நல்லடியாரின் கடிதம் குறித்து – கர்பளா, வஹ்ஹாபிகள், காபா, பாலியல் வன்முறை, மத மூளைச் சலவை

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

நேசகுமார்கடந்த வார திண்ணையில் என்னுடைய எழுத்துக்களுக்கு நல்லடியார் எழுதியிருந்த கடிதத்தை படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில விஷயங்கள் குறித்த எனது கருத்துக்கள் :

கர்பளா யுத்தமும் வஹ்ஹாபிகளும்

வஹ்ஹாபிகள் எப்படி கர்பளா யுத்தத்தில் பங்கு பெற்றிருக்க முடியும் என்று நல்லடியார் வினவியிருக்கிறார். நான் எனது கட்டுரையில் ‘கர்பளா யுத்தத்தை’ விவரிக்கவில்லை. கர்பளாவில் நடந்த வஹ்ஹாபிகளின் கஸ்வா(ரஸ்ஸியா – கொள்ளைத்தாக்குதல் – Raid) அது. இரண்டுக்குமிடையில் பதினோரு நூற்றாண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. ஆம், ஆதியில் கர்பளா யுத்தம் நிகழ்ந்தது கி.பி ஏழாம் நூற்றாண்டில் (தோராயமாக கிபி 680). வஹ்ஹாபிகள் தமது மதத்தை தூயமுறையில் புரிந்து கொண்டதும் ஆதியில் முஹம்மது காஃபிர்கள் மீது கஸ்வாக்கள் எனும் கொள்ளையடிக்கும் ஜிஹாதை நிகழ்த்திய அதே பாணியில் வஹ்ஹாபிசத்தை ஏற்காத சூபிஸ, ஷியா மற்றும் ஏனைய முஸ்லீம்கள் மீது ஜிஹாது தொடுத்து அவர்களது பொருட்களை அன்ஃபாலாக (அல்லாஹ்வின் பிரசாதம் அல்லது அருட்கொடை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தும் இந்தச் சொல், காஃபிர்களின் உடமைகளை ஈமான் கொண்ட முகமதியர்கள் அல்லாஹ்வின் அனுமதி மற்றும் ஆசீர்வாதத்துடன் கவர்வதைக் குறிக்கிறது ) ஜிஹாது தொடுத்தது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில். இதில் ஈராக்கின் கர்பலா நகரின் மீதான தாக்குதல் கி.பி 1802ல் நிகழ்ந்தது.

நான் குறிப்பிட்டிருந்த இந்த கர்பளா ஜிஹாதில் முஹம்மதின் வழித்தோன்றல்களின் நினைவிடங்கள் வஹாபிகளால் அழிக்கப்பட்டன (பேரன் ஹூசைன் இன்னபிற நினைவிடங்கள்). ஏராளமான ஷியா ஆண்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படி ஈராக்கின் கர்பளா நகர் மீது ஜிஹாது தொடுத்த வஹ்ஹாபிகள் நான்காயிரம் ஒட்டகங்களில் கொள்ளைப்பொருட்களை அன்ஃபாலாக எடுத்துச் சென்றனர். இந்தியாவிலிருந்து மத்திய காலத்தில் ஜிஹாது புரிந்த முஸ்லீம் மன்னர்கள் எடுத்துச் சென்றதைப் போல. ஏறத்தாழ ஒரு தினமே நிகழ்ந்த இந்த கஸ்வாவில், ஏராளமான ஷியாக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் (அன்றைய தேதியிலேயே ஐயாயிரம் பேர் இறந்தார்கள் என்கிறார்கள்):

“…the wahhabi movement which emerged in the Najd during the second half of the eighteenth century regarded the Shi’I reverence of the Imams as tantamount to polytheism. On the day of Ghadir Khumm 1215/April 21, 1801, a Wahhabi force of about 12,000 warriors led by Amir Sa’ud b. ‘Abd al-‘Aziz attacked Karbala’. The Mamluk garrison fled, leaving the Wahhabis to plunder the town unopposed. Although Karbala’ was partly deserted because many inhabitants had gone to Najaf to celebrate the holiday, the Wahhabis massacred some 5,000 people… In addition, the Wahhabis desecrated the shrines of Husayn and ‘Abbas and looted their treasures”

Shi’I Scholars of Shi’i Scholars of Nineteenth-Century Iraq: The ‘Ulama’ of Najaf and Karbala. Author : Meir Litvak. Published by Cambridge University Press (Page 121). இந்த நூலை இணையத்திலும் கூகிள் புத்தகங்களில் காணலாம்.

