நித்தம் நடையும் நடைப்பழக்கம்

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

வை கலைச்செல்வி


நாகலிங்கப் பூவைப் பார்த்ததுண்டா நீங்கள்?

மிகவும் வித்தியாசமான நறுமணத்துடன், தாமரையின் இதழ்களை ஒத்த விரிந்த ஐந்து இதழ்களின் நடுநாயகமாக வீற்றிருக்கும் லிங்கம் போன்ற ஓர் அமைப்பிற்கு, பல தலைகளைக் கொண்ட ஒரு நாகம் குடை பிடித்தாற் போலத் தோற்றமளிக்கும் அதிசயமான பூ அது.

‘தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா!’ என்று எந்நேரமும் நமச்சிவாயன் நாமம் போற்றிட்ட அக்கால சைவப் பெரியார்கள் இதன் தோற்றத்தைக் கண்டு,அதிலும் இறைவனையே கண்டு ‘நாகலிங்கப்பூ’ என்றே பெயர் சூட்டிவிட்டார்கள். மரம் என்றெல்லாம் சாதாரணமாக அதை வகை பிரித்துவிட முடியாது. அதன் பிரமாண்டமான அகல உயரம், ஒரு சில கணங்களாவது வாய் பிளக்க வைத்து உங்கள் இதயங்களில் ஒரு சிலிர்ப்பை எற்படுத்துவது நிச்சயம். கல்லூரி நாட்களில் (தமிழகத்தில்) விளையாட்டாக நாலைந்து பேர் கைகோர்த்து வட்டமாகச் சுற்றியும் அதைப் பிடிக்குள் அடக்கமுடியாதது பற்றி எந்நேரமும் விவரிக்கமுடியாத ஒரு கர்வம் கலந்த திகைப்பும், ஏன் அதன் மீது ஒரு பாசமே ஏற்படுத்திக்கொண்டு அதிகாலையில் அதனடியில் அமர்ந்து படித்த பொழுதுகள் இன்னமும் மெருகு குலையாமல் என் நெஞ்சில் பத்திரமாய்!

எங்கள் கல்லூரி வளாகத்திற்கே பெருமை சேர்த்த அதனடியில் அதிகாலையில் சென்று, ஒரே ஒரு முறையாவது முழுப்பூவாய் கீழே விழுந்திருக்காதா என்று ஆர்வமாய் ஆராய்வது – எத்தனை முறை ஏமாந்தாலும் – எங்களில் பலருக்கு வாடிக்கை. நான்கு வருட கல்லூரி விடுதி வாழ்க்கையில் நான் அடையாத பாக்கியம் அது.

வருடங்கள் பல ஓடி, வாழ்க்கை ஓட்டத்தின் பங்கெடுப்பில் கிட்டத்தட்ட மறந்தே போன ஒரு நாளில், சிங்கப்பூர் சிராங்கூன் சாலையின் சீனிவாசப்பெருமாள் கோயிலை அடுத்துள்ள ஞான முனீஸ்வரர் கோயிலில், ஒரு சனிக்கிழமை காலைப்பொழுதில் பக்தர் ஒருவர் பல விதமான மலர்களைக் கொண்டு வந்து கொடுக்க, அங்கு திருப்பணியில் ஈடுபட்டிருந்தவர் அவற்றை அழகாக அலங்கரிக்க முற்பட்டபோது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!

ஒரு பூவைப் பார்க்க ஏங்கிய எனக்கு – பை நிறைய நாகலிங்கப்பூக்களை தன் சொந்த செலவில், ஆர்வத்தில் கொடுத்தவரின் நல்லெண்ணத்தை (பல காலமாக இதைச் செய்து வருகிறாராம்) வியக்கும் நேரத்தில் – நான் கேட்காமலேயே இரண்டு பூக்களை கோயிலில் பணிபுரிபவர் என்னிடம் கொடுக்க,

மாலை மயங்கும் மஞ்சள் நேரத்தில் சிங்கையில் சில கடைத்தொகுதிகளின் முன்பாக பராமரிக்கப்படும் செயற்கை நீரூற்றுகள், வண்ண வண்ண விளக்குகளின் ஒளிப்பின்னணியில் குபீரென்று உயிர் பெற்று எழுவது போல் ஊற்றெடுத்தது மகிழ்ச்சி. கிடைத்தற்கரிய ஒன்றை முயற்சியே இல்லாமல் அடைந்துவிட்டஉணர்வு மனத்தை நிறைக்க வீடு திரும்புகையில்,

நாகலிங்கப்பூவின் நறுமணத்தாலும், பொக்கிஷம் போல நான் அதை ஏந்தியிருந்த விதத்தாலும், அந்த நேரத்தில் என் அகத்தைப் பிரதிபலித்த முகத்தாலும் உந்தப்பட்டு, மின் தூக்கியில் உடன் பணித்த சீன நபரொருவர் மிக ஆர்வமாய் விசாரித்து விளக்கம் பெற்றுக்கொண்டார். அன்று மாலையே எதேச்சையாக மீண்டும் சந்திக்க நேர்ந்த பொழுது நாகலிங்கப்பூவை வாங்குவதற்காகவே காலையில் தானும் கோயிலுக்கு சென்றதைக் குறிப்பிட்டார்.

