நைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

ஆங்கிலமூலம் – சீமாமந்தா இங்கோசி அடிச்சி தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்


* *
இக்போ குடிகள் சொல்கிறார்கள், முதிர்ந்த கழுகுக்கு புள்ளி இல்லாத நிர்மலமான இறகு..
* *
மழைக்கசகசப்பான ஒரு பருவ மத்தி. சூரியனோ என் கையருகே போல தகதக, மழையும் பெய்யத்தான் செய்கிறது. வெயில்மழை! எனக்குள் சின்ன வயசுக் கிளுகிளுப்பு.. இப்படி நாட்களில் நான் வெளியே ஒடித் திரிந்திருக்கிறேன். மழைக்கும் வெயிலுக்கும் ஒரு விடாக்கண்டன் கொடாக்கண்டன் போட்டி. சூரியன்தான் ஜெயிக்கணும்! வாய் தன்னைப் போல எதாவது மெட்டெடுக்கும். வெதுவெதுவென்று வியர்வையுடன் கலந்து முகத்தில் வழிகிறது மழை. ஊர்வலம் முடிந்து விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். என் கையில் தட்டி – ‘கூட்டுக்கொலைகளை மறந்துவிடாதே.’ எனது, எங்களது புதிய அடையாளத்தையிட்டு ஒரு பெருமிதம். மே பின்பகுதி அது. எங்கள் தலைவர் ஒஜுகு படை வாபஸை அறிவித்திருந்தார். ஆ, நாங்கள் இனியும் நைஜீரியர்கள் அல்ல. நாங்கள் பயாஃப்ரன்கள்!

சுதந்திர சதுக்கத்தில் நாங்கள் மாணவர்கள் ஆயிரக்கணக்கான பேர் உற்சாகமாய்க் கூடி ஊர்வலம் போனோம். இக்போ பாடல்களை உரக்கப் பாடினோம். நதிபோல கையசைவு. காற்றிலாடும் நாற்று வயல். வெளியே பெண்மணிகள் நிலக்கடலையும் மாங்கனிகளும் விநியோகித்தபடி ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடிக் குதூகலித்தார்கள். என் பக்கத்தில் நாம்தி. நாங்கள் தட்டிகளை ஆட்டி ‘வாகைக்’ கிளைகளை அசைத்தபோது எங்கள் தோள்கள் இடித்துக் கொண்டன. அவன் அட்டையில் ”போர் நிறுத்தம்.” மாணவர் தலைவர்களில் அவனும் ஒருவன் என்றாலும் என்னவோ என்கூட நிற்கலாம் என நினைத்தான். மற்ற தலைவர்கள் முன்னணியில் இருந்தார்கள். ஒரு சவப்பெட்டி, அதில் நைஜீரியா என சாக்கட்டி எழுத்துக்கள். குழியன்று தோண்டி, அதற்குள் பெட்டியை இறக்கியபோது, ஹோவென்று ஆர்ப்பரிப்பு எங்களை ஒருசேரத் தழுவியது. தழுவித் தூக்கியது, ஒரே குரல்போல அது முழங்கியது. நாங்கள் ஒன்றுகலந்தோம்!

நான் ஆனந்தமாய் ஊளையிட்டேன். திடுக்கென்று ,இஃபேகா அத்தை ஞாபகம். நான் பிறந்தபோது என் அம்மாவிடம் பால் சுரக்காமல் அத்தையின் முலைகளைத்தான் நான் சப்பினேன். வடக்கின் படுகொலைகளில் அத்தை செத்துப் போனாள். அவள் பெண் அர்சி. கர்ப்பிணி, அவளும் பலியானாள். அவர்கள் அர்சி சாகுமுன் அவள்வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே வீசியெறிந்திருப்பார்கள். எல்லா கர்ப்பிணிப் பெண்களையும் அவர்கள் அப்படித்தான் கொன்றார்கள். நான் யோசித்துக் கொண்டிருந்ததை நாம்தியிடம் சொல்லவில்லை. என்னை விடு, அவனது மூணு மாமன்கள், ஆறு மருமகன்கள் பலியாகியிருக்கிறார்கள்… கேட்டால் என் முகத்தை வருடி அவன் சொல்வான். ”நாந்தான் சொன்னேனே, கூண்டோடு கைலாசம், அதையே நினைச்சிட்டிருக்கப்டாது. அதுக்கா நாம வாபஸ் வாங்கினோம், இப்ப நம்ம தனி நாடு… பயாஃப்ரா பிறந்துவிட்டது! அதைப் பத்தி யோசிடி கண்ணு. நமது பாடுகளை பலமான தேசமாக மாற்ற பாடுபடுவோம். நமது துயரங்களை பெருமையான ஆப்ரிக்காவாக மாற்ற பயன்படுத்துவோம்… விளங்குதா?”

அதான் நாம்தி. ஒரு இருநூறு வருடம் முன்னால் இவன் எப்படியிருந்திருப்பான்… ஒரு இக்போ வீரன் தன் படையை முன்நடத்திச் செல்கிறான். (அப்போதெல்லாம் தர்ம யுத்தம்.) வார்த்தெடுத்த குத்தீட்டி. வாள். முன்னே பாயும் வேகம். குளம்படிகள் அதிரும் சத்தம். திரும்புகையில் குச்சிகளில் மனிதத் தலைகள்.

