நேற்று, இன்று, நாளை

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

ஏலங்குழலி


‘பாருடா… ‘இலக்கியத் தீவட்டி ‘ இதழ்லே என் கட்டுரை வந்திருக்குது பாரு, ‘ ரங்கசாமி அரவிந்தனுக்கு ஒரு மெல்லிய புத்தகத்தைப் பிரித்துக் காட்டினார்.

அரவிந்தன் ஒரு கையால் தட்டில் இருந்த இட்லியை மென்று கொண்டே ப்ரீத்தி கொடுத்த மின் கட்டண அட்டையை சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டான். ரங்கசாமி எரிச்சலுடன் பத்திரிகையை அவனது மூக்குக்கு நேரே நீட்டினார்.

‘என்னப்பா வந்திருக்குது… ? நீங்களேதான் சொல்லிறுங்களேன். ‘

‘சோம்பேறி…படிறா. ‘எங்கே அந்தத் தீ ? ‘ அப்படின்னு எளுதியிருக்கேன் பாரு. ‘

படிக்குமுன்பே அது என்ன மாதிரியான கட்டுரையாக இருக்கும் என்று அரவிந்தனுக்குப் புரிந்துவிட்டது. ‘இந்தக் காலத்து இளைஞர்கள் ஏன் இவ்வளவு அசிரத்தையாக/இலக்கற்றவர்களாக/வாழ்க்கையில் துடிப்பற்றவர்களாக இருக்கிறார்கள் ? என்ற ரீதியில் நான்கு பக்கத்திற்குப் பொழிந்து தள்ளியிருப்பார். இந்த ரகத்தில் இது மூன்றாவது கட்டுரை.

‘உங்க எழுத்துக்கு என்னப்பா ? நல்லா இருக்குது. ‘

‘போடா நீயும்… ‘நல்ல எழுத் ‘தாம் இல்ல ? பெரிசா கண்டுக்கிட்டான் எது நல்ல எளுத்துன்னிட்டு. ஆபீஸ் கெளம்பிற அவசரத்துலே ஒரு கையிலே இட்லியை மென்னுகிட்டு கட்டுரையைப் படிச்சா என்னா புரியும் ? உன்னை மாதிரி அலையிறவங்களுக்குத்தான் இத்தை எளுதினேன். என் எளுத்துக்கு வெளியிலே இருக்குற மரியாதை என் வீட்டுக்குள்ளேயே இல்லை. ஏந்தா இப்புடி எதிலேயும் பிடிப்பில்லாமே ‘காசு, காசு ‘ன்னு பேயா அலையறீங்களோ… ‘

இது கிட்டத்திட்ட ஒரு தினசரிப் புலம்பல் என்பதால் அரவிந்தன் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் டிபன் டப்பாவைப் பையில் திணித்துக் கொண்டு புறப்பட்டான். யமஹாவை உதைக்கும் பொழுது வாசலில் முறைத்துக் கொண்டு நின்ற அப்பாவைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

பாவம் அப்பா. வாழ்க்கையில் எத்தனையோ முறை அடிபட்டவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்து, எழுத்தின் மேல் இருந்த ஆசையால் ஊரில் உள்ள அத்தனை இலக்கியக் கூட்டத்திற்கும் சென்று அட்டெண்டென்ஸ் கொடுத்தவர். ஒரு சிறுபத்திரிகை பாக்கியில்லாமல் எழுதித் தள்ளியவர். ‘எழுதிச் சாதிக்காமல் வேலைக்குப் போக மாட்டேன் ‘ என்று பிடிவாதம் பிடித்தவர். முதல் குழந்தை பிறந்ததும் செலவைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் கடைசியில் கணக்கெழுத ஒப்புக் கொண்டவர். ஒட்டுமொத்தமாக எல்லோரிடமும் ‘தறுதலை ‘, ‘தண்டச்சோறு ‘ என்றெல்லாம் பெயர் வாங்கிய பிறகு, தன் முதல் சிறுகதை வெளிவந்தவுடன் பூரித்துப் போய் ‘பாருங்கடா… ‘ என்று வீதி வீதியாய் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு அலைந்தவர். இதோ…இப்போழுது சொந்தமாக ஒரு சிறிய, ஆனால் தீவிர ரசிகர் பட்டாளத்தையே கட்டி மேய்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்ட எழுத்தாளர்.