வஹ்ஹாபிகளின் கஸ்வாக்கள் குறித்து பல நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. சில இணையத்திலும் கிட்டுகின்றன. அவற்றில் வஹ்ஹாபிகள் எப்படி தமது கோட்பாட்டை ஏற்காத முஸ்லீம்களை கொன்றனர், எப்படி ஷியா மற்றும் பிற மத்தபுகளை பின்பற்றும் முஸ்லீம் பெண்களை கற்பழித்தனர் என்றெல்லாம் விரிவாக சரித்திர மற்றும் சமூகவியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதையே Siege of Mecca : The Forgotten Uprising and the birth of Al-Qaeda என்ற யரோஸ்லாவ் ட்ரொஃபிமவ்வின் நூல் விவரிக்கின்றது. அந்த நூலையே மேற்கோளிட்டிருந்தேன்.

இதில் ஒரு விசித்திரமான நடைமுறையை வஹ்ஹாபிகள் கடைப்பிடிப்பதை அந்த நூல் விவரிக்கின்றது. அதாவது கர்ப்பினி ஷியா பெண்களின் கழுத்திலிருந்து பிறப்புறுப்பு வரை கத்தியால் பிளந்து பின் அந்த பெண்கள்(மற்றும் சிசுவை) அப்படியே இறக்கவிடுவது வஹ்ஹாபிகளின் பாணியாக இருந்தது. அடிப்படையில் இது வஹ்ஹாபிகளின் தம்மைத்தவிர ஏனைய முஸ்லீம்கள் நஜூஸிகள்( நஜூஸ் என்றால் அசுத்தம்/களங்கமுள்ளது. நஜூஸிகள் தீண்டத்தகாதவர்கள். முஹம்மதுவுக்கு கடவுள் அருளியதாக நம்பப்படும் குரானின் படி, முஹம்மதை ஏற்காத காஃபிர்கள் அசுத்தமானவர்கள். காஃபிராக இருக்கும் வரையில் அவர்களுடன் மண உறவு விலக்கப்பட்டது. அவர்கள் தொட்டதெல்லாம் அசுத்தமாகிறது. மத்திய காலத்தில் காஃபிர்கள் குரானைத் தொட்டால் கடும் தண்டனன தந்தது இதனாலேயே. வஹ்ஹாபிகள் இதன் நீட்சியாக, தாம் முன்வைக்கும் இஸ்லாத்தை ஏற்காத மற்ற முஸ்லீம்களையும் அசுத்தமானவர்கள் என்று கருதுகிறார்கள்)

என்று கருதும் வஹ்ஹாபி கோட்பாட்டின் விளைவாகும். புராக் பயணத்தின் முன் முஹம்மது சுத்தம் செய்யப்பட்ட போது இது போன்று பிளந்து சுத்தம் செய்யப்பட்டார் (பார்க்க அடிக்குறிப்பு)என்ற கருத்து இஸ்லாத்தில் இருப்பதால் அதையடியொட்டி இத்தகைய செயல்களின் இந்த நம்பிக்கையாளர்கள் செயல்பட்டார்கள்.

மக்காவின் முற்றுகையும் மக்காவுக்குள் நிகழ்ந்த கொலைகளும்

மக்காவின் முற்றுகை பற்றிய The Siege of Mecca : The Forgotten Uprising and the birth of al-qaeda என்ற இந்த நூலை நான் தலைப்பைப் பார்த்து கவரப்பட்டு வாங்கியதற்குக் காரணமே நல்லடியார்தான். ஆம், முன்பு எனது ‘வஹீ: இஸ்லாத்தின் அமானுட அடிப்படை – ஓர் பார்வை’ கட்டுரைத் தொடருக்கு பதில் எழுதிய நல்லடியார் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

//குர்ஆனின் சில முன்னறிவிப்புகள்

கஃபா (அபய பூமி)

(‘கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்…” அல்குர்ஆன் 2:125

“..எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்… அல்குர்ஆன் 3:197

நினைவு கூறுங்கள்! ‘என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்). அல்குர்ஆன் 14:35

உலகில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பபட்ட ஆலயம் கஃபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

கஃபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்து பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்கச் சான்றாக அமைந்துள்ளது. //

http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=6

இதைப் படித்த போது எனக்கு எழுபதுகளின் பிற்பகுதியில் காபாவில் நிகழ்ந்த கொலைகளும் அதை தீவிர வஹ்ஹாபிகள் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளே இருந்த முஸ்லீம்களை கொன்று போட்டதும் நினைவுக்கு வந்தது. ஆனால், அப்போது ஆதாரங்கள் (இணைய ஆதாரங்கள் தவிர) கையில் இல்லாததால் இது குறித்த நூலைத் தேடிவந்தேன். இந்நிலையில் ஏறத்தாழ மூன்று வருடங்களுக்குப் பின்பு அந்த சம்பவத்தை ஆதாரபூர்வமாக விவரிக்கும் இந்த நூலைக் கண்டதும், கடவுள் காப்பாற்றாத காபாவைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டு வாங்கிப் படித்தேன்.

இஸ்லாத்தின் மிகப்பெரிய நம்பிக்கைகளுள் ஒன்று நல்லடியார் எழுதியிருந்த, மேலே கண்ட காபாவிற்கு தரப்பட்ட பாதுகாப்பு மற்றும் விசேஷ அந்தஸ்தாகும். அதன் படி, காபாவை ஊறு செய்ய முயல்பவர்களை அல்லாஹ்வே தண்டிப்பார். ஆப்ரஹா என்ற கிறித்துவ மன்னன் இப்படி யானைப்படையை அனுப்பி காபாவை அழிக்க முயற்சித்தபோது அந்த முயற்சியை அபாபீல் பறவைகளை அனுப்பி அல்லாஹ்வே நேரடியாக முறியடித்தார் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால், சரித்திரம் நெடுகிலும் காபா பலமுறை பலரால் கைப்பற்றப்பட்டும், அழிக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் இருக்கிறது. இதில் கடைசியாக நிகழ்ந்தது இந்த 1979- தீவிர வஹ்ஹாபி ஆக்கிரமிப்பே. காபாவை இரு தரப்பிலும் வஹ்ஹாபிகள் (ஒரு பக்கம் தீவிர வஹ்ஹாபிகளான சவுதி அரசரின் ஆதரவாளர்கள் இன்னொரு புறம் அதிதீவிர வஹ்ஹாபிகள்) சண்டையிட்டு சேதப்படுத்தியதையும், நூற்றுக்கணக்கில் முஸ்லீம்கள் காபாவின் புனிதப்பிரதேசத்தில் பலியானதையும் நூல் விவரிக்கின்றது. நூலாசிரியர், அல்-கய்தாவின் ஆரம்பம் இதிலிருந்தே தொடங்கியது என்கிறார்.

நல்லடியார் பெயர் தெரியாத ஆசிரியர் எழுதிய நூல் என்கிறார். இது வரை ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் இந்த மெக்காவில் நடந்த படுகொலையைப் பற்றி வெளிவந்துள்ளன. ஆய்வுக்கட்டுரைகள் எனும் போது அவை மிகவும் கவனமாக தேர்ந்த நிபுணர்களால் பரீசிலனை செய்யப்பட்டே வெளிவருகின்றன(after rigorous and careful academic scrutiny) எனும் நிலையில் அவை விக்கிபீடியா போன்ற இணைய ஆதாரங்களுடன் ஒப்பிடக் கூடியவை அல்ல. நான் எனது கட்டுரையை விக்கிபீடியாவின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து எழுதவில்லை.

***

பாலியல் வன்முறைகளும் அவற்றுக்கு வரலாற்றில் நிகழ்ந்த எதிர்வினைகளும்

பாலியல் வன்முறைகள் குறித்து, “உங்கள் முன்னோர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்” என்று ஒரு சங்க பரிவார் நபரிடம் கேட்டதாக நல்லடியார் எழுதியிருந்தார். இப்படி கேட்பதே மிகவும் ஆணவம் மிக்க, அநாகரிகமான கேள்வி என்பதோ, இதையே மாற்றி ஈராக், காஷ்மீர், குஜராத், கிழக்கு ஐரோப்பா என்றெல்லாம் கேட்டால் நல்லடியார் மனம் புண்படும் என்பதைவிட எனக்கே அப்படி கேட்பது அநாகரிகமாகவும், வன்முறையாகவும், ஆணவத்துடன் கேட்கப்படும் கேள்வியாகவும் தோன்றுகிறது என்பதால் விரிவாக இன்று காலச்சக்கரம் திருப்பிச் சுழல்வதை சுட்ட விரும்பவில்லை.

