படித்ததும் புரிந்ததும்..(11) இலவச ஆட்சி – கண்ணாமூச்சி ஏனடா – துக்கடா!

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

விஜயன்



தமிழகத்தின் பல சிறப்புகளில் ஒன்று, இலவச அறிவிப்புகளின் ஆட்சி. எதுவாயினும் இலவசமாயின் ஒரு கூட்டம் கூட்ட முடியும், ஒரு விற்பனை சாதிக்க முடியும், ஏன் ஒரு ஆட்சியே அமைக்க முடியும்.
“2006 மே மாதம் தி.மு.க. தேர்தல் அறிக்கை; கலர் டெலிவிஷன் இலவசம், சைக்கிள் இலவசம், அரிசி கிலோ 2 ரூபாய், கேஸ் அடுப்பு இலவசம், நிலம் இலவசம் எந்த வருமான உச்ச வரம்பின்றி இப்படி அறிக்கையிட்டு “சொன்னதை செய்வோம்” பட்டியலில் ஒன்றன் பின் ஒன்றாய் சாதனை விளம்பரம். தமிழகத்தின் ஜனத்தொகை 6 கோடி அதில் மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை 1.50 கோடி அதில் மூன்றில் ஒரு பங்கான ஐம்பது லட்சம் பேருக்கு ஒரு கலர் டிவி என்று வைத்தால் மொத்தம் டிவிக்கு 3500 கோடி செலவு, அதே போல, கேஸ் ஸ்டவ் கேஸ் ஒரு நபருக்கு 1000 ரூபாய் என்றால் அது ஒரு 500 கோடி, சைக்கில் ஒரு 500 கோடி, அரிசி 2 ரூபாய்க்கு கொடுத்தால் ஒரு கிலோவிற்கு செலவு ரூ. 450 கோடி இப்படி 5000 கோடிக்கு, இலவசத்தில் ஆட்சி செய்யும் தேசமே உலகில் இல்லை என்று சொல்லலாம். இலவசம் என்பதே கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் வேலைதான்! வரி செலுத்தும் மக்கள் பணம், ஆட்சி செய்பவரின் சொந்தப் பணம் இல்லை, வாரி இறைக்க. நம் அரசியல் சட்டத்தில் செய்ய வேண்டிய முதல் திருத்தம் எதையும் இலவசமாக கொடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சுனாமி, வெள்ளம், புயல் போன்ற தவிர்க்க முடியாத இயற்கைசீற்ற நிவாரணம் தவிர வேறு இலவச திட்டங்கள் சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும்.
இதில் ஒரு முரன்பாடு என்னவென்றால் தேர்தலை நெறிப்படுத்தும் மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தில், ஓட்டுப் போடுவதற்காக கொடுக்கும் இலவச பரிசுகள் எந்த ரூபத்திலிருந்தாலும் அது சட்டத்திற்குப் புறம்பானது. அப்படி இலவசப் பரிசு கொடுத்து வென்ற வேட்பாளரின் தேர்தலை ரத்து செய்யலாம். வேட்பாளார் தேர்தலின் போது இலவச பரிசு கொடுப்பது தவறு என்றால், அரசியல் கட்சி தேர்தல் அறிக்கையில், பரிசுகளை அறிவிப்பது மட்டும் எப்படி சரியாகும்! இலவச பரிசை தேர்தல்போது தேர்தலுக்கு முன் கொடுத்தால் என்ன? தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பெற்றதும் கொடுத்தால் என்ன? எல்லாம் சட்டப்படி தவறே. நம் நீதி மன்றங்கள் முதலில் இப்படி ஓட்டு வங்கிக்காக செய்யப்படும் இலவச தான ஆட்சியைத் தடை செய்ய வேண்டும். ஆரசியலமைப்புச் சட்டத்தில் “பொது வருவாய்” மற்றும் செலவினங்கள் சட்டமன்ற ஒப்புதலுக்கு உட்பட்டாலும் ஆட்சி செய்யும் கட்சி பெரும்பான்மையாக உள்ள போது, ஏழையின் பேரில் செய்யப்படும் இலவச அறிவிப்புகளை, யாரும் எதிர்க்க முடியாது, அது அரசியலுக்கு உதவாது.
