நாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

எஸ். கே. அரவிந்தன்


முன் எப்போதும் இல்லாத புதுமையாய், முதல் தடவையாகப் பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை ஒருசேர நாட்டுடமையாக்குவதாக அறிவித்து, ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களான மரபுரிமையருக்கு ரூபாய் ஆறு லட்சம் பரிவுத் தொகை வழங்குவதாக நமது முதலமைச்சர் அண்மையில் அறிவித்துள்ளார். தற்காலத் தமிழ் இலக்கியத்திலும் கவின் கலைகளிலும் ஈடுபாடுள்ளவர்களுக்கெல்லாம் காதில் தேன் வந்து பாயும் செய்திதான் இது. இதற்காகத் தமிழக முதல்வரைத் தமிழ் நெஞ்சங்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி அவருக்கு நன்றி தெரிவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாரதியில் தொடக்கம்

சான்றோர் நூல்களை நாட்டுடமையாக்கி அவர்களின் வாரிசுரிமையுள்ளவர்களுக்குக் கணிசமாக ஒரு தொகையினை அளிப்பது முன்பெல்லாம் மிகவும் அரிதாகவே நிகழும் சம்பவமாகும். தமிழ் நாட்டைப் பொருத்தவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள்தாம் முதன் முதலில் தமிழ் நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன. நாடு விடுதலையடைந்தபின் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்த தொடக்க காலத்தில் நடந்த நல்ல நடவடிக்கைகளுள் குறிப்பிடத் தக்கது என்று இதனைக் கூற வேண்டும்.

பாரதியாரின் படைப்புகள் முழுவதையும் மிக மிகக் குறைந்த விலைக்கு ஒரு வியாபாரி வாங்கிவைத்திருந்தார். பிறகு அது திரைப்பட அதிபர் ஏவி மெய்யப்பச் செட்டியாரிடம் கைமாறியது. அந்தக் காலத்தில் ஏவி எம் எடுத்த தமிழ்த் திரைப் படங்களில் எல்லாம் பாரதியாரின் பாடல்கள் விரவிக் கிடந்தமைக்கு இதுவும் ஒரு காரணம்! ஏவி எம் அனுமதியின்றி பாரதி பாடல்களை பாரதியாரின் குடும்பத்தாரே பயன்படுத்த வியலாத நிலைமை!

அன்றைய தமிழ் நாடு உள்ளிட்ட சென்னை ராஜதானியில் நூல்கள் நாட்டுடமையாகப் பெறும் இலக்கியப் படைப்பாளி என்கிற கௌரவம் பாரதியாருக்கு அவர் மறைந்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டியது. இந்த இருபத்தேழு ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற துணைவியார் செல்லம்மா தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் படாத பாடுகள் எல்லாம் பட்டு முடித்துவிட்டிருந்தார்! இருப்பினும் வாழ்க்கையின் இறுதிக்காலத்திலேனும் விடியலைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ஆறுதலான விஷயந்தான். செல்லம்மாவைச் செல்வம் மிக்க அம்மாவாகச் செய்தது, பாரதி நூல்கள் நாட்டுடமை.

தொடரும் நற்கருமம்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பாரதியின் நூல்களுக்குப் பிறகு வேறு எந்தப் படைப்பாளியின் நூல்களும் நாட்டுடமையாக்கப் படவில்லை. 1971 ல் மு. கருணாநிதியின் தலைமையில் தொட ர்ந்த தி. மு. க. ஆட்சியிலிருந்துதான் இலக்கியப் படைபாளிகளின் நூல்களை நாட்டுடமையாக்கும் நடைமுறை தொடரலாயிற்று. வேறு எந்த மாநிலத்திலும் இப்படியரு நடைமுறை வழக்கத்திற்கு வரவில்லை. எந்தவொரு நற்செயலுக்கும் முன்னோடியாக விளங்கும் பெருமைக்குரிய தமிழகம், இதிலும் பாராட்டுக்குரியதாகிறது.

தமிழ்ச் சான்றோரின் நூல்களை நாட்டுடமையாக்குவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பதுபோலத்தான். சான்றோரின் நூல்கள் எளிதாகவும் பல பதிப்பகங்கள் மூலமாகவும் வாசகர்களுக்குப் பரவலாகக் கிடைப்பது ஒரு நன்மை என்றால் சான்றோரின் வாரிசுதாரர்களுக்குக் கணிசமான ஒரு தொகை பரிவுத் தொகையாக அரசிடமிருந்து கிடைத்துவிடும். பதிப்பகத்தாரிடமிருந்து தவணை, தவணையாகக் கிடைக்கக் கூடிய தொகையைக் காட்டிலும் அது மிகவும் கூடுதலாகவும் இருக்கும்.

அதிலும் இப்போது ஒரே சமயத்தில் பதினான்கு சான்றோரின் நூல்கள் நாட்டுடமையாவது தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கும். செய்தி கேட்ட பதினான்கு சான்றோரின் வாரிசுதாரர்களுக்கும் அதேவிதமான உணர்வு ஏற்பட்டிருக்கும்.

ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களுக்கும் பரிவுத் தொகை ரூபாய் ஆறு லட்சம் என்னும்போது அது ஒரு கணிசமான தொகையாகத் தெரிந்தாலும் ஒரு சான்றோருக்கு அதிக எண்ணிக்கையில் வாரிசுதாரர்கள் இருக்கும் பட்சத்தில் அது பலவாறாகப் பகிர்வு செய்யப்பட்டு, ஒவொரு வாரிசுதாரருக்கும் கிடைக்கும் தொகை மிகவும் அற்பமாகப் போய்விடும் சாத்தியக் கூறும் உள்ளது. குறிப்பாக இன்றைக்கு இருக்கிற விலைவாசி நிலவரம், துரித கதியில் ஊதி உப்பும் பண வீக்கம் போன்ற பொருளாதார இடர்ப்பாடுகளைப் பார்க்கிறபோது இப்பிரச்சினை பூதாகாரமாகத் தென்படும்.

பரிவுத் தொகைக்கு நிரந்தர நிர்ணயம்

ஒவ்வொருமுறையும் சான்றோரின் நூல்கள் நாட்டுடமையாவதையட்டி அறிவிக்கப்படும் பரிவுத்தொகையின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் பரிவுத் தொகை வெவ்வேறாக இருப்பது தெரியவரும். இவ்வாறு சான்றோர்களிடையே பேதம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் சான்றோர் அனைவர் நூல்களுக்கும் உரிய பரிவுத் தொகை ரூபாய் பத்து லட்சம் என நிரந்தரமாக நிர்ணயம் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.

இன்று ஆயிரக் கணக்கான கோடிகளில் வரவு செலவுகள் நடைபெறும் மாநில அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டால் ஓர் ஆண்டில் இருபது சான்றோரின் நூல்களை நாட்டுடமையாக்கினாலும் அதனால் அரசுக்கு ஏற்படக் கூடிய மொத்தச் செலவு வெறும் இரண்டு கோடி ரூபாய் தானே!

மேலும், ஒரு சான்றோரின் வாரிசுதாரர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் சரி சமமாக இருப்பார்கள் எனக் கருதுவதற்கில்லை. ஒரே குடும்பத்தில் ஒருவர் கூடுதலான வருவாய் பெற்று வசதியாக வாழ்கையில் இன்னொருவர் வறிய நிலையில் திண்டாடிக் கொண்
டிருப்பதைக் காண்கிறோம். சான்றோரின் வாரிசுதாரர்களில் ஒருவருக்கு நாட்டுடமையின் பயனாகக் கிடைக்கும் தொகை அவரது சேமிப்பை மேலும் கூடுதலாக்கும் அதிருஷ்டப் பரிசாக அமைந்து விடுகையில் அதே சான்றோரின் மற்றொரு வாரிசுதாரருக்கு அந்தத் தொகை பற்றாக்குறையாக இருக்கக் கூடும். குடும்ப நபர்களின் எண்ணிக்கை, மருத்துவச் செலவு, கல்வி எனப் பல காரணிகளால் ஒரு வாரிசுதாரருக்குப் பரிவுத்தொகை கிடைத்தாலும் அது போதிய பயன் தராது போய்விடக்கூடும்.

சரிதானா சமப் பங்கீடு?

எனவே நாட்டுடமையினையட்டி ஒரு சான்றோரின் வாரிசுகளான மரபுரிமையர் அனைவருக்கும் பரிவுத்தொகையைச் சரி சமமாகப் பகிர்ந்தளிப்பதைவிட, வாரிசுதாரர் ஒவ்வொருவரின் செல்வ நிலை, வருமானம் ஆகியவற்றை விசாரித்தறிந்து, தேவை மிகுதியாக உள்ள வாரிசுதாரர்களுக்குக் கூடுதலாகவும், தேவையே இல்லாத அளவுக்கு செல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு ஓரளவுக்குமேல் மிகாமலும் பரிவுத் தொகையினைப் பகிர்ந்தளிப்பது பொருள் மிக்கதாக இருக்கும். ஒரு சான்றோரின் வாரிசுதாரர்கள் அனைவரிடமும் வருமானம், சொத்து விவரம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்களை முறைப்படிக் கேட்டுப் பெற்று, அவற்றின் அடிப்படையில் விகிதாசார முறையில் பரிவுத் தொகையினைப் பங்கிட்டு அளிப்பது இயற்கை நீதிக்கு இயைந்த நடைமுறையாகவே இருக்கும்.

பரிவுத் தொகையை வாரிசுதாரர்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் பொருளாதார நிலையில் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளிருக்குமானால் பரிவுத் தொகைப் பங்கீட்டின் விளைவாகவே அவர்களுக்குள் சச்சரவுகளும் மனஸ்தாபங்களும் தோன்றி, அதுவரை இருந்து வந்த சுமுகமான உறவுகூட முறிந்து போய்விடுவதுண்டு! வாரிசுதாரர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு பரிவுத் தொகையினை விகிதாசார முறையில் பங்கிட்டு அளிப்பது அவர்களிடையே பிற்காலத்தில் பூசல்கள் எழ வாய்ப்பில்லாமலும் செய்துவிடும் அல்லவா?


Series Navigation

author

எஸ். கே. அரவிந்தன்

எஸ். கே. அரவிந்தன்

Similar Posts