நான் தான் நரகாசூரன் பேசறேன்….

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்என்ன நல்லாயிருக்கீங்களா. என்னை ஞாபகமிருக்கா? அட்லீஸ்ட் என் பேரையாவது கேள்விப்பட்டாப்பலே இருக்கா? இருக்கிறவங்க ஒதுங்கிக்கோங்க. நான் புராணகாலத்து ஆளு. பவர்ஃபுல் ஃபேமிலி பேக்ரவுண்டு. அப்பா, பகவானின் அவதாரமான வராகர். அம்மா, இன்னைக்கும் உங்க பாரத்தையெல்லாம் பொறுமையா தாங்கிகிட்டு – அதே சமயம் கோபம் வந்தா ஒரு உலுக்கு உலுக்கி உங்களை கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பி வைக்கும் பூமாதேவி.
நானும் சோப்ளாங்கியில்லை. வில்லாதி வில்லன். அதனாலே அசுரன்னு கூப்பிட்டாங்க. பிராகஜோதிஷ என்ற நகரத்தை (உங்க பாஷையிலே நாடுனு வெச்சிக்கோங்க) கட்டி ஆண்டவன். சுற்றி, கிரிதுர்க்கம்; அக்னி துர்க்கம்; ஜல துர்க்கம்; வாயு துர்க்கம்ன்னு நாலு கோட்டைகளை கட்டி கொடிகட்டி வாழ்ந்தவன். என்னை மீறி ஒரு பயல் உள்ளார வந்துட முடியாது.
மிலிட்டரியும் அப்படி தான். நாஜி படைங்களை விட மோசம். லேசா நான் கண் ஜாடைக் காண்பிச்சாலே போறும், எதிராளிங்களை கடிச்சி குதறாம திரும்ப மாட்டானுங்க. பாசக்கார பயலுங்க.
தேவருங்கன்னு சொல்லிகிட்டு இந்திரன் பின்னாலே ஒளிஞ்சிகிட்டு திரிஞ்சவனுங்க எங்க கிட்ட பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்ல.
இப்படித் தான் ஒருநாள், இந்த இந்திரன், என்னையப் பத்தி கிருஷ்ண பகவான் கிட்ட ‘போட்டுக் கொடுக்க’, அவரு படையோட போருக்கு கௌம்பி வந்துட்டாரு. கூட, வில்லும் அம்புமாய் அவரோட சம்சாரம் சத்யபாமா அம்மா.

-2-

உக்கிரமான சண்டை. ஒரு கட்டத்திலே, நான் விட்ட மகாசக்தி சூலம் தாக்கி பகவான் மயங்கி விழ, கோபமாகிப் போன சத்யபாமா விட்ட அம்பில் நான் அடிபட்டு ரத்த சகதியாய் சரிந்த அந்த கிளைமாக்ஸில் தான் தெரிஞ்சது, என்னோட அம்மாவான பூமாதேவியோட அம்சம் தான் சத்யபாமான்னு.
சந்தோஷமாயிடுச்சு. உடனே, ‘நான் சாகும் இந்த தினத்தை உலகமெல்லாம் சுபதினமாய் ஜனங்க கொண்டாடணும்’ னு வரம் கேட்டு, அதுக்கு அம்மாவும் பகவானும் ‘ஓகே’ சொன்னதை காதாறக் கேட்ட பிறகே திருப்தியாய் கண்ணை மூடினேன்.
இப்படியான ஒரு வரத்தை சாகுற நேரத்திலேயும் தவறாமக் கேட்டு வாங்கின ஒரு ஜீவன் , ஈரேழு பதினாங்கு லோகத்திலேயும் என்னைத் தவிர வேறு யாருமிருக்க முடியாது. இதுக்காகவே இந்த மாசம் 21ம் தேதி அமாவாசை அன்னைக்கி வர்ர என்னோட நினைவு நாளன்னிக்கி அதாங்க, தீபாவளின்றீங்களே அன்னிக்கு மலர்லியோ இல்லே தந்தியிலியோ முழுப் பக்கத்துக்கு நினைவஞ்சலி விளம்பரம் கொடுக்கலாம்.
ஆனா, நீங்க மாட்டீங்க. தெரியும். ஏன்னா, என்னாலே உங்களுக்கு பைசா பிரயோஜனமில்லைனு நினைக்கிறீங்க. எத்தனயோ ஆயிரங்கள் வருஷங்களாய் என்னாலே எத்தனையோ கோடி பேருக்கு ஆதாயம், ஆனந்தம் கிடைச்சிட்டு வருதுன்னு யோசிக்க உங்க (மனுஷ) சுபாவப்படி சவுகரியமாய் மறந்திடுறீங்க.
குடிசையிலே உட்காந்து பட்டாசுக்கு திரி, பத்த வைக்க ஊதுபத்தி திரிச்சு தர்ர தேவநேசன், பிளாட்பாரத்தில் பட்டாசுகளை பரப்பி விற்கிற காதர்பாய், மைசூர்பாக் கிண்டி விற்கிற ராமாராவ் முதல் ஜவுளி சரக்குகளை லாரியில் அனுப்பிய கையோடு லட்சங்களை எண்ணி கல்லாவில் போடும் ராம்லால்சேட் வரை பேதங்களில்லாம தீபாவளி சீசன்லே பணம் பாக்கறாங்கன்னா அது யாராலே ?