விடுதி வராந்தாவில் மழை நின்றிருந்தது. சூரியனுக்கு ஜெயம்! உள்திண்ணையில் பெண்கள் எல்லாரும் பாட்டெடுத்துக் கொண்டிருந்தார்கள். நேற்றுவரை அவர்கள் பிளாஸ்டிக் வாளிகளுடன் குழாயடியில் முடியைப் பிடித்து அடித்துக் கொண்டிருந்தார்கள். துணி காயப்போட்டால் உள்ளாடைகளில் ஓட்டை போட்டு பொறாமையைத் தணித்துக் கொள்கிற ஸ்திரீகள் இப்போது கைகோர்த்துக் குலவையிடுகிறார்கள். ”நைஜீரியா வாழ்க!” பாட்டு மாறி விட்டது, இப்போது ”பயாஃப்ரா வாழ்க வாழ்க!” கைதட்டி ஆரவாரித்து நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டேன். கூட்டுக் கொலைகளைப் பற்றி நாங்கள் பேசுவதைத் தவிர்த்தோம். – வீடு வீடாக இக்போக்கள் துருவித் தேடப்பட்டார்கள். மரத்தின் மேலே இருந்தவர்களை இழுத்துப் போட்டார்கள். ”நியாமிரி நியாமிரி…” தாய் மண்ணே வணக்கம் – நாங்கள் தலைவர் ஒஜுகு பற்றிப் பேசினோம். என்ன உணர்வுபூர்வமாய்ப் பேசுவார் மனுசன். கேட்டாள் கரைந்து போவார். கண்ல தண்ணி வந்துரும்… போராட்ட வேகம் வரும். தோள் பூரித்து நரம்பு ஜிவ்வென்று முறுக்கேறி விடும். எத்தனை தலைவர் வந்தாலும் வசீகரத்தில் அவரை அடிச்சிக்க முடியாது. ஊரெல்லைத் தேர். அவர் பக்கத்துல நிகருமா, ஜவுளிக்கடை பொம்மை! ஒருத்தி சொன்னாள். ”இமாகுரா, மொத்த ஆப்ரிக்க வம்சத்திலேயே பயாஃப்ராவில்தான் டாக்டர்மாரும் வக்கீலும் அதிகம்டி…” இன்னொருத்தி சொன்னாள். ”ஆ இனி நாம் ஆப்ரிக்காவைக் காப்பாற்றலாம்…” ஒரே சிரிப்பு. நாங்கள் முகம்கூட அறியாத எங்கள் ஜனங்களையிட்டு எங்களுக்கு ஒரே பெருமிதம். அவர்களையெல்லாம் அதுவரை ‘நம்ம’ ஆட்களாக நாங்கள் யோசித்தது கிடையாது.

வாரங்கள் குதூகலத்துடன் தொடர்ந்தன. எங்கள் வகுப்பாசிரியர்கள் தங்கள் தங்கள் வெளிநாட்டுக்கு, பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா என்று மூட்டைகட்டினார்கள். யுத்தம்னு இனி வந்தாலும், ஒரே வாரம், மொத்த நைஜீரியாவையும் நசுக்கிருவோம் நாங்கள். எங்கள் துறைமுகத்தை அடைச்சிக்கிட்டு நைஜீரியக் கப்பல்கள். பாக்கறோம்டி, இனி எத்தனை நாள் நிக்கப் போறீங்க, சிரித்தோம். ஆல மரத்தடியில் கூட்டம். பயாஃப்ராவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றி நாங்கள் விவாதிக்கக் கூடினோம். உற்சாகம் பொங்கி நுரைத்தது. ‘நைஜீரியப் பல்கலைக் கழகம், இன்சுகா” பலகையை இறக்கிவிட்டு, ”பயாஃப்ரா பல்கலை வளாகம், இன்சுகா” ஏற்றப்பட்டது. முதல் ஆணியை நாம்தி அடித்தான். பயாஃப்ரன் விடுதலை இயக்கத்தில் அவன்தான் முதலில் சேர்ந்தவன். மற்றவர் பின்னத்தி ஏர். அவனது இராணுவ உடையை வாங்கிக்கொள்ள நானும் அவனுடன் போயிருந்தேன். யுத்த ஆள்சேர்ப்பு அலுவலகம், புது பெயின்ட் வாசனையுடன். அந்த உடையில் அவன் பரந்து விரிந்த மார்புடன் ஜாம்பவானாய்த் தெரிந்தான். அதைவிட்டு அவன் பிரியவே வேண்டாமாய் இருந்தது. என்னுடன் அவன் சல்லாபித்தபோது கூட அந்த மொடமொடப்பான கித்தான் சட்டையை அப்படியே லேசாய்த் தூக்கிப் பிடித்துக் கொண்டேன்.

என் வாழ்க்கை – எங்கள் ஜீவிதம், வெட்ட வெளிச்சமாய் இருந்தது. பதனிடப் பட்ட பளபள ஆடைத்தோல்.. நாங்கள் தினவெடுத்திருந்தோம். உள்ளே ஓடுவது உதிரம் அல்ல, எஃகுக் குழம்பு. வெறுங்காலுடன் நாங்கள் தீமிதிப்போமாக்கும்!

