நெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

கே ஆர் மணி


‘அவன் பத்தாவது பாஸ் பண்ணலை, நான் பாஸ் பண்ணிட்டேன். அதுனாலதான் அவன் கம்பெனி
ஆரம்பிச்சான். நான் பாத்துண்ட்டேன்’ அப்பா பழைய நிறுவன சிவப்பு யூனியனில் சேரவில்லையென ஒரு பொய்
சொல்லியிருந்தால் அரசாங்க ஊழியராகமாறியிருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. வேலை போனது.
பத்தாவது பெயிலான நண்பனோட நிறுவனத்தை அவர் ஒற்றையாளாய் தூக்கி நிறுத்தினார்.

பத்தாவது பெயில், கல்யாணமாகி கவுண்டரம்மா கொண்டுவந்த காசில் முதலீடு, இதைத்தவிர அப்பா –
இதுதான் அந்த கார்பிகேபிளின் மூலதனம். அப்பா நண்பரின் வியாபாரத்தை முழுக்க முழுக்க பார்த்துக்கொண்டார்.
அப்பா கிட்டத்தட்ட அந்த கம்பெனியின் CEO. அதற்கப்புறம் அவர் ரோலிங் ஸ்டோனாகவேயில்லை. திடமான கல்லாக
ராமகவுண்டர் பின்னாடியே சாகும்வரையில் உழைத்தார். பத்துபைசா டாலியாகாததிலிருந்து, தொழிலாளர்
பிரச்சனையிலிருந்து, அரசாங்க ஆணை முயற்சியிலிருந்து எல்லாம் அப்பாமயம். அவருக்கு அதுதான் முதல்
குடும்பம் ஆகியது. அண்ணா பொறியியலில் எந்த குரூப் எடுக்கவேண்டும் என்பதுகூட ராமகவுண்டரை கேட்டுத்தான்
முடிவாகியது. அப்பா திடிரென இறந்தபின்புதான் அந்த நிறுவனத்திற்கு அவரது வெற்றிடமே தெரிந்தது.
அது நிரப்பமுடியாத வெற்றிடமாகப்பட்டது. அந்த நிறுவனமும் எங்களது குடும்பத்தை ஓரளவு கடைத்தேற்றியது.

உலகப்பொருளாதாரம் அடிவேர்வரை அரிக்காத சுயநலமும் மனிதமும் நிரம்பிய காலம். அப்புறம் அந்தகுடும்பம்
படித்த எந்த நடுத்தரகுடும்பத்திற்கும் ஏற்படும் மாற்றங்களை சந்தித்தது. பெருநகர் பெயர்கை, குழந்தைகள்
மேற்படிப்பு என, முன்னேற்றகாற்று என கொஞ்சம் வசதிபார்த்தது. அண்ணாவின் கல்யாணத்திற்கும் அம்மா
அங்குதான் முதல் பத்திரிக்கை வைக்கவேண்டுமென சொன்னாள். வளர்ந்த குடும்பத்தை பார்த்து அவர்களும்
சந்தோசப்பட்டார்கள். அம்மாவும், கவுண்டர்ம்மாவும் கண்ணீர் பரிமாறிக்கொண்டார்கள். அண்ணா இறந்த அப்பாவிற்கும்
சேர்த்து பவ்யமாய் நின்றான். தனது குடும்பத்திற்கு நல்ல வழி காட்டியவர்கள், கஸ்ட ஜூவனத்திலிருந்தபோது
தூக்கிவிட்டவர்கள் என்கிற எண்ணம் அம்மாவின் இரத்தத்தில் எப்போதும் உண்டு.

“என்ன பெரிசா குடுத்துட்டார். கணக்குப்போட்டு பார்த்தா.. அதிகமா எக்ஸ்ப்ள்ட்டேசந்தான்.
மாச மாசம் பிஎப் போட்டாலே இதற்கு மேல வந்திருக்கணும். ஒரு கணக்கு கிடையாது. கேட்டா
அன்னதாதாங்கிற .. நீ ஒரு பூல்.. படிச்சுப்பாரு..” யாரோ சொன்னார்கள்.

