அதிரை தங்க செல்வராஜன்
” மாணவனை அடித்த ஆசிரியர் கைது. ”
செய்திதாளின் அரைப்பக்கத்தை அடைத்த செய்தி எனக்கு ஆச்சர்யம் தந்தது.
என்னை என் தந்தை பள்ளியில் சேர்த்தபோது ஆசிரியரிடம், நல்லபடியா எல்லாம் சொல்லிக்கொடுங்க சார், அடம்பன்னா கண்ணுமுழிய வச்சுட்டு மீதிய உரிச்சு எடுத்துடுங்க என்று சொன்னது ஞாபகம் வந்தது.
பேருந்து நிறுத்தமும் பெருமாள் கோவிலும் சந்திக்கும் முனையிலுள்ள மூன்று ஓட்டு வீடுகளில் முதல் வீடுதான் எங்கள் தனிமுறை பயிற்சி நிலையம். நடுவில் மலையாள மாந்திரீகர், கடைசியில் காலியான வீடு.
மலையாள மாந்திரீகர் சில சமயம் கைலியும் தொப்பியுமாய் எங்களூர் மரைக்காயரை போல் தரிசனம் தருவார், சில சமயம் காவி வேஷ்டியும் வெற்றுடம்புமாய் சாமியார் போல் காட்சி தருவார். எது எப்படியோ அவரிடம் தினப்படிக்கு மக்கள் வந்தவாறுதான் இருந்தனர்.
“அவவூட்டுக்கு போனா மனுஷன் திரும்ப மாட்டேங்கிறாரு, என்னவாச்சும் செஞ்சு அவ கைய கால முடக்கி போடனும்” சாயம் போன புடவையில் ஒட்டி உலர்ந்த உடம்போடு வரும் பெண்ணிற்கு, ம் என்றவாரு பகவதி படத்தையும், நாகூராண்டவர் படத்தையும் வெறித்து பார்த்தார், சாம்பிராணி புகைய அதிகமாக்கினார், அந்த பெண் பயபக்தியாய் எழுந்து கை கூப்பி
நின்றாள், அம்மாசை கழிஞ்சு வா, தாயத்து தரேன், கொண்டு கட்டு,
எல்லாம் நேராகும்.
மாந்திரீகருக்கு இன்னைய பொழப்பு தேறிடுச்சு.
முந்தானை முடிச்சிலிருந்து எடுத்த பழுப்பேறிய பத்து ரூபாய் நோட்டு மாடெர்ன் ஆர்ட் போல் வித்யாசமான கசங்களில் இருந்தது.
சுன்னாம்பு தடவுமுன் வெற்றிலையை நீவுவது போல் பணத்திலிருந்த சுருக்கத்தை நீக்க முயற்சித்தாள். பகவான்ட பாதத்ல வச்சுட்டு போ. அம்மாசிக்கு அடுத்த நா வரேன், மெல்ல தயக்கமாய் வெளியே வந்தாள். நேத்திக்கு சம்பளம் முழுசா போச்சு, செல்லியம்மா தாயே எப்படியாவது அவர கொண்டுவந்து சேத்துரும்மா.
தினமும் இது போல், வைக்கிறது, எடுக்கிறது, மூலிகை வைத்தியம் என வந்தோரை வாழ வைத்துக்கொண்டிருந்தார்.
காலை ஆறு மணிக்கே பயிற்சியகம் வந்துவிட்டோம், சார் வர இன்னும் பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகலாம். பெருமாள் கோவிலின் வயதான சுவர் நைந்து ஓட்டையாகியிருந்தது. ஓட்டை வழியாக தெரியும் ஜெயாவின் தண்ணீர் இழுப்பு படலம் இன்னும்தொடங்கவில்லை. பச்சைடா,மஞ்சள்டா
என அவளின் தாவனி நிறத்திற்கு பந்தயம் கட்ட ஆரம்பித்தார்கள்.
டேய் நம்ம சாரும் வரும்போது கண்ணுடுறார்ரா. உட்டா என்னாடா
தப்பு? நாப்பதாச்சு, இன்னும் கல்யாணம் பன்னலைன்னா இப்படித்தான்.
பத்தாயத்திலே காசை கொட்டி வச்சுட்டு பார்த்துக்கிட்டிருந்தா எப்படிரா
ஆகும்? நெசமாவே, காசை பத்தாயதிலே கொட்டி வைப்பாங்களாடா?
யாருக்குத்தெரியும், எல்லாரும் பேசிக்கிறதுதான்.
என்னடா வாசல்ல அழுகை சத்தம், எட்டி பார்த்த போது,
எங்களையொத்த பையனை வண்டியிலிருந்து இறக்கி மாந்திரீகர் வீட்டு
பலகையில் படுக்க வைத்தார்கள்.
பாம்பு கடிச்சிடிச்சாம். கடிவாயில் மஞ்சள் நீர் விட்டு கழுவினார்.
புள்ளியாய் தெரிந்த கடிவாய் வீங்கத் தொடங்கியிருந்தது, கடிவாயின்
மேலும், கீழும் துணிக்கிழிசலை வைத்துக் கட்டினார். கடிவாயை கீறி
ரத்தத்தை உறிஞ்சி துப்பினார். பையன் துடிதுடித்து விட்டான். ஏதோ
பச்சிலையை சேர்த்துக் கட்டினார். உள்ளுக்கும் மருந்து கொடுத்து,
அசையாம படுத்திரு என்றவாறு நாடி பிடித்து பார்த்தார்.
