நந்தகுமாரா நந்தகுமாரா

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘ போங்கடி… நீஙகளும் உங்க…………………………….. ‘

நீண்டு உடைந்தது அவன் குரல். துக்கத்தின் முழு பரிமாணத்தையும் தாங்கிய குரல். அந்தப் பெரிய வரவேற்பறையில் ஏக முழக்கமாய் மேடையேறி நின்று ஒலிக்கும் குரல். அந்தக் குரலைக் கை தட்டி அங்கீகரிக்கின்ற வகையிலே கணப்பு அடுப்பிலிட்ட கட்டைகள் ‘சட சட ‘ வென்று எரிந்து கொண்டிருக்கின்றன. குரலின் அவரோகணத்திற்கு இணைந்து, சன்னமாக மின்சார வெளிச்சம். அவனெழுப்பிய பலவீனக் குரலில் மேசை நாற்காலி மற்றும் அலங்காரப் பொருட்களில் படிந்திருந்த தூசு எழுந்த வேகத்தில் மீண்டும் படிந்தன. அவனும் ஒரு பொதியாகச் சோபாவில் விழுந்தான்.

‘என்னை விட்டுடுங்க.. போதும். எனக்கு இனிமேலும் பலமில்லை கடவுளே.. ‘ மெல்ல முனகுகிறான்.

முனகுபவன் நந்த குமார். நாற்பது வயது. மாநிறம். கொஞ்சமாகத் தொப்பை, சலூனை மறந்த தலை, வயதோடு ஒட்டாத கூடுதல் நரை, அம்மைபோட்ட முகம், கசங்கிய ஸ்வெட். கிழக்கே தோன்றி மேற்கே அஸ்தமித்துக் கொண்டிருப்பவன். இருபது வயதில் சென்னை-மும்பை-பாரீஸ் என விமானித்து ஐரோப்பியத்திற்கு வந்தவனுக்கு இந்திய ஞாபகங்கள் கனவில் மட்டுமே தொட்டுச் செல்கின்றன. கனவிற்கூட அம்மா வந்ததில்லை. இவன் பிறந்து கண் விழித்தபோது அவள் இறந்திருந்தாள்.

உறவென்றவுடன் …..

புதுவையில் குள்ளமாயும் சிவப்பாயும், கழுத்திற் பவழமும் கைகளிற் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்காப்புமாய் நூற்சேலையில் வளையவரும் நெற்றியில் விபூதியிட்ட அப்பாவழி பாட்டி, பானையிலிட்ட முக்காடாய் அழுக்கடைந்தக் கதர் சட்டையை ஒரு பொத்தானில் வயிற்றில் நிற்க வைத்து வாய் நிறையப் பச்சை வெற்றிலையும் மைதீன் புகையிலையுமாய் விந்தி விந்தி நடக்கும் அப்பா, சீட்டிப் பாவாடையும் ஒழுகும் மூக்குமாக சதா கோள் மூட்டிக்கொண்டிருக்கும் அப்பாவின் இரண்டாவது தாம்பத்ய ஆதாரம், பிறகு எப்போதும் போல அவிழ்ந்த கூந்தலை முடிக்க விருப்பமில்லாமல், சகட்டு மேனிக்கு கைகளை ஆட்டி ஆட்டிப் பேசும் சித்தி….

நந்தகுமாரனுக்கான சித்தி, பத்துத் தலைகளும், கருகருவென்ற புருவமும் பெரிய கண்களும், மூன்றுவாய்களும் தொங்கும் நாக்கும், இரண்டு கால்களுமாய் கறுப்புச் சரீரத்துடன் தமிழ்ப் பஞ்சாங்கங்களில் வருகின்ற மகர சங்கராந்தி புருஷ ஸ்த்ரீ ரகம். துர்த்தேவதை. அவள் ராச்சியத்தில் அவனப்பா செய்ததெல்லாம் சேவகம்தான். அந்தச் சேவகத்தின் சூட்சமம் அவளது பெரிய மார்புகளில் இருப்பதை ஒரு மழைநாளில் அவன் அறிந்திருக