குஜராத்திலோ காஷ்மீரிலோ முஸ்லீம் பெண்கள் சந்தித்த பாலியல் வன்முறைகளைக் கண்டு நானோ அல்லது பெரும்பான்மை இந்துக்களோ மகிழவில்லை. மாறாக தனிப்பட்ட முறையில் “நசீமா பழம் மாதிரி இருந்தாள், நான் சாப்பிட்டேன்” என்று சொல்பவர்களைப் பார்த்து அருவருப்பும், ஆத்திரமும் தான் வருகிறது (குஜராத் இந்து – முஸ்லீம் கலவரத்தைப் பற்றிய தெஹல்கா பேட்டியில் சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறியிருந்தது). குஜராத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்காக போராடியவர்களில் பேரும்பான்மையோர் இந்துக்களே, இன்று அரபு தேச அதிபர்களெல்லாம் அமெரிக்காவுக்கு சாமரம் வீசி வேகாஸில் சுகித்திருக்கும்போது, ஈராக்கில் முறை தவறி நடந்தால் போராடி உரிமைகளை மீட்டுக் கொடுப்பது முஸ்லீமல்லாத மேற்கத்தயர்கள், கிறிஸ்துவர்களே.

ஆனால், இஸ்லாமிய சமூகத்தில் துரதிர்ஷ்டவசமாக நிலைமை வேறுவிதாமாக இருக்கிறது. லஜ்ஜா எழுதிய தஸ்லிமாவின் நிலை என்ன? பாதிக்கப்பட்ட இந்துக்களைப் பற்றிய விவரங்களை எழுதியதற்கே ஃபத்வா கிட்டியது.

இந்த இறையியலை உலகம் புரிந்து கொள்ளவே பல காலம் பிடித்தது. இஸ்லாத்தை ஆய்வுசெய்யும் ஹாகரிஸ முறையில், இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில் முஸ்லீம்கள் என்ற பதமே பயன்படுத்தப்படாதது ஒரு முக்கியமான கூறாக முன்வைக்கப்படுகிறது. சுற்றியிருந்தோர், தங்களை தாக்கியழிப்பதும், பலவிதமான கொடூரங்களைப் புரிவதும் அரபிகளில் ஒரு கூட்டத்தினர் அல்லது அரபிகள் என்றே கண்டார்களே தவிர, இது ஒரு ஆன்மீக கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட ஒரு மதக்குழு என்பதை கவனிக்கவே இல்லை. அன்றுதான் என்றில்லை, இன்றும் கூட பிரபல இந்திய இடதுசாரி அறிவுஜீவிகள், சரித்திர ஆசிரியர்கள் இந்த ஆன்மீக அடித்தளத்தை கவனிக்க மறுத்து கனீமா போன்ற கோட்பாடுகளே முஸ்லீம் படைகளை கொள்ளையடிக்க வைத்தது, பெண்களும் கனீமாவில் அடக்கம் என்ற கருத்தாக்கமே பெண்களை கவர்ந்து செல்ல தூண்டியது என்பதை சரித்திர நிகழ்வுகளுடன் பொறுத்திப் பார்க்கத் தவறிவிடுகின்றனர்.

ஒரு புறம் இந்த மடமை என்றால், இன்னொரு புறம் இஸ்லாத்துக்கு நேர்மாறாக அசுத்தம் பற்றிய கோட்பாடுகள் இருந்ததால், இந்து சமூகம் இப்படி பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை ஏற்க/விடுவிக்க மறுத்தது. முகமதிய படைகளை அடியோடு ஒழித்து வெற்றி வாகை சூடிய மராட்டா படைகள் இப்படி கவர்ந்து சென்று அந்தப்புரங்களில் அடைக்கப்பட்டிருந்த பெண்களை விடுவிக்கத் தவறியதை சாவர்க்கர் தமது சரித்திரத்தின் ஆறு பொன்னேடுகளில் வருத்தத்தோடு குறிப்பிடுகின்றார். இதற்கு மாறாக சீக்கியர்கள் இப்படி பிடித்துச் செல்லப்பட்ட பெண்களை ஈரானுக்கு கொண்டு போவதை தடுத்து விடுவித்து மணமும் புரிந்து மறுவாழ்வு கொடுத்தார்கள்.