வாயில் விரலை விட்டு வாந்தியெடுப்பது போல் கொப்பளித்தார்.
எப்போ கடிச்சுதுன்னு தெரியுமா?
ஆறு மணியிருக்கும், ஆறரையிருக்கும், சரியா தெரியலை, குழப்புவதில்
யாரும் யாருக்கும் சளைத்தவர்களில்லை.
பையன் மிரள மிரள பார்த்தான், தொண்டை வறழுது தண்ணி கொடு
என்றான், யாரோ ஒருவர், தண்ணி வேண்டாம் டீ கொடுங்க என்றார்.
கொஞ்ச நேரத்துக்கு எதுவும் கொடுக்காதே, மூச்சு முட்டுது பாரு, காத்த
விடுங்க, காத்த விடுங்க, என்றவாறு உள்ளே நகர்ந்தார்.
சொன்னாலும் சொல்லாட்டினாலும் காத்தை விடத்தான் போறான் என்ற
துரையின் மேல் கோபமாக வந்தது. ஏன்டா, உங்க வீட்டில யாருக்காவது
பாம்பு கடிச்சா இப்படித்தான் சொல்லுவியா?
எங்க வீட்டில யாரையும் கடிக்காது, அப்படியே கடிச்சாலும்
ஆஸ்பத்திரிக்கு போவோமே தவிர, இந்த ஆளுக்கிட்டேயெல்லாம்
கூட்டிட்டு வரமாட்டோம். துரையின் வார்த்தையில் நியாயம் இருப்பது
போல் பட்டது.
பத்தடி தூரத்தில் அரசு, தனியார் மருத்துவமணைகளிருந்தும், ஏன்
இவர்கள் இவரிடம் வந்தார்கள். குறைவான பணமா, நம்பிக்கையா,
அறியாமையா தெரியவில்லை. வெளியே அழுகை குரல் கேட்டது.
சைரன் வரும் முன்னே ·பயர் எஞ்சின் வரும் பின்னே என்பது போல்
பொடிவாசமும், ம்ஹ¤ஹ¤ம், ம்ஹ¤ம் என்ற செருமலும் எங்கள் ஆசானின்
வருகையை உறுதிபடுத்தியது.
என்னாச்சுடா காலங்காத்தாலேயே கூட்டமா கிடக்கு,
சார், நல்லது கொத்திடுச்சாம்.
அதுக்கேன்டா இவங்கிட்ட வந்தாங்க, ஆஸ்பத்திரிக்கு போவேண்டியது
தானெடா. உலகம் எத்தனை மேல போனாலும் இவனுங்க திருந்த
மாட்டானுகடா.
சரி சரி கதை சொல்லாம கணக்கு போடற வழியை பாரு. புத்தி பாடத்தில்
இல்லை.
யப்பா நொரை தள்ளுது, இனிமே இங்க சரியா வராது, ஆஸ்பத்திரிக்கு
தூக்குங்கப்பா. புள்ளெ பொழைக்கலே நீ உசுரோடயிருக்கமாட்டே,
கத்திக்கொண்டே கூட்டம் கலைந்தது.
ஐந்து நிமிடத்தில் நாலஞ்சு பேர் ஓடி வர்ற சப்தம் கேட்டது,
எங்க சார் போனான் இந்த மலையாளி, புள்ளையை அநியாயமா
கொன்னுட்டான் சார். அவன் எங்க போனாலும் கொல்லாம
விடமாட்டோம் சார். பூட்டிய வீட்டை பார்த்து கத்திக்கொண்டே
சென்றார்கள்.
ஆசான் மெதுவாக வெளியே எட்டி பார்த்தார், அடப்பாவி இந்தாளு
எப்படா பூட்டிட்டு போனான்? இன்னும் இரண்டு மாசத்துக்கு இந்த
பக்கம் தலை வச்சு படுக்க மாட்டான்.
நான் யார்கிட்டே போய் வாடகையை வாங்குறது?
அடுத்தவன் செத்தாலும் பரவாயில்லை எம்பணத்தை எப்படி
வாங்கிறதுன்னு அலையுறாரே இவருக்கெல்லாம் எப்படிடா
கல்யாணமாகும்? யாரோ காதுக்குள் கிசுகிசுப்பது கேட்டது.
ts23071965@yahoo.co.in
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1
- நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது !
- விமர்சனக் கடிதம் – 4
- இன்னும் கொஞ்சம் … நட்புடன்!
- நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு
- ஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….
- உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
- சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்
- கவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி
- கி பி அரவிந்தன் நூல் வெளியீட்டு விழா
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று
- மலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )
- மீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)
- வாணிமஹால்
- சங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்
- கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்
- தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன்
- வேத வனம் -விருட்சம் 39
- கனவுப் பெண்ணின் புன்னகை
- பேசும் மௌனங்கள்…
- முத்துக் குளியல்
- அறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்? நான் யார்?
- கண்ணீர்ப் பிரவாகம்
- விளம்பரம்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1
- பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்
- நல்லது … கெட்டது.
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1
- ஹேண்டில் பார்…
- அவன்
- மென்மையான உருளைக்கிழங்குகள்