நினைவில் உறைந்த வரலாறு முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

பாவண்ணன்


1924ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர் இந்த நூலின் ஆசிரியரான செ.முகம்மது யூனூஸ். ஏழு பிள்ளைகள் பிறந்த குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்த பிள்ளை. அவருடைய தந்தைவழிப் பாட்டனார் காலத்திலிருந்து அக்குடும்பம் பர்மாவில் வாழ்ந்திருக்கிறார்கள். பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டம் இளையாங்குடிக்கு அருகில் உள்ள பூதூர் என்றாலும் பிழைப்பதற்காகச் சென்ற இடம் பழகி, அங்கேயே வாழ்க்கையைத் தொடரும்படி நேர்ந்துவிட்டது. அவர்கள் வசித்த இடம் சவுட்டான். யூனூஸின் தந்தையாரான செல்வக்கனி ராவுத்தர் சவுட்டானில் பலசரக்குக்கடை நடத்தி வந்தார். அரசாங்க ஒப்பந்த வேலைகளையும் எடுத்து அவ்வப்போது செய்வதும் பழக்கம். சவுட்டானில் குழந்தைப்பருவம் தொடங்கி, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த அனுபவம் உடையவர் யூனூஸ். ஆங்கிலேயர் ஆட்சி, பர்மிய விடுதலை எழுச்சி, ஜப்பானியரின் ராணுவ ஆட்சி, இரண்டாவது உலகப்போர், பர்மாவின் விடுதலை, பர்மாவின் ராணுவ ஆட்சி என வரலாற்றின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் இக்காலத்தில் நடைபெற்றுள்ளன. அவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறார் யூனூஸ். அவற்றால் மனத்தளவிலும் குடும்பஅளவிலும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார். நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாக வாழ்ந்த மண்ணைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து ஹாங்காங் சென்று வாழ்க்கையை மீண்டும் தொடங்கியிருக்கிறார். அந்த வாழ்வனுபவத்தை அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள்மூலம் தொகுத்து நூலாக ஆக்கியிருக்கிறார் இராமனாதன். ஒரு தனிமனிதர் பார்வையில் விரிவடைகிற வரலாற்றுப் பதிவுகளை ஒரு நாட்குறிப்புப்புத்தகப் பதிவைப்போலப் படிப்பது புதிய அனுபவமாக உள்ளது. அவருடைய தனித்துவம் மிகுந்த பார்வை, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சமநிலை பிறழாமல் மதிப்பிட்டுச் சொல்கிறது. பல வெவ்வேறு துண்டுதுண்டான சம்பவங்களைத் தொகுத்துச் சொல்லும் விதம், அவற்றின் பின்னணியை நாமே உய்த்துணரும் வகையில் அமைந்துள்ளது. ஒரு வரலாற்றுப்புனைகதைப் படைப்பைப் படிக்கும் அனுபவத்துக்கு நிகரானதாக உள்ளது, வாழ்க்கைவரலாற்றுக் குறிப்பாக விரிவடைந்திருக்கிற அயல்மண் நினைவுகளின் வாசிப்பனுபவம்.

சவுட்டான் கிராமத்தைப்பற்றிய சித்தரிப்புக்குறிப்புகள் ஒவ்வொன்றும் சுவையானவை. விவசாய சமூகத்துக்கும் வணிகர்களுக்கும் இடையிலான நம்பிக்கையின் அடிப்படையிலான உறவு மிக அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கிராமத்திலிருந்து விவசாயிகள் வருவார்கள். ஒரு கடையில் தன் குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, ஒரு சுவடியில் குறித்துவைத்துவிட்டுச் செல்வார்கள். ஒரு ரூபாய்க்கு முந்நூற்றியிருபது சாமான்கள். ஒரு காசுக்கு மூன்று சாமான்கள். ஒரு பெரிய வெங்காயம். ஒரு பூண்டு. கொஞ்சம் கடுகு. மிச்சத்துக்கு கொஞ்சம் வெந்தயம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கலாம். வணிகர்கள் பணத்துக்கு அவசரப்படுவதில்லை. அறுவடையான பிறகு, நெல் விற்பனையாகும். அந்தப் பணத்தை எடுத்துவந்து பழைய கடன்கள் எல்லாவற்றையும் அடைத்துவிடுவார்கள் விவசாயிகள். எஞ்சிய தொகையில் மனைவிக்கும் மக்களுக்கும் தங்க நகைகள் எடுப்பார்கள். புத்தாடைகள் எடுப்பார்கள். வளர்ந்த பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாடு செய்வார்கள். விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பவர்களாகவும் வியாபாரிகள் கொடுத்த கடனுக்காக நெருக்காதவர்களாகவும் ஒரு பரஸ்பர நம்பிக்கை மிகுந்த சமுதாயமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

