நினைத்தேன். சொல்கிறேன். Amway-யும் டெலி-மார்க்கெட்டிங்கும் பற்றி

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

PS நரேந்திரன்


இந்த Tele Marketer களிடம் சிக்கி அவஸ்தைப் படாதவர்களே U.Sல் இருக்க முடியாது.

வீட்டில் Caller id இருப்பதால், தெரியாத எண்ணிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நான் பெரும்பாலும் எடுப்பதில்லை. மேற்கூறிய, Tele Marketer களிடமிருந்து தப்பிக்கத்தான் இந்த ஏற்பாடு. அப்படி இருந்து, இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு டெலி மார்க்கட்டன் என்னை ஏறக்குறைய போட்டுப் பார்த்து விட்டான்.

‘நான் Lufthansa Calling Card கம்பெனியிலிருந்து பேசுகின்றேன். நீங்கள் இந்தியாவிற்கு ஃபோன் பேசுவீர்களா ? எவ்வளவு பேசுவீர்கள் ? எங்கள் Lufthansa ஏர்லைன்ஸ் கம்பெனி கார்டை வாங்கினால் உங்களூக்கு நிறைய மிச்சமாகும்… ‘ அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று அடுக்கிக் கொண்டிருந்தான்.

எனக்கோ, Lufthansa ஒரு ஏர் லைன்ஸ் கம்பெனியல்லவா ? அதுவும் ஜெர்மனியைச் சேர்ந்தது. அவர்கள் எப்போது இந்த மாதிரியான ‘காலிங் கார்ட் ‘ சில்லறை பிசினசில் இறங்கினார்கள் என மண்டைக்குள் CPU விர்ரென சுழன்று, ‘டேஞ்சர்…டேஞ்சர்… ‘ என்றது. சரி, என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என நினைத்துக் கொண்டு, ‘மேலே போ ‘ என்றேன்.

‘சார், நீங்கள் எங்கள் கார்டை வாங்கினால், சென்னைக்குப் பேச 18 சென்ட்கள்தான் ஆகும்…மற்ற ஊர்கள் என்றால் 24 சென்ட்கள்… ‘ என்று பேசிக் கொண்டே போனான். பேசுவது ஒரு இந்தியன் என்று தெளிவாகப் புரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, தேவையில்லாமல் அமெரிக்கன் accentல் பேச முயற்சி செய்து கொண்டிருந்தான்.

‘எல்லாம் சரிதான். நீ சொல்கிற ரேட்டுக்கு internetல் ஏகப்பட்ட கார்டுகள் கிடைக்கிறது. Lufthansa காலிங் கார்ட் என்று என்னிடம் கதை விடுகிறாய். அப்படியே லைனில் இரு. இன்னொரு லைனில் Lufthansaவை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, உன்னிடம் வாங்கிக் கொள்கிறேன்.. ‘ என்றேன்.

‘ஹி…ஹி…பரவாயில்லை சார்…நீங்கள் காலிங் கார்ட் உபயோகிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்…குட் பை ‘ என்று போனை வைத்து விட்டான்.

அவன் ஒரு ‘டுபாக்கூர் ‘ என்பது உடனடியாகப் புரிந்தது. இவனிடம் காலிங் கார்ட் வாங்கினால், கிரெடிட் கார்ட் எண்ணைக் கொடுக்க வேண்டியதிருக்கும். அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும் ?

‘பஜார்ல உஜாரா இருக்கணும்…அல்லாங்காட்டி நிஜார அவுத்துகினு பூடுவானுங்கோ… ‘ என்று நமது செ.ப. முன்சாமி சொன்னது நினைவுக்கு வந்தது.

********

ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்பு, Call Manager, Call Filter எல்லாம் வருவதற்கு முன்பு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இரவு, பகல் என்று பாராமல் நேரம் கெட்ட நேரத்தில் ஃபோன் செய்து, ‘குல்மால் பரிமள தைலம், கும்தலக்கடி லேகியம் ‘ என்று மாய்ந்து, மாய்ந்து கண்டதையும் விற்பதற்கு நம் உயிரை எடுப்பார்கள். ஃபோனை எடுத்து விட்டால், வைப்பதற்கு மிக சங்கடமாக இருக்கும். அந்த அளவிற்கு உருகி வழிவார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை. பிறகு ஒரு ஐடியா பண்ணினேன். இந்த மாதிரி ஃபோன் வரும்போது, சட்டென எடுத்து,

‘Pizza Hut…May I take your order ? ‘ என்பேன். எதிர் முனையில் கொஞ்சம் தயக்கம் இருக்கும். பிறகு ‘Oh…I am sorry.. ‘ என்று ஃபோனை வைத்து விடுவார்கள்.