அம்மா அதற்கு குப்பைத்தொட்டி காகிதத்திற்கு கொடுக்கிற மரியாதை கூட கொடுக்கமாட்டாள்.
ரொம்ப நாளாய் நானும் என் அப்பாவின் மீதான உழைப்பு உறிஞ்சலாகத்தான் நினைத்தேன். அந்த எண்ணம்
முதிரா சிவப்பு சிந்தனைகளின் வாந்தியை சாப்பிட்டு ஏப்பம் விட்ட எண்ணம்தான் என்பது ரொம்ப
நாளைக்குப்பிறகுதான் எனக்கே தெரிந்தது.

பெரும்பாலும் சமூகம் சில தளங்களில் உணர்வுப்பூர்வமான உலகம். உறவுப்பூர்வமான உலகம் என்றுதான்
இயங்குவதாகப்படுகிறது. வெகு அரிதாகவே அறிவுப்பூர்வமான இயக்கத்திற்கு ஆட்படுத்திக்கொள்கிறதோ
என எண்ணத்தோணுகிறது. பெரும்பாலான நேரங்களில் உணர்ச்சிக்கும், அறிவுக்கும் அடிப்படையாய்
பொதிப்புத்தி அடித்தளமிடுகிறது. இரண்டுமே பொதிப்புத்தி தாண்டித்தான் மாறிக்கொண்டேயிருக்கிற
உண்மைப்புள்ளியை நோக்கி தங்களது பாதையில் பயணிக்கின்றன. பொதிப்புத்தி மனித தத்துவஞானத்தின்
பலம் மற்றும் பலவீனமும்கூட.

அதுசரி, பொதிப்புத்தி என்றால் என்ன ?

தவறாமல், கலையாமல், எல்லாயிடங்களிலும் நின்று வரவேற்று, மாறாமல் அரவணைக்கும் கருத்தியல்தான்
பொதுப்புத்திதான். நம்மையறியாமல் நம் பாற்கடல் மீது படுத்துறங்கும் ஆதிசேஸன் போல நம் பொதுப்புத்தி.
ஆதிசேசன் என்று யாராவது வெளியே பாய்போட்டு படுத்திருப்பார்களாயென்ன, நமது உயிர்சக்தியில் எழுதப்பட்டிருக்கும்
நினைவுச்சுருள்களாய் பொதுப்புத்தி. முன் அநுமானமும், முன் முடிவும் கொண்டு எழுப்பப்பட்ட இந்த பொதிப்புத்தி
ஆழப்பதிந்தது. கற்பிக்கப்பட்டதும், கற்பிக்கப்பட்டதிலிருந்து கற்றுக்கொண்டதும், அதிலிருந்து தானே
அறிவுச்செல்களில் செதுக்கிக்கொண்டதும், அநுபவங்களிலிருந்து திருத்திக்கொண்டதுமென பொதுப்புத்தி
கடற்கரை மணல் அலையாய் நம்மில் அமிழ்ந்து கிடக்கிறது. இவைகள் இப்படித்தான், அவைகள் அப்படித்தான்
என்று காலம்காலமாய் கற்பிக்கப்பட்ட பொதுப்புத்தி.

