நைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

ஆங்கிலமூலம் – சீமாமந்தா இங்கோசி அடிச்சி தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்


வகுப்புகள் சூரியன் உக்கிரமாகுமுன் காலையோடு முடிந்துவிடும், அதபின் நானும், ஒபியும், சில பொம்பளைகளும், காயம்பட்டு வீடுதிரும்பிய சில ஆட்களுமாக தோட்டந் துரவுகளை, புதர்களைத் துருவித் தேடினோம். நைஜீரிய ஆட்களோ, காட்டிக்கொடுக்கும் பயாப்ரன் ஒற்றர்களோ பதுங்கி யிருக்கிறார்களா, காயம்பட்டோ இறந்தோ கிடக்கிறார்களா? உலர்ந்து உதிர்ந்த பழங்களும் நிலக்கடலைகளுமே கிடந்தன. நாங்கள் நைஜீரியன்களைப் பற்றிப் பேசினோம். எங்களுக்கு யுத்தத்தில் உதவிசெய்யும் பிரஞ்சு மற்றும் தான்சேனிய சேனை பற்றி, அவற்றின் வீரதீரம் பற்றிப் பேசினோம். ஐயோ வெள்ளைக்காரன் மோசமான பயலுவ, என்று பேசினோம். சூணாவயிறு பற்றியும் பேசினோம். அதன் ஆரம்ப நிலையில் எத்தனை பிள்ளைகள் சொஸ்தப்படுத்தப் பட்டார்கள் என்று பேசினோம். யாருமே பறித்துச் சாப்பிடாத ஓரு மரத்தின் இலைகளை குழந்தைகள் உண்ண வேண்டியிருந்தது. வயிறு நிரம்பியதே தவிர அதில் ஒரு சத்தும் கிடையாது. ஆனால் அந்த இலைகள் மருந்து என்கிற கதைகளை நாங்கள் நம்ப வேண்டியிருந்தது. இந்த இலையில் சத்து இருப்பதாகக் கதை கட்டுவதும், அதை நம்ப வைப்பதும், நாங்களே அதை நம்புவதும் வேண்டித்தான் இருந்தது.

இந்த மாதிரி கதைகளை கொஞ்சலாய்ப் பேசிப் பரப்புவது எனக்குப் பிடித்திருந்தது, நெட்டையாய்ப் புல் மண்டிய பொட்டலில், நாங்கள் இப்படி கதை பேசியபடிப் போ … நின்றோம். ஒரு உடல். கண்ணில் படுமுன்னே வாடை அறைந்தது. மூச்சுத் திணறி, மூளையே மரத்துப் போனது. ”சனியன், நைஜீரியன்!” என்றாள் ஒருத்தி. நாங்கள் அதைச்சுற்றி நின்றபோது ஊதிய அந்த உடலில் இருந்து ஈக்கள் கொத்தாய் எழும்பிப் பறந்தன. சாம்பல் தேகம். கண் திறந்திருந்தது. வீங்கிய முகத்தின் கோரமான வரிகள் கலவரப்படுத்தின. ”உயிரோடு இவனை நாம கண்டுபிடிச்சிருக்கப்டாதா?” என்றான் ஒரு பையன். ”தூத்தெறி, தேவிடியா மவன்…” என்று யாரோ சொல்ல, ஒரு சிறுமி அவன் பிணத்தில் காறித் துப்பினாள். சற்று தள்ளி வல்லூறுகள் காத்திருந்தன. தாள முடியாத ஒருத்தி உவ்வேயென்று ஓங்கரித்தாள். அவனைப் புதைப்பதைப் பற்றி யாருமே பேசவில்லை. அந்த வாடையும், சுற்றும் ஈப்பட்டாளமும், அந்த வெக்கையுமாய் எனக்கு கிறுகிறுப்பாய் இருந்தது… இவன் எப்படியிருந்தான், என்ன மாதிரி வாழ்க்கை இவனுக்கு வாய்த்திருக்கும் என்றெல்லாம் நான் யோசித்தேன். இவனுக்கும் குடும்பம்… வழிமேல் விழி வைத்து இவனுக்காக, இவன் பற்றிய சேதிக்காக ஒரு பெண்டாட்டி, சின்னக் குழந்தைகளுக்கு அவள், ”அப்பா சீக்கிரமே வந்துருவாரு,” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருப்பாள். அவன் கிளம்பிப் போகும்போது அவன் அம்மா எப்படிப் பதறிக் கதறியிருப்பாள். அண்ணன் தம்பிகள், அக்கா தங்கச்சிகள், மச்சான் மாமன்கள், அவனது பிரிவு எத்தனை பேரை பாதிக்கும்… வீட்டில் இனி அவன் பயன்படுத்திய உடைகள், பிரார்த்தனைக்கான பாய், குனு பானம் அருந்தும் அவனது மரக்குவளை…

ஓவென்று அழ ஆரம்பித்தேன்.