அப்பாவின் எழுத்து காரசாரமாக இருக்கும். அடுத்தவர்களை ‘பளா ‘ரென்று அறையும் வகையில் இருக்கும். ‘நீ எல்லாம் என்னடா பெரிய்ய்ய… ‘ என்று எடுத்த எடுப்பில் சீறும். பதிலுக்கு எதிராளியை ‘டாய்ய்ய்ய்…என்று எழுத வைக்கும். இதுதான் அவருடைய வெற்றி. அதிலும் தற்காலத்து நுனிநாக்கு ஆங்கிலம் பேசும், கணினி தட்டும் இளவட்டங்களைப் பார்த்தால் அவருக்குக் குஷி பிறந்துவிடும். அதற்கு அடுத்த வாரம் வரும் கட்டுரை அல்லது கதை அவர்களை நார் நாராய்க் கிழித்துத் தொங்கவிட்டுவிடும்.

வாசல் கேட்டைத் தாண்டியபோது அங்கு நின்றிருந்த கும்பல் அவனுக்கு ஆவேசமாகக் கை காட்டியது. அரவிந்தன் பதிலுக்குப் புன்னகையுடன் கையசைத்துவிட்டு வண்டியில் பறந்தான்.

அன்று இரவு வீட்டிற்கு வரும் பொழுது கையில் ‘மலைமதி ‘ இதழுடன் அப்பா வாசலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

‘என்னப்பா…உங்க கதை எதாவது வந்திருக்குதா ? ‘

‘இல்லடா…போட்டி அறிவிச்சிருக்காங்க. சமூக நாவலாம். இன்னும் மூணு மாசத்துக்குள்ளாற குடுத்துறணும். மொதப் பரிசு எவ்வளவு தெரியுமா ? ஐம்பதாயிரம் ரூபாய்! ‘

‘யம்மாடி…நீங்க கலந்துக்குங்களேன். ‘

‘நீ சொல்லி நான் செய்யணுமாக்கும். நானெல்லாம் பழம் தின்னு கொட்டை போட்ட ஆளு, அரவிந்து. நான் எல்லாம் பூந்தேன்னா மத்தவங்களாலே சமாளிக்க முடியாது. உங்களை மாதிரி பொட்டி தட்ற ஜாதி இல்லைப்பா நாங்கள்ளாம்…எளுதியே வாழ்நாளைக் கழிச்சவங்க. எங்க அனுபவம் வராது உங்க வயசு… ‘

அரவிந்தன் புன்னகைத்தான். உள்ளே நுழைந்த போது ப்ரீத்தி எதிர்ப்பட்டாள்.

‘சுந்தரேசன் ஃபோன் பண்ணியிருந்தாரு… ‘

‘தொடர்கதை விஷயமாவா ? அப்பாகிட்டே பேசினாரா ? ‘

‘ஆங்…பேசினாரு, பேசினாரு. அப்பா அவருகிட்டே பொட்டி தட்றவங்களைப் பத்திப் பேசி கதி கலக்கிட்டாரு. அடுத்த வாரத்துக்கான ரிஸர்ச் ஆர்ட்டிக்கிள் முடிஞ்சிருச்சான்னு கேக்க சொன்னாரு… ‘

ஃபோன் அடித்தது.

‘சுந்தரேசனாத்தான் இருக்கும், நீங்களே பேசிருங்களேன்… ‘

அரவிந்தன் தொலைபேசியைக் கையிலெடுத்துக்கொண்டு பால்கனிக்கு நடந்தான்.

‘…………………….. ? ‘

‘நாந்தான் அரவிந்தன் பேசறேன். என்ன விஷயம், சொல்லுங்க. ‘

‘………………………… ‘

‘ஐயோ, நீங்க வேறே…ஆதாரமெல்லாம் இருக்கு சார், இருக்கு. நாந்தான் நேரிலேயே போய்ப் பார்த்தேனே ?……………..ம், இருக்கட்டும். ஓவியத்தை மட்டும் மாத்தச் சொல்லிறாதீங்க………….மேற்கொண்டு மூணு எபிசோடு எழுதி முடிச்சிட்டேன். அனுப்பிறவா ?……………….இல்லைங்க, அது வேற பத்திரிகைக்கு. ‘ஆனந்த ஜனகன் ‘லேர்ந்து கேட்டிருக்காங்க…………………ஆமா சார். மாநாட்டுலே கலந்துக்கப் போறேன். ………….நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருக்கு. ஈமெயிலா வந்து குவியுது (சிரிப்பு) ஆபீசிலே கத்தறாங்க………..அப்ப சரி. வச்சிடறேன். ‘

அவன் ஹாலுக்குள் வந்த பொழுது அப்பா எதிர்ப்பட்டார்.