* *
இக்போ மக்கள் சொல்வார்கள் – பூசணிக் கதுப்பில் தண்ணீர் நுழைந்ததை யார் பார்த்தார்கள்?
* *
விடுதியறை வெளியே துப்பாக்கிச் சத்தம். ரொம்பக் கிட்டத்தில் இடி இறங்கினாப் போல. யாரோ ஒருவன் மெகாஃபோனில் கத்துகிறான். ஓடுங்கள் வெளியே! காலி செய்யுங்கள் இடத்தை! கூடத்தில் அலைபாயும் பாதங்கள், பதட்டம். பெட்டியில் சாமான்களை அடைக்கிறேன்… உள்ளாடைகளை எடுத்துக்கொள்ள விட்டுவிட்டது… கையும் ஒடலை, காலும் ஒடலை. அவசரத்ல அண்டால கை போகாதுன்னு பழமொழி. ஓடுடி வெளியே. மாடிப்படியருகே யாரோ இளம்பெண்ணின் பளபளப்பான அழகிய ஒற்றைச் செருப்பு.

எனுகு பகுதியில் மழைவாசம். பசும்புல் தலைநீட்ட ஆரம்பித்திருந்தது. எறும்புப் புற்றுகள் கிளர்ச்சியுடன் முளைத்தன. சந்தையாட்களும், மூதாட்டிகளும், இளம் பிள்ளைகளும் நாம்தியைக் கட்டிக் கொள்கிறார்கள். அவனது சிப்பாய் உடையைத் தொட்டுத் தழுவி மகிழ்கிறார்கள். ”நிஜமாவே நீ கில்லாடிதான்…” என் பதிமூணு வயசுத் தம்பி ஒபி சொன்னான். தினசரி ஒருபுத்தகம் வாசித்துத் தள்ளும் ஒபி. சோடாபுட்டி கண்ணாடி. டபுள் புரமோஷன் வாங்கி சிறப்புப் பள்ளியில் அவன் சேர முடிந்தது… தற்போது கிரேக்கப் பண்பாட்டில் ஆப்ரிக்க மூதாதையரின் ஆதிக்கம், என ஆய்வு செய்கிறான். நாம்தியின் சீருடையைத் தொட்டுப் பார்த்தது அவனுக்குப் போதவில்லை, ஒரேயரு தரம் போட்டுப் பாக்கலாமா, என்றிருந்தது. டுமீல் சத்தம் காதுக்கு எப்படியிருக்கும் என்று கேட்க ஆசைப்பட்டான். அம்மா நாம்தியை வீட்டுக்குக் கூப்பிட்டு மாம்பழ கேக் தந்தாள். ”இந்தச் சீருடை உனக்கு கம்பீரமாப் பொருந்ததுடா மகனே…” என்று அவனைக் கட்டிக் கொண்டாள். ஒரு வருஷம் முன்பு எனக்கு அவனுடன் கல்யாணம் பேசப்பட்ட போது, வயசுப் பொருத்தம் இல்லையேடி ரொம்பச் சின்னப் பொண்ணு நீ, என்றும், நம்ம தரத்துக்கு அவங்க குடும்பம் அந்தஸ்து பத்தாது என்றும் பேசியவள் அம்மா, இப்போது எல்லாம் மறந்து போயிருந்தது அவளுக்கு.

அப்பா அப்பவே எங்களுக்குக் கல்யாணம் முடித்துவிட ஆசைப்பட்டார். நாம்தி சிப்பாய் உடையில் மணமகனாகலாம், பிறக்கும் பிள்ளைக்கு பயாஃப்ரஸ், எனப் பேர் வைக்கலாம், என்றெல்லாம் அவருக்குக் கனவு. அப்பா லந்தடிக்கிறார்… என்றாலும் நாம்தி ராணுவத்தில் சேர்ந்ததில் இருந்தே என் நெஞ்சில் இனம் புரியாத கனம், ஒரு பிள்ளை பெத்துக்கலாமே என்றுதான் எனக்கும் இருந்தது. பளபளப்பான மகோகனி பெஞ்சு போல சருமம் உள்ள பிள்ளை, நாம்தியைப் போல. என் மன ஆழத்தில் கிடந்த ஏக்கத்தை அவனிடமும் சொன்னேன். ஐதிக நம்பிக்கை இல்லாதவன் அவன். ஆனாலும் தன் கட்டைவிரலைக் கிள்ளி, பின் என் விரலையும் கிள்ளினான். எங்கள் ரத்தங்கள் கலப்பதாக ஐதிகம்… அதன் அர்த்தம் சரியாகத் தெரியாவிட்டாலும் சிரிப்பாய் இருந்தது.