வரைபடக்குறிப்புகளாக விரிவடைகிற சவுட்டானைப்பற்றிய தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் ஒரு வாசகரால் அந்தக் கிராமத்தை மனத்திரையில் மிக எளிதாகத் தீட்டிவிடமுடியும். அந்த அளவுக்கு அடுத்தடுத்து தகவல்களைத் தருகிறார் யூனூஸ். திறக்கப்பட்ட நெற்களஞ்சியத்தின் வாய்மடைவழியாக நெல் கொட்டிக்கொண்டே இருப்பதுபோல யூனூஸ் தகவல்மழையையே பொழிகிறார். சவுட்டான் ஊரை வடக்கிலிருந்து அணுகினால் யானை ஓடை. அங்கே ஒரு கத்தோலிக்கத் தேவாலயம். அதைக் கடந்துவந்தால் இரண்டு நீதிமன்றங்கள். ஒன்று சிவில் மற்றது கிரிமினல். அவற்றையொட்டி காவல்நிலையம். அப்புறம் மருத்துவமனை. பிறகு பர்மீயக்கோயில்கள். அதற்கடுத்து பிரதான சாலை. செட்டியார் தெரு. செட்டியார்கள் தமக்காகக் கட்டிவைத்த முருகன்கோயில். வீடுகள். பள்ளிவாசல். தபால் நிலையம். கடைத்தெரு. பேருந்து நிறுத்தம். வீடுகள். அப்புறம் ஆற்றங்கரை. அது ஊரின் இன்னொரு எல்லை. ஒரு கோடு கிழிப்பதுபோல ஓர் எல்லையிலிருந்து மற்றொரு எல்லைவரைக்கும் தகவல்களைச் சொல்கிறார். அவருடைய நினைவாற்றல் வியக்கத்தக்க அளவில் உள்ளது. இப்பகுதியை வாசிக்கும்போது, ஒரு புகைப்படக் கருவி ஒவ்வொன்றின்மீதும் சில கணங்கள் படிந்து, அவற்றைத் துலக்கமாகப் பார்க்க வழிசெய்தபடி நகர்ந்துபோவதுபோன்ற அனுவபம் கிடைக்கிறது.

