிக்கப்படும் சிலரில் ஒருவரான தகுதி, ஜிப்பா அணிந்து ஆஜானுபாகுவான ஒரு கெஸ்ச்சர் இவை எல்லா வற்றிற்க்கும் ஈடாக சுருதி பேதம் இல்லாத என் பெரியம்மா.
பின்னால் நான் பள்ளி படிப்பு முடித்த பருவத்தில், அவர் காலையில் செய்யும் உடற்பயிற்சி, கிருபானந்த வாரியார் அவர் வீட்டுக்கு வந்தபோது விருந்து. அப்போது லண்டன் பிபிசியிலிருந்தவர்களுடன் நட்பு இப்படி பல பரிமானங்கள். அவர் திருக்குறள் 1330க்கும் ஆங்கில மொழிமாற்றம் செய்தது. கலை இலக்கியங்களில் ஈடுபாடு, அறிவாலயம் என்ற பள்ளியை நிர்மானித்தது. என்பது வயதில் பெரியம்மாவுடன் சதாபிஷேகம் நடந்தது. இப்படி பல நிறைவான பண்முக வாழ்க்கையை, அவரின் பிம்பங்களாக கண்டுள்ளேன்.
கடைசியாக அவரைப் பார்த்தது அவரின் 90வது வயது பிறந்த நாளில் சென்னையில். உருவத்தில் என் நினைவுகளில் உறைந்த பெரியப்பா அல்ல அது. வயதின் காரணமாய் உடல் இளைத்து கண்களின் ஒளி குறைந்து, சிறிது ஞாபகம் குறைந்து முற்றிலும், உருவத்தில் மாறிய பெரியப்பா.
மனிதர்களைப் பற்றிய என் நினைவுகளில் உறைந்துள்ள காட்சிகள் என் வாழ்நாளில் அந்த மனிதர்களின் உருவத்தில் ஏற்படும் உருகிய மாற்றங்கள், உயிருடனோ அல்லது உயிர் இல்லாமலோ பார்க்கையில் நினைவுகளில் உறைந்த பிம்பங்கள், நிஜ பிம்பங்களை விட இளமையானது சகாவரம் பெற்றது என்று நினைக்கிறேன்.
பொருள் முதல் வாதமா? என்ன முதல் வாதமா? ஆத்மாவும், உடலும் வேறா? ஓன்றா? போன்ற பல தத்துவக் கேள்விகளுக்கு பெரியப்பா பற்றிய என் பிம்பங்களில் பதில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
மனிதரைவிட மனிதரின் நினைவுகளே மாண்புடையது…! இதனால் தான் எம்.ஜீ.ஆர், சிவாஜி இறந்த பின்னும் அவர்களது இமேஜ் அவர் காலத்தில் வாழ்ந்தவர்களுக்க கூடுதலாக ஒரு 30 வருடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். சிந்திக்கும் ஆற்றல் உடைய மனிதகுலத்திற்கு எண்ணங்களே பொருளைவிட முதன்மையானது, அதிக காலம் வாழ்வது!


kmvijayan@gmail.com

Series Navigation