* *
இக்போ பழமொழி. சிங்கத்தைப் படைச்சவன் அதைப் புல்லைத் தின்ன விடான்.
* *

நாம்தி போய்விட்டான். அவன் காலணி எழுப்பிய தூசி மெல்ல அடங்கி அவன் போன தடம் அழியும் வரை பார்த்தபடியிருந்தேன். என் கண்ணிலும், ஈர தேகத்திலும் பெருமை. பெருமிதம். ஆலிவ் இலை தழைகள் போன்ற அவனது சீருடையை நினைத்துப் பெருமிதம். சட்டை கைப்பகுதியில் மஞ்சளாய் எழும் உதயசூரியச் சின்னம். அப்பா தினசரி அணியும் மங்கலான பருத்தி டையிலும் அதே சின்னம் உண்டு. யுத்த ஆய்வு அலுவலகத்தில் புதிதாய் அப்பா வேலைக்குப் போகிறார். அவரிடம் நிறைய டை இருந்தது, பட்டுத் துணி உட்பட! எல்லாத்தையும் புறந் தள்ளினார்… சின்னம் இல்லாத டையெல்லாம் டையோட சேர்த்தியா. அட அம்மா, நாகரிகச் சீமாட்டி, கை நகத்தையே அப்படிப் பராமரிக்கிறவள் அவள், லண்டனில் வாங்கிய அருமையான அவளது உடைகளில் சிலவற்றை விற்றுவிட்டு, நாலைந்து பெண்களைச் சேர்த்துக் கொண்டு ராணுவ வீரர்களுக்கு உடைகள் தைத்தாள். நானும் அதில் கலந்து கொண்டேன். நாங்கள் பனியன்கள் தைத்துத் தந்தோம். இக்போ பாடல்கள் பாடினோம். வேலை முடிந்து அம்மாவும் நானும் வீடுதிரும்புவோம். பெட்ரோல் சிக்கன நடவடிக்கையாக நாங்கள் நடந்தே வீடுதிரும்பினோம். பரபரப்பற்ற நாட்கள். அப்பா வீடு திரும்புவார். வாசல் திண்ணையில் அமர்ந்து பயாஃப்ரா வானொலி கேட்டபடியே நாங்கள் நிலக்கடலைச் சட்னி தொட்டுக் கொண்டு கேப்பைக் கொழுக்கட்டை சாப்பிடுவோம். சிம்னி விளக்கு நாலாபக்கமும் வெளிறிய நிழலை விரித்துப் பரத்தும். நாங்கள் ஜெயிக்கிற செய்திகளை வானொலி சொல்லும். நைஜீரிய ராணுவச் சடலங்கள் தெருவில் கிடத்தப்பட்டிருப்பதைத் தெரிவிக்கும். அப்பா அலுவலகத்தில் கிடைத்த தகவல்களையெல்லாம் பெருமையாய்ச் சொல்வார் – நம்மாளுங்க எம்டங்கடா! தேங்கா எண்ணெயில் இருந்து மசகெண்ணெய் எடுக்கிறோம் நாம. ஓட்ட ஒடசல் இரும்புத் துண்டையெல்லாம் சேர்த்து கார் இன்ஜின் தயார் செய்கிறோம். சமையல் பாத்திரத்தை வெச்சே கச்சா எண்ணெயை வடிகட்டிப்பிடுவோம். வீட்டைச் சார்ந்தே பதுங்குகுழிகள், சுரங்கப்பாதை. எந்தப் படையெடுப்பும் நம்மள ஒண்ணும் புடுங்க முடியாது. மாலைஉசாவல் முடிகிற சமயம், ”நமக்குப் போராட நியாயமான காரணங்கள் இருக்கு” என்று சொல்லிக் கொண்டோம், என்னவோ அதுவரை தெரியாததைப் போல! மனசுக்கு தேவையான நங்கூரம், ஒபி அப்படித்தான் சொன்னான். இப்படியான ஒரு சாயங்காலத்தில்தான் சிநேகிதன் ஒருவன் அந்தப் பக்கமாய் வந்து, நாம்தியின் படை பெனினை ஜெயித்து விட்டதாகத் தகவல் சொன்னான். நாம்தி சௌக்கியம்… நாம்தியின் ஞாபகங்களுடன் கள் அருந்தினோம். ”வருங்கால மாப்ளைக்காக!” அப்பா சொல்லி கள்குடுவையை என்னைப் பார்க்க உயர்த்திக் காட்டினார். ஒபி அன்றைக்கு எவ்வளவு வேணாலும் கள் குடிக்கட்டும், என விட்டுவிட்டார். அவர் ‘கோனியாக்’ மதுவின் விசிறி, ஆனால் கள்ளச் சந்தையில் கூட அவர் சரக்கு ‘ரெமி மார்ட்டின்’ கிடைக்கவில்லை…. தடை அமலில் இருந்தது. மேலுதட்டு நுரையுடன் அப்பா சொன்னார். கள்ளே தேவலை, சீசாவக் கவுத்தி இக்கிணி இக்கிணியாக் குடிக்கண்டாமில்லே?… எல்லாரும் ஹோவென்று சிரித்தோம்.

* *
இக்போ சொலவடை. அசமந்தமாய்ப் போகும் அணில்கூட வரட்டும்
வேளை ஓட்டமெடுக்கும்.
* *

எனுகுவில் ஆடிக்காத்தின் புழுதியெடுப்பான ஒரு நாள். எனுகுவை நைஜீரியர்கள் கைப்பற்றிய நாள் அது. பெருங் காத்து, தூசி, தும்பு, காகிதக் குப்பை, இலைகள் எனப் பறந்தன. தலைமுடியில் பழுப்பாய் பிசுக்கு சேர்ந்தது. அம்மாவும் நானும் மிளகுக் குழம்பு வைத்தோம். நான் மாமிசம் வெட்ட, அம்மா மிளகை அம்மியில் நசுக்கிக் கொண்டிருந்தாள். வெளியே துப்பாக்கிச் சத்தம். முதல்ல புயலிடியாக்கும்னு இருந்தது. பயாஃப்ரா வானொலி எதிரிராணுவம் வெகு தொலைவில் இருக்கிறதாக, நாங்கள் போட்டபோட்டில் பின்வாங்கியிருந்ததாகச் சொல்லியிருந்ததே… அப்பா பதறியோடி உள்ளே வந்தார். பருத்தி டை கசங்கியிருந்தது. சமையலறைக் கதவை படபடவென்று தட்டினார். ”ஏளா எல்லாரும் கார்ல ஏறுங்க” என்றார். ”நம்ம அலுவலகமே காலி பண்ணிப் போகுது… நாம இடம் மார்றோம்…”

