நினைவுகளின் தடத்தில் – (18)

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

வெங்கட் சாமிநாதன்


செண்டிரல் சினிமாவுக்கு எதிரே மாமாவும் நானும் நின்றுகொண்டிருந்தோம். மாமா அம்பி வாத்தியாரோடு பேசிக்கொண்டிருந்தார். மாமாவுக்கு நிலக்கோட்டையிலிருந்த போதே குடும்பத்தை சம்ரக்ஷ¢க்க முடியாது தவித்துக் கொண்டிருந்தார். இப்போது சின்ன மாமாவின் படிப்புக்காக, வத்தலக்குண்டில் படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணமாக, மதுரையில் இருந்து படிக்க வசதியாக ஒரு குடித்தனம் வைக்க வேண்டிய கூடுதல் செலவு மாமாவுக்கு. எப்படி சமாளிப்பது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாமா முன் நின்றது. அது பற்றித் தான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். “என்ன பண்றது அம்பி, என் கஷ்ட காலம். எப்படியோ ஒரு வருஷம். இதோன்னு ஓடிப் போயிடும். அவன் ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணீட்டான்னா போரும் போ. நான் எப்படியோ சமாளிச்சுத் தான் ஆகணும்.” பக்கத்தில் நின்று இருந்த என்னைப் பார்த்து அம்பி வாத்தியார் ” இவர் இப்போ டவுன் ஆளாயிட்டார்.” மதுரையில் தங்குவது ஒரு பெரிய விஷயமாகவே அவருக்கு இருந்திருக்கிறது. அதோடு என்னைச் சற்று தமாஷ் செய்யவும் வசதியாக இருந்திருக்கிறது. அப்போது அது எனக்கு தமாஷ் என்று மாத்திரம் தான் தெரிந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது, மிகவும் வறிய நிலையில் இருந்த அவர் குடும்பம் அவருடைய 19 ரூபாய் சம்பளத்திலேயே வயோதிக தாய் தந்தையர், மூன்று தம்பிகள் – தவிர புதிதாக கல்யாணம் செய்து அழைத்து வந்துள்ள மனைவி. கடைசித் தம்பி ராஜா, என் வயது. கோடை விடுமுறையில் அவனை நாடார் ஹைஸ்கூலுக்கு எதிரே இருந்த வெங்கிடாசலம் ஐயர் ஹோட்டலில் சப்ளை வேலைக்கு அனுப்பி விடுவார். என்னை வயிறு முட்ட சாப்பிட வைத்து, நான் காசு கொடுக்க வரும்போது “ரெண்டு இட்லி அரையணா” என்று கத்துவான். அப்போது இட்லி காலணா தான். அவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். வறுமையிலும், அன்பு பாசம், சினேகம் எல்லாம் மனிதர்களைக் கைவிட்டு விடவில்லை. இதற்கிடையே தான், மதுரையில் வாழ்வது ஒரு வரப்ரசாதம், பெருமைப்பட வேண்டிய ஒரு அதிர்ஷ்டம் என்ற நினைப்போ, ஆசையோ உள்ளே ஊறிக்கொண்டுமிருந்திருக்கிறது. நான் அங்கே மேற்குக் கோபுர வீதியில் ஒருசினிமா தியேட்டரின் முன் அந்த சந்தடிக்களுக்கிடையே நின்று கொண்டிருந்ததே ஒரு மாயலோகத்தில் வந்து சேர்ந்துவிட்ட மிதப்பில் தான் இருந்தேன். அம்பி வாத்தியார் சொன்னதில் வெறும் தமாஷ் மாத்திரம் இல்லை. அகல கண்விழித்து சுற்றும் முற்றும் பராக் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கும் பயலின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பதும் தெரிந்திருந்தது.

செண்டிரல் சினிமாவுக்கு முன் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஓடிக்கொண்டிருந்தது, ‘”நாம் இருவரா?” அல்லது ஸ்ரீவள்ளியா?” எனக்கு சரியாக ஞாபகமில்லை. எனக்கு அந்த தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரின் மேல தான் கண்ணிருந்தது. “பயலை ஒரு சினிமாக்குக் கூட்டிட்டுப் போங்க சார்” என்றார் அம்பி வாத்தியார். “எல்லாம் வேண்டியது நிலக்கோட்டையில் பார்த்திருக்கான். போறும்.” என்றார் மாமா. “வத்தலக் குண்டிலே சிவகவி பார்த்தேன் சார். பாகவதர்தான் நிறைய பாடியிருக்கான். அத்தனையும் மணி மணியா.” என்றார் அம்பி வாத்தியார்.