-3-

அதே போல, தீபாவளி கொண்டாட்டத்தை சொல்லுங்க. அதை அடிச்சிக்க முடியுமா?
ஆயிரம் பண்டிகைகள் வந்து போகட்டுமே, ஜனங்களுக்கு தீபாவளி சந்தோஷம் கொண்டாட்டம் எப்பவுமே ஸ்பெஷலாச்சே ! இதை இன்னைக்கு நேத்தா பாக்கறேன் !!
வெளி தேசத்திலே இருந்து தாடியோட குதிரையிலே வந்தவங்க, கப்பல்லே வெள்ளை வெளேர் தோலோட வந்திறங்கினவங்க காலத்தேயும், பிறகு சுதேசிகள்லே சட்டையிலே ரோஜாப் பூவை சொருகிகிட்டிருந்தவரு, அவரு பொண்ணு, பேரன் காலத்தேயும் பார்த்து கிட்டுதான் வரேன்.
ராவணன் மாதிரியான எங்களுங்களை மதிச்சு விழாயெடுக்கிற தமிழாளுங்க ஊர்களை எடுத்துகிட்டாக் கூட, முழங்கை வரைக்கும் சட்டை போட்டுகிட்டு கருப்பா நெடு நெடுனு ஆஜானுபாக இருந்தவரு; கொஞ்சம் குள்ளமா, மூக்குப் பொடி உறிஞ்சிகிட்டு கரகரத்தக் குரல்லே அடுக்கடுக்காப் பேசினவரு; தொப்பியும் கருப்பு கண்ணாடியுமாய் செக்கச்செவேன்னு இருந்தவரு… இவங்க காலத்தேயும் பாத்திருக்கிறேன்.
ஒரு மாசத்துக்கு முன்னாலேயே ஜனங்களுக்கு தீபாவளி மூட் தொத்திக்கும். வீட்லே பொம்பளைங்க பட்சணங்க செய்யற முஸ்தீபுகளை அப்பவே ஆரம்பிச்சிடுவாங்க. பொடுசுங்க பட்டாஸ், புதுத் துணி கனவுலே அலைஞ்சிகிட்டிருக்கும். தீபாவளி அன்னிக்கு முந்தின நாள், அடுத்தவங்க முழிச்சிகிட்டாங்களானு ஒருத்தரை ஒருத்தர் எட்டி பாத்துகிட்டே விடிய விடியத் தூங்காம சிறுசுகள் படுகிறபாடு, நாலு மணிக்கே பரபரன்னு எழுந்து தலைக்கு குளிச்சி அன்றைக்கு மாத்திரம் அழாமல் சீயக்காய் விழுந்து சிவந்த கண்களோடு பட்டாசுடன் வாசலுக்கு ஓடும் துள்ளல்; பக்கத்து வீடுகளுக்கு தட்டுகளில் பட்சணங்கள் பரிமாற்றும் அம்மாக்களின் ஆர்வம்; குடும்பத்தோடு ஈவ்னிங் ஷோ தியேட்டருக்கு படையெடுக்கும் அன்னியோன்யம்.

-4-

காலம் காலமாய் எந்த படையெடுப்புக்கும் ; சித்தாந்தங்களுக்கும் வளைஞ்சிடாம அந்தந்த காலகட்டத்துக்கு ஏத்தபடி அனுபவிக்கப்படுகிற இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை இதுவரை பாத்துகிட்டு தானிருக்கேன்.
ஆனா, இது, இந்த பிடிமானம் எத்தனை நாளைக்கு தாக்குபிடிக்குமென்னு இப்போ பயம் தோணுது.
ரத்தமும் சதையுமாய் உணர்ச்சிகளோட மனுஷனாய் இருந்தவன், இப்போ எலக்ட்ரானிக் சாதனங்களின் உதிரிபாகங்கள்லே ஒன்னாயிட்டான். வாழ்க்கையை மணிபர்ஸிடமும், கைகடிகாரத்திடமும் அடமானம் வெச்சிட்டு அரிச்சந்திரன் கணக்காய் அடிமையாய் பின்னாலேயே போயிட்டிருக்கான். சந்தோஷமானாலும் துக்கமானாலும் ஒரிஜினாலிட்டி இல்லை.
‘வேணாங்க. ரசனையில்லாத வாழ்க்கை வேஸ்டுங்க. வாழ்க்கையை உணர்வுபூர்வமாய் பாருங்க. அதோட ஒவ்வொரு கட்டத்தையும் தவற விடாம அந்தந்த காலத்திலேயே சுயமாய் அனுபவிக்க பாருங்க. தீபாவளி பண்டிகை மாதிரியான சந்தோஷ சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துங்க; வெளியே வாங்க, முகமூடியை கழற்றி வெச்சிட்டு.’
தீபாவளியை ஏற்படுத்தி தந்துக்கு கைமாறா உங்ககிட்ட நான் கேட்பதெல்லாம் இதை தானுங்க.

**************

vee.raj@rediffmail.com

Series Navigation

சாய் (என்கிற) பேப்பர்பாய்

சாய் (என்கிற) பேப்பர்பாய்