நினைவுகள் மட்டும்…

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

நடேசன்


இரவு பன்னிரண்டை காட்டியது தொலைக்காட்சிப் பெட்டியின்மேலே இருக்கும் கடிகாரம்,

இங்கிலாந்தில் தயாரித்த துப்பறியும் நாடகம் தொலைபேசியில் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. இதற்குமுன்பு காண்பிக்கப்பட்ட பொலிஸ் நாடகமும் இங்கிலாந்தைச் சேர்ந்தது. என்னால் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடகங்களை பெரிதாக ரசிக்கமுடிவதில்லை. தமிழ்நாட்டு மெகா சீரியல்களில் வருவதுபோல் கட்டிலில் படுக்கும்போதும் விலையுயர்ந்த பட்டுச்சீலை, காலையில் எழும்போது முக அலங்காரங்கள் என்று இல்லாவிடினும், அமெரிக்க ஆஸ்திரேலிய தயாரிப்புகளில் நாடகத்தன்மை தெரியும் ,;.

மேல் மாடியில் மனைவி தூங்குகிறாள். மகனும் மாடியில் இன்ரநெட்டோ, ரிவி நாடகமோ அவனது கம்பியூட்டர் வழியாக பார்த்துக்கொண்டிருப்பான்.

நான் ரீவி பார்க்கும் இடத்தில் லைட்டை அணைத்துவிட்டேன். கிறின்ஹவுஸ் வாயுவை குறைப்பதற்கு என்னால் ஒரு சிறுகாரியம் ராமாயணத்தில் அணில்போல்.
செய்யமுடிந்தால் நல்லதுதானே.

நாடகம் முடிந்தது, உறங்குவோம் என நினைத்து எழுந்தேன். தொலைபேசிக்கு பக்கத்தில் விரிக்கப்பட்ட சிறியமெத்தையில் எங்கள் வீட்டு நாலுகால் அங்கத்தவரான சாண்டி குறட்டைவிட்டுக்கொண்டு தூங்குகிறது. மெதுவாகச்சென்று சாண்டியின் தலையை தடவினேன். தலையை தூக்கவும் இல்லை. கண்ணைத் திறக்கவும் ஆடாமல் அசையாமல் அமைதியாக படுத்திருந்தது.

கழுத்தருகே சில மாதங்களுக்கு முன்பு வெட்டி அகற்றப்பட்ட கட்டி இருந்த இடத்தில் இன்னமும் ரோமம் வளர்ந்து மறைக்கப்படவில்லை. வெட்டிய தழும்பு வெளியாலே எட்டிப்பார்த்தது. எந்தக்காலத்திலும் தன்னை சுத்தமாக வைத்திருப்பது சாண்டியின் இயல்பு. எந்த அழுக்கில் படுத்து எழும்பினாலும் நாவால் நக்கி சுத்தப்படுத்திவிடும். ஆனால் இப்பொழுது தோலில் சொடுகுகள் பல கண்ணுக்குத்தெரிந்தது.

காலங்கள் சாண்டியின் தோலைமட்டுமல்ல, செவிப்புலனையும் பறித்துவிட்டது. சாப்பாட்டுக்கோப்பையின் சிறிய அசைவையும் கேட்டு எழுந்துவிடும். ஆனால் இப்பொழுது எந்தப்பெரிய சத்தமும் கேட்காது. கண்களில் நீலத்திரை படரத்தொடங்கிவிட்டது. முகத்தில் மட்டும் லபிரடோர் இனத்துக்கே உரிய அழகு நித்தியமாக இருந்தது. இப்படியான சீவனின் மரணம் கடந்த மூன்றுமாதங்களாக நாள்குறிக்கப்பட்டு பின்பு ஒவ்வொரு நாட்களாக தள்ளிவைக்கப்பட்டுவந்தது.

சாண்டியை அன்போடு அடிக்கடி தடவுவதில்லை என்பது எனது குடும்பத்தினர் என்னில் வைக்கும் குற்றச்சாட்டு. அதில் உண்மை இல்லாமலில்லை. உணர்ச்சிவயப்படுதல், கண்ணீர்விடுதல் என்பது எனக்கு இலகுவாக இருப்பதில்லை. துக்ககரமான நிகழ்வுகளை நினைத்து மனம் கலங்குவதிலும்விட அதன்காரணத்தை அறிந்து நடக்காமல் பார்க்க விரும்புவேன். நடப்பது தவிர்க்கமுடியாவிட்டால் அதை ஏற்றுக்கொள்வதும் அதை நினைத்து மனம் வருந்துவதில் லாபம் இல்லை என நினைப்பவன்.

எனக்கு அறிவு தெரிந்தவரை ஒரு நாய்க்காகவும் இரண்டு மனிதர்களுக்காகவும் கண்ணீர்விட்டுள்ளேன்.

சாண்டி எங்களுடன் கழித்த பதினாலு வருடத்தில் குட்டி, இளம் நாய், நடுவயது என்பதைத்தாண்டி முதுமை பிராயத்தை அடைந்துள்ளது. நாட்களில் பெரும்பகுதி நித்திரையில் கழிகிறது. உ டல் நிறைகூடியும் மூட்டுவலிவந்தும் நடக்கிற நேரங்கள் குறைந்து படுக்கிறநேரம் கூடிவிட்டது. தசைகளும் வலு இழந்துவிட்டது.