மதுரையில் நான் சினிமா பார்ப்பதற்கு மாமா அழைத்துப் போகவேண்டியிருக்கவில்லை. அவர் காசும் தரவேண்டாம். முதன் முறையாக இங்கிலீஷ் படம் பார்த்தது மதுரையில் தான். ரீகல் டாக்கீஸ் என்று நினைக்கிறேன். அதில் காலை வேளைகளில் இங்கிலீஷ் படம் போடுவார்கள். ரயிலடிக்குப் பக்கத்தில், மேலக்கோபுர வீதியின் கடைசியில் ரோடைத் தாண்டி. முதன் முதலாக ஹிந்தி படம் பார்த்ததும் மதுரையில் தான். பார்த்த படங்கள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஸ்வர்ணலதா நடித்த படம், ரத்தன். அதன் பாட்டுக்கள் தமிழ் நாடு பூராவும் எதிரொலித்தன. நிறைய படங்களில் அந்த படத்தின் மெட்டுக்களை காபியடித்த தமிழ் பாட்டுக்கள் வந்தன. அதில் நடித்திருந்த ஸ்வர்ணலதா பின்னர் பாகிஸ்தான் உருவானதும் பாகிஸ்தானுக்குப் போய்விட்டாள். பேர்தான் ஸ்வர்ணலதா. முஸ்லீம் நடிகை. நான் மதுரையில் பார்த்த இரண்டாம் ஹிந்தி படம் அன்மோல் கடி. அதுவும் அதன் பாட்டுக்களுக்கு புகழ் பெற்ற படம். அந்த படத்தில் சுரையா முதன் முதலாக ஒரு துணைநடிகையாக அறிமுகம் ஆகிறாள். அவ்வளவாக அழகில்லாத ஆனால் நல்ல பாடகியான நூர்ஜஹான் தான் அதில் கதாநாயகி என்னும் இவளும் பின்னால் பாகிஸ்தானுக்குப் போய்விட்டாள். அந்நாட்களில், லாகூர் தான் இன்றைய மும்பை மாதிரி படத் தயாரிப்பு மையமாக இருந்தது. பிரிவினைக்குப் பின் தான் மும்பை பெரிய கேந்திரமாக மாறியது. இந்த இரண்டு படங்களும் தமிழ் பட உலகில், ஒரு பெரிய பூகம்ப மாற்றத்தை விளைவித்தன. எல்லோரும் இந்த படங்களில் வந்த ஹிந்தி பாட்டுக்களை காப்பிஅடித்தனர். கல்கி ஒருவர் தான் இதை எதிர்த்து முதல் குரல் எழுப்பியவர். 1947-ல். கல்கி தலையங்கம் யாருக்கும் பார்க்கக் கிடைத்தால் பார்க்கலாம்.

இதையெல்லாம் எழுதும்போது, நான் மதுரைக்குப் போனதே சினிமாப் பார்த்துக்கொண்டு அலையத்தான் என்பது போல ஒரு தோற்றத்தை நான் தந்துவிட்டேன் என்று தோன்றுகிறது. அப்படி இல்லை. ஒரு சில மாதங்கள் நானும், சின்ன மாமாவும் ஒழுங்காக சேர்ந்தே பள்ளிக்கூடம் போவோம். சேர்ந்தே திரும்புவோம். எனக்கு சேதுபதி ஹைஸ்கூலும் ரொம்ப பிடித்திருந்தது. அவ்வளவு பெரிய விசாலமான, இவ்வளவு பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம், பாரதியார் சொல்லிக்கொடுத்த பள்ளிக்கூடம் என்ற நினைப்புகளில் நான் மிதந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது இரண்டு தெரு தாண்டி, குறுக்க்கே செல்லும் ரோடைத் தாண்டினால், லக்ஷ்மி நாராயணபுர அக்கிரஹாரம் வரும். அதில் தான் மாமியின் குடும்பத்தினர் இருந்தனர். அங்கு அடிக்கடி போக மாட்டேன். எப்போதாவது போவேன். சேதுபதி ஹைஸ்கூல் வடக்கு வெளிவீதியின் ஒரு பக்கம். அதன் எதிர்பக்கத்தில் மாமியின் தங்கை ஆசிரியையாக வேலை பார்த்து வந்த பெண்கள் பள்ளிக்கூடமும் இருந்தது. சரஸ்வதிக்குத் துணையா நீயும் போய்ட்டு வாயேண்டா என்பார், மாமியின் அப்பா சில சமயம்.