அந்த பெரிய பங்களாவும், தோட்டமும் சின்னப்பையனான என்னை பொங்கிய கவிதை எழுதவைத்திருக்க
வேண்டும். ஏன் இந்த வர்க்க வித்தியாசம் என்று சிந்தித்திருக்கவேண்டும். சிந்திக்கவில்லை. நான் கவிஞானகவோ,
சிந்தனையாளனாகவோ மாறவேயில்லை. பொதிப்புத்தி அதெல்லாம் அப்படித்தானிருக்கும் என்று சொன்னது.
உலகம் ஏதோவொருவகையில் சமத்துவமின்மையால்தான் வாழ்கிறது, அப்படித்தானிருக்கமுடியும் என்று
சொல்லிக்கொடுக்கப்பட்ட பொதுப்புத்தி. (போன ஜன்மத்தில செஞ்ச புண்ணியமுல்ல ? )

வேலையும், படிப்பும் வேறு வேறு தளங்களுக்கு கொண்டுசென்றன. உணவு, உடை, இருப்பிடம்
மட்டுமே பற்றிய கவலை கொண்ட நடுத்தர உலகம் அதில் வேறெந்த சிந்தனைக்கும் இடமில்லை. தான் தனது
என்கிற பொதிகளோடு அந்த மத்திமர் கூட்டம் விழுமியச்சிலுவைகளை எப்போதும் தாங்கிக்கொண்டே
தவழ்ந்துபோய்க்கொண்டிருக்கிறது. இவைகள் இப்படித்தான், அவைகள் அப்படித்தான் என்று காலம்காலமாய்
கற்பிக்கப்பட்ட பொதுப்புத்தி. அவைகளின் சுமைகளை அக்குளில் இடுக்கிக்கொண்டும் இவர்களது
தலைமுறைப்பயணங்கள் போய்க்கொண்டேயிருக்கிறது. வளர்ந்து, கெட்டிப்பட்டுக்கொண்டே
போயிக்கொண்டிருக்கிறது பொதிப்புத்தியின் சுமை.

பொதுப்புத்தி சரியா, தவறா ? தவறென்று சொல்லத்தூண்டுகிறது பொதுப்படை பொதுப்புத்தி.
அதன் கணம் யாராவது நம்மீது பளீரென அறையும்போது ஓங்கி உலுக்கும்போதுதான் நிகழ்கிறது.
அப்படிப்பட்ட காரியத்தை எனக்கு செய்தது கோபு கனபாடிகளும், அன்பாதவனின் 3% எச்சில் என்கிற தலித் கவிதையும்.

முதலில் கோபு கனபாடிகள்:
கோபு கனபாடிகள் அலையஸ் கோபு வாத்தியார். உங்கள் பொதுப்புத்திக்கு எட்டாத உருவம். வாத்தியார் என்றால்
உங்கள் உருவம் என்னவாகயிருக்கும் ? அழுக்கு மடிசஞ்சி வேட்டி, அவர் வீட்டில் ஏழ்மையில் வதங்கிபோன
மாமியும் அவர்களது பெண்ணும், தட்டில் விழும் காசில் வாழும் வறண்ட வாழ்க்கையும். அவர்கள் வறுமையாயிருந்து
நாம் அவர்களுக்கு உதவுவதால் நாமும் கொஞ்சம் கர்ணணாக மாறிவிட்ட தற்காலிக இன்பத்திற்காக
படைக்கப்பட்டவர்கள் போலவும், அவர்கள் எளிமையாகவும், வறுமையாகவும் இருப்பதனால் மட்டுமே சநாதனதர்மம்
பாதுகாக்கப்பட்டது போலவும் ஒரு சொல்லமுடியாத நிம்மதி பெருமூச்சு எழும்புகிறது. வாத்தியார் ஒரு மொபேட்
வாங்கினால் அவையெல்லாம் நாம் பெற்றோர்களுக்கான அமாவாசை மற்றும் திதிக்கான பாக்கெட் மணியிலிருந்துதான்
அவர் கொள்ளையடித்திருக்க வேண்டும் என்கிற விளக்க முடியாத கோபம் எழுந்து , ‘இந்தக்காலத்தில எல்லாம்
மாறிடுத்து, என்னத்த சொல்ல..’ என்கிற புலம்பலையோ, புலம்புவதை ஆதரவாய் நோக்கவோ செய்கிறது.