மாலையில் இருந்து அடுத்தநாள் காலைவரையிலும் வீட்டுக்குள் வாசம் செய்வதால் பலமுறை வீட்டுக்குள்ளேயே சிறுநீரை கழித்துவிடும். காலைஎழுந்து வேலைக்குப்போகும்போது வாசலில் சிறுநீர் தேங்கியிருக்கும். அதைக்கழுவி சுத்தப்படுத்தும் வேலை அதிக சந்தோசத்தைக்கொடுப்பதில்லை. வெளியேவிட்டால் குரைத்தபடி எங்களது நித்திரைமட்டுமல்ல, பக்கத்துவீட்டினரினதும் நித்திரையைக் குழப்பிவிடும். சாண்டியின் முதுமை சாண்டிக்குமட்டுமல்ல எங்களுக்கும் பல சங்கடத்தை அளித்தது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் பட்மிண்டன் விளையாடிக்கொண்டிருக்கும்போது கைத்தொலைபேசியில் அழைப்புவந்தது.

‘சாண்டிக்கு ஏமேர்ஜன்சி. மூக்கால் இரத்தம்வடிகிறது” உடன்வரவும்.

சாண்டியின் ஒருபக்கத்து மூக்குத்துவாரத்தால் மட்டும் இரத்தம் வந்தது. எனது அனுபவத்தைவைத்து ஏதோ கட்டி வளர்கிறது எனமுடிவுசெய்தேன். எப்படியும் X Ray எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதால் அதையும் செய்தேன். மூக்குமேலுள்ள அந்த கட்டி எலும்பையும் தாக்கியுள்ளது. சாண்டியின் கான்சர் எலும்பில்பரவி இரத்தம்வடிந்தாலும் பசியை குறைக்கவில்லை. வழமைபோல் சாப்பிட்டது.

‘சாண்டி தொடர்ந்து சந்தோசமாக சாப்பிடும்வரைக்கும் ஒன்றும்செய்யக்கூடாது. மூக்கையும், மூக்கில் இருந்து ஒழுகி விழும் இரத்தத்தையும், வீட்டின் தரையையும் நான் துடைக்கிறேன்” என எனக்கு துணைவியிடம் இருந்து உறுதிமொழி கிடைத்தால் சாண்டியின் பராமரிப்பு மொத்தமாக என்கையை விட்டுவிலகிறது.
சாண்டிக்கு பலவித உபசாரங்கள் நடந்தது. இருபத்துநான்கு மணிநேரமும் சாண்டி வீட்டுக்குள் வாழ்ந்து வெளிசெல்ல பின்கதவும் திறந்துவைக்கப்பட்டது. பலவகை மருந்துடன் ஐஸ்கிறீமும் தினமும் அளிக்கப்பட்டது.

மூக்கின்மேல் உள்ள கட்டிவளர்ந்து நாசியின் துளையை முற்றாக அடைத்து சுவாசத்தை தடுத்தது. சாண்டி இரவில் நித்திரைகொள்ள கஸ்டப்பட்டது. ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் ஒரே இடத்தில் கிடந்தது. இனி சரிப்பட்டுவராது என நினைத்து சாண்டிக்கு நாள்குறித்தோம். குங்குமப்பொட்டுவைத்து என்மனைவியாலும் மகனாலும் எனது கிளினிக்குக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி புகைப்படமும் எடுக்கப்பட்டது. சாண்டிக்கு ஊசியை ஏற்றநினைத்தபோது கொண்டுவரப்பட்ட ஐஸ்கிறீமை வேகமாக சாப்பிட்டது. சாப்பாட்டில் ஆவல் இருந்ததால் மரணம் தள்ளிப்போடப்பட்டது.

அடுத்த கிழமைகளில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த மெல்பேனின் வெட்கையான கோடை நாட்கள் சாண்டியை மிகவும் துன்புறுத்தியது. சாப்பிடமறுத்த ஒருநாள் சாண்டி என்னால் மரணத்தை தழுவிக்கொண்டது. மூன்றுமாத தீவிரகவனிப்பு முடிவுக்கு வந்தது.

சாண்டிக்கு தகனக்கிரியைகள் நடத்தப்பட்டு ஒரு கிழமையில் சாம்பல் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சிறிய மரப்பெட்டியில் வந்தது. முப்பது கிலோ நிறையுள்ள சாண்டி அரைக்கிலோவுக்கு குறைவான சாம்பலாக அந்த பெட்டியுள் இருந்தது. என்மனைவி அந்தப்பெட்டியை வழக்கமாக சாண்டி படுக்கும் மெத்தையில் வைத்திருந்தா.

இவ்வளவு நேரமும் சாண்டிபோல் தோற்றம் அளித்து அதன் நினைவுகளை எழுப்பிய அந்தபெட்டியை வேறு இடத்தில் வைத்துவிட்டு படுக்கச்சென்றேன்.


uthayam@optusnet.com.au

Series Navigation

நடேசன்

நடேசன்