எதை எடுத்துக்கொள்ள என்றே தெரியவில்லை. அம்மா நக அலங்கார சாதனங்களை எடுத்துக் கொண்டாள். சின்ன வானொலிப் பெட்டி. கொஞ்சம் துணிகள். ஒரு கைத்துண்டில் சுற்றி பாதி வேகவைத்த மிளகுக்குழம்பு பாத்திரத்துடன். நான் ஒரு பொட்டலம் உப்பு பிஸ்கோத்துகள் எடுத்துக் கொண்டேன். மேஜைமேலிருந்த புத்தகங்களை ஒபி வாரிக்கொண்டான். அப்பாவின் பூஜோ காரில் நாங்கள் எனுகுவை விட்டு வெளியேறியபோது, அம்மா எப்படியும் திரும்ப இங்கேயே வந்து விடுவோம் என்றாள். நம்ம படைகள் எனுகுவை மீட்டு விடுவார்கள். அவளது அழகான பீங்கான் பாத்திரங்கள், அங்கேயே அவற்றை விட்டுவிட்டு வந்தாச்சி, என்கிற கவலை கிடையாது. கிராமஃபோன் பெட்டி. பாரிசில் இருந்து இறக்குமதியான சரக்கு அவளது புதிய தலை’விக்.’ என்ன அழகான அபூர்வமான லாவண்டர் வண்ணம்… ”அத்தோட என்னுடைய தோல்அட்டை போட்ட புத்தகங்கள்” என்றான் ஒபி. எங்களை மோதியோடும் பயாஃப்ரன் சிப்பாய்கள், கடவுளுக்கு நன்றி, அவர்கள் யாரும் நாங்கள் அறிந்த குடும்பத்து ஆட்கள் அல்ல. நாம்தியை இப்படிப் புறமுதுகு காட்டுகிறா மாதிரி, கடும் மழையில் நடுங்கிப் பேதலித்து ஓடும் கோழி போல நினைக்க நான் விரும்பவில்லை. கண்ணாடி முன்தடுப்புகளில் அப்பிய தூசியை அடிக்கடி காரை நிறுத்தி வழித்துப் போட்டுவிட்டுப் போகவேண்டி யிருந்தது. பெரும் நெரிசல். ஊர்ந்தாப் போலப் போனது கார். பெண்கள் முதுகில் குழந்தையைக் கட்டிக் கொண்டு, கைவண்டி தள்ளிக் கொண்டு, தலைகளில் பானை சுமந்து கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். ஆண்கள் ஆடுகளையும் சைக்கிள்களையும் தள்ளிக் கொண்டு, மரப்பெட்டிகளை, கிழங்குகளை வேரோடு பிடுங்கி தூக்கிக் கொண்டு, கூட குழந்தைகள், எத்தனை குழந்தைகள்! மெலிதான பழுப்பு சல்லாத் துணியாய்ப் புழுதி ஊயென்று கிளம்பிச் சுழன்றடித்தது. குப்பை மலை. கலங்கலான நம்பிக்கையோடு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் சனத்திரள். பளாரென்று அந்த உண்மை அறைந்தது என்னை. ஆ, இந்த ஜனங்களைப் போல… நாங்களும் இப்போது அகதிகள்.

* *
இக்போ வழக்கு. எங்கே ஒரு மனிதன் படுத்துத்தூங்கி விழித்தெழுகிறானோ, அதுவே அவனுக்கு வீடு.
* *

அப்பாவின் பழைய சிநேகிதர் அகுபியூஸ். எப்பவும் அவர் புன்னகையில் வண்டலாய் சோகம் தெரியும், ”கடவுள் பயாஃப்ராவைக் காக்கட்டும்” என்றுதான் பேச்செடுப்பார். இனப்படுகொலைகளில் அவரது அத்தனை குழந்தைகளும் பலியாகி விட்டார்கள். கரி படிந்த சமையலறையும், நாஸ்தியான கழிவறையும், காரை பேர்ந்த சுவர்களுமான தன் வீட்டை அவர் காட்டியபோது எனக்கு அழுகை முட்டியது. அந்த வீட்டைப்போய் வாடகைக்கு எடுக்கிறோமே என்பதால் அல்ல, அவரைப் பார்க்கவே சங்கடமாய் இருந்தது. எங்களுக்கு இப்படியோர் சிதிலமான வீட்டைத் தருகிறதில் அவருக்கு வேதனை, பாவம். கொண்டு வந்திருந்த உணவையும், சாமான்களையும், படுக்கிற பனையோலைப் பாய்களையும் கீழே இறக்கினோம். அறையின் மத்தியில் வானொலி. தினமும் அதையே சுற்றிச் சுற்றி வந்தோம். துடைத்துத் துப்புரவாக அதைப் பராமரித்தோம். ராணுவ அணிவகுப்புப் பாடல்கள் ஒலிபரப்பானபோது கூடவே நாங்களும் பாடினோம்…

