நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

காஞ்சனா தாமோதரன்


முன்குறிப்பு: பாலா என்கிற ஆர்.பாலச்சந்திரன் பிறந்தது 1946-இல். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், இலக்கிய ஒப்பாய்வில் பி.எச்டி. பட்டமும் பெற்றுத், தற்போது நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய்ப் பணியாற்றுகிறார். 1970-கள் தொடங்கி வானம்பாடிக் கவிஞராய் அறியப்படுகிறார். தமிழ்க் கவிதைத் தொகுப்புகளும், தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழிலக்கிய விமரிசனக் கட்டுரைத் தொகுப்புகளுமாய்ச் சுமார் 12 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. விருதுகள் பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழக ஆலோசனைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராய்ச் செயல்பட்டு வருகிறார்.

2003-ஆம் வருடம், செப்டெம்பர் 25,26,27-ஆம் நாட்களில், நியூயார்க்கில் நடந்த இந்திய இலக்கிய மாநாட்டு நிகழ்வுகளின் பரபரப்புக்கு நடுவே, இந்த உரையாடலுக்கென்று சிறிது நேரம் ஒதுக்கித் தந்த கவிஞர் பாலாவுக்கு என் நன்றி.

(கணினிக் கிருமி அழித்த இந்த நேர்காணலை மீண்டும் தட்டச்சு செய்து, உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்; தாமதத்திற்கு மன்னிக்கவும்.)

காஞ்சனா தாமோதரன்: இந்தியச் சாகித்திய அகாதமி அமைப்புப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

பாலா: இந்தியாவின் மிகப் பெரிய இலக்கிய நிறுவனம். சிறந்த புத்தகங்களுக்கு விருது கொடுப்பது மட்டுமே அகாதமியின் வேலையென்ற ஒரு பிம்பம் இருக்கிறது. இருபத்திரண்டு மொழிகளில் புத்தக வெளியீடுகள், மொழியாக்கங்கள், மொழியாக்கங்களுக்கான விருதுகள், இளம் எழுத்தாளர்களுக்கான பயண உதவித்தொகை, வேறு பல இலக்கியத் திட்டங்கள் என்று பல பணிகள் இந்த அமைப்புக்கு உண்டு.

கா.தா.: நெடுங்காலமாய் அயலில் வாழும் இந்தியர் என்கிற முறையில் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைக்க என்னுள் பெரும் தயக்கம் உண்டு. ஆனாலும், சாகித்திய அகாதமி விருது அரசியல் பற்றிய கேள்வியைக் கேட்டாவது வைக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பற்றிப் பல சர்ச்சைகள் உருவாகின்றன. விலகியிருக்கும் என் காதுகளில் கூட மெல்லிய முணுமுணுப்பாய் விழும் உரத்த சர்ச்சைகள். இது ஏனென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

பாலா: தமக்குப் பிடித்தமான எழுத்தாளருக்கு விருது கிடைக்கவில்லை என்றால் அக்காதமி மேல் பழி விழுகிறது. விருதை வழங்குவது அமைப்பின் பொறுப்பு. யாருக்கு வழங்குவது என்பது தேர்வுக்குழுவின் பொறுப்பு. அக்காதமி மீது வைக்கப்படும் எந்தக் குற்றச்சாட்டும் அந்தந்தக் காலத்தியத் தமிழிலக்கிய உலகில் நிலவும் சூழல் பற்றிய குற்றச்சாட்டாகவே அமைகிறது.

கா.தா.: நன்றி. விருது அரசியலுக்குள் இதற்கு மேல் நான் நுழைவது சரியல்ல என நினைக்கிறேன். பொதுவான கேள்வி ஒன்று: எழுத்தாளர் என்பவரை எப்படி வரையறுக்கிறீர்கள் ?

பாலா: ‘மனிதநேயம் ‘ என்கிற பதம் இன்று அளவுக்கதிகமாய்ப் பயன்படுத்தப்பட்டு அர்த்தமிழந்து நிற்கிறது. உண்மையான எழுத்தாளர் என்பவர் கொள்கைகள், நிறுவனங்கள், அமைப்புகள், தேசங்கள் போன்ற எல்லைகளை மீறி அப்பால் செல்ல வேண்டும். சகமனிதருக்கான அன்பு அல்லது மனிதம் என்பதே முக்கியம்; வாடிய பயிர் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் மரபே மனிதம். வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் திறன் வேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்துடன் தொடர்ந்து ஊடாட வேண்டும். தமக்கெனக் குழுக்களைச் சேர்த்துக் கொண்டு, விருதைத் தேடிச் செல்லும் எழுத்தாளரை உண்மையான எழுத்தாளரென்று ஒப்புக் கொள்ள முடியுமா ? பிறரை விடத் தம்மையல்லவா அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள்! எவ்வளவோ பெரிய விஷயங்கள் இருக்கையில், தம்மை முன்னிறுத்தும் பொருட்டுச் சிறுசிறு சச்சரவுகள் கொண்ட இலக்கிய அரசியல் வேதனையைத்தானே தரும் ?