சிறிது நேரத்தில் மீண்டும் அதே ஆசாமியிடமிருந்து ஃபோன் வரும். போனை எடுத்தவுடன் கொஞ்சம் குரலை மாற்றி,

‘சிங் லிங் சைனீஸ் ரெஸ்டாரண்ட்…குட் மார்னிங்.. ‘ என்று ஒரு போடு போடுவேன். இதற்குள் எதிர்முனை ஆசாமிக்கு இந்த ‘விளையாட்டு ‘ புரிந்திருக்கும். பேசாமல் ஃபோனை வைத்து விட்டு வேறு ஆசாமி தேடிப் போய்விடுவார். அப்படியும் விடாமல் கழுத்தறுக்கும் ஆசாமிகளுக்கும் ஒரு ஐடியா வைத்திருந்தேன்.

ஃபோனை எடுத்து, என் குழந்தையிடம் கொடுத்து விடுவேன்.

அவள், ‘அயோ…யய்ய பிய்ய யய்யா ? ‘ என்று கால்மணி நேரம் விடாமல் பேசிக் கொண்டிருப்பாள். எதிர் முனை ஆசாமி வெறுத்துப் போய், தானாக Mental ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி விடுவான்.

இதை இப்படியே விட்டால் எனக்கும் கிறுக்குப் பிடித்து விடும் என்று நினைத்து, Call Manager, Caller Id போன்ற எக்ஸ்ட்ரா சமாச்சாரங்களை வாங்கி வைத்திருந்தேன். மாதம் 30 டாலர் வரை அதற்கு தண்டம் அழுது கொண்டிருந்தேன். U.Sல் டெலி மார்க்கெட்டிங் சட்டம் கொஞ்சம் கடுமையாக்கப் பட்டிருப்பதால், இனி தொல்லை இருக்காது என்று நினைத்து, Caller Id தவிர்த்து மற்றவற்றை போன மாதம்தான் கேன்சல் செய்தேன். மழை விட்டும், தூவானம் விடாத மாதிரி நான் மேலே சொன்ன callகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

**********

‘Amway ‘ என்று ஒரு கொடுமை இருக்கிறதே…அது இதை விட மோசம்….அது பற்றிச் சொல்லி மாளாது சோதரர்களே…சொல்லி மாளாது…

அமெரிக்கா வந்த புதிதில், Texasல் ஒரு short term ப்ராஜெக்ட் பண்ணிக் கொண்டிருந்தேன். புதிதாகக் கல்யாணம் ஆனவன் என்பதால், என் கம்பெனிக்காரர்கள் ஒரு அருமையான ஹோட்டலில் suite எடுத்துக் கொடுத்திருந்தார்கள் (ஹூம்…அதெல்லாம் ஒரு காலமய்யா…).

சமையல் அறையுடன் கூடிய, இரண்டு பெரிய அறைகள் கொண்ட suite அது. இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நானும் என் மனைவியும் சூப்பர் மார்க்கெட் போய் தேவையான சாமான்களை வாங்கி வருவோம். அப்படிப் போனபோதுதான் அவர்களைச் சந்தித்தேன். Mr. ABC தம்பதிகள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தியர்கள்தான். அவர்கள் பற்றி மேலே கூறுமுன், கொஞ்சம் பேக்ரவுண்ட் சங்கதிகளைச் சொல்வது நல்லது என்று நினைக்கிறேன்.

ஒரு பத்து வருடங்களூக்கு முன்பு, U.Sல் இந்திய முகங்கள் மிகக் குறைவாகத்தான் தென்படும். அதிலும் ரிமோட் ஏரியாக்கள் என்றால், ஒரு 100 மைல் சுற்றளவுக்கு நீங்கள் ஒருவர் மட்டுமே இந்தியராக இருப்பீர்கள். யாராவது இந்தியர்கள் தென்பட மாட்டார்களா, அவர்களோடு பேச மாட்டோமா ? என்று ஏக்கமாக இருக்கும். அப்படிப் பட்ட சூழ்நிலையில், எங்காவது பார்க்கிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டிலோ இரண்டு இந்தியர்கள் பார்த்துக் கொண்டால் ஓடோடி வந்து பேசிக்கொள்வார்கள்.

‘நீங்க இந்தியாவா ? நானும் இந்தியா…நீங்க தமிழா ? ஹா…ஹா..ஹா…நானும் தமிழ்தான் ‘ என அளவளாவி ‘நீயும் நானும் ஒண்ணு, நாயி …த்துல புண்ணு ‘ என்று குலவிக் கொள்வார்கள். அப்புறம் ஒரு இரண்டு மாதத்திற்கு, இவர்கள் அவர்கள் வீட்டிற்குப் போக, அவர்கள் இவர்கள் வீட்டிற்கு வர, ஒரே ‘குஜாலமாக ‘ இருக்கும். திடாரென்று ஏதாவது அல்ப விஷயத்திற்கு சண்டை போட்டு முறைத்துக் கொள்வார்கள். கொஞ்சல், குலாவல் எல்லாம் ‘அம்புட்டுதேன் ‘.