ஓ நாங்கள் பயாஃப்ரன்கள்
வாழ்வா சாவா போர் இது எமக்கு
யேசுவின் பெயரால், ஜெயபேரிகை
வெல்வோம் நாங்கள், கொட்டு முரசே
டக் டக் ஒண்ணு ரெண்டு…

சில சமயம் பக்கத்து வீட்டுக்கார புதிய நண்பர்களும் எங்களோடு சேர்ந்து கொள்வார்கள். பரந்த காற்றோட்டமான வெளியும், பளிங்கு மாடிப்படிகளுமான எங்கள் முன்னாள் வீட்டைப் பற்றி உரக்கச் பேசுவது பாடும்போது தவிர்க்கப் பட்டது. அலுப்பு மறைந்தது. எனுகுவை எங்கள் கையிலிருந்து எதிரிகள் ஆக்ரமித்து விட்டார்கள் என அப்போது நாங்கள் உரக்க ஒத்துக் கொள்ள வேண்டியதில்லை. .போர் அலுவலகம் இப்போது அப்பாவுக்கு சம்பளம் அல்ல, வெறும் படிகள்தான் தர முடிகிறது என்பதையும் மறக்கலாம். கசங்கிய சம்பள பில்லுடன் எல்லாத் துட்டையும் தம்பிடிக்காசு எடுத்துக் கொள்ளாமல் அப்பா அம்மாவிடம் தந்தார். நைஜீரியன் பவுண்டுகளை விட பயாஃப்ரன் பவுண்டுகள் எத்தனை அழகு. அழகான எழுத்துக்கள், தலைவர்களின் உருவங்கள்… ஆனால் பயாஃப்ரன் பணத்தைக் கொண்டு சந்தையில் நிறைய சாமான் வாங்கேலாது. மதிப்பு சரிந்து விட்டது.

சந்தைன்னா, ஒரே குப்பை கூளமான இடம். வியாபார மேஜைகள் கையடிந்து காலொடிந்து முட்டுக் கொடுத்திருக்கும். உணவைவிட ஈக்கள் பட்டாளம் அதிகம். பூஞ்சை பூத்த மாமிசத்தில் அவை அப்பிக் கிடக்கும். அலந்து கறுத்துப் போன வாழைப்பழங்கள். மாமிசத்தையும் பழங்களையுங் காட்டிலும் ஈக்கள் கொழுத்து ஆரோக்கியமாய்த் தெரிந்தன. பெரிய பெரிய ஈக்கள். எல்லாவற்றையும் ஒரு நோட்டம் பார்த்தேன், இது சமாதான நேரமும் அல்ல, வழக்கமாய் சந்தைபோடும் இடமும் அது அல்ல, ஆனாலும், இப்போது நிலைமை சௌஜன்யமாக இருப்பதான பாவனையில் நான் எல்லாம் நிதானமாய்ப் பார்த்து கடைசியில் நோஞ்சான் கப்பைக்கிழங்கு வாங்கினேன் வழக்கம்போல, அதுதான் மலிவு, வயிறும் ரொம்பும். ஒடிசலான தண்டு, வெளிர் சிவப்புத் தோல். இதெல்லாம் நாங்கள் சாப்பிட்டதேயில்லை. அம்மாவிடம் ”விஷம் கிஷமா இருக்கப் போகுது” என நான் பாதிகேலியாய் பயமுறுத்தினேன். அம்மாவும் சிரித்தாள். ”ஜனங்க வெறும் தோலைக்கூடத் தின்ன ஆரம்பிச்சாச்சி, இது ஆட்டுக்குப்போடற தீவனமாம்டி…”

மாதங்கள் உருண்டோடின. என் மாதவிலக்கை வைத்து நாளோடுவதை கவனித்தேன். இரத்தப்போக்கு அளவுகம்மியாய் சோகையாய் இருந்தது. நாம்தியைப் பற்றிய கவலை. அவனால் எங்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஏலாது. ஆ அவனுக்கு எதும் சம்பவிக்கலாம்… யாரும் தகவல் சொல்ல நான் இருக்குமிடம் தெரியாது. பயாஃப்ரா செய்திகளை உன்னிப்பாகக் கேட்டேன். பாதியிலேயே வானொலி ர்ர்ர்ரென்று இரைகிறது. வேணுன்னே மறிக்கிறார்கள் நைஜீரிய வானொலி, என்றான் ஒபி. நைஜர் ஆற்றில் ஆயிரக்கணக்கான நைஜீரியச் சேனையின் சடலங்கள் மிதக்கின்றன, என்றது பயாஃப்ரா வானொலி. செத்து மடிந்த, காயம் பட்ட ஆயிரக்கணக்கான எங்கள் படைவீரர்களைப் பட்டியல் இட்டது நைஜீரிய வானொலி., ரெண்டையும் ஒரே மாதிரியான கவனத்துடன் நான் கேட்டேன். பின் நானே சுயமாக சில கணிப்புகளை வைத்துக் கொண்டேன், அவையே சரி என நம்பினேன்.