‘என்னா…சுந்தரேசனா ? எங்கிட்ட பேசமாட்டாரே அவுரெல்லாம் ? உங்களை மாதிரி பெரிய பெரிய எழுத்தாளருங்ககிட்ட மட்டுந்தான் பேசுவாரு…ஐம்பதாயிரம் ரூபாய் நாவல் போட்டி அறிவிச்சிட்டாரு. நீயும் எளுதத்தானே போறே ? ‘

‘இந்த முறை இல்லை. ‘குமுதினி ‘லே ஆராய்ச்சித் தொடர் எழுத ஒத்துகிட்டுருக்கேன். அதை முடிக்கணும். ஆபீஸ்லே ப்ராஜெக்ட் ஒண்ணு வருது… ‘

‘என்ன பொளப்போ, என்னமோ ? அந்தக் காலத்துலே நாங்கல்லாம் எளுத்தையே தவமா நெனைச்சு… ‘

‘… ‘அந்தத் தீயை ஏத்தி நெஞ்சுக்குள்ளே வெச்சிப் பாதுக்காத்தீங்க, இப்பல்லாம் பசங்க தறிகெட்டு அலையறோம் ‘ன்னு சொல்லுவீங்க. ‘

அப்பா முறைத்தார். ‘ நெசந்தானே அது ? ‘

‘எனக்குத் தோணலப்பா. அப்பல்லாம் ‘இலட்சியம், இலக்கு ‘ன்னு சொல்லிகிட்டு அலைஞ்சாங்க. அப்புடிச் சொல்லிக்கிட்டவங்கள்ள ரொம்பக் கொஞ்ச பேருதான் நிஜமாவே சாதிச்சாங்க. ‘நெஞ்சில் கனல், மனதில் புயல் ‘ன்னு பேச்சு அதிகமாயிருந்துச்சு. இப்ப அப்புடியில்லை. சும்மா பேசிக்கிட்டே இருந்தா வேலைக்கு ஆவாதுன்னு எல்லாருக்கும்- குறிப்பா இளைஞர்களுக்கு நல்லாப் புரிஞ்சு போச்சு. ‘மொதல்ல பொழைப்பைக் கவனிப்போம், வாழ்க்கைக்கித் தேவையான வசதியைப் பாத்துக்குவோம். தனிப்பட்ட மனுஷங்களோட வாழ்க்கைத் தரம் ஏறிச்சுன்னா, மொத்த சமூகமும் தன்னாலே முன்னேறிடும் ‘னு அவங்களுக்குப் புரிஞ்சு போச்சு. கை நெறைய சம்பாதிச்சு, மத்த விஷயங்களிலும் முன்னேறுறாங்க… ‘

அரவிந்தன் நிறுத்திவிட்டு, தொடர்ந்தான்.

‘அப்பா…உங்க தலைமுறைகிட்டே இருந்த துடிப்பும் ஆர்வமும் எங்கேயும் மறைஞ்சு போயிறலை. இன்னமும் இருக்கு. எப்பவும் இருக்கும். ஒவ்வொரு தலைமுறைக்காரங்களும் அப்பப்ப சொல்லிக்கிறதுதான் இது. ஆனா அது நெஜமில்லை. உண்மையைச் சொல்லுங்க–உங்க அப்பா உங்களைப் பாத்து இப்புடிச் சொன்னதில்லை ? நீங்க ஆவேசமா அவருக்குப் பதில் சொல்லலை ? ‘

ரங்கசாமி அவனை உற்றுப் பார்த்தார். ஒரு உறுமல் உறுமிவிட்டு ‘சட் ‘ டென்று தன்னறைக்குள்மறைந்தார்.

——————————–

elankhuzhali@yahoo.com

Series Navigation