நிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

மைக்கல் ரிச்சர்ட்ஸன்,


இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன், ஜனவரி 30, 2002

இன, மதப் போராட்டங்கள் உலகமெங்கும் கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது, ஏன் இந்தோனேஷியாவிலேயே பல தீவுகள் இனம் மதம் காரணமாக ரத்த ஆற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தோனேஷியாவின் பாலி தீவு மட்டும் ஏன் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். பாலிக்கு மிக அருகிலேயே இருக்கும் பல தீவுகளில் முஸ்லீம்களுக்கும், கிரிஸ்தவர்களுக்கும் லோம்பாக், மொலுக்காஸ், சுலவேஸி, கலிமந்தன் போன்ற தீவுகளில் சண்டைகள் நடந்து ரத்த ஆறு ஓடியிருக்கிறது.

இந்தக் கேள்வியை புது பூர்ணிமா என்ற என் பாலித்தீவு வழிகாட்டியிடம் கேட்டேன். ‘எங்கள் சமயம் எங்கள் வாழ்க்கையை வழிநடத்துகிறது ‘ என்று அவர் சொன்னார். ‘பாலித்தீவு வாசிகளான நாங்கள் கர்மாவை நம்புகிறோம். இந்த பிறவியில் தீங்கு செய்தோமென்றால், அடுத்த பிறவியில் இதன் விளைவை நாங்கள் அனுபவிப்போம் என நம்புகிறோம் ‘ என்றார்.

மத்திய பாலியில் ஒரு மந்திர உணர்வு இருக்கிறது. ஏதோ அமானுஷ்யமான சக்திகளால் உருவாக்கப்பட்டதுபோல. நிலம் பல முறை மடிந்து மடிந்து கிடக்கிறது. பள்ளத்தாக்குகளும், ஆறுகளும், எரிமலையால் உருவாக்கப்பட்ட மலைகளும் தீவுக்கு மத்தியில் இருக்கின்றன. இங்கேதான் சக்திவாய்ந்த கடவுள்கள் வாழ்வதாக பாலித்தீவு மக்கள் நம்புகிறார்கள்.

வரிசையாக தட்டுகள் போல மலையின் பக்கத்தில் செதுக்கப்பட்ட நெல்வயல்களையும், காய்கறித் தோட்டங்களையும், பழத்தோட்டங்களையும் தாண்டி வேகமாக ஆறுகள் ஓடுகின்றன. புதிதாக விளைக்கப்பட்ட நெல் மரகதப்பச்சையாக ஒளிர்கிறது. மூங்கில்களும், பனைகளும், செடிகளும், மரங்களும் அடர்ந்த செழுமையான நிலப்பரப்பு விரிகிறது.

புது பூர்ணிமா சாதாரண வழிகாட்டி அல்ல. பாலியின் முன்னணி உல்லாச ஹோட்டல்களில் ஒன்றில் அவர் வேலைசெய்தாலும், அவர் அடிக்கடி வெளிநாட்டினரோடு கலந்து பேசி வந்தாலும், பாலித்தீவின் கலாச்சாரத்தோடு இறுக்கமான பிணைப்பு உள்ளவர். நாங்கள் இருவரும் நடக்க ஆரம்பிக்கும்போது ‘இந்த கரடு தட்டிப்போன கைகளைப் பாருங்கள் ‘ என்று தன் கைகளைக் காண்பித்தார். ‘என்னுடைய தம்பி தொழில்முறை தச்சன். நானும் மரவேலைப்பாடு அவ்வப்போது செய்கிறேன். ஓவியங்கள் தீட்டவும், நடனமாடவும் தெரியும். அவ்வப்போது செய்கிறேன் ‘ என்றும் சொன்னார்.

சற்று நேரத்துக்குப் பின்னர், நாங்கள் மலைமுகட்டில் நின்று கொண்டிருந்தோம். பள்ளத்தாக்கின் கீழே சரோங் உடுத்திய பெண்கள் செங்கல் செய்ய மண்ணைச் சேகரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. விவசாயிகள் முக்கோண புல் தொப்பிகளை அணிந்து கொண்டு, அறுவடை செய்யப்பட்ட நெல்கதிரை தாளத்தோடு தரையில் அடித்து தான்யங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப்பின்னர், வயல்கள் காட்டைச் சேரும் இடத்தில் இரண்டு பாலி இந்துக் கோவில்கள் இருந்தன.