அன்று ஆரம்பித்தது, இன்று அவரது குடும்பத்தை எங்களுக்கு மிக நெருங்கிய அண்டை வீட்டினராக்கிய நட்பு (ஒரு தளம் கீழே குடியிருந்தாலும்) .

இந்நிகழ்ச்சியை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளக் காரணம் நாகலிங்கப்பூவின் மீதான என் பிரமிப்பு அல்ல. அது போதிமரமாகி என்னுள் ஏற்படுத்திய விழிப்புணர்வே. ஆம்! இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு வந்து ஒன்றரை வருடமாகியும், அன்றாட வேலைகள், பொறுப்புகள்,கவலைகளுக்கிடையே அக்கம் பக்கத்தினருடனான அறிமுகம், நட்பிற்கு, நானும் சரி, அவர்களும் சரி தேவையான அளவு முயலவில்லை என்ற உண்மையை முகத்திலறைந்ததுபோல் உணர்ந்தது அன்றுதான்! அதே சீன நபரை பல நாட்கள், வேலைக்குச் செல்லும் அவசரத்தில் நான் கண்டதுண்டு. புன்னகைப்போ, நல விசாரிப்போ, எதுவுமே செய்துகொண்டதில்லை. இதற்கு நான் மட்டுமே பொறுப்பு இல்லையென்றாலும், ஒரு காரணத்தைத் தேடிக்கொண்டு தேவையற்ற தயக்கத்தை, இறுக்கத்தை வளர்த்ததில் எனக்கும் பங்குண்டு!

எதிராளி புன்னகைக்கட்டுமே என்று எதிர்பார்க்கும் நாமெல்லாரும் மறந்துவிடும் ஒரு முக்கியமான விஷயம், அந்த நபருக்கு நாம் எதிராளி என்பதே. எதிர்ப்படும்போது முதலில் புன்னகையை உதிர்ப்பது ஏன் நம் உதடுகளாக இருக்கக்கூடாது? வணக்கம் சொல்லவோ அல்லது கை குலுக்கவோ முதல் முயற்சி ஏன் நம்மிடம் தோன்றக்கூடாது ? நட்பின் ஒலி(ளி)பரப்பு நம் இதயத்தில் ஏன் தொடங்கக்கூடாது ? மற்றவர்களை அந்த அலைவரிசைக்கு ஈர்க்கும் காந்தமாக ஏன் நாம் திகழக்கூடாது ?

“அறிவை விரிவு செய் ! அகண்டமாக்கு!” என்று அறைகூவினாரே புரட்சிக்கவிஞர், அதற்கும் முதற்படியாக நம் பார்வை, கோணம் விரிவடைய வேண்டும்.

நம் முன்னோர்கள் ஒரு கதை சொல்வதுண்டு .

நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்து இறைவனைச் சந்தித்த ஒருவர் வாழ்க்கைக்குத் தேவையான, உலகிலேயே மிகச் சிறந்த ஒன்றை தனக்குத் தரும்படி பரம்பொருளை யாசித்தாராம். இறைவனும் இரண்டு பைகளைக் கொடுத்து ஒன்றை முதுகிலும் மற்றொன்றை முன்னாலும் தொங்கவிட்டு, பக்தனிடம் கூறினாராம்:
“பின்னால் உள்ள பையில் பிறரது குறைகளை நிரப்பு; நிரப்பியபின் அதைப் பார்க்காதே; அதைப் பற்றி அதிகம் எண்ணாதே! முன்னால் உள்ள பையில் உனது குறைகளை நிரப்பு;எப்போதும் அதையே கவனித்து அந்தச் சுமையை குறைக்கப் பார்; உன் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்!” என்றாராம்.

பிறரது செயல்களில் குற்றம் பார்த்துப் பார்த்தே சுற்றம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் நாம் . நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் பித்தமும் உண்டு; புனிதமும் உண்டு. புனிதத்தை வளர்ப்பதும் , பித்தத்தை அழிப்பதும் நம் முயற்சியில் அடக்கம். ஒவ்வொரு நாளும் நமக்குள்ளிருக்கும் அசுரனை (தீய குணங்களை) அழித்து, அன்புருவாய் புதிதாய்ப் பிறப்பெடுப்போம்! அது அவ்வளவு எளிதானதில்லை என்பதை அறிவேன் நான்.

“நித்தம் நடையும் நடைப்பழக்கம்” – எனக்கென்னவோ தமிழ் மூதாட்டி கால்களால் நடக்கும் செயலைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பார் என்று தோன்றவில்லை. அனுதினமும் நாம் கடைப்பிடிக்கும் வாழ்வு நடையையே அவர் பழகிக்கொள்ள உபதேசித்திருப்பார். இன்றுவரை நாம் வேறுமாதிரி இருந்திருக்கலாம். மனிதர்கள் எப்போதும் பழக்கத்திற்கு அடிமையானவர்களே! ஆனாலும் என்ன? பழக்கத்தைப் பழக்கத்தால் மாற்றுவதுதானே இயல்பு! விடாமுயற்சியுடன், விரிந்த பார்வையுடன் நம்முள்ளிருக்கும் நற்குணங்களை வெளிக்கொணரப் பழகுவோம் வாருங்கள்!

நன்றி : சிங்கைச்சுடர் ஜனவரி 2003


girijanathan@yahoo.com

Series Navigation

வை கலைச்செல்வி

வை கலைச்செல்வி