ஒபி என்னைப் பிடித்துக் கொண்டான். அமைதியும் அவநம்பிக்கையுமாய் அவன் என்னைப் பார்த்தான். ”இவனைப் போலாட்கள் தான் இஃபேகா அத்தையைச் சாவடிச்சது” என்றான். அவன் கையை விலக்கினேன். அழுகையை என்னால் அடக்க முடியவில்லை

* *
இக்போ மூதுரை. அடுத்த மீனைத் தின்னாமல் எந்த மீனும் கொழுக்க முடியாது.
* *
நாம்தியைப் பத்தி தகவலே இல்லை. பக்கத்தாட்கள் தங்கள் மகனைப் பற்றியோ, புருஷமார் பற்றியோ தகவல் அறிந்தால் அவர்களது நல்லதிர்ஷ்டம் போலவே எனக்கும் அமைய வேண்டும் என்றிருந்தது. நாள்கணக்கில் நான் அவர்களுடனேயே இருந்தேன். மெல்லிய பிரியமான நம்பிக்கையான குரலில் ஒபி, நாம்தி நலமாய் இருப்பதாகச் சொன்னான். கிழங்குப்புட்டு அவித்துத் தின்ன மாதங்களிலும், கீரைத் தண்டைத் தின்ன சமயங்களிலும், எண்ணெயும் மீனும் வறுத்து உப்பு சேர்த்து ருசியாய்த் தின்ன காலங்களைப் பற்றி நாங்கள் அசைபோட்டபடி யிருந்த காலங்களிலும் அவன் எனக்கு நாம்தி நலமாய் இருப்பதாய்த் திரும்பத் திரும்பச் சொன்னான்… அக்கம் பக்கத்தார் அறியாதபடி கொஞ்சம் உணவை நான் ஒரு பாயில் சுருட்டி கதவுக்குப் பின்னால் ஒளித்து வைத்தேன். அவர்களும் அப்படியே ஒளித்து வைத்துக் கொண்டார்கள். சாயந்தரமானால் அதைப் பிரித்தெடுத்து சமையல் அறையில் ஒன்றுகூடி உப்பு பற்றிப் பேசியபடியே அதைச் சமைத்துச் சாப்பிட்டோம். நைஜீரியாவில் உப்பு கிடைத்து வந்தது. உப்பு கிடைக்கிறதால் எங்கள் ஜனங்கள் எல்லைவிட்டு எல்லை தாண்டினார்கள். உப்பில்லாப் பண்டத்தைத் தின்னு நாக்குச் செத்துப்போன ஒருத்தி சமையலறையில் இருந்து சட்டையைக் கிழிச்சிக்கிட்டுத் தெருவில் உருண்டு மண்ணைச் சுவைத்து ஊளையிட்டாள். சமையல்கட்டு தரையில் உட்கார்ந்துகொண்டு மத்தாட்கள் பேசுவதைக் கேட்டபடி நான் உப்பின் சுவையை நாவூற நினைத்துப் பார்த்தேன். உப்பைக் கலக்க என்று வீட்டில் மிளகு மற்றும் உப்பு தூவும் குப்பிகள் இருந்ததே கனவுபோல இருக்கிறது. நான் உப்பை வீணாகக் கொட்டியிருக்கிறேன், குப்பியைக் கழுவும்போது அடிவண்டலாய்ப் படிந்த சுத்தமான பொடி உப்பு.. நாம்தியின் நினைவுகள், நல்ல உப்புபோட்ட சாப்பாடு போலத்தானே, அவையும்!

எங்களது முன்னாள் பாஸ்டர் தாமியன் பக்கத்து அமன்துக்பா அகதி முகாமில் சேவை பண்ணுவதாக அகுபியூஸ் வந்து சொன்னார்… முகாம் கிட்டத்திலதான், ரெண்டு ஊர் தள்ளி. ஆனால் நிறையப் பேர் நிறைய வதந்திகளை உலவ விட்டார்கள். அந்தாள் அங்கே இருக்காரு, இந்தாளைப் பாத்தேன். ஒண்ணும் நிச்சயமில்லை. இருந்தாங்காட்டியும் ஒரு நப்பாசை, அம்மாவிடம் நாம போயிப் பார்க்கலாமா பாஸ்டரை, என்று கேட்டேன். பாக்கோணுந்தான், என்றாள் அம்மா, அவங்களைப் பார்த்தே ரெண்டு முழு வருஷம் இருக்குமே. ”அதுக்கும் மேலயே இருக்கும்…” என அம்மாவைப் பகடியடித்தேன், நாங்கள் என்னவோ வெளியே அடிக்கடி நற்செய்திக் கூட்டம், உபவாச ஜெபம்னு போறாப் போல. போனாத்தானே பார்க்கக் கொள்ள முடியும்?… போதகர்களுக்கு இரவுவிமானங்கள் மூலம் கரிதாஸ் பன்னாட்டுசபை உணவுப் பொருட்கள் ரகசியமாய் அனுப்பி வைத்தார்கள். அதை போதகர்கள் பாமர ஜனங்களுக்கு அளித்தார்கள்… சோளமிட்ட பன்றியிறைச்சி, குளூகோஸ், பால்பவுடர். முக்கியமா உப்பு. சட்டென இந்த விஷயம் நினைவுக்கு வந்தாலும், நானும் அம்மாவும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவில்லை.