கா.தா.: இயல்பாகத் தொடரும் கேள்வி–உங்கள் பார்வையில், இலக்கியம் எனப்படுவது யாதெனில்….

பாலா: மனிதனாக இருக்க விரும்பும் மனிதனையும், அவனை மனிதனாக விடாத உலகையும் பற்றிய தொடர்ந்த விசாரணைதான் இலக்கியமென நினைக்கிறேன்.

கா.தா.: நிகழ்காலத் தமிழக இலக்கியக் களம் எப்படி இருக்கிறது ?

பாலா: பல போக்குகளில் ஊடுபாவுவதாய் இருக்கிறது. இதுதான் இயல்பு என்று தோன்றுகிறது. பன்முகமும் இலக்கியத்தில் வெளிப்படுகிறது. ஒரு போக்கைத் தேர்ந்தெடுப்பவர்கள் பிற போக்குகளை மதித்து அங்கீகரித்து கருத்துப் பரிமாற்றம் செய்யும் ஆரோக்கியமான சூழல் இன்னும் வளரும் என்று நினைக்கிறேன்.

கா.தா.: இன்று மதியம் நடந்த ‘இந்திய இலக்கியம்–ஒற்றுமையும் வேறுபாடும் சரித்திரமும் ‘ என்னும் பன்மொழிப் பொது அமர்விலும் இலக்கியப் பன்முகம் பற்றி வலியுறுத்திப் பேசினீர்கள். சரித்திரம் என்பது எல்லாருக்கும் இனிமையாக இருந்தது அல்ல என்ற மெல்லுணர்வுடன், அதன் வேதனையான பக்கங்களை மறந்து, இனிமைகளுடன் முன்னகர வேண்டும் என்றீர்கள். பன்முக இலக்கியம் என்பது இப்போதுதான் தமிழகச் சூழலில் உயிர்த்துடிப்புடன் துவங்கியிருக்கிறது; எனவே, நேற்றில்லாத ஒற்றுமை இன்றுதான் — வேறுபாடுகளின் மத்தியில்தான் — துவங்குகிறது என்றீர்கள். இங்கு அது பற்றிக் கொஞ்சம் விரித்துச் சொல்ல முடியுமா ?

பாலா: கடந்த ஐம்பது ஆண்டுகளின் பொழுதுபோக்கு இலக்கியம், தீவிர இலக்கியம் என்கிற இருவகைப் பாகுபாடு உடைந்திருக்கிறது. பலவிதப் போக்குகள் நிறைந்திருக்கின்றன. பெண்ணியம், தலித்தியம், வட்டார இலக்கியம் முதலியன மையநீரோட்ட இலக்கியமாக அங்கீகரிக்கப்படுகின்றன. இதுதான் தமிழக இலக்கியம் என்று ஒரு வகைமாதிரியைச் சுட்டிக் காட்டும் ஒருமுகத்தன்மையை இழந்தாயிற்று. தமிழர்களுக்கான பொது இலக்கியமென்று ஒன்றில்லை. ஒவ்வொரு குழுவுக்குமான இலக்கியம் உருவாகிறது. தமக்கேற்ற கலைமொழிகளைத் தேடும் சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் குரல்கள் கேட்க முடிகிறது. வாசகர்களும் தமக்கானதைத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல அம்சங்களே. இதற்குள் ஒரு மெல்லிய முரண் பொதிந்திருக்கிறது.

கா.தா.: முரண் பற்றிச் சொல்லுங்கள்.

பாலா: ஒரு குழுவையோ ஓர் இடத்தையோ ஒரு பாலினத்தையோ பிரதிநிதிப்படுத்துவதாய் நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால், முழுத் தமிழக அங்கீகாரம் கேட்கிறீர்கள். ஒரு பகுதியின் குரலாகவும் ஒரு தொகுதியில் அங்கீகாரம் பெற்றதாகவும் இருக்க விரும்புவதில் ஒரு மெல்லிய முரண் இருக்கிறது.