‘கடவுள்களும், ஆவிகளும் எல்லாஇடங்களிலும் இருப்பதாகவும், அவைகளுக்கு படையல்கள் போட்டு சாந்தப்படுத்தவும் சந்தோஷப்படுத்தவும் வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் ‘ என்று ஒரு பெரிய ஆலமரம் அருகே ஓடும் சிறிய நீரோடைக்கு நிழல் தந்துகொண்டிருப்பதைக் காண்பித்தார்.

தீவின் மக்கள்தொகையில் சுமார் 90 சதவீதத்தினர் பாலித்தீவு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள். இதனால் இந்தத்தீவில் இருப்பவர்களுக்கு மத ரீதியாகவும் இன ரீதியாகவும் ஒற்றுமை இருப்பதால், இதுவே அமைதியான வாழ்வுக்கு அடிப்படையாக ஆகிறது. இருப்பினும் இங்கு முஸ்லீம்கள், கிரிஸ்தவர்கள், பெளத்தர்கள், டாவோயிஸ்ட்கள், கன்ஃபூசியன்கள் ஆகிய சிறுபான்மையினர் வாழ்கிறார்கள். பாலி மக்கள் அல்லாதவர்கள் பலர் இந்தத் தீவுக்கு வந்து இங்கு இருக்கும் டுரிஸ்ட் தொழிலிலும், வியாபாரத்திலும் சென்ற 20 வருடங்களில் வந்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 11க்குப் பிறகு வெளிநாட்டு டூரிஸ்ட் வருகைகள் வெகுவேகமாக குறைந்துவிட்டன. அக்டோபரில் 25சதவீதமும், டிஸம்பரில் 33 சதவீதமும் குறைவு. ஹோட்டல்கள், உணவு விடுதிகள் எல்லாவற்றிலும் ஆட்கள் குறைவு. விலையும் வரியும் அதிகரிப்பதாகவும், வருமானம் குறைந்துகொண்டே போவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

இருந்தும் பிரசினைகள் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. அலி முமின் – முஸ்லீம்கள் பெரும்பான்மையாய் உள்ள மதுராத் தீவிலிருந்து வந்தவர் – பத்து வருடம் முன்பு தொழில் தேடி இங்கு வந்தார். பாலியில் பதுகாப்பாய் உணர்வதாய்க் கூறுகிறார். ‘எங்கள் தீவில் ஈத் மாத நோன்பு இருப்பது போல இங்கே நோன்பு இருக்க முடியாது தான். என்றாலும் முஸ்லீம்களும் கிறுஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் முலாக்கா, சூலவாசி போன்ற தீவுகளில் நான் வசிக்காமல் இருப்பதற்கு நன்றி சொல்ல வேண்டும். ‘ என்கிறார்.

கேதுத் வியனா பாலி இந்துமதம் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர். நூற்றாண்டுக்கணக்கில் பாலி இந்து மதம் சகிப்புத்தன்மை கொண்டதாகவும், எல்லோரையும் அரவணைக்கும் விதமாகவும் இருப்பதாய்க் கூறுகிறார். புத்தமதத்துடன் ஒன்றி இணைந்தது பாலி இந்துமதம். இந்து மதத்தையும் , மஹாயான பெளத்தத்தையும் தழுவி பால் இந்து மதம் உருவாகக் காரணமாய் இருந்தது மஜாபஹித் அரசு.

அதிதி யாத்யா என்பவர் விட்டுச் சென்ர போதனைகளைப் பின்பற்றி நடக்கிறோம் என்றார் கேதுத் வியனா. ‘ மற்ரவர்கள் நம்பிக்கை எப்படி இருந்தாலும் அவர்களை மதிப்புடன் நடத்தவேண்டும். ‘

பாலித்தீவு அமைதி தவழும் பாலைவனச்சோலையாக இருப்பதற்கு ‘இந்து மதம் மதப் பரப்புதலில் நம்பிக்கையற்ற மதமாய் இருந்ததும் ஒரு காரணம் ‘ என்கிறார் அவர். ‘மற்ற மதத்தினரை எங்கள் மதத்திற்கு மாறும்படி நாங்கள் கட்டாயப் படுத்தியதே இல்லை . அதனால், மத சண்டைகளோ கலாச்சார சண்டைகளோ இங்கு இல்லை ‘ என்று கூறுகிறார்.

Series Navigation

மைக்கல் ரிச்சர்ட்ஸன்,

மைக்கல் ரிச்சர்ட்ஸன்,