ஃபாதர் தாமியன் ஒல்லிப்பிச்சான். முகம் ஒடுங்கி நிழலும் பள்ளமுமாய்க் கிடந்தது. அகதி முகாமில் குழந்தைகளுக்கு அடுத்தபடி அவர் திடகாத்திரம். குழந்தைகள் கையும் காலும் எலும்பு துருத்தி பார்க்கவே உறுத்தலாய்… சிக்கு பிடித்த தலையும் பலூனாய் ஊதிய வயிறுமாய். கண்கள் முகக் குழிக்குள் உள்ளடுங்கிக் கிடந்தன. மத்த வேதக்கார ஆட்களிடம் அருட்தந்தை தாமியன் என்னையும் அம்மாவையும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் எல்லாரும் புனித ஆவியாரின் ஐரிஷ் சபைக்காரர்கள். வெள்ளைக்கார துரைகள். சூரியக் குளியலில் சிவந்த முகத்தின் கம்பீரமான பொலிவு… அதைத் தொட்டுணர ஆசையாய் இருந்தது. தாமியன் ஐயா தனது சேவைகளைப் பத்தி நிறையப் பேசினார், கொஞ்ச கொஞ்சமாய் இந்தப் பிள்ளைகள் செத்துக் கிட்டிருக்கு… என்றார். அம்மா எதோ பேசி பேச்சை மாற்றிப் பார்த்தாள். பிறத்தியார் இப்படிச் செய்தால், மட்டு மருவாதி கிடையாதாடி உனக்கு முண்டம், என வைவாள். ஒரு வழியாய் அவர் பிள்ளைகளைப் பத்தியும், சூணாவயிற்று வியாதி பத்தியும் பேச்சை நிறுத்தினார். அவருக்கு எங்களை அனுப்பி வைக்க மனசேயில்லை. பேச ஏங்கிக் கிடந்தார். அம்மாவிடம் மீன்மாவும், பதம்செய்த இறைச்சியும், உப்பும் ஒரு பையில்போட்டு கொடுத்தனுப்பினார்.

அந்தப் பிள்ளைங்களைப் பத்தி நம்மளாண்ட ஏன் கதையளக்கணும் இந்தப் பன்னாடை, அம்மா வரும் வழியில் கத்தினாள். நாம அதுங்களுக்கு என்னத்தச் செஞ்சி கிழிச்சிற முடியும்? ”சரி விடும்மா,” என்றேன் நான். தன் வேலை பத்தி யாராண்டயாவது அவரும் சொல்லிக்கிற வேணாமா… நம்மூர்ல பஜார்ல பிள்ளைங்களைச் சுத்தி வெச்சிக்கிட்டு ஸ்தோத்திரப் பாடல்களை யெல்லாம் எப்பிடி உல்ட்டாவா ராகம் மாத்திப் பாடி, அதுங்களைச் சிரிக்க வைப்பாரு, உனக்கு ஞாபகம் இல்லியா?

ஆனால் அம்மா நிறுத்தவில்லை, மனசு ஆறவில்லை அவளுக்கு. நானும் படபடப்புடன் வார்த்தைகளைச் சிந்த ஆரம்பித்தேன். பிள்ளைங்களைப் பத்தி நம்மகிட்ட அவர் அழுது மூக்கைச் சிந்த வேண்டிய அவசியம் என்ன? நாம கேட்டமா? நம்ம கதையே டப்பா டான்சாடிட்டிருக்கு இங்க… தரித்திரம் தரித்திரம்னு பக்கத்தூர் போனாக்க, அங்க ரெண்டு தரித்திரம் டங்கு டங்குனு எதிர்வந்திச்சாம்…

தெருவில் தாண்டோரா அடித்து கத்திக் கொண்டே ஒருவன் போனான். நமக்கு உணவளிக்க முன்வந்திருக்கிற வெள்ளைக்கார மகராசாக்களையிட்டு நன்றியுடன் ஜெபிக்க வேண்டும். ‘புனித ஜான் பொட்டல்’பக்கம் புதிய நிவாரண முகாம் அமைக்கப் படுகிறது. எல்லா வெள்ளைக்காரனும கொலைபாதகன்கள் அல்ல… டக்கர டக்கர டக்கர். எல்லாருமே நைஜீரியாவுக்கு ராணுவ உதவி செய்கிறார்கள் என்றில்லை, டக்கர டக்கர டக்கர்!

நிவாரண முகாமில், அடித்துப் பிடித்து நான் உதவிக்குப் போராடினேன், பொய்கள் சரமாரியாகச் சொல்லி இரக்கம் சம்பாதிக்க முயன்றேன். அழுது கெஞ்சி மன்றாடினேன். மெத்தப் படிச்ச மேதாவின்றாப் போல பிரிட்டிஷ் மோஸ்தரில் ஆங்கிலம் பேசினேன், பிறகு எல்லாம் நினைத்து கண்ணீர் உகுத்து கேவிக் கேவி அழுதேன். சுற்றியிருக்கிற எதைப் பத்தியும் பார்க்காமல் கண்ணை இறுக மூடிக்கொண்டு, சுயநலப் பேயாய் இயங்கி யிருக்கிறேன், மத்தெல்லாரும் செத்து மடிஞ்சாலும் எனக்குக் கவலையில்லை போல கண்மூடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறேன்… திரும்புகையில் கண்ணீர் மறைத்து விடாதபடி கண்ணை விரியத் திறந்து ஒவ்வொண்ணையும் பார்த்தேன். தாளில் சுற்றி கையில் உணவுப்பொருள். வாங்கியமட்டும் லாபம். பதப்படுத்திய முட்டைக்கரு. பால்பவுடர். கருவாடு. சோளமாவு…

போரில் குண்டுக்காயம் பட்ட ஜவான்கள் பஞ்சைப் பனாதிகளாய் நிவாரண மையத்தைச் சுற்றி பினாத்தியபடி திரிந்தார்கள். குழந்தைகள் அவர்களைப் பார்த்துக் கலவரப்பட்டு ஓடியளிந்தார்கள். ஜவான்கள் என் பின்னாலேயே வந்து கெஞ்சினார்கள், முடிந்தால் என்னிடமிருந்து உணவைப் பறித்துக் கொள்ள முயன்றார்கள். நான் அவர்களைத் துரத்தியடித்தேன், திட்டி காறித் துப்பினேன். நான் பிடித்துத் தள்ளியதில் ஒராள் பொத்தென்று கீழே விழுந்தான், அவன் திரும்ப எழுந்து கொண்டானா என்றுகூட நான் பார்க்கவில்லை. அவர்கள் ஒருகாலத்தில் கண்ணியமிக்க பயாஃப்ரன் படைவீரர்கள், நாம்தியைப் போல… அதை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