கா.தா.: நீங்கள் முன்பு சொன்ன பன்முகத்தன்மையைப் புரிந்து கொண்டால், முரண் மறைந்து விடுகிறதோ ? இலக்கியரீதியாக, தமிழ் அடையாளம் என்றால் என்ன ?

பாலா: ஓர் உதாரணம் சொல்லுகிறேன். பெண் எழுத்தாளர்கள்/ கவிஞர்கள் பெண் அடையாளத்தைத்தான் முன்னிறுத்துவார்கள். மொழிசார்ந்த அடையாளம் முக்கியமானதா அல்லது பெண் என்னும் அடையாளம் முக்கியமானதா ? உண்மையில், இன்னோர் அடையாளத்தை முன்னிறுத்துகையில் தமிழ் அடையாளம் சற்றே பின்னால் நகருகிறது.

கா.தா.: அந்த இன்னோர் அடையாளத்தின் கண்வழியே, அதற்கேற்ற மொழியுடன் பேசுகையில், தமிழ் அடையாளம் என்பதன் எல்லைகள் விரிகின்றன என்றும் சொல்லலாமோ ?

பாலா: சொல்லலாம். இது ஒரு செறிவான காலகட்டம். தமிழிலக்கியம் அதன் பன்முகங்களுடனும் துலங்கும் காலகட்டம். ஒரு குழு பிற குழுக்களின் இருப்பை அங்கீகரிக்கும் காலகட்டம். உண்மையான பின் நவீனத்துவ நிலையென்று இதைச் சொல்லலாம்: பல யதார்த்தங்கள்.

கா.தா.: தமிழில் பின் நவீனத்துவப் பிரதிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பாலா: தமிழ்ப் பின் நவீனத்துவம் என்பது தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அது அமெரிக்கப் பின் நவீனத்துவமாகவோ ஐரோப்பியப் பின் நவீனத்துவமாகவோ இருக்க இயல்லது. பாரதியும் பாரதிதாசனும் எப்படி ஐரோப்பிய நவீனத்துவவாதம் பேசாமல், வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் தமிழ் நவீனத்துவவாதிகளாக இருந்தார்களோ, அது போலவே தமிழ்ப் பின் நவீனத்துவமும் அசலாக உருவாகி வரவேண்டும்.

கா.தா.: பின் நவீனத்துவம் என்று நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள் என்று தெளிவுபடுத்த இயலுமா ?

பாலா: புதிய கருத்தியலும் அது தனக்காகத் தெர்ந்தெடுக்கும் மொழியும் சேர்ந்து ஒரு புதிரைத் தோற்றுவிப்பது. பூமணியின் எழுத்தை நான் உதாரணமாகக் குறிப்பிடுவேன்.

கா.தா.: உங்கள் பார்வையில், சாகித்திய அகாதமியின் செயல்பாட்டுக் குறிக்கோள்கள் என்ன ?

பாலா: எல்லா இலக்கியவாதிகளின் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கும் களம் அமைத்துக் கொடுப்பது. பிற இந்திய மொழிகளுக்கு இந்த முயற்சிகளைக் கொண்டு போவது. எல்லா நிகழ்ச்சிகளிலும் முயற்சிகளிலும் எல்லாரும் பங்கு கொள்ள வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

கா.தா.: இந்தியரான என் போன்றவர்களும், பிற தேசத்துக் குடியுரிமையுள்ள தமிழர்களுமாய் நாம் உலகம் முழுதும் பரந்து கிடக்கிறோம். இந்தியச் சாகித்திய அகாதமியின் விதிமுறைகள்படி, அயல் குடியுரிமையுள்ள தமிழர்கள் சிலவற்றில் பங்கு கொள்ள முடியாது என்பதை அறிவேன்; விதிமுறையை மதிக்கிறேன். அப்படிப்பட்டவை தவிர்த்த பிற நிகழ்ச்சிகளில், உலகத் தமிழர்கள் அனைவரும் பங்களிப்புச் செய்யும் பொதுவெளியை இந்தியச் சாகித்திய அகாதமி அமைத்துத் தருமா ? உங்கள் பார்வை என்ன ?

பாலா: அயலகத்தில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்களுடன் தமிழக எழுத்தாளர்கள் உரையாடும் சூழலை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இருக்கும் சட்டதிட்டங்களை மதித்து நடக்கிறோம். இயங்குமுறையில் இறுக்கமில்லாமல்தான் செயல்படுகிறோம். இலக்கியத்துக்கும் இலக்கியவாதிகளுக்கும் பணி செய்யத்தான் அகாதமி இருக்கிறது. உங்கள் அனைவரின் ஆர்வமும் பங்களிப்பும் எங்களுக்குத் தேவை.

—-

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்