ஆனால் நான் நிறைய நேரம் ஊர்சுற்றுவதில் செலவழித்தேன் என்று நினைவுக்கு வருகிறது. மதுரை பெரிய நகரமாயிற்றே. முதல் தடவையாக நான் டவுன் வாசியாகியிருக்கிறேனே. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தால் நான் எப்படி மதுரை வாசியாவேன்? தினம் ஒரு பக்கமென ஊர் சுற்றக் கிளம்பி விடுவேன். எனக்குச் சில இடங்களைக் கண்டதும் உடலில் ஒரு புத்துணர்ச்சி பரவுவதாகப் படும். சுற்றிகொண்டே வரும்போது கண்ணில் பட்டதும் வியப்புடன் மலங்க மலங்க விழிக்க வைத்த இடங்களும் உண்டு. முதலில் அது சிம்மக்கல்லிலேயே, வக்கீல் புதுத்தெரு ஒன்று ஒரு தெரு. அதில் கம்பி போட்ட ஒரு வீட்டில் போட்டிருந்த போர்டு. K.T.K. தங்கமணி. அப்போது எனக்கு மோகன் குமாரமங்கலம், பி.ராமமூர்த்தி, தங்கமணி யெல்லாம் மதுரையில் எனக்குத் தெரிய வந்த ரொம்ப பெரிய மனிதர்கள். என்னில் வியப்பை ஊட்டிய மனிதர்கள். இவர்கள் பெயரெல்லாம் இன்றைய தலைமுறைக்கு எந்த அர்த்தத்தையும் கொடுக்காத பெயர்கள் தான். ஆனால், இவர்களுக்கு முன் இன்றைய பெருந்தலைகள் எவரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டாதவர்கள் தான். சிறுவனாக என் மனத்தில் அன்று எழும்பியிருந்த பிம்பங்களத் தான் இங்கு பதிவு செய்கிறேன். இதே போல மேற்குக் கோபுர வாசலில் வி.சூ.சுவாமிநாதன் அண்ட் கோ. என்றொரு புத்தகக் கடை அந்நாளில் இருந்தது. அந்தக் கடையை பிரஸ்தாபிக்கக் காரணம், பரிதிமாற் கலைஞர் என்று தன் பெயரை மாற்றி வைத்துக்கொண்ட முதல் தனித் தமிழ் அறிஞரான, சூரிய நாராயணசாஸ்திரியாரின் இளைய மகன் தான் அந்த புத்தகக் கடை சுவாமிநாதன். எவ்வளவு பெரிய சரித்திரப் பிரஸித்த பெற்ற இடங்களில் நான் கால் பதிக்கிறேன் என்ற நினைப்பை இவையெல்லாம் அன்று எனக்குத் தந்தன.

என் ஊர் சுற்றலில் எனக்குப் பிடித்தமான இடங்கள் இரண்டு. ஒன்று ரயில் நிலையத்தின் மேம்பாலம். அதில் போய் நின்று கொண்டு போகும் வரும் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. மாமா பையன் வந்தால் அவனையும் அழைத்துப் போவேன், “வா வேடிக்கை பார்க்கலாம்” என்று. அடுத்தது, மதுரை க்கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில். உள்ளே நுழைந்தால் இரு புறமும் ஒரே கடைகள் மயமாக இருக்கும். அவற்றைத் தாண்டி உள்ளே நுழைந்து விட்டால் பிரகாரங்கள் ஆரம்பிக்கும் திறந்த வெளி மண்டபங்கள். ஒரு புறம் யானைகள் கட்டியிருக்கும். நல்ல காற்று வரும். அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பேன் மணிக்கணக்கில் நேரம்போவது தெரியாமல். நல்ல காற்றும் சற்று குளிர்ச்சியாகவும் இருக்கும். பாட்டியிடம் எனக்கு எப்போதாவது கோபம் வந்து விட்டால், நான் என் துக்கங்களை எல்லாம் மறக்க தஞ்சமடைவது அந்த இடத்தில் தான்.

வெங்கட் சாமிநாதன்/11.3.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்