நிவாரண முகாமிலிருந்து வாங்கி வந்த ஆகாரத்தில் கோளாறா, கிடைத்ததையெல்லாம் வயிற்றுக்குள் தள்ளிய பசிக்கொடுமையா, எதனால் ஒபி நோய்வாய்ப் பட்டான் தெரியவில்லை. கெட்டுப்போன உணவாக இருந்தாலும் அதன் பூஞ்சகாளானைப் பிய்த்தெறிந்து விட்டு, ஒட்டிக் கிடந்த எறும்புகளைத் தட்டிவிட்டுவிட்டு நாங்கள் வாயில் போட்டுக் கொண்டோம். ஒபிக்கு வயிற்றுப்போக்கு. இனிமா கொடுத்து அவன் வயிற்றைக் காலி பண்ணிய போதிலும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆ ஊ என்றான் ஒபி. அம்மா ஒரு பழைய வாளியை அவனுக்காக வைத்தாள், அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்து அதில் உட்கார்த்தி உதவினாள், அதை வெளியே கொண்டுபோய்க் கொட்டிவிட்டு வந்தாள். இருந்த இடத்திலயே ராஜோபசாரம், ஒபி சிரித்தான். இப்பவும் அவன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தான், என்றாலும் அதில் பயாஃப்ரா பத்தி அதிகம் இல்லை, பழைய கால நினைவுகளை அதிகம் அசைபோட்டான். அம்மா முகத்துக்குப் பாலும் தேனுமாக போஷாக்கு செய்துகொள்வது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. எங்க வீட்டின் புறக்கடைப் புளியமரம், தேனீக்கள் அங்கே பெரிசாய்க் கூடு வைக்கும். அல்பத்ராஸ் மருத்துவமனைக்கு அம்மா போய், எனுகுவில் தான் அறிந்த அத்தனை வைத்தியர்மார் பேரையும் பயன்படுத்தி, வராந்தாவில் நூத்துக்கணக்கில் காத்திருக்கும் பெண்கள் திரளில் தன்முறை சீக்கிரம் வருமாறு பார்த்துக் கொண்டாள். வயிற்றுப்போக்கு மாத்திரைகள் அஞ்சுதான் தந்தார்கள், அதையே உடைத்து பாதி பாதியாகப் பாவிக்க வேண்டும். மாத்திரையும் அதிக நாட்கள் வரும், வயிற்றுப் போக்கும் அடங்கும்… என்றுவிட்டார்கள். சொன்னவன் டாக்டர் படிப்பில் கடைசி வருஷங்கூட முடிச்சானா தெரியாது, ரெண்டு வருஷமாய் பயாஃப்ரா யுத்தபூமி, கத்துக்குட்டிகள் டாக்டரின் வேலையைச் செய்தாக வேண்டிய கட்டாயம். பெரிய டாக்டர்கள் யுத்தகளத்தில் இருந்து வரும் ஜவான்களுக்கு சேதமடைந்த உறுப்புகளை நீக்கி ஆளைப் பிழைக்க வைக்கப் போராடினார்கள். அந்த அல்பத்ராஸ் ஆஸ்பத்திரி கூரையே போன தாக்குதலில் டப்னு தொப்பி தூக்கினாப் போலத் தூக்கிட்டது, இதில் நகைச்சுவை என்ன, ஆனால் ஒபி புன்னகைத்தான், அதைப் பார்த்து அம்மாவும் புன்னகைத்தாள். நானும்.

இன்னும் ஒபி சொஸ்தப்படவில்லை, படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்கவில்லை… துயோமா அறைக்குள் ஓடிவந்தாள். அவள் பெண்ணுக்கு ஆஸ்த்மா தொந்தரவு, மூத்திரமும் கெட்டுப்போன ஊறுகாயும் முகர்ந்தால் ஆஸ்த்மா அடங்கும் என்று யாரோ சொல்ல அதை முயற்சி செய்து கொண்டிருந்தார்கள், திண்ணையில் அவள் படுத்திருந்தாள். ”நம்ம ஜவான்கள் வர்றாங்க…” என்றாள் துயோமா. சந்தையில கடைபோட்டுப் பிழைக்கிறவள், பயாஃப்ராவுக்கு முன் அம்மாவுக்கும் அவளுக்கும் எந்தப் பிராப்தியும் இல்லை, யுத்தம் அவர்களை ஒரே தரத்துக்கு அடக்கி முடிச்சிட்டு விட்டது. இப்ப வாரமாச்சின்னா இவளுக்கு அவளும் அவளுக்கு இவளும் தலைபின்னிவிட்டுக் கொள்கிறார்கள். ”ஜல்தி!” அவள் கத்தினாள். ”ஒபிய வெளிய கொண்டு வாங்க… அவனை ஒளிச்சி வெச்சிறலாம்.” நடந்த விஷயம் எனக்கு மூளையில் உறைக்கவே நேரமெடுத்தது, அம்மா ஒபியைக் கைத்தாங்கலாக எழுப்பி வேகமாய் வெளியே கூட்டிவந்ததைப் பார்த்தேன். பயாஃப்ரா ஜவான்கள் யுத்தத்துக்கு ஆள் பத்தாமல் இளைஞர்களை வீடுவீடாகப் அரிந்து போர்க்களத்துக்கு தவக்கு தந்து அனுப்பி வைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தோம். ஒருவாரம் முன்னால் பக்கத்துத் தெருவில் ஒரு பாலகனைப் பிடித்துப் போய்விட்டார்கள். ஒபி அவனுக்கு பத்துப் பன்னெண்டு வயசுதான் இருக்கும் என்று சொன்னான். அவர்கள் அபாகலிகி பகுதியில் இருந்து புகலாய் இங்கு வந்த சனம், அவர்களிடையே ஒரு வழக்கம். பிள்ளை இறந்துபோனால் அம்மாக்காரி முடியை வெட்டிக் கொள்வாள். மகனை ஜவான்கள் பிடித்துக்கொண்டு போவதை அம்மாக்காரி பார்த்தாள், அவளே உள்ளேபோய் ஒரு சவரக்கத்தியை எடுத்து தலையை மொட்டையடித்துக் கொண்டாள்…