இப்பகுதியில், இஸ்லாமியர்களும் இந்துக்களும் மதவேற்றுமை இன்றி வாழ்ந்த விதம்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் குறிப்புகள் உள்ளன. கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்களை அழைத்து மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் பெரியநாயக தேவர். ரமலான் மாதத்தில் ஒருநாள் ரங்கூனில் உள்ள எல்லாப் பள்ளிவாசல்களிலும் நோன்புக்கஞ்சி ஊற்றுகிற செலவுக்குப் பொறுப்பேற்றுக்கொள்கிறவர் நாகலிங்கத் தேவர். மதஅடையாளம் தாண்டிய இந்த உறவின் பதிவு இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஆங்கிலேயர்கள்தாம் இந்தியர்களை உடல்உழைப்பு வேலைகளுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் பர்மாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த நாட்டில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் புதிய ரயில்தடங்கள் போடுவதற்காகவும் கட்டடங்கள் கட்டுவதற்காகவும் ஆந்திரா, பீகார், ஒரிசா போன்ற பகுதிகளிலிருந்து உழைப்பாளர்களை அழைத்துச் சென்றார்கள். ரப்பர், தேயிலைத் தோட்டங்களிலும் கரும்பு, நெல் வயல்களிலும் உழைப்பதற்காக தமிழகப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடியேற்றப்பட்டார்கள். எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுச் சிறந்து விளங்கும் இந்தியர்களின் செல்வாக்கு, அங்கிருந்த பர்மீயர்களைப் பொறாமைப்பட வைத்தது. பொறாமை வெறுப்பாக வளர்ந்து 1930ல் கலகமாக வெடித்தது. துறைமுகத்தில் வேலை செய்துகொண்டிருந்த இந்தியத் தொழிலாளர்கள் மீது தன்னிச்சையாக தாக்கி கலகத்தைத் தொடங்கிவைத்தார்கள். 1938ல் வெடித்த இரண்டாவது கலகத்துக்கான பின்னணித் தகவல் விசித்திரமானது. அதே சமயத்தில் அடங்கிக் கிடக்கும் வன்மம் முற்றிலும் எதிர்பாராத ஒரு கணத்தில் வெடித்துப் பரவும் ஆபத்தையும் அடையாளம் காட்டுகிறது. இருபதுகளில் இஸ்லாமியர் ஒருவர் புத்தரைப்பற்றிய ஒரு வரலாற்று நூல் எழுதி வெளியிட்டார். அவர் தனது புத்தகத்தில் புத்தருக்கு தவறான உணவு கொடுக்கப்பட்டு அதனால் அவர் இறந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, அக்குறிப்பு புத்தரைக் கேவலமாக சித்தரிப்பதாகச் சொல்லி ஊ சூ என்பவன் தலைமையில் பர்மியர்கள் முஸ்லிம்களைத் தாக்கினார்கள். இந்திய முஸ்லிம்கள் முதலில் தாக்கப்பட்டார்கள். பிறகு, இந்தியர்கள் அனைவருமே தாக்கப்பட்டார்கள்.

நெஞ்சம் நிறைய வன்மத்தையும் வெறுப்பையும் சுமந்துகொண்டிருக்கும் கூட்டம் தூண்டப்படுவதற்கு ஒரு சின்ன அற்பக் காரணமே போதும் என்பதற்கு இந்தக் கலகங்களே எடுத்துக்காட்டு. உலகமெங்கும் நடைபெற்ற எல்லா இனமோதல்களும் இப்படித்தான் மெல்லமெல்லத் தொடங்கி வளர்ந்து, இறுதியில் பேரழிவை உண்டாக்குகின்றன. முதலில் பொறாமை. படிப்படியாக அது வளர்ந்து வெறுப்பாக மாறுகிறது. தீய எண்ணங்களால் மனத்தை நிரப்புகிறது வெறுப்பு. தவறான தகவல்களால் வெறுப்பு உரம்போட்டு வளர்க்கப்பட்டு ஆத்திரமாக மாற்றம் பெறுகிறது. குத்திக் கிழிப்பதற்கேற்ப கொம்புகளைச் சீவிவிட்டு தருணத்துக்குக் காத்திருக்கிறார்கள். மோதும் முதல் கணத்திலேயே ரத்த ஆறு ஓடுகிறது. பர்மாவில் நடைபெற்ற இந்திய மோதலும் அதே வழியில் நடைபெற்றிருப்பதை யூனூஸ் குறிப்புகள் பகிர்ந்துகொள்கின்றன. பர்மாவில் இரண்டாம் கலகம் நடைபெற்றபோது யூனூஸ் பதினைந்து வயது சிறுவன். இரண்டாம் உலகப்போரும் அப்போதுதான் தொடங்கியிருக்கிறது.