அதுதான் என் நண்பன் சீனுவுக்கும் இருந்திருக்கலாம். அக்கா சீமந்தத்திற்கு பேசிய தொகையைவிட ஒரு முன்னூறு ரூபாய்
குறைத்தே வைத்தான். கோபுவாத்தியார் அவனது பொதுப்புத்தியின் வரையறைக்கு கட்டுப்படாதவராயிருந்தார்.
விசேசம் முடிந்து தனியாக அவனை கூப்பிட்டு அவர் சொன்னதுதான் எனக்கும், அவனுக்கு சேர்த்தே
கொடுத்த அறை. எங்களின் பொதுப்புத்திக்கு விழுந்த செருப்பு அடி. அவரின் பேச்சில் கோபமில்லை. இரங்கலில்லை.
அசிங்கமில்லை. ஆனால் வார்த்தைகள் காலம் காலமாக எழுப்பப்பட்ட எங்களின் பொதுப்புத்தியை
செருப்பால் அடித்தது. ” நீ எங்க பால் வாங்கிறயோ நானும் அங்கதான் வாங்கறேன். உன் பேங்கில
வருசா வருசம் போனஸ¤ம், இன்க்ரிமெண்டும் கொடுக்காறாலோல்லையோ.. எந்தமாசமாவது வேலை
வாங்கிட்டு சொன்னபைசாவுக்கு குறைச்சா கொடுப்பா..” இப்படி மெதுவாக வெத்திலை போட்டுக்கொண்டே
பேசினார். எங்களின் முதுகில் சுண்ணாம்பு எரிந்தது. அன்று எனக்கும் என் பொதுப்புத்தியின்
வேர் எரியவில்லையெனினும் பட்டைகளும், இலைகளும் கருகத்தான் செய்தன.

எல்லா தொழில் செய்பவர்களும் முன்னேறும்போது வாழ்க்கை வளத்தை அநுபவிக்கும்போது ஏன்
அவர் மட்டும் அநுபவிக்ககூடாது. கவிதைத்தொழிலோ, ஆன்மிக சேவையோ, தொழிலோ செய்பவர்கள் எளிமைக்கும்,
வறுமைக்கும் மட்டும்தான் வாக்கப்பட்டாகவேண்டும் என்று என் புத்தியின் செல்களில் எப்போது எழுதப்பட்டது.

மஜாஜ் பார்லரை விட்டு வெளியே வந்த தாய்லாந்து பெண் எல்லாரைப்போலவும் சகஜமாகவும் வளப்பமாகவும்தானிருந்தாள்.
(அட.. ஏன் இருக்கக்கூடாது ?)

‘தெருக்கூட்றவன் கூட பாரின்ல கார்ல போறான்யா’ என்ற சொல்லுக்கு வெளியே காட்டாமல் இன்னும் வியப்பு சிறகு
ஏன் விரிகிறது.

‘என்னா மினுக்கு, என்னம்மாடி டிரஸ் பண்றா. நான் காம்வாலியா(வேலைக்காரி) அவளான்னு
தெரியலையே..’ என்கிற விமர்சன சொற்கள் ஏன் தவறென்று உரைப்பதேயில்லை.

‘ஆயாவை. பாரு. அவ குடையும். கொண்டையும்.. வாங்கிற காசில பாதி உடுப்புக்கே அழிச்சிருவா
போலல்லயிருக்கு..’ என்று எழுகிற வார்த்தைகளின் அடித்தளம் எது.

‘மராத்தி பசங்க தத்தி.. மல்லு பசங்கள நம்பிராத.. சிந்தி சோக்ரி(பெண்ணு) தூக்கத்திலகூட நம்பிடாத..
நம்மளுக்கெல்லாம் பிசினஸ் வராதுப்பா.. அதெல்லாம் மார்வாடி, குஜராத்திக்குத்தான் ..’