போன தாக்குதலில் குண்டுவிழுந்து உத்திரம் பிளந்து மோட்டில் பெரிய துவாரம். ஒபியும் இன்னும் ரெண்டு பையன்களும் அதில் ஒளிந்துகொண்டார்கள். ஜவான்கள் நாலு பேர் வந்து தேடினார்கள், வற்றிய தேகமும் அலுத்த கண்களுமாய் இருந்தார்கள். உங்களுக்கு நாம்தி தெரியுமா, கேள்விப்பட்டிருக்கிறீர்களா, என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று தெரிந்தும் ஒரு நப்பாசையில் கேட்டுவைத்தேன். கக்கூஸ் வரை கூட விடாமல் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். அம்மாவிடம் ”யாரையும் ஒளிச்சி கிளிச்சி வைக்கலியே,” என்று கேட்டார்கள். ”நைஜீரியனைக் காட்டிலும், நம்மாளுகள்ல சண்டித்தனம் பண்றாம் பாரு, அவன் மோசமான லவ்டகபால்,” என்றார்கள். மிருதுவான குரலில் புன்னகையுடன் அம்மா பேசினாள். அப்பாவோடு விருந்தாளிகள் வந்தால் இப்படித்தான் பிரியமாய் அம்மா பேசும். பேசியபடியே ஜவான்களுக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் போனபின், ஒபி ”உடம்பு தாவலையாகட்டும், நானே போய்ச் சேர்ந்துக்கறேன், பயாஃப்ரா மேல் ஆணை!” என்றான். பெர்சியன் யுத்தத்தில் பதினஞ்சு வயசுப் பிள்ளைகளெல்லாம் சண்டை போடவில்லையா… அம்மா எழுந்துவந்து அவன் கன்னத்தில் பளாரென்று விட்டாள் ஒரு அறை. அப்படியே விரல் பதிந்து விட்டது.

* *
இக்போ வழக்கு. குழம்புச்சட்டியில் எகிறிக் குதிக்கும் கோழி, கத்திக்கு அஞ்சவில்லை என்று சவடால் பேசும்.
* *
பதுங்குகுழி கிட்டத்தில் நாங்கள் வந்தபோது, எதிரி விமானத்தைச் சுடும் துப்பாக்கியோசைகள். சரியா வந்துட்டம், என்று அம்மா சிரித்தபடி உள்ளே குதித்தாள். நான் சிரிக்க முயன்றேன், பயத்தில் உதடு கோணிக் கொண்டது. நிவாரண முகாம் போய்த் திரும்பி வந்துகொண்டிருந்தோம். வாரித் தூற்றும் புழுதிக்காற்றில் என் உதடுகள் காய்ந்து காந்தின. அதிர்ஷ்டமில்லாத நேரம், முகாமில் எதுவுமே கிடைக்கவில்லை, வெறுங்கையுடன் திரும்பினோம்.

குழிக்குள் மக்கள் கூக்குரலிட்டார்கள், சாமி, ஆண்டவா, யேசுவே, ரட்சகா… கையில் பச்சைக் குழந்தையை ஏந்தியபடி கையே வலித்து மரத்துப்போய் ஒரு அம்மா என்னருகில். உள்ளே வெளிச்சமாய் இல்லை, என்றாலும் அந்தக் குழந்தையின் உடம்பெங்கும் வரிவரியாய் தடிப்புகள், அம்மா சுத்துமுத்தும் தேடி ”ஒபி எங்கடி?” என என் கையை அழுத்தினாள். ”என்ன கோளாறு இந்தப் பயலுக்கு, குண்டுச் சத்தம் கேக்கலியாங்காட்டியும்…” எழுந்துகொண்டாள். ஒபியைத் தேடிப் பார்க்கிறேன், சத்தம் எங்கியோ தொலவெட்டுலேர்ந்து வருது, என முணுமுணுத்துக் கொண்டாள். அது சும்மாச் சொல்றது. சத்தம் ரொம்பக் கிட்டத்தில், என்னமா அதிருது… அம்மாவை அப்படியே அசையாதபடி அழுத்திப் பிடித்துக் கொள்ள முயன்றேன். பசியும், நடையலுப்புமாய் இருந்தேன், உடம்பில் தெம்பே இல்லை… அம்மா என்னை உதறிவிட்டு குழிக்கு மேலேறினாள்.