கலை என்கிற பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து நாடகக்குழுக்களை வரவழைத்த யூனூஸின் தகப்பனார் நிகழ்ச்சிகள் நடத்திய அனுபவங்கள் சுவைபட குறிப்பிடப்பட்டுள்ளன. டி.பி.ராஜலட்சுமி- கே.பி.மைதீன் சாகிப், கிட்டப்பா- சுந்தராம்பாள், விஜயாள்- பி.எஸ்.கோவிந்தன் ஜோடிகள் பர்மாவில் நாடகங்களை நடத்தியிருக்கிறார்கள். தியாகராஜ பாகவதர், சிதம்பரம் ஜெயராமன் தனியாகச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். நாடகங்களின் தொடர்ச்சியாக வெளியான திரைப்படங்களைப்பற்றியும் அவற்றின் செல்வாக்கைப்பற்றியும் விரிவாகவே பகிர்ந்துகொள்கிறார் யூனூஸ். நாடகங்கள் மீதிருந்த ஆசையால் சொந்தமாக ஒரு குழுவைத் தொடங்கி நடத்தி நஷ்டப்பட்ட அவர் தந்தையைப்பற்றிய செய்தியோடு இப்பகுதி முடிவடைகிறது.
உலகப்போர் பற்றிய யூனூஸின் பதிவுகள் தகவல்கள் என்னும் நிலையைக் கடந்து, வரலாற்றின் போக்கை நுட்பமாகக் கவனித்த நீதியுணர்வு கொண்ட ஒரு மனத்தின் வெளிப்பாடு என்னும் அளவில் நுட்பமாக உள்ளன. முதல் உலகப் போரின் இறுதியில் வெற்றிபெற்ற நாடுகள் தோல்வியடைந்த நாடுகளைப் பங்குபோட்டுக்கொண்ட தகவலிலிருந்துதான் உண்மையில் இப்பகுதி தொடங்குகிறது. தோற்றவர்கள் மீண்டும் வலிமை அடைவார்கள் என்பதை வெற்றியாளர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. தோற்றவர்களும் தாம் நடத்தப்பட்ட விதத்தை மறக்கவே இல்லை. இப்படி, சிறுகச்சிறுக தகவல்களை முன்வைத்துச் செல்லும் யுனூஸ் இரண்டாவது உலகப்போரின் தொடக்கத்தையும் சுருக்கமாகச் சொல்லி, ஜெர்மனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடைபெற்ற போரைச் சித்தரித்துவிட்டு சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நடந்த மறைமுகப்போரையும் சித்தரித்துவிட்டு பெர்ள் துறைமுகம் தாக்கப்பட்டதையும் பர்மாவை ஜப்பான் தன் ஆளுகைக்கு உட்படுத்தியதையும் சொல்லி நிறுத்துகிறார். பர்மா-ஜப்பான் உறவைச் சுட்டிக்காட்டுவதுதான் யூனூஸின் நோக்கமென்றாலும், அந்த உறவு நிகழ்ந்த வரலாற்றுப் பின்னணியை அவர் விவரிக்கும் விதத்தில், புத்தகத்தை வாசிக்கும் எளிய வாசகனுக்கு உலகப்போரையும் பர்மாவையும் இணைத்துப்பார்க்கிற பார்வையை வழங்கும் ஆர்வம் அடங்கியிருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