‘என்ன சார். நீங்க CEO.. இந்தக்கடையில நின்னுட்டே சாப்பிடுறீங்க..ஸ்டாப் யாராவது பாத்திடப்போறாங்க சார்..’
என்ற அன்பான அறிவுறுத்தலுக்குப்பின்னால் பொதுப்புத்தியின் கனத்தை உணர்கிறேன்.

உலகம் அதற்கான பொதுப்புத்தியோடும், முன் அநுமானங்களோடும்தான் முன்னேறுகிறது.

இப்போது அன்பாதவனுக்கு,
கவிதை தொகுப்பு: நெருப்பில் காய்ச்சிய பறை
கவிதை : மூன்று சதவீத எச்சில் [பக்:49]

அதுபோலத்தான் அன்பாதவனின் எச்சில் கவிதையும் கோபு வாத்தியாரின் கோபம் போல. ஆனால்
இது சுண்ணாம்பல்ல – சுனாமி. எந்த கூச்ச நாச்சமற்ற வருகிற கோபத்தை வடிகாலற்று பீச்சுகிறது.
எழுத்துக்கும் உணர்ச்சிக்கும் எந்த இடைவெளியும் தேவையில்ல என்று தலித் எழுத்து கொடுத்த பலம்.
தான் கஸ்டப்பட்டு எந்த சமுதாய பின்புல உதவியுமின்றி உயர்ந்த பின்னரும் தனது பிம்பம் மாறாது,
தனது உழைப்பிற்கெல்லாம் தனக்கு கிடைத்த இடஓதுக்கிடு மட்டுமே காரணமென்கிறபோது வருகிற
தார்மீக கோபமும், இனி நான் எந்த விதத்திலும் உனது குடும்பத்திற்கு இளைத்தவனில்லை என்கிற
கொந்தளிப்பும் கவிதையின் மைய எரிகோளங்கள்.

“வணக்கம்சார்
என் பெரியபுள்ள வந்துருக்கான்
வணக்கம் சொல்லுப்பா
சார்தான் எங்க ஆபீசரு”

நம் குடும்பத்தின் அன்னதாதா என்கிற பாவனையில்தான் என் அம்மா, அப்பாவின் முதலாளி வீட்டில் நிற்பாள்.
இந்த கவிதையின் வேலைக்காரி அம்மாவும் அப்படித்தான் நின்றிருக்க வேண்டும்.

“வணக்கம் சார்”
“நமஸ்காரம் நமஸ்காரம்
எங்க ஓர்க் பண்றேள் ”

“பேங்க்ல சார்”
“எந்த பேங்க்” …..
“என்னவா இருக்கேள்
அட்டெண்டரா? கிளார்க்கா ?

ஆதிக்க மேட்டுக்குடிக்கே உரிய கர்வமான ஆங்கிலத்தில் தனது பதிலை வீசுகிறது கவிஞனின் மொழி. இது வெறும்
ஆங்கில அறிவுக்கான பதிலுக்கான நேரமல்ல. அடிக்கப்படுவது – ஒரு நூறு ஆண்டுகளாய் தங்களுக்கு மறுக்கப்பட்ட
மெக்காலே ஆங்கில அறிவு. தன்னால் மட்டுமே முடியுமென்கிற பொதுப்புத்தி. தங்களது வித்திலும், விந்திலும்
ஏதோ கோடானுகோடி வருடங்களுக்குமுன்னாலே அறிவணுக்கள் அழுத்தப்பட்டு தேவலோகத்திலிருந்து
அனுப்பப்பட்டதாய் நினைக்கிற பொதுப்புத்தி.

I am an officer
working in our Foreign Exchange
Department. Bombay Main office.

“ஓ! அப்டியா.. பேஸ்..பேஸ்..
ஒனக்கு ஒரு பிரதர் உண்டில்லையோ ?”