அடுத்துக் கேட்ட பேரிடி… என் காதுக்குள் எதோ கலகலத்து விட்டது. லேசாய்க் காதைச் சாய்ச்சேன்னா கொளகொளன்னு விழுந்து வழியும் போலிருந்தது. தலைமேலே சரசரவென்று சிதிலங்கள், இடிபாடுகள். சிமென்ட் சுவர்கள் நொறுங்கின. கண்ணாடிச் சிதறல்கள், முறிந்து விழும் மரங்கள்… கண்ணை இறுக மூடிக் கொண்டேன், என் நினைவெல்லாம் நாம்தியிடம், காதில் ஒரே ஒரு குரல், நாம்தியின் பேச்சுக்குரல்… குண்டுவீச்சு முடியும்வரை வேறெதையும் நான் நினைக்கவேயில்லை. பிறகு துரிதமாய் குழியை விட்டு வெளியேறினேன். தெருவெங்கும் கன்னாபின்னாவென்று சிதறிக் கிடந்தன சடலங்கள். குழி வாசலிலேயே சில கிடந்ததுதான் ஆக சோகம். அவை இன்னும் அதிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தன. எனுகுவில் எங்கள் சமையற்காரி கோழியை அறுப்பாள், கழுத்தறு பட்டதும் அவை புழுதியிறைய இறைய இப்படித்தான் தவித்துத் துடிக்கும்… உயிர் டாடா சொல்கிறது, என்று ஒபி வேடிக்கை பண்ணுவான்.

ஊளையாய் அலறியபடி அவைகளைப் பார்த்தேன், எல்லாரும் தெரிந்தவர்கள்… அம்மாவும் ஒபியும் அதில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். இல்லை. பொட்டலில், அடிபட்டவர்களின் காயத்தை அம்மா கழுவிக் கொள்ள உதவிக் கொண்டிருந்தாள், ஒபி தரைப்புழுதியில் என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவு அஜாக்கிரதையாவா இருப்பே, என அம்மா அவனைத் திட்டவில்லை. இப்படியா பதறியடிச்சி மேலேறி வருவே, என நானும் அம்மாவைத் திட்டவில்லை. சமையல்கட்டுக்குள் புகுந்து மரச் சீனிக் கிழங்கை ஊற வைத்தேன், இராத்திரிப் பாட்டைப் பார்க்கணுமே…

அன்றைக்கு ராத்திரி ஒபி இறந்து போனான். ஒருவேளை அடுத்தநாள் காலையோ? காலையில் அப்பா அவனை உலுக்கியபோது அவனிடம் அசைவே இல்லை, அதுதான் தெரியும். அம்மா அவன்மேல் விழுந்து கதறியபோதும் அவன் அப்படியே கிடந்தான். நான் போய் அவனை அசைத்தேன், தட்டினேன், குலுக்கி உலுக்கி புரட்டி யெடுத்தேன். அவன் உடல் குளிர்ந்திருந்தது.

”மாண்டவர் வருவாரோ மீண்டு?” என்றார் அப்பா, என்னவோ அதை ரொம்பச் சத்தமாய்த் தனக்கே போல தானே தன்னை நம்புகிறாப் போலச் சொல்லிக் கொண்டார். அலங்காரப் பெட்டியை அம்மா எடுத்து வந்து, ஒபியின் கட்டைவிரலை நகம்வெட்டிச் சீராக்கினாள். ”ஏய் என்ன செய்யறே?” என்று அப்பா கீச்சிட்டு அழ ஆரம்பித்தார். ஆம்பளை அழுகை அல்ல அது, ஆம்பளையாட்கள் மௌனமாய் கண்ணீரை வழியவிட்டு அழுவார்கள். அப்பா பேதலித்த வெற்றொலிகளுடன் அழுது அரற்றினார். அப்பா அப்படியே ஊதிப் பெருகுவது போலவும், அறையே ஆடுகிறாப்போலவும் இருந்தது. நெஞ்சில் தண்ணிப் பீப்பாயை ஏற்றி வைத்தாப் போல பாரம். அப்படியே தரையில் உருண்டு அந்தத் தண்ணீரைச் சரித்துக் கொட்ட முயன்றேன். வெளியே என்னவோ சத்தம். அல்லது என்னுள்ளேயே தானோ? அப்பா குரலா? மாண்டவர் வருவாரோ மீண்டு?… ஒபி இறந்து விட்டான். உடம்பு நடுங்க சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒபி… அவனைப் பற்றிய ஒட்டுமொத்த மதிப்புடன் நினைவுகளை அளைந்தேன். உள்ளே வெறுமையாய்க் கிடந்தது. எத்தனை சாதனைக்காரப் பிள்ளை அது. குழந்தைத்தனம் மாறாத தம்பி அது. எதுவும் என் ஞாபகத்தில் அப்போது மேலெழும்பி வரவில்லை. முந்தைய ராத்திரி அவன் பேசியதேகூட வரவில்லை. ஒபி என்னுடனேயே இருந்தான், என்பதால் அவனை நான் அத்தனை இதுவாய் கவனிக்கவில்லை, கோவில் மகிமை உள்ளூர்க்காரனுக்குத் தெரியாது என்பார்கள், அந்தக் கதை. எப்பவும் என்கூடவே ஒபி இருந்தான், அவன் இல்லாமல் போவான் என்பதையே நான் நம்பவில்லை. ஒபியைப் பற்றி பயம் இல்லவே இல்லை எனக்கு, நாம்தியைப் பற்றி இருந்தது, ஒருநாள் நாம்திக்காக நான் அழுவேன், என்று உள்ளூற பயந்தபடி யிருந்தேன். ஆக ஒபிக்காக எப்படி அழுவது என்று தெரியவில்லை. அழுகையை விட, பயத்தை விட, திகைப்பு அதிகம். தலையரித்தது, சொறிகிறேன் பேர்வழி என்று அழுத்திக் கீறி விட்டேன் போல, தலையிலிருந்து இரத்தம் வழிந்தது. கொத்தாய் மயிரைப் பிடித்து மேலும் மேலும் பிய்த்துப் பிடுங்கி தரையில் வீசியபடி, அம்மா அசாத்திய நிதானத்துடன் அவன் நகங்களை வெட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒபி இறந்தபின்பே கட்டுதளர்ந்த பலவீனம்.. மலேரியா ஜுரம் வந்தாப் போல காய்ச்சலாய் நடுக்கமாய் இருந்தது. ஒட்டுதலே இல்லாத வாழ்க்கை, ஆனால் என்னை அது விரைவாய் இழுத்துப் போகிறது. அவசர கதி எல்லாமே, கொல்லையில் ஒபியைப் புதைத்தது கூட ஒரு அவசரத்தில் தான். ஒரு பழைய மரத்தில் வம்பாடு பட்டு தானே ஒரு சிலுவையை அப்பா வடித்து அந்தக் கல்லறையில் வைத்தார். அக்கம்பக்கத்தாரும், அருளாளர் தாமியனும், கதறியழும் மாணவப் பிள்ளைகளும் கலைந்து போனபின், அம்மா என்ன கண்றாவிடி இது, என்று ஏசி அந்தச் சிலுவையை எத்திச் சாய்த்தாள். பிடுங்கி உடைத்தெறிந்தாள். பெத்த வயிறு கொதிக்கிறது…