அவுங் சாண் தலைமையில் நிகழ்ந்த பர்மா விடுதலைப்போர்பற்றிய தகவல்கள், சுதந்திரமடையும் ஆவேசத்தில் அவுங் சாண் தன்னையறியாமல் ஜப்பானின் கைப்பாவையாக மாறிப்போன அவலத்தை ஒவ்வொருவரும் உணரும்வகையில் சொல்லப்பட்டுள்ளன. தனக்கும் தன் குழுவினருக்கும் ராணுவப் பயிற்சியை அளித்து, தனக்காக ராணுவக் குழுவை அனுப்பி, ஆங்கிலேயர்கள்மீது மோதி வெற்றி பெறச்செய்து பர்மாவின் விடுதலைக்கு ஜப்பான் உதவும் என்பது அவருடைய ஆழமான நம்பிக்கை. அவர் நினைத்தவை எல்லாம் நடந்தன. ஆட்சிப்பொறுப்பை ஒப்படைப்பதைத் தவிர. பர்மாவை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவித்த ஜப்பான், அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது. சுதந்திரப் போராளிகளை அமைச்சர் பொறுப்பில் அமர்த்தி, நெருக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டது. நீதி நிர்வாக விஷயத்தில் ஆங்கிலேயர்களைவிட மோசமானவர்களாக ஜப்பானியர்கள் இருப்பதைக் கண்டு மனம் நொந்துபோன அவுங் சாண் தக்க தருணத்துக்குக் காத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, யூனிஸ் குறிப்பிடும் நேதாஜியைப் பற்றிய தகவல்கள், இன்றுவரை புதிராகவே உள்ள மாபெரும் வரலாற்று இடைவெளியைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன. அந்தமானில் முகாமிட்ட தருணத்தில், அவுங் சாண் ஏமாற்றப்பட்ட சூழல் நேதாஜியின் கவனத்துக்கு வந்திருக்கக்கூடும். சிங்கப்பூர்மீது விமானத்தாக்குதல் நிகழ்த்திய ஜப்பான் இந்தியா மீதும் விமானத்தாக்குதல் நிகழ்த்த எந்தத் தடையும் இல்லை. அவர்கள் நேதாஜியின் சமிக்ஞைக்காகக் காத்திருந்திருக்கக்கூடும். நேதாஜி மிகப்பெரிய கடுமையான மனநெருக்கடிக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்றே இப்போது தோன்றுகிறது. அயல்படையுடன் இந்தியாவை நெருங்கும் நேதாஜி, ஒருவேளை ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியா விடுவிக்கபட்பட்டாலும், அது சுதந்திர இந்தியாவாக இருக்காது, ஜப்பானின் காலனிய நாடாக மாறக்கூடும் என்ற கணக்கைப் புரிந்துகொண்டிருக்கக்கூடும். இந்தியாவின் சுதந்திரம் தாமதமானாலும் பரவாயில்லை, வரலாற்றில் மீண்டுமொரு முறை காலனிய நாடாக மாறும் ஆபத்து இந்தியாவுக்கு தன்னால் நிகழ்ந்ததாக ஆகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கைஉணர்வு உந்த, இன்னும் தக்க தருணம் வாய்க்கவில்லை என்று ஜப்பானுக்குச் செய்திகள் அனுப்பியபடி, முடிந்தவரைக்கும் காலதாமதம் செய்யும் உத்தியை அவர் கடைபிடித்திருக்கக்கூடும். கசப்பான அந்த உண்மையை தாமதமாக உணர்ந்துகொண்ட ஜப்பான், வேறு சில காரணங்களைச் சுட்டிக்காட்டி, அவரைப் பின்வாங்கி அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கலாம். துரதிருஷ்டவசமாக, அந்தப் பயணமே அவருடைய இறுதிப்பயணமானது. யூனூஸ் தன் காரண அறிவையொட்டி வரலாற்றுச் சம்பவங்களை அலசி அவற்றின் சாரத்தைத் தொகுத்துத் தரும் விதம் நிறைவாக உள்ளது.

