பகுத்தறிவாளர் கழகத்தில் பான்டேஜ் பாண்டியன்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

செல்வன்


பான்டேஜ் பாண்டியன் ப.க (பகுத்தறிவாளர் கழகம்) ஆபிஸ் சென்றபோது வைரமணி விடுதலை படித்துக் கொண்டிருந்தார்.பாண்டியனை பார்த்ததும் “வாய்யா பாண்டியா.எல்லா கட்சிகளுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டே.எங்களை மறந்துட்டியோன்னு நினைச்சேன்” என அட்டகாசமாக சிரித்தபடி பாண்டியனை வரவேற்றார்.

“என்னங்க இட ஒதுக்கீட்டுக்கு இத்தனை எதிர்ப்பு?” என்று கேட்டதும் வைரமணிக்கு கண்கள் சிவந்தன.

“இதெல்லாம் மேல்ஜாதிகாரங்க சதி.ஆரிய மாயை.தலித்துகளின் உரிமையை பறிக்க நடக்கும் சதி.இந்தியாவில் இதுவரை எத்தனை அரசு அலுவலகங்களில் எத்தனை சதவிகிதம் தலித்துகள் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை உடனடியாக மக்கள் முன் வைக்க வேண்டும்” என முழங்கினார் வைரமணி.

“தனியார் அலுவலகங்களில் இட ஒதுக்கீடு” என ஞாபகப்படுத்தினார் பாண்டியன்.

“ஆமாம்.அதுவும் வேணும்.எல்லா தனியார் நிர்வாகங்களும் தம் அலுவலகத்தில் எத்தனை சதவிகிதம் தலித்துகள் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை உடனடியாக மக்கள் முன் வைக்க வேண்டும்” என்றார் வைரமணி.

“உங்கள் கல்லூரியில் எத்தனை தலித் புரபசர்கள் இருக்கிறார்கள்?” என்று கேட்டார் பாண்டியன்.

“நாரதர் வேலையை ஆரம்பிச்சுட்டியா நீயி?” என எரிந்து விழுந்தார் வைரமணி.”எதுக்கையா இப்படி கோக்கு மாக்கா கேள்வி கேக்கறே?அதெல்லாம் நிறைய தலித்துங்க புரபசரா இருப்பாங்க” என்றார்.

“ப.க.வின் அடுத்த தலைவராக தலித் நியமிக்கபடுவாரா” என்று கேட்டவுடன் கோபமடைந்தார் வைரமணி.

“அதெல்லாம் வருவார்.வராமயும் இருப்பார்.இங்க எல்லாம் சமூகநீதிக்கு தான் முக்கியத்துவம்.நாங்க ஒடுக்கபட்டவங்களோட பிரதிநிதிகள்” என கர்ஜித்தார் வைரமணி.

“ப.க நிர்வாக கமிட்டியில் எத்தனை சதவிகிதம் தாழ்த்தபட்டோர்,பிற்படுத்தபட்டோர்,பெண்கள்” என்று கேட்டதும் வைரமணி கடும் கோபமடைந்தார்.

“நீ எதுக்கு சுத்து சுத்தி ப.க,ப.மு.கன்னே வந்துகிட்டு இருக்கே?வேற கேள்வி கேக்க தெரியாதா உனக்கு?” என சத்தம் போட்டார் வைரமணி.

“இல்லைங்க.கோயில்ல அர்ச்சகரா கூட தலித் வந்துடலாம்.ஆனா ப.க,ப.மு.க வில் தலைவரா வரமுடியாதுன்னு சொல்றாங்களே?” என இழுத்தார் பாண்டியன்.

“யோவ்.கோயில்ங்கறது பொது சொத்து.தாழ்த்தபட்ட மக்களின் சொத்து.கட்சிங்கறது அப்படியாய்யா?” என கேட்டார் வைரமணி.

“அப்ப ப.க தாழ்த்தபட்ட மக்களின் சொத்தில்லையா?” என கேட்டதும் வைரமணிக்கு கடும்கோபம் மூண்டது.

“கன்னா பின்னான்னு கேள்வி கேட்டா பான்டேஜ் மாட்டிகிட்டு தான் ஊருக்கு போய் சேர்வாய்” என ஒரு தொண்டர் எச்சரித்ததும் பாண்டியன் நைசாக கேள்வியை மாற்றினார்.

“அம்மையார் பத்தி உங்க கருத்தென்ன?” என்று கேட்டார் பாண்டியன்.

“கைபர் கணவாய் வழியே வந்த வெளிநாட்டவர் என்பதே எமது கருத்து” என்றார் வீரமணி.

“நான் கேட்டது சோனியாம்மா பத்திங்க” என்றார் பாண்டியன்.

“யோவ் இதை முதல்லயே தெளிவா சொல்லகூடாதாய்யா?ரெண்டு அப்ப்ரூவல் வேற வெயிட்டிங்க்ல இருக்கறப்ப இப்படி வில்லங்கமா கேள்வி கேக்கறது நியாயமாய்யா?நான் ஏதோ ஜெயலலிதாவை பத்தி கேக்கறேன்னு நினைச்சுட்டேன்.சோனியாம்மா இந்த மண்ணின் மருமகள்.நாட்டின் தவப்புதல்வி” என்றார் வைரமணி.

“அவங்களும் வெளிநாட்டுக்காரங்க தானே?” என்றார் பாண்டியன்

“அதெல்லாம் கிடையாது.அவங்க இடஒதுக்கீடு கொண்டுவந்து சமூகநீதி காத்த வீராங்கனை” என்றார் வைரமணி.

“ஜெயலலிதாவை கூட முன்னாடி இப்படித்தான் சொன்னிங்களே?சமூகநீதி காத்த வீராங்கனைன்னு பட்டம் குடுத்தீங்களே..” ” என்று இழுத்தார் பாண்டியன்

“அப்ப காத்தாங்க.குடுத்தோம்.இப்ப காக்கலை.வாபஸ் வாங்கிட்டோம்” என்றார் வைரமணி.

“அப்ப இப்ப யாருங்க சமூகநீதி காத்த வீரர்?” என்று கேட்டார் பாண்டியன்.

“தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் தான் சமூகநீதி காத்த வீரர்” என்றார் வைரமணி.

“அப்ப சோனியாம்மா….”என இழுத்தார் பாண்டியன்.

“அவங்களும் சமூகநிதி காத்தவங்க தான்.இந்திரா அம்மாவோட மருமகளாச்சே?’ என பெருமையுடன் சொன்னார் வைரமணி.

“இந்திரா அம்மா ஆரியர் தானே?” என்றதும் வைரமணிக்கு கோபம் வந்துவிட்டது.

“யோவ்.அவங்க ஆரியர் எல்லாம் கிடையாது.இந்த மண்ணின் மைந்தர்.புரிஞ்சதா?” என சத்தம் போட்டார் வீரமணி.

“ஐயா சாமி ஆளை விடுங்க” என சொல்லி எஸ்கேப் ஆனார் பாண்டியன்

Disclaimer:In this imaginary story any actual resemblance to any other individuals, organisation or events is purely unintentional. © Selvan

holyox@gmail.com

Series Navigation