இப்போது அமெரிக்கா வரும் இந்தியர்கள் வேறு விதமானவர்கள். எதிரெதிரே இரண்டு இந்தியர்கள் சந்திக்க நேரிட்டால், ஒன்று பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடுகிறார்கள். அல்லது தூரத்தில் ஏதாவது இந்திய முகம் தெரிந்தால், எதிர் பிளாட்பாரம் பக்கம் ‘நீ தெக்கே…நான் வடக்கே.. ‘ என்று தாவிக் குதித்து ஓடி விடுகிறார்கள். என்ன காரணம் என்று இதுவரை எனக்கு விளங்கவில்லை.

பேக்ரவுண்ட் போதும் என்று நினைக்கிறேன்.

Mr. ABC தம்பதிகள் எங்களூடன் இனிக்க இனிக்கப் பேசினார்கள். புதிதாக கல்யாணமானவர்கள் என்று தெரிந்தவுடன், நாங்கள் கண்டிப்பாக உங்கள் ஹோட்டலுக்கு வருகிறோம் என்று ஒரு நாள் குறித்துக் கொண்டு போனார்கள். எங்கள் இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இத்தனை அருமையான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்களே என்று.

குறிப்பிட்ட நாளில், மேற் சொன்ன இருவரும் எங்கள் ஹோட்டலுக்கு வந்தார்கள். கூடவே ஒரு மிகப் பெரிய பார்சல். என் மனைவி மிகவும் impress ஆகி விட்டாள். எனக்கு மூளையில் எச்சரிக்கை மணி மெதுவாக ‘டிங் ‘ என்றது. மிக மெதுவாகத்தான். ‘என்னடா, நேற்றுத்தான் பார்த்தோம். அதற்குள் இவ்வளவு பெரிய பார்சல் எதற்கு ? ‘ என்று. சரி, பெரிய இதயம் படைத்தவர்கள் போலிருக்கிறது என்று கொஞ்ச நேரத்தில் அதை மறந்து விட்டேன். பார்சலில், அருமையான, வித விதமான கண்ணாடிக் கோப்பைகள். குறைந்தது 25 டாலராவது இருக்கும்.

பேசிக் கொண்டிருந்த போது, பொத்தாம் பொதுவாக ‘Amway ‘ பற்றிக் கேட்டார்கள். எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்றேன். கொஞ்ச நேரம் அது பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு சாமான் விற்றால் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பது போன்ற விஷயங்கள். நான் ஏதோ pyramid scheme போல இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். மரியாதைக் குறைவாக நினைத்து விடப் போகிறார்களே என்று, அவர்கள் சொல்வதற்கெல்லாம் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தேன். ‘அஸ்திவாரம் ‘ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமில்லாமல்.

மறுநாள், இரவு ஒன்பது மணி போல Mr. ABC யிடம் இருந்து ஃபோன். அப்போதுதான் ஒரு ‘ரொமாண்டிக்கான ‘ மூடில் நானும் என் மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம். (ஹி..ஹி..புது மணத் தம்பதிகள் பாருங்கள்). ‘சிவ பூஜைக் கரடி ‘ மாதிரி இந்த ஃபோன் கால்….

‘விஷேஷம் ஒன்றுமில்லை. நாம் நேற்று Amway பற்றி பேசிக் கொண்டிருந்தோமே. நினைவிருக்கிறதா ? எனது நண்பர்கள் இருவர் உங்களுடன் அது பற்றி பேச விரும்புகிறார்கள். ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடம்தான்…பரவாயில்லையே.. ‘ என்றார்.

ஐந்து நிமிடம்தானே என்ற எண்ணத்துடன், ‘ஓ…பேசலாமே… ‘ என்றேன். என்னைச் ‘சவட்டிக் களைவதற்கு ‘ களம் தயாராகிக் கொண்டிருப்பது தெரியாமல்! வெவ்வேறு இடங்களில் இருந்த அவரின் நண்பர்கள் எங்களுடன் இணைந்தார்கள். Conference Call மூலமாக.

வெறும் ஐந்து நிமிடம்தான் என்று சொல்லப் பட்ட அந்தப் பேச்சு நீண்டு கொண்டே போனது. எவ்வளவு நேரம் தெரியுமா ? சொன்னால் நம்ப மாட்டார்கள்.