யுத்த இயக்க அலுவலகத்துக்கு அப்பா போவதை நிறுத்தி விட்டார். நாட்டுப் பற்றுடன் அவர் கட்டிக் கொள்ளும் டை, அதை கக்கூசில் வீசி தண்ணீர் ஊற்றினார். தினந்தோறும் வாரந்தோறும் எங்கள் அறைக்கு முன்வராந்தாவில் அமர்ந்து வெளியை வெறித்துப் பார்க்கிறோம், நானும் அப்பாவும் அம்மாவும்… கீழத் தெருவிலிருந்து ஒரு காலையில் பெண் ஒருத்தி வேகவேகமாய் எங்களைப் பார்க்க வந்தாள், அவள் கையில் ஒரு பச்சைக் கொம்பு. அவள் சத்தமெடுக்கும் வரை நான் தலைதூக்கியே பார்க்கவில்லை. என்ன போஷாக்கான, பளபளப்பான பசுமையான கிளை. இதை எப்படி அவள் எங்கே கண்டெடுத்தாள் என ஆச்சர்யம். இந்தப் பக்கத்துச் செடி கொடி மரம் எல்லாம் ஜனவரி மாதக் கொளுத்தும் வெயிலில் குத்துயிரும் கொலையுயிருமாய்க் கிடந்தன, இலைகளைச் சூறாவளி பிய்த்தெறிந்து விட்டுப் போயிருந்தது. பூமியே காய்ந்த கரம்பைக் காடு.

யுத்தம் தோல்வியில் முடிந்தது, என்றார் அப்பா. அவர் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை, எங்கள் எல்லாருக்குமே விவரம் தெரியும். ஒபி செத்தானே, அத்தோடு தோல்விமுகம் தெளிவாகி விட்டது எங்களுக்கு. எல்லாரும் மூட்டை முடிச்சுகளைக் கட்டினார்கள். நைஜீரியப் படைவீரர்கள் லாரி நிறைய சவுக்குடன் வந்து கொண்டிருக்கிறார்கள் என ஊரில் வதந்தி பரவியது. நாங்களும் சாமான் செட்டுகளை எடுத்து வைத்துக்கொள்ளத் தயாரானோம்… பார்த்தால், அதிர்ச்சியான விஷயம், எங்களிடம் எடுத்துக் கொள்ள என பெரிதாய் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. அதுவரை எங்களிடம் எதுவுமே இல்லை என்பதே உறுத்தாதிருந்திருக்கிறது…

* *
இக்போ சொலவடை. ஒரு மனிதன் கீழே விழுகிறான் என்றால், அவனாக விழவில்லை, கடவுள் செயல் தான் அது.
* *
என் கையை இறுக்கமாகப் பிடிக்கிறான் நாம்தி. எங்களுக்குக் கல்யாணம். எந்த வேலையையுமே அதிக சிரமத்துடனேயே அவன் செய்ய வேண்டியிருந்தது. அவன் இடது கை வெட்டியெடுக்கப் பட்டுவிட்டது. இழந்த கைக்குப் பரிகாரம் போல, தன் இயலாமையை மறைக்கும் விதமாக வலது கையால் அதிகம் சிரமப்பட்டான். அப்பா படம் எடுத்தார். ”நல்லா வாய்விட்டுச் சிரிடி” என்றார். ”மாப்ள நிமிர்ந்து நில்லு…” ஆனால் அப்பா அவரே குறுகிக் கூனிதான் நடக்கிறார். யுத்தம் முடிந்த முதலே இப்படித்தான். பயாஃப்ராவில் அவரிடம் இருந்த அத்தனை பணத்துக்கும் ஈடாக 50 நைஜீரிய பவுண்டுகளே அவருக்குக் கிடைத்தன. சொந்த வீடு போச்சு. பளிங்கு மாடிப்படிகளுடனான எங்கள் இல்லம். அநாமத்துச் சொத்தாக அது அறிவிக்கப் பட்டு கைவிட்டுப் போய்விட்டது. ஒரு பட்டாளத்தான் அதை ஆக்கிரமித்துக் கொண்டான். அம்மா ஒருநடை அந்த வீட்டை, அவளது பிரியமான வீட்டைப் போய்ப் பார்த்து வர விரும்பினாள், சனியனே, ஒனக்கு வேற சோலிக் கழுதை இல்ல, என அப்பா திட்டினார். என்றாலும் அம்மா போனபோது அந்தவீட்டுப் பெண் பயங்கரமான நாயை ஏவிவிட்டு அம்மாவைத் துரத்தியடித்தாள். எங்கள் சைனாக் கோப்பைகள், ரேடியோகிராம்… அதுங்களை மட்டுமாவது தரப்டாதா, என்றிருந்தது அம்மாவுக்கு. பட்டாளத்தான் பெண்டாட்டியோ பிளாக்கி, என விசிலடித்தாள்.