சீனாவின் பொருளாதார மாற்றத்திற்கு வழியிட்ட அதிபர் செங்க டியாபிங் (சீனப்பெயர்களை உச்சரிப்பு மாறாமல், 100 பெயர்களை தமிழில் எழுதும் வாசகருக்கு, போத்தீஸின் 1000 ப+வடிவமைத்த பட்டுப்புடவை இலவசம்!) கூறுவது என்னவென்றால் “சோஸிலிசம் என்பது உற்பத்தியைப் பெருக்கும் சாதனங்களை மேம்படுத்தி அதன் அபரீத வளர்ச்சியில் ஏற்படும் வளத்தினால் வறுமையை ஒழிப்பதுதானே தவிர உற்பத்தியில்லாமல் செலவு செய்து பிச்சைக்காரர்களாக்குவது அல்ல என்கிறார்”. தமிழக அரசியல் வாதிகள் தங்கள் தேர்தல் அறிக்கையிலோ, அல்லது ஆட்சியிலோ உற்பத்திப் பெருக்கத்திற்காக செலவழித்த தொகை எவ்வளவு? அதனால் ஏற்பட்ட உற்பத்தி அதிகரிப்பு எவ்வளவு என்று கணக்கெடுத்தால் இலவசத்திற்கும், உற்பத்தி அல்லது மனிதவளம் சாரா விஷயத்திற்கும் செய்த, செலவுத் தொகையே அதிகம்.
மத்திய அரசில் கூட நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஹார்வார்டிலோ, ஸ்டான்போர்டிலோ பேசுகையில், இந்தியாவில் தற்போது இளைஞர் மனித வளம் நன்கு உள்ளது; இந்தியாவில் அன்னிய முதலீடு செய்யுங்கள் என்கிறார். இந்திய மனித வளத்திற்கு அவர் அரசு செய்தது என்ன? சமீபத்தில் சீனா சென்றுவந்த சோனியா எதைக் கற்றுவந்தார்? தற்போது இட ஒதுக்கீட்டின் பேரால் மனித வள முன்னேற்றத்திற்கு குட்டிச் சுவரடிக்கும், சாதி அரசியலை நடத்தும் அர்_{ன் சிங், ஒரு திட்டம் அறிவித்தால் இந்தியாவின் மனிதவளம் புரட்சிகரமாக மாறும், திட்டம் இதுதான்.
இந்தியாவில் 541 பாராளுமன்ற தொகுதி உள்ளது மத்திய அரசு ஒரு தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி, 3 தொழில்கல்வி, 5 பாலிடெக்னிக் 5 மேல்படிப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிட்டத்தட்ட மொத்தம் 15 மேற்கல்வி நிலையங்கள் 2 வருடத்திற்குள் அமைத்தால் இந்தியா முழுதும் மாநில வேறுபாடின்றி கிட்டத்திட்ட 8000 கல்லூரிகள் 2 வருடத்தில் மத்திய அரசின் செலவில் உண்டானால், அடுத்த ஐந்து வருடத்தில் பரவலான மனிதவள உற்பத்தி எவ்வளவு உயரும் என யோசியுங்கள். இதேபோல மாநிலங்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும், இதனடிப்படையில் கல்வி நிலையங்களும், முனிசிபாலிட்டி, பஞ்சாயத்தில் ஆரம்பக் கல்வி, மத்திய பள்ளி கல்வி ஏற்பட்டால் இட ஒதுக்கீடு, சாதி வாரி அரசியல் போன்றவை தேவைப்படுமா? என்று யோசியுங்கள்? காங்கிரஸ் கட்சியோ மற்ற கட்சிகளோ, ஆட்சியைப் பிடிக்க எந்த உணர்வு சவுகரியமாய் படுகிறதோ, அதை வலுக்கட்டாயமாய் பாதுகாப்பதில் கவனமாய் இருக்கிறார்கள். அதில் ஒரு பங்கேனும் திட்டமிட்ட மனித வள, தொழில் வள, சுகாதார வள, மற்றும் கட்டமைப்புத் திட்டங்களில், கவனம் செலுத்தி அதில் ஓரளவாயினும் நிறைவேற்றினால், இந்தியா இருபது