மூன்று மணி நேரம்!

என் வாழ்க்கையில் அதிக நேரம் பேசிய டெலிஃபோன் பேச்சு அதுவாகத்தான் இருக்க வேண்டும். என்னை எப்படியாவது ‘Amway ‘யில் இழுத்துப் போட வேண்டும் என்ற தீர்மானத்துடன், மூன்று பேரும் மாறி மாறி என்னைக் ‘கொளுத்தி ‘க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ‘இழுக்க ‘, நான் ‘வழுக்க ‘ நீண்டுகொண்டே போனது அந்தப் பேச்சு. மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு, இந்த ‘அறுப்பை ‘த் தாங்கிக் கொண்டிருந்தேன். சும்மாவா, பெரிய பார்சலல்லவா கொடுத்திருக்கிறார்கள் ?

அப்போதுதான் ‘Nothing is Free in America ‘ என்பதற்கு அர்த்தம் புரிந்தது.

செமத்தியாக மாட்டிக் கொண்டேன் என்று நினைத்துக் கொண்டே ‘ஊம் ‘ கொட்டிக் கொண்டிருந்தேன்.

‘….நம்ம P.V கூட இதை அங்கீகரித்து விட்டார். இன்னும் இரண்டொரு மாதத்தில் இந்தியாவிலும் Amway வரப்போகிறது… ‘

‘P.V யா ? யாரது ? ‘

‘அதாம்பா…P.V நரசிம்ஹா ராவ்…பிரதம மந்திரி… ‘ என்று என்னவோ நரசிம்ஹா ராவ் அவர்கள் பக்கத்து வீட்டு ‘ஒய்யான் ‘ போல சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

‘…ஆங்..ரமேஷ்…பிரதருக்கு சோகன்லால் சோக்குபாய் பட்டேல் பத்தி சொல்லேன் கொஞ்சம்… ‘ என்றார் ஒருத்தார்.

நம் ஊர்ப் பக்கம் பாட்டிகள் மகாபாரதக் கதை படிப்பார்களே, ‘அப்போது ஆணழகா, அபிமன்யு ஏது சொன்னான் ? ‘ என்று. அந்த மாதிரி கதையைப் போட ஆரம்பித்து விட்டார்கள் என்றால் பாருங்களேன்.

‘நல்ல வேளை…ஞாபகப் படுத்தினே…நம்ம( ?!) சோ. சோ. பட்டேல் இருக்கிறாரே….பெரிய ஆள்…நாற்பது வயசுதான் ஆகிறது அவருக்கு…கிட்டத்தட்ட நாலு மில்லியன் டாலர் சம்பாதித்து விட்டார். மாதம் அவருக்கு அறுபதினாயிரம் டாலர் வருமானம்…இந்த வயசிலேயே ரிட்டயர் ஆகிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளேன் ‘ என்று Amwayயின் மகத்துவத்தைஅளந்து ஊற்றினார்கள். உண்மையோ, பொய்யோ யாருக்குத் தெரியும் ? என்னால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

வந்த கோபத்தில், அவர்கள் மூன்று பேரையும் பிடித்து, மென்னியை ‘நற நற ‘ வென்று கடித்துத் துப்ப வேண்டும் போல இருந்தது. வருவது வரட்டும் என்று ஃபோனை ‘டொக் ‘கென்று வைத்து விட்டேன்.

பின்னே ? புதுப் பொண்டாட்டியை பக்கத்தில் வைத்துக் கொண்டு, இவர்கள் கொடுமை தாளாமல் சோகத்தில் சொக்கிப் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இவர்கள் என்னடாவென்றால் எவனோ, சோகன்லால் சோக்குபாய் பற்றிப் பேசி என்னை வாட்டி, வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நல்ல காலம், இன்றுவரை அந்த மூன்று பேரும் என் கண்ணில் தட்டுப் படவில்லை.

கண்டவர்கள் உடனடியாக எனக்குத் தெரிவித்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

*********

அதற்கப்புறம் யாராவது Amway என்று ஆரம்பித்தால், தலைக்கு மேல் ஒரு பெரிய கும்புடு போட்டு விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிடுவேன்.

புதிதாக U.S வரும் இந்தியர்களை, எனக்குச் செய்தது போல், யாராவது ஒரு Amway ஆசாமி ‘வெச்சி வாங்கியிருப்பான் ‘ என்று நினைக்கிறேன். அதுதான் சக இந்தியர்களைக் கண்டாலேயே, இந்த ஓட்டம் ஒடுகிறார்கள் என்பது என் எண்ணம்.

நிஜக் காரணத்தை இனிமேல்தான் ஆராயவேண்டும்.

********

psnarendran@hotmail.com

Series Navigation