அன்றைய நிலையில் நல்லடியாரின் முன்னோர்கள் செயல்படாமல் இருந்தார்கள் என்றில்லை (இங்கே நல்லடியாரின் முன்னோர்கள் என்று மதச்சலவை செய்யப்பட்டு, உள்ளே வந்த அரபிகளையும் ஏனைய மதம்மாறிய அஜமிகளையும் சொல்லவில்லை – பொதுவாக இந்தியர்களையே சொல்கிறேன் – இஸ்லாம் செய்யும் விசித்திரங்களுள் ஒன்று, இந்திய முன்னோர்களை விடுத்து அரபிகளை தங்கள் முன்னோர்கள் என்று மதம் மாறியவர்களை மூளைச்சலவை செய்வது, மேலும் ஆணாதிக்கவுணர்வை அடித்தளமாக கொண்ட ஆன்மீகக் கருத்தாக்கமென்பதால் பாதிக்கப்பட்ட பெண்களை முன்னோர்கள் என்று ஏற்க நல்லடியார்களின் ஈமான் அனுமதிக்க மறுக்கிறது), செயல்பட்டார்கள் ஆனால், அவர்களால் இப்படி ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டத்தின் உளவியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. திடுமென்று நிகழ்ந்த இந்த தாக்குதல்களைப் புரிந்து கொள்ளவே நாளாயிற்று. அப்படியும் தொடர்ந்து இந்த மனமயக்கத்துக்கு அடிபணிய மறுத்தனர் இந்தியர்கள், அதன் விளைவாகவே இன்று இந்தியா இப்படி இருக்கிறது, இல்லையேல் நாமும் ஒரு தாலிபான் தேசமாக ஆகியிருப்போம். நல்லடியாரும் நேசகுமாரும் விவாதிப்பது கூட சாத்தியமில்லாமல் தெருமூலை முல்லாவுக்கு அஞ்சியஞ்சி இருக்கிற வாழ்க்கையை மதவாதிகளுக்கு அடகுவைத்துவிட்டு, இல்லாத சுவனக்கனவுகளுடன் தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்திருக்கும்.

அன்புடன்,

நேச குமார்.

http://nesamudan.blogspot.com

அடிக்குறிப்பு:

புராக் பயணம் – முஹம்மதிடம் தோன்றி தாம் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்டதாக கூறிய மலக்(தேவதூதன்/சிறு தெய்வம்/ தேவதை/ பிசாசு) ஜிப்ரீல், ஒரு முறை முஹம்மதை மெக்காவுக்கு மேலே ஏழு வானங்களுக்கப்பால் இருக்கும் கடவுளின் இருப்பிடத்துக்கு புராக் என்ற (கோவேறு கழுதையின் உடலும் பெண்ணின் தலையும் இறக்கைகளும் கொண்ட) பிராணி மீது அமரவைத்து அழைத்துச் செல்வதற்கு முன்பாக முஹம்மதின் உடலில் நடுவாக கிழித்து இதயத்தை எடுத்து ஜம்ஜம் தண்ணீரில் சுத்தப்படுத்தியதாக ஹதீதுகள் அறிவிக்கின்றன (ஜம் ஜம் – மெக்காவில் உள்ள புனித தீர்த்தம் இது – ஹஜ்ஜின் போது முகமதியர்கள் அருந்துவது, இதன் நீருக்கு குணப்படுத்தும் வல்லமையை தேவன் அளித்திருக்கிறான் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கைகளுள் ஒன்று). இந்த புராக் பயணத்தின் போது முஹமது விசேஷமான பல காட்சிகளைக் கண்டார், பானையளவு உள்ள இலந்தைப் பழ மரம், சொர்க்கத்தில் இருக்கும் அந்த மரத்திலிருந்து நைல் நதி உற்பத்தியாவது, அங்கே மோசமான பெண்களை அல்லாஹ்வின் ஏவலாட்கள் சித்திரவதை செய்வது, முஸ்லீம்களாக மதம் மாறாதவர்களை அல்லாஹ் சித்திரவதை செய்து துன்புறுத்துவது போன்றவற்றை முஹமது கண்டார். முதலில் இது உள்ளார்ந்த ஒரு செயலாக கருதப்பட்டது. பின்பு, இது நிகழ்ந்தது நிஜம், ஸ்தூல(உடல்) வடிவிலேயே முஹமது சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற கருத்து இஸ்லாத்தில் முன்னெடுத்து செல்லப்பட்டது.


Series Navigation

நேச குமார்

நேச குமார்