* *
இக்போ முதுமொழி. பாம்பு விஷத்தைக் காட்டா விட்டால் பிள்ளைகள் அதை விறகுச்சுமை கட்ட பயன்படுத்தி விடுவார்கள்.
* *

வெக்கையான ஒரு நாளில் நாம்தி எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான். கண்மேல் ஒரு தழும்பு. ஆளே டொக்கு விழுந்து தோலே வற்றி உலர்ந்து போயிருந்தது. கிழிசல் சராய் இடுப்பிலேயே நிற்கவில்லை. அம்மா பதறி சந்தைக்கு ஓடி மூணு கோழிக் கழுத்தும், ரெண்டு சிறகும் வாங்கி வந்து சிறிது பனையெண்ணெயில் வறுத்து கோழிக்குழம்பு வைத்தாள்.. ”இது நம்ம நாம்திக்காக மட்டும்” என்றாள் உற்சாகமாக. அம்மா கைப்பக்குவம் அலாதியானது. சமையல் புத்தகம் கித்தகம் இல்லாமலேயே வெறும் வெங்காயம் போட்டே கோழிக்குழம்பு அருமையாய்ச் செய்யும்.

நாம்தியைப் பக்கத்துப் பண்ணைக்குக் கூட்டிப்போனேன். முற்றி விளையுமுன்னே அறுவடையாகி யிருந்தது அந்த வயல். எல்லா வயலும் அப்படித்தான், இராக் களவு அதிகம். பால் முற்றி கதிர் பிடிக்குமுன் சோளம் அறு பட்டு, அட கீரைப் பாத்தியையே அரைஜாண் வளருமுன்னே களவாண்டோடுகிறார்கள். அவநம்பிக்கையால் அவசர அறுவடை, என்றான் ஒபி. ஒரு வாதமரத்தடியில் நாம்தி என்னைத் தரைபார்க்கச் சாய்த்தான். வத்தலும் தொத்தலுமான உடம்பு எனக்கு உறுத்தியது. என் முதுகைப் பிறாண்டினான். கசகசத்த கழுத்தைக் கடித்தான். காஞ்ச மாடு… அவன் அழுத்திய வேகம். என் சருமத்தைத் தாண்டி மண்ணே நுழைந்தாப் போல இருந்தது. அப்படியே பிரித்துக் கொள்ளாமல் ரொம்ப நேரம் மேலே இதமாய்க் கிடந்தான். எங்கள் ரெண்டுபேரின் இதயமும் ஒரே கதியில் துடித்தாப் போல பிரமை. இந்த யுத்தம் முடியாட்டி கூடப் பரவாயில்லை, என ஒரு பைத்தார எண்ணம். அப்பதான் எப்பவும் இந்த அவசரம், இந்த வேகம், இந்த அழுத்தம் வாய்க்கும். தொடை பிளத்தல். கலவி வாடை. மறக்க முடியாத கணம் அது. அப்புறம்தான் நாம்தி அழ ஆரம்பித்தான். அவன் அழுவான் என்பதை நினைத்தே பார்த்ததில்லை நான். பிரிட்டிஷ்காரன் நைஜீரியாவுக்கு கேட்கக் கேட்க ஆயுதம் தந்திட்டே இருக்கான். அவனுகளுக்கு இப்ப ரஷ்ய விமானங்கள் இருக்கு, அதை ஓட்ட எகிப்திய ஓட்டிகள். அமெரிக்கா நமக்கு உதவத் தயாரா இல்லை. நமக்குத் தடை இன்னும் விலக்கப்பட வில்லை. எங்களுக்கு இப்ப ரெண்டாளுக்கு ஒரு தவக்கு (துப்பாக்கி), சில அணிகளில் அதுகூட இல்லை, விவசாயக் கத்தியும் குத்தீட்டியுந்தான். ”அரக்கனுங்க, இக்போவாப் பிறந்த ஒரே காரணத்துக்காக பச்சைப் பிள்ளைகளையே சாவடிச்சிர்றானுங்க, பாத்தியே நீ?”

அவன் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டேன், ஆனாலும் அவன் அழுகை அடங்கவில்லை. ”ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கானாடி?” என்னைக் கேட்டான். ”சொல்லு இவளே, இருக்கானா?” நான் அவனை ஆரத் தழுவிக்கொண்டேன். அவன் பேசுவதைக் கேட்டேன். ஷ்ர்ரில் என இரையும் பிள்ளைப்பூச்சிகள். என்னோடு ரெண்டுநாள் இருந்தான் அந்தமுறை, பிறகு பிரிகிறதாகச் சொன்னான். பிடித்திருந்த என் கையை விட அவனுக்கு மனசே இல்லை. அம்மா ஒரு சின்னப் பையில் புழுங்கரிசி தந்தனுப்பினாள்.