காலனிய நாடாக இருந்தாலும் பர்மாவில் நிலவிய நியாயமான நீதிநிர்வாகம்பற்றிய ஒரு தகவல் ஆச்சரியமளிக்கிறது. தரையில் தாழ்வாகப் பறந்த ஒரு விமானம் மோதி ஒருவர் இறந்துவிட்டார். இறந்தவர் இந்தியர். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சுயஉணர்வின்றி கிடந்து இறந்துபோனார். அவனுடைய பெற்றோர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் யூனூஸ் வீட்டுவழியாகவே செல்வது வழக்கம். அந்த முதியவர்களைப் பார்த்தவுடன் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று நினைத்த யூனூஸின் தகப்பனார் தனக்கு அறிமுகமான வழக்கறிஞரிடம் விவரங்களைச் சொல்லி, முதியவர்களின் சார்பாக வழக்கை எடுத்து நடத்தச் சொன்னார். விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதி விவரங்களுக்காகக் காத்திருந்தார் வழக்கறிஞர். இறுதியாக, அவர் எதிர்பார்த்த உண்மைத் தகவல் கிடைத்தது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு விமானம் தற்செயலாக ஏற்பட்ட ஒரு பழுதால் தாழ்வாகப் பறக்க முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக ஒருவர்மீது மோதியது உண்மை என்று கிடைத்த பதிலையே ஆதாரமாகக் கொண்டு இழப்பீடு கேட்டு விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தார். பல கடிதப் போக்குவரத்துக்குப் பிறகு, கூலிவேலை செய்துவந்த அந்த இளைஞன், ஒரு மாதத்துக்கு எவ்வளவு சம்பாதிப்பான் என்று கணக்கிட்டு, முப்பது மாதங்கள் சம்பாதிக்கக்கூடிய தொகையாக எழுநூற்றிஐம்பது ரூபாய் இழப்பீடு அளிக்க முன்வந்தது. அந்தத் தொகையை குறைவானதாக உணர்ந்த யூனூஸின் தந்தையார் மறுபடியும் கடிதம் எழுதத் தூண்டி, ஆயிரம் ரூபாய் கிட்டும்படி செய்கிறார். வழக்கறிஞரும் பாதிக்கப்பட்ட குடும்பமும் ஆளுக்குப் பாதியாக அந்தத் தொகையைப் பிரித்துக்கொள்கிறார்கள். இது நிர்வாகத்தின் ஒரு முகம். இதற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. பர்மாவில் இந்தியர்கள் தொடர்ந்து தங்கி வாழ்வதற்கு, தன்னை அயலவர் என்று அடையாளப்படுத்தக்கூடிய பதிவட்டை வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்றொரு சட்டத்தைக் கொண்டுவருகிறது. குறிப்பிட்ட நாளுக்குள் பதிவட்டை இல்லாதவர்களை இரக்கமில்லாமல் வெளியேற்றுகிறது. ஆபத்தை உணர்ந்த அப்பாவி மக்கள் மிகத்தாமதமாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்காக திரண்டு காத்திருக்கிறார்கள். நாள்கணக்கில் மைதானத்தில் காக்கவைக்கப்பட்டும் அவர்களுக்கு உரிய விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. அலைக்கழிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலிருந்து கப்பல் சென்று அவர்களை அகதிகளாக ஏற்றிச் செல்கிறது.