Yes Sir, He is an Engineer in IISE, Bangalore
Moreover, He is a film cretor

பரவாயில்ல ராதா பெருக்கிற வேல பாத்துண்டே
ஒம் புள்ளங்களுக்கு இவ்ளோ பெரிய வேல வாங்கி
குடுத்துட்டே ஹாங்.. உங்களுக்கென்ன
உங்காளுக்கெல்லாம்தான் ரிசர்வேசன் இருக்குதே.
எங்களாவாதான் இப்போ பம்பே, டெல்லி, அமெரிக்கான்னு
போயிட்டு ரொம்ப கஸ்டப்படறா?

எல்லாம் உங்களமாதிரி
பெரியவங்க ஆசிர்வாதம் சார்

கைகூப்பி அம்மா வணங்க
மூன்று சதவீதத்தின்
முழு எச்சிலும் முகத்தில் வழிய

மவுனமாய் நான்…

++++

இந்த கவிதையின் எச்சில் – பொதுப்புத்தி. சாதியும், சமயமும், மநுவும், வர்க்கமும் சொல்லிய
எதிர்வினையற்ற பொதிப்புத்தி.

அதெப்படி ஒரு வேலைக்காரியின் பையன் பேங்க் ஆபீசராகலாம். எல்லாம் கோட்டா
செய்கிற வேலைதான் என்கிற நமைச்சல். இப்படி போயிக்கொண்டிருக்க பட்சத்தில் தங்களது
வாரிசுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்கிற பயம். வேறெங்கெல்லாம் புலம் பெயர வேண்டுமோ
என்கிற தவிப்பு. தங்களது காலம் காலமான வசதிப்போர்வை உலுக்கப்பட்டதில் (Comfort zone) வந்த விதிர்ப்பு.

இதெல்லாவற்றிற்கும் மையம் பொதுப்புத்தி. வேலைக்காரியின் பிள்ளை அவனுக்கு தகுந்த வீக்கத்திற்கு போல,
ஏதோ ஒரு ஆபிசின் அட்டெண்டராகவோ, கிளார்க்காகவோ, பியூனாக போயிருந்தால் அவன் சுகினோ பவந்து என்று
சொல்லப்பட்டு திருநீரிட்டு வாழ்த்தப்பட்டிருக்கலாம். அது பொதுப்புத்தியின் வரையறைகளை அவ்வளவாக பாதித்திருக்காது.

ஒரு தலைமுறையில் இவ்வளவு உயரமா.. ஒரு குடும்பத்திலிருந்து வங்கி அதிகாரி, பொறியாளர், திரைப்பட நுழைவு எல்லாம்.
3 சதவீதத்தின் மகன்களும் பிரம்மாண்டமாய் உயர்ந்திருக்கலாம். ஆனாலும் இன்னொரு குடும்பம் உயர்வது, தன் கண்முன்னே
தங்களிடம் வேலைபார்த்த குடும்பம் தளைத்து உயர்வது என்கிற குமைச்சல் சிந்தனை. அப்பட்டமாய் அடித்தட்டு ஜாதி
இவ்வளவு உயரிய வாய்ப்புகளை இடஓதுக்கிட்டால் மட்டுமே பெற முடியும் என்கிற பொதுப்புத்தி.

இரு அம்மாக்களின் பார்வையிலும் போன நூற்றாண்டின் தங்களுக்கு படியளந்தவர்கள் மீதான
நிலப்புரப்பத்துவ பாசம், அன்பு, பணிவு. பையன்களின் கோணத்தின் சாதி, வர்க்க வித்தியாசம்.
வர்க்கங்கள் இன்றில்லாவிடில் என்றாவது சமன் செய்யப்படலாம் தனிப்பட்ட முறையிலாவது.
ஆனால், சாதி அதன் கோடுகளை அழிப்பதுயார் ? அது நம் பொதிப்புத்தியில் எழுதிய
கிரந்தங்களை, கிறுக்கல்களை அழிப்பது எப்படி ? எப்படி பொதிப்புத்தியை மாற்றுவது.
கேள்வி எளிது. பதில் ஓற்றைத்தன்மை கொண்டதல்ல. சுருக்கமாக, அவசரமான விடை
வேண்டுமெனில் இப்படிச்சொல்லலாம். பொதிப்புத்தி மாறத்தேவை – கொஞ்சம் பகுத்தறிவு கைத்தடியும்,
நேர்மறையான அறிவியல் இயக்கமும்.