”கொஞ்சம் இரும்” என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு, அம்மா என் பக்கம் வந்து தொப்பியைச் சரி செய்தாள். என் கல்யாண உடையை அவள்தான் தைத்தது, ஒரு பழைய தொப்பி வாங்கி அதில் சரிகை அலங்காரம் பண்ணித் தந்தாள். கல்யாணம் கழிந்து சிறு விடுதியில் விருந்து. என் கல்யாணத்துக்காக எப்படி ஒரு பிரமாதமான கேக் செய்ய நினைத்திருந்தார் என அப்பா சொன்னார். வெளிர் சிவப்பு அடுக்குகள் கொண்ட கேக். ஒன்னையே மறைச்சிர்றாப்ல உயரம்டி கண்ணு. மாப்ளை முகங்கூடத் தெரியாது. கேக் வெட்டும் படம், அதில் நீங்க ரெண்டு பேருமே கண்ல பட மாட்டீங்க, மாப்பிள்ளைத் தோழன், ஒபிதான் இருப்பான்…

அப்பா மேல் பொறாமையாய்க் கூட இருந்தது, ஒபி பற்றி இத்தனை இதமாய் அவரால்தான் எடுத்துப் பேச முடியும். இப்ப இருந்திருந்தால் அவனுக்கு 17 வயது ஆகியிருக்கும். அந்த வருடத்தில்தான் நைஜீரியாவில் வாகனங்கள் இடது புறமாக அல்லாமல், வலது புறமாகப் போக மாற்றம் செய்யப் பட்டது. நாங்கள் நைஜீரியர்கள் எனத் திரும்பவும் மாறிப் போனோம்.
* *

பிகிலிதி ளிதி கி சீணிலிலிளிகீ ஷிஹிழி
சிலீவீனீணீனீணீஸீபீணீ ழிரீஷீக்ஷ்வீ கிபீவீநீலீவீமீ (ழிவீரீமீக்ஷீவீணீ)

நெகிழ்ச்சிகரமாய் மையச்சரடு பற்றிய கவனமாய் பூத்தொடுத்தாப் போல வார்த்தை தொடுக்கிறார் சீமாமந்தா. நம் தமிழுக்கு நெருக்கமாய் இதை உணர முடிகிறது. முதலில் ‘பொன் ஒளிரும் புலரி’ என்றுதான் தலைப்பைத் தமிழ்ப்படுத்தினேன். ஆனால் எழும் சூரியன் என்கிற பயாஃப்ரா நாட்டுக் கொடிச் சின்னம், யுத்தத்தில் தோல்வியைத் தழுவும்போது திரும்ப உள்ளமுங்கிக் கொள்கிறதாக ஆசிரியர் குறிப்பு வைத்திருக்கலாம் எனத் தோன்றியதில் தலைப்பை வேறு மாதிரி மொழிபெயர்த்தேன்.

தென்கிழக்கு ஆப்ரிக்கப் பழங்குடியினரான இக்போவின் உரிமைப் போராட்டமும் அது எங்ஙனம் நசக்கப் படுகிறது எனவும் கதை விவரிக்கிறது. வாழ்க்கையின் நம்பிக்கைகளை, ஆசையை, ஏமாற்றங்களை, திணிக்கப்படும் சோகங்களையெல்லாம் நதியாய்த் தொட்டுத் தாண்டிச் செல்கிறது கதை. அறிவாளியான பயாஃப்ரன் ஒபி குண்டுச் சத்தம் கேட்க ஆசைப்படுகிறதாகச் சொல்லி, போரில் அவன் தேவைப்பட்டபோது போக முடியாமல் ஒளிந்து கொள்வதாகச் சொல்லி, அடுத்த குண்டுவீச்சில் அவன் குழிக்குள் பதுங்காமல் வெளியேயே குண்டுச் சத்தங் கேட்டு பேதலித்து மண்ணைப் பிசைந்தபடி அதிர்ச்சி தாளாமல் அடுத்த நாள் இறந்துபோகிறதாய்க் கதைசொல்வது கச்சிதம்.

1977ல் நைஜீரியாவில் பிறந்த சீமாமந்தா, வளர்ந்ததெல்லாம் இன்சுகா, பல்கலைக்கழகம் கொண்ட நகரத்தில்தான். ஊடகவியல் மற்றும் அரசியல் நோக்கியல் மேற்படிப்பை அவர் அமெரிக்காவில் கனக்டிகட்டில் படித்தார். 2002 ஆப்ரிக்க எழுத்தாளருக்கான கேன் பரிசுக்காக சிபாரிசு செய்யப் பட்டவர். 2002 காமன்வெல்த் சிறுகதைப் போட்டியிலும் இரண்டாம் பரிசு பெற்றார்.
* *

Series Navigation