நிர்வாகத்தின் முகத்தைப் புரிந்துகொள்ள இன்னொரு எடுத்துக்காட்டையும் கவனிக்கலாம். ராணுவ ஆட்சிக்காலத்தில் வானொலி ஒலிபரப்பு தணிக்கைசெய்யப்படுகிறது. நாட்டில் வானொலி வைத்திருப்பவர்கள் எல்லாரும் உரிமம் வைத்திருக்கவேண்டும் என்பது கட்டாய விதியாக மாற்றப்படுகிறது. உரிமத்துக்கான விண்ணப்பத்தை முழுமை செய்து கொடுக்கும்போது, வானொலியையும் மக்கள் அலுவலகத்தில் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து வானொலியையும் உரிமத்தையும் பெற்றுச் செல்லவேண்டும். அதற்குப்பிறகு, அந்த வானொலியில் எந்த அலைவரிசையும் எடுக்காது. எல்லாமே அழிக்கப்பட்டுவிடும். முள்ளை எங்கு திருப்பினாலும் பர்மிய வானொலியைமட்டுமே கேட்கமுடியும். 1942 முதல் 1945 இல் பர்மாவை ஆங்கிலேயர்கள் மறுபடியும் கைப்பற்றிக்கொள்ளும்வரை, நிலைமை இப்படித்தான் இருந்தது. அவுங் சாண் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைவதும், ஊ சோ என்பவர் தலைமையில் திரண்ட ராணுவப்பிரிவு அவர்களைக் கொன்று, ராணுவ ஆட்சியை அமைத்தது. 1948ல் சுதந்திர பர்மா அவருடைய தலைமையிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ராணுவ ஆட்சியின் தொடக்கம் அந்த மண்ணில் வாழ்ந்த மற்றவர்களின் உரிமைகளை, சட்டத்தின் துணையோடு கொஞ்சம்கொஞ்சமாக பறிக்கும் செயல்களின் தொடக்கமாகவே அமைந்துவிட்ட சோகத்தையே யூனூஸ் குறிப்புகள் தரும் சித்திரம் வழங்குகின்றன. ஒரே இரவில் பல ஏக்கர் நிலமுள்ள ஒருவருடைய சொத்தை அபகரித்துக்கொண்டு வெளியேற்றுவது, பயணம் செல்ல இருக்கிற ஒருவர் மேற்கொள்ளவேண்டிய சிக்கலான நடைமுறைகள், பணப்புழக்கம்பற்றிய கட்டுப்பாடுகள் என மெல்லமெல்ல நெருக்கடிகளின் கரங்கள் பர்மிய இந்தியர்களை இறுக்கத் தொடங்கின. அந்த இறுக்கம் தாளாத ஒரு நிலையிலேயே தன் தந்தையும் தாயும் வாழ்ந்து மறைந்த, தான் பிறந்து வளர்ந்து ஆளான, சவுட்டானை விட்டு வெளியேறி ?¡ங்காங்கில் குடியேறிவிட்டார் யூனூஸ்.

யூனூஸின் பொதுவாழ்வுபற்றிய தகவல்கள் சுவையானவை. முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அண்ணா மற்றும் பல கலைஞர்கள் என பல தலைவர்கள் பர்மாவுக்கு வந்துபோன அனுபவங்களை நினைவிலிருந்து அவர் எடுத்துச் சொல்லும் விதம் அழகாக உள்ளது. மருத்துவத்துறையிலும் நீதித்துறையிலும் தனக்கு நெருக்கமாக இருந்த பல நண்பர்களைப்பற்றிய நினைவுகள் இந்த நூலில் உள்ளன. உதடு பிளவு அறுவைச்சிகிச்சையில் வல்லவராக இருந்த வாசுதேவன் என்னும் மருத்துவரைப்பற்றிய தகவல் ஆச்சரியமாக இருக்கிறது. சமீபத்தில்தான் இத்துறை சார்ந்த சாதனைகள் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றன. ஊடகங்களிலும் மீண்டும்மீண்டும் காட்டப்படுகின்றன. ஆனால் ஒரு மருத்துவர், இன்று இருக்கிற எந்த வசதிகளும் இல்லாத காலத்திலேயே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார் என்பதை அறியும்போது அந்த மருத்துவருக்கிருந்த சிரத்தையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ராஜன், சுப்பிரமணிய பிள்ளை, சுப்பிரமணிய ஐயர் என இன்னும் பல மருத்துவர்களைப்பற்றி யூனூஸ் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

யுனூஸின் உரைகள் பதினேழு வெவ்வேறு தலைப்புகளின்கீழே பொருத்தமாகப் பிரிக்கப்பட்டு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மு.இராமனாதனுக்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். பர்மாவிலிருந்து நடைபயணமாக வெளியேறிய வெ.சாமிநாத சர்மாவின் நூல்மட்டுமே, இத்துறை சார்ந்து இதுவரை முக்கியமான ஒரு ஆவணமாக இருந்தது. யூனூஸின் பர்மா குறிப்புகளையும் இனி இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ள எந்தத் தடையுமில்லை. புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது, அவற்றின்மீது ஆழமாகப் பதிந்திருக்கும் யூனூஸின் நினைவுத்தடங்களையும் பார்க்கமுடிகிறது.

(எனது பர்மா குறிப்புகள். செ.முஹம்மது யூனூஸ். தொகுப்பு. மு.இராமனாதன். காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில். விலை.ரூ165)

*
paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்