வருடம் இழந்த முன்னேற்றத்தை, ஐந்து வருடத்தில் பெறலாம். என்ன ஜாதி, மத பிராந்திய அரசியல் பேசமுடியாது அது அரசியலைவிட்டு மறைந்துபோகும், தேர்தல் சூத்திரங்களும் அடிப்படையும் மாறும். இத்தகைய முன்னேற்றமே இந்தியாவை ஒருங்கினைக்கும், தொழில் வளர்ச்சி விகிதம் பெருகும். சுதந்திர தினத்தன்று வந்தே, மாதரம்! சாரே _ஹாசே அச்சா! பாடுவதால் மட்டும் இந்தியா ஒளிராது? கவனிப்பார்களா நம் காங்கிரஸ்காரர்கள்?
கண்ணாமூச்சி ஏனடா? கர்நாடக ஜனதா தள கட்சியின் செயல்பாடுகள் இந்த 40 நாட்களில் படித்ததும் புரிந்ததில், மூன்று முறை கவனிக்கப்பட வேண்டிய ஒரு விளையாட்டாகிவிட்டது. முதலில் அக்டோபர் 3ல், பஜாகாவிற்கு ஆட்சிமாற்ற மறுப்பு அரசியல், பின்னர் 356வது பிரிவில் சட்ட மன்றம் சஸ்பெண்ட் ஆனவுடன் மீண்டும் பஜாகவுடன் சமரசம், மற்றும் ஆட்சி அமைப்பு ஒப்புதல், யெடிய+ரப்பா முதல்வராக நவம்பர் 12ம் தேதி பதவி ஏற்றவுடன், பெரும்பாண்மை நிரூபிக்கும் தினமான 20 நவம்பருக்கு முன், மீண்டும் ஆதரவு வாபஸ், மீண்டும் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை. பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியில் முஷரப் சர்வாதிகார ஆட்சியில்கூட இவ்வளவு திருப்பங்கள் இல்லை. இங்கு ஜனநாயக முறையில் மாறி மாறி ஜனநாயக ஆட்சியில் சிக்கல் ஏற்படுத்துவது முறையற்ற ஜனநாயகம் பற்றிய நம் மதிப்பீடுகளை மாற்றுகிறது.
துக்கடர் நான் அரசியல், சமூகம், சட்டம் தவிர சினிமா பற்றி எழுதவில்லை என்று கேட்கும் வாசகர்களுக்கு ஒரு துக்கடா!
கண்ணாமூச்சி ஏனடா? தமிழ் திரைப்படங்களில் மாற வேண்டிய ரசனைக்கு ஒரு முன்னோடி. முதலில் ரஜினி வழியில் அதிகப்படியான இமேஜ் கதாநாயக, கதைகளுக்கும், கதாநாயகர்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி. விஜய், சிம்பு, தனுஷ், சூர்யா போன்ற கதாநாயக நடிகர்களை, எல்லாம்வல்ல சாதனையை செய்யும் கதாபாத்திர அமைப்பாக கதையமைப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். மம்முட்டி போல சொபிஸ்டிகேட்டட் கதாநாயகனாக பிரித்திவிராஜ் இமேஜில் சிக்காமல் தடம் பதிக்கிறார். தமிழ் கூறும் நல்லுலகம் மேற்சொன்ன நான்கு கதாநாயகர்களின் படத்தை, அவர்கள் இமேஜ் இல்லாமல் நடித்து பஞ்ச் டைலாக் பேசாமல், தற்புகழ்ச்சி பாட்டு பாடாமல், நடித்தால் மட்டுமே, பார்ப்பது என்று தீர்மானித்தால் இது மாறும். அடுத்து பிரியாவின் டைரக்ஷன் இதுவரை மிகையான எமோஷன், வல்காரிட்டி, வன்முறை இல்லாமல் லைட்டாக கதை சொல்வதில் தடம் பதிக்கிறார். படத்தின் இரண்டாவது பகுதியில் உள்ள ஒரு சில நாடகத்தன்மை தவிர லைட்டாக கதை சொல்ல முயன்ற பிரியாவிற்கு பாராட்டு. துக்கடாவில், ஆலாபனை எதிர்பார்க்காதீர்கள் அதை வேறு ஒரு சமயம் செய்கிறேன்.


kmvijayan@gmail.com

Series Navigation

author

விஜயன்

விஜயன்

Similar Posts