நவராத்திரி – பசுமையான நினைவுகள்

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

மைதிலி முரளி


அப்பொழுது நாங்கள் ஒரு காலனியில் குடியிருந்தோம். அப்பா தொலைபேசித் தொழிற்சாலையில்
வேலை பார்த்ததால் நாங்கள் அந்தத் தொழிற்சாலைக் குடியிருப்பில் குடியிருந்தோம். மொத்தம் எட்டு
தெருக்கள். தினமும் பார்க்கும் முகங்கள் ஆனதால் எல்லோரும் ஒருவருகொருவர் ஏறக்குறைய பரிச்சயம்.
பண்டிகை என்றால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான். அதுவும் நவராத்திரி என்றால் கேட்கவே
வேண்டாம். பள்ளி விடுமுறை மட்டுமல்லாது விதவிதமான தின்பண்டங்கள்……

எங்கள் வட்டாரத்தில் மொத்தம் எட்டு வீடுகள். எட்டு வீட்டுக்கும் கொலு பார்க் கட்டும் வேலை எனது.
நாலைந்து நாட்களுக்கு முன்னாலேயே எல்லார் வீட்டிலிருந்தும் ஒரு பெரிய தட்டு வாங்கி, அதில் ராகி
அல்லது கடுகு பயிரிடுவேன். (அப்பொழுது நான் அந்த வீட்டுப் பிள்ளைகளை எப்படிப் படுத்துவேன்
என்பதற்கு இன்னொரு கட்டுரை தேவைப்படும்.) கொலு ஆரம்பத்தன்று சின்ன சின்ன பயிர்கள் தயாராகியிருக்கும்.
பிறகு அவரவர் வீட்டில் இருக்கும் பார்க் பொம்மைகளுக்குத் தகுந்தாற்போல் பார்க் அமைப்பேன்.
எங்க வீட்டு பார்க் நன்றாக இருக்கணும் என்று எல்லா மாமிகளும் என்னைத் தனித்தனியாக கவனித்துக்
கொள்வார்கள். என்னிடம் சமீபத்தில் வாலாட்டியவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நான் பழி தீர்த்துக் கொண்டதும் உண்டு.

ஜானகி என்று ஒரு அக்கா. அவள் நவராத்திரி ஒன்பது நாளும் சலிக்காமல் எங்களுக்கு வித விதமாய் வேஷம்
போடுவது அல்லாமல், ஜடை அலங்காரமும் செய்வாள். மத்தியானம் சாப்பிட்டவுடன் அலங்காரம் தொடங்கினால்
கடைசி ஆள் ரெடியாகும் போது விளக்கு வைக்கும் சமயம் ஆகியிருக்கும்.

ஒரு ச்வாரச்யமான விஷயம். தினமும் அன்று அவரவர் வீட்டில் என்ன பலகாரம் என்று ஒற்றர் படை மத்தியானத்திற்குள்
தகவல் தெரிவிக்கும். இப்பொழுது நினைத்தாலும் வாயில் நீர் ஊறுகிறது. வழக்கமான சுண்டல், மைதா மாவு பிச்கட்,
பொட்டுக்கடலையும், சர்க்கரையும் சேர்த்துப் பொடித்த மாவு (இதற்கு நாங்கள் இட்டிருந்த பெய்ர் பஃப்ஃ மாவு –
வாயில் இந்த மாவைப் போட்டுக்கொண்டு பேசினால் பஃப் என்று எதிராளி மேல் தெறிக்கும்) கடலை உருண்டை,
முறுக்கு, அப்பம் இன்ன பிற. அவரவர் வீட்டுத் தின்பண்டத்தைப் பொறுத்து எங்கள் படையெடுப்பு நடக்கும்.

உ-ம்: கடலைப்பருப்பு சுண்டல், காராமணி சுண்டல், பச்சைப் பருப்பு சுண்டல் வீடுகளைப் புறக்கணிப்போம்
(அது எங்கள் வீடாக இருந்தாலும் சரி – நக்கீரர் பரம்பரையாக்கும்!!)
முறுக்கு, அப்பம், பிச்கட், கடலை உருண்டை வீட்டு மாமிகளுக்கு பிடித்தது சனி. “மாமி, நான் வரலை.
என் தங்கைதான் / அக்காதான் / தம்பிதான் (அப்பா, அம்மாவை விட்டு வைத்தோமே என்று அவர்கள்
சந்தோஷப்படுவார்கள்…) வந்தா. நான் இப்பொதான், சத்தியமா வரேன். இஷ்டமில்லேன்னா பரவாயில்ல மாமி,
நான் போரேன்.” என்று பல கலர் மெயிலும் நடக்கும். மாமிகளுக்கும் தெரியும், இது உதார் என்று.

சுமார் ஐந்தரை மணிக்கு வித வித அலங்காரங்களுடன் எல்லார் வீட்டுக்கும் படையெடுப்போம். எங்கள்
வீட்டிலிருந்து நான், தங்கைகள் இருவர், தம்பி ஒருத்தன் இவ்வளவுதான். எல்லார் கையிலும் இரண்டு மஞ்சள் பை
(துணிக்கடையில் இலவசமாய் அளித்தது) – பலகார கலெக்ஷனுக்காக. ஒன்றில் சுண்டல் வகைகள், இன்னொன்றில்
மற்றைய பலகாரங்கள் – “எல்லா சுண்டலையும் ஒண்ணா சேத்தா நாளைக்கு லக்ஷ்மிக்கு (எங்கள் வீட்டில்
வேலை செய்பவள்) குடுக்கலாம்” பாட்டியின் ஐடியா. தெருவில் ராதையும், ஆண்டாளும், க்ருஷ்ணரும்,
சங்கராசார்யாரும், மஞ்சள் பையோடு போவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல, எங்களுடைய பாட்டுக் கச்சேரி. விசாலம் மாமி மற்றும் சித்ரா மாமி
(மாமி பேர் தெரியாது, மாமியின் பெண் பெயர் சித்ரா) எங்களுக்கு, ஒவ்வொரு நவராத்திரிக்கும் ஒரு புதுப்
பாட்டு சொல்லிக் கொடுப்பார்கள். தப்பித்தவறி, யாராவது எங்களைப் பாடச் சொல்லிவிட்டால், அவ்வளவுதான்,
எங்களின் கோரசான குரலைக் கேட்டு கொலு பொம்மைகள் தூக்கம் கலைந்து பாட்டை நிறுத்தும்படி எங்களைக்
கெஞ்சும். திருவையாறு தியாகராஜ ஆராதனையைத் தோற்கடிக்கும் எங்கள் பஜனை.

பாடி ப்ரசாதம் வாங்கிக் கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய் … ரிபீட்ட்டேய்…… . எங்கள் ஊர்வலம் முடிந்து
வீட்டில் சென்று அம்மா, பாட்டிக்கு யார் யார் வீட்டில் என்ன பலகாரம் என்று சொல்லவேண்டும். அப்போதானே
அவர்கள் யார் வீட்டை முற்றுகை இடலாம் என்று ப்ளான் பண்ண முடியும் (எப்படி ஐடியா?)

ஒரு ரகசியம்…. பலகாரங்களில் சுண்டலைத்தவிர மீதியெல்லாம் வழியிலேயே காலியாயிருக்கும்…. ஆனா நாங்க
யாருமே சாப்பிடலையே…. சத்தியமா…..

mythmurali@gmail.com

Series Navigation

author

மைதிலி முரளி

மைதிலி முரளி

Similar Posts