நூல் அறிமுகம் குரலற்றவனின் குரல்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

ஆ. மணவழகன்



கதைச்சொல்லி பரம்பரை நம்முடையது. தாத்தா-பாட்டிகளின் வாயிலாக, நாம் நம் முன்னோர்களின் வரலாறுகளைக் கதைகளாக அறிந்தோம். குறைந்தபட்சம் அவரவர் பரம்பரை பெருமைகளையாவது கதைகளாக நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். அடுத்த தலைமுறைக்கு இது வாய்க்குமோ என்னவோ! நமக்கு ஓரளவிற்கு வாய்த்திருந்தது. ஆனால், ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தாத்தாவோ பாட்டியோ தன் பேரப்பிள்ளைகளுக்கு, தான் சாதி ரீதியாக அனுபவித்த கொடுமைகளைக் கதைகளாகவேனும் சொல்லியிருப்பார்களா? இது நkfமக்கு மூத்த தலைமுறை வரையிலாக தொக்கி நின்ற கேள்வி. துன்பத்தைக் கதைகளாகக்கூட வெளிப்படுத்த முடியாத சூழலைத்தான் அற்றைச்சமூகம் அவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆயினும், தற்போது பெருகி வருகிற தலித்திய படைப்புகளும், சிந்தனைகளும் அன்றைய தாத்தாக்களின் நிலை இன்றைய பேரர்களுக்கு இல்லை என்பதை ஓரளவிற்கு உணர்த்துகின்றன.
கேள்வி அனுபவத்திலிருந்து எழுதுகிறேன் என்றில்லாமல், பட்ட பாடத்திலிருந்து படைப்புகள் உருவாகின்றன என்ற தலித்திய எழுத்தாளர்களின் இன்றைக்குமான வாக்குமூலங்கள் நாகரிக சமூகத்தின்(!) முகத்தில் உமிழ்வதாகத்தான் இருக்கிறது. பட்டனுபவம் நல்லவற்றிற்கு இருக்கலாம், சமூக அவலங்களுக்கு இருக்கக்கூடாது. ஆனாலும், ஒடுக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகக்கூட பேசப்பட முடியாத தங்கள் முன்னோர்களின் அவலங்களை, நிகழ்கால நடப்புகளை, பதிவுகளாக்கி படைப்புகளாகத் தரும் தற்காலச் சூழல் தலித்திய மdudறுமலர்ச்சியாகவே தோன்றுகிறது.
தலித்தியம் சார்ந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளன. தலித்திய ஆய்வுகளும் தம் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளன. என்.டி.ராஜ்குமார், அழகிய பெரியவன், விழி.ப. இதயவேந்தன், ரவிக்குமார், சிவகாமி போன்ற பலர் தங்கள் படைப்புகளில் தலித்தியத்தை ஆழமாகவே பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், தலித்திய படைப்புகள் ஏதேனும் ஒரு பொருண்மையில் தொகுப்பாக வெளிவந்ததாக அறியப்படவில்லை. குறிப்பாக சிறுகதைகள். இச்சூழலில், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சிறந்த தலித்திய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார் யாழினி முனுசாமி. ‘குரலற்றவனின் குரல்’ தேவையான, வரவேற்கத்தக்க சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 31 சிறுகதைகள் 31 எழுத்தாளர்களால் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டு, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. கவிதைகளையோ சிறுகதைகளையோ தொகுப்பவர்கள் தங்களுகென்று ஓர் அரசியலைக் கொண்டிருப்பர். ஆனால், ‘சிறந்த தலித்திய சிறுகதைகள்’ என்ற அரசியலை மட்டுமே கையாண்டு இத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர். படைப்பாளர்களுள் பலரை முன்பின் அறியாவிட்டாலும், கதைகளின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொகுக்கப்பட்டிருப்பது தொகுப்பின் பலம். தமிழக எழுத்தாளர்கள் மட்டுமன்றி, இலங்கை, டென்மார்க், மலேசியா, ஜெர்மனி, மும்பை என நாட்டின், உலகின் பல பகுதிகளிலிருந்தும் இயங்கும் எழுத்தாளர்களின் தலித்தியம் சார்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தொகுப்பின் பரந்த நோக்கினைக் காட்டுகிறது. கதைகளைப் படிக்கும்போது, உலகெங்கிலும் எது இருக்கிறதோ இல்லையோ சாதியக் கொடுமை என்ற அவலம் இருப்பதை வேதனையோடு உணர முடிகிறது.
மேல்நிலையாக்கத்தால் தன் அடையாளத்தை இழந்து உருமாறிப்போன சிறுதெய்வங்கள் பற்றிய பதிவை ‘அடையாளம்’ சிறுகதை காட்டுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மேல்நிலையாக்கம் என்பது தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினமும் சந்தித்த/சந்திக்கிற அடையாள அழிப்பு என்பதை உணர வேண்டும். இதேபோல, தேனீர் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கென இருந்த தனிக் குவளை முறை, அதை எதிர்த்து நடந்த போராட்டம், பாரதி விரும்பிய சாதி ரீதியிலான சுதந்திரம், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் படிப்பைத் தொலைக்கும் பழங்குடியின மாணவர்கள், பல இன்னல்களுக்கு இடையில் பள்ளியில் சேர்ந்து படித்தாலும், பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டு, படிப்பைப் பாதியில் இழக்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள், தேர்தல் கால சிக்கல்கள், உறவுநிலைச் சிக்கல்கள் போன்ற பல சமூக அவலங்களைத் தொகுப்பின் சிறுகதைகள் படம்பிடிக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையும் ஒரு குறும்படத்திற்கான கூறுகளோடு அமைந்துள்ளது சிறப்பு. ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலத்தை அவனுடைய குரலிலேயே அச்சுபிசகாமல் பதிவு செய்திருக்கும் ‘குரலற்றவனின் குரல்’ பல்கலைக்கழகங்களுக்குப் பாடமாக வைக்கும் எல்லா தகுதிகளோடும் வெளிவந்திருக்கிறது. சமூகச் சிந்தனையாளர்களும், தலித்திய ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் வாங்கிப் படிக்கவேண்டிய, குறிப்பு நூலாகப் பாதுகாக்க வேண்டிய நல்ல தொகுப்பு.

நூல் – குரலற்றவனின் குரல் (தலித் பண்பாட்டு அரசியல் சிறுகதைகள்)
தொகுப்பாசிரியர் – யாழினி முனுசாமி
இருவாட்சி பதிப்பகம்,
41, கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை -11.
முதல் பதிப்பு நவம்பர் 2009, விலை ரூ. 150.

Series Navigation