அன்பாதவனின் கவிதைகள் கைத்தடிகள். பீமனின் கதாயுதங்கள். தாழ்வுணர்ச்சி வராமல் எப்போதும்
தான் அணிந்து கொள்கிற கவசங்கள்.

+++++++++++++++++++++

இங்கிருந்து எங்கே ?

கவிதை புத்தகம், கொஞ்சம் களப்பணி, யாருக்காயினும் குழுத்தொப்பியின்றி தமிழ் உதவி, வந்த
கொஞ்சநாட்களில் மும்பாய் சிறுகதைகள் தொகுதி, அணி என்கிற சிறுபத்திரிக்கை, மற்றவரின்
புத்தகவெளியீடுகளுக்காக கூப்பிடாமலே தனது சேவையை வழங்குதல், தனிமை கவிந்த அறை என்ற
தொகுப்பு, பிரபஞ்சத்தின் ஓவ்வொரு விநாடியையும் கவிதையாக்கத்துடிக்கும் துடிப்பு, ஹைபூன் கவிதையில்
கொஞ்சம் கைநனைப்பு – குட், இவையெல்லாம் நல்ல களக்கவிஞரின் பலம்.

ஆனால் அன்பாதவன் – எழுத்துக்களெல்லாம் தாண்டி செயலுக்கு புறப்படத்தயாராகும் களப்போராளியாகவே
தெரிகிறார். எல்லாம் கொட்டியாயிற்று, துப்பியாயிற்று வலியெல்லாவற்றையும் சொல்லியாயிற்று. இனியென்ன
என்கிற கேள்வி ஒரு கலைஞன் முன்னால் எழுந்து நிற்கும் தருணம்தான் அவனை அவனே சுயபரிசோதனை
செய்துகொள்ளும் வலி நிறைந்த வேளை.

கவிஞானக வாழ்வதென்பது கிட்டத்தட்ட ரிஸிகள் போன்ற வாழ்க்கையது. உள்ளுணர்வுக்காகவும், அந்த கணநேர
சிலிரிடலுக்காவுமே அவனது வாழ்க்கை போயிக்கொண்டோயிருக்கவேண்டும். வார்த்தைகளுக்கான வாழ்க்கை அது.
ஹ¤ம்..அதெல்லாம் அந்தகாலம். இப்போதெல்லாம் எல்லாராக்கும் அது சாத்தியப்படுவதுமில்லை. ரயிலில் ஏறி
இறங்குவதற்குள், குக்கரின் மூன்று விசிலடித்து முடிவதற்குள், வெளியே போன இல்லத்துணை வந்துவிடுவதற்குள்,
கழிப்பறையில் கால் நனைத்து முடிவதற்குள், விளம்பர நேரம் முடிவதற்கு முன், அலுவலக மத்தியான சாப்பாடு
இடைவெளியில், மற்ற சக எழுத்தாளன் அடுத்த புத்தகம் போட்டுவிடுவதற்குள், செத்த தலைவன் சாம்பலாகுமுன்,
தலைவரின் பிறந்த நாளுக்குமுன், அவர் தேதிகிடைத்ததை அநுசரித்து, என வேகவேகமாய் பாஸ்ட்புட் கவிதை
சமைக்கவேண்டியிருக்கிறது.