அந்த நாட்கள் இனி என் உள்ளத்தை விட்டு அகலாது. அந்த நாட்கள் என்றில்லை, நாம்தி பற்றிய ஞாபகங்கள். ஒண்ணொத்தையும் தனியாக ஆசுவாசமாக நான் அசை போட்டுக் கொள்வேன். எதிரி விமானங்கள் சீறி மேலே வட்டமிடும் தருணங்களில் அவற்றை ஞாபகப் படுத்திக் கொண்டேன். குண்டு விழும் கீச்சொலிகள். வெளியே இருந்த அத்தனை பேரும் பதுங்குகுழிக்குள் பாய்வோம். சின்ன அறையைப் போன்ற துளை. மேலே கட்டையடுக்கிய மறைப்பு. உள்ளே ஈரத்தரை. அட்டகாசம், என்றான் ஒபி. உள்ளே இறங்கிய வேகத்தில் அங்கங்கே அவனுக்கு சிராய்ப்புகள், என்றாலும் வேடிக்கையாய் அதை நினைத்தான். புதிதாய் உழுதுபோட்டாப் போல மண்வாசனை. குண்டுச்சத்தம் ஓயும் வரை உள்ளே குழந்தைகள் பூச்சியும் மண்புழுவும் தேடினார்கள். விரலால் அந்த ஈரமண்ணைப் பிசைந்தேன். நாம்தியின் பல், நாக்கு, குரல் என நினைவுகள் அலைந்தன…

* *
இக்போ குடிகள் சொன்னார்கள். காதுகேளாதோரே நமஸ்காரம். பரலோகம் செவி சாய்க்கா விட்டால், இகலோகம் நம்மை விசாரிக்கும்.
* *

எதுவும் ஸ்திரமில்லை, அதனாலேயே அதற்கு என ஒரு மதிப்பு. அற்பமான சமாச்சாரங்கள் என்றாலும் வாழ்க்கை அச்சுறுத்தி அவற்றை ஊதிப் பெரிசாக்கி பிரதானமாக்கி விடுகிறது… துணிபோன்ற சப்பாத்தியே ருசியாய் இருந்தது திடுதிப்பென்று அதைக்கூட எறிந்துவிட்டு நான் பதுங்குகுழிக்குள் ஒளிய வேண்டியிருக்கிறது. திரும்ப மேலேறி வருகையில் பக்கத்து ஆள் அவனோ அவன் குழந்தைகளோ அதைத் தின்றுகொண்டிருக்கலாம்.

நிறையப் பிள்ளைகள் ஓணான் பிடித்து வெறுதே திரிகிறார்கள், அவர்களுக்குப் படிப்பு கிடிப்பு சொல்லித் தந்தால் என்ன, என்றான் ஒபி. ”குண்டுவீச்சே அவர்களுக்கு சகஜமாப் போச்சே” என அவன் தலையை உதறிக் கொண்டான். நல்ல வேப்ப மரத்தடியில் குளுமையான இடம் ஒன்றைத் தேர்வு செய்தான். சிமின்ட் ஜாலிகளில் மரச்சட்டங்களை வைத்து உட்கார வசதி பண்ணிக் கொண்டோம். மரத்தில் தொங்கவிட்ட தட்டியே கரும்பலகை. நான் ஆங்கிலம் நடத்தினேன். ஒபி கணிதமும் சரித்திரமும். என் வகுப்பில் குசுகுசுவென்று பேச்சும் சிரிப்புமாய் இருந்த பிள்ளைகள் அவனிடம் சமத்தாகி விட்டார்கள். என்னவோ வசிய வசீகரம் அவனிடம் இருந்தது. கரிக்கட்டியால் அவன் பலகையில் கிறுக்கியபடி கலகலப்பாய்ப் பாடம் நடத்தினான். பிறகு வியர்வை முகத்தைத் துடைத்து கரியை வரி வரியாய் ஈஷிக்கொண்டான். படிப்பதையும் விளையாடுவதையும் சேர்த்தே அவன் புகட்டினான் போல. ஒருமுறை பிள்ளைகளை பெர்லின் மாநாட்டை நடித்துக் காட்டச் சொன்னான். ஆப்ரிக்காவைத் துண்டாடும் ஐரோப்பியர்களாக மாணவர்கள் உருமாறினார்கள். மலைகளையும் நதிகளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் எடுத்துக்கொண்டும் விட்டுக்கொடுத்தும் விளையாடினார்கள், மலையைக் கண்டார்களா, நதியைக் கண்டார்களா… எதுவும் தெரியாத பிள்ளைகள். ஒபி பிஸ்மார்க்காக நடித்தான். ”இளம் பயாஃப்ரன்களுக்கான எனது அன்பளிப்பு” என்றான் அவன் நக்கலாய்.

வேடிக்கைதான், அவனே ஒரு குழந்தை. எதிர்கால பயாஃப்ரன். நூத்துக் கிழவனாட்டம் பெரியமனுஷ பாவனை. சிரிப்பு வந்தது.. அவன் சிறு பிள்ளை என்றே பல சந்தர்ப்பங்களில் எனக்கே மறந்து போனது. ”எலேய் உன் பல்லுல கடிக்க முடியாதுன்னு நாந்தான் உனக்காக மாட்டுக்கறியைக் கடிச்சுச் சவைச்சு பின் திரும்ப உன் வாய்ல போடுவேன்…” நான் அவனைப் பகடியடிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ”அதெல்லாம் ஒண்ணும் ஞாபகம் இல்லை” என்றான் முகம்மாறி.

(அடுத்த பக்கத்தில்)
(நன்றி – இருவாட்சி பொங்கல் மலர்)

Series Navigation