இந்தநிலையில் புதிதாய் படிக்க, இருக்கிற நிலையை உடைத்து புதிய சந்தையை உருவாக்குதல், வேற்றிலக்கியத்தின்
தடங்களை தமிழில் முயற்சித்துப்பார்ப்பது, என்பவை பலன் தெரியாமல் செய்யும் மெனக்கெடு. தோல்விக்கான
சாத்தியக்கூறுகள் அதிகம். எது தற்போதய போதையோ(Trend) அதை வித்துவிட்டு போகமால், எத்தனைபேரால்
புதிதாய் எவ்வளவுதான் எழுதிவிடமுடியும். ஆனால் அந்த முயற்சிகளில்தான் எந்த கலையின் விளிம்புகளும் விரிகின்றன.
அதுவே செத்தகவிதையின் மெத்தனத்தை கிழிக்க உதவும்.

கவிதை ஒரு கடவுச்சீட்டாய் கொண்டு அதற்கான அரசியல்தளங்களையோ சினிமாவையோ நோக்கி முன்னேறுவதே
இன்றைய நிறைய கவிஞர்களின் Carrier Optionஆக படுகிறது. அதில் தவறென்றுமில்லை. அதுவும் வளர்ந்துவரும்
அரசியல் சந்தையில் தலித்துக்களுக்கான அரிய அரசியல் வாய்ப்புகள். 90’களின் இறுதியில் கிளம்பிய டாட்காம் சந்தையைப்போல.
எல்லா தேசிய கட்சிகளுக்கும் அறிவார்ந்த, தலித்தலைவர்கள் மக்கள் முன்னுறுத்த தேவைப்படுவார்கள். அதுபோக
தலித்துக்களுக்கான தனிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் யோசிக்க, அறிக்கை தயாரிக்க, மீடியாக்களுடன் பேச,
அறிவுவாதம் செய்ய, கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல என அறிவார்ந்த மூளை அவசியமாகிறது.
அன்பாதவனை கபளீகரம் செய்துகொள்ள யாருக்கு கொடுத்துவைத்திருக்கிறதோ ? அவரது அப்பா, மாமா, தாத்தா
யாரும் இப்போது அமைச்சரவையில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு ஹாட் பெட்.

தலித்தின் வாழ்வனுபவங்கள் நிறைய காலத்தால் செய்த வடு. நினைக்க நினைக்க அதிர்ச்சி கொடுப்பவை. படிப்பு,
பதவி, பணம், அரசியல் பங்கீடு எல்லாம் கிடைத்தாலும் மறையாத வடு. சிலதலைமுறைகள் பிடிக்கலாம் அதன்
வடுக்கள் அழிய. நட்புடன் தோள்போடும் கைகளை கூட வேகவேகமாய் தட்டி விட்டு, தனக்குள்ளே அலையும்
தாழ்வுமனப்பான்மை – அது அழிவது உள்ளிருந்து எழும் ஆன்மபலத்தாலும், சாதி கடந்து மாபெரும் மானுட குறிக்கோளுக்காக
அவர்களை சமுக தேசிய நீரோட்டத்தில் இணைப்பதன்மூலமே சாத்தியமாகலாம். அந்த அறிவியக்கமே நேர்மறையான
அணுகுமுறையாகயிருக்கமுடியும்.

“தலித் சொல்லின் பகட்டாரவாரம், அதனுள்ளிருக்கும் உண்மையான சோகத்தை, கோபத்தை, போராட்டத்தை
தின்று விடுமோ என்று அஞ்சத்தோன்றுகிறது ” – இந்திரனின் முன்னுரை. அதானாலென்ன, சமய சடங்குகளும், பக்தியும்
ஆன்மீகத்தின் பகட்டாரவார முதல்படிகள். அதுவழியே ஏறி அதனை கடந்தவர்களுக்கு ஆன்மீகப்பிரபஞ்சம்தான் வாழ்தளம். பிறவிப்பயன்.
அடுத்தகட்டம். அதுபோல தலித் அலையின் எண் 1 முடிந்து அடுத்ததளத்திற்கு அறிவியக்கமாய் செல்ல வாழ்த்துக்கள் !

நன்றி : யுகமாயினி – நவம்பர் – 2008


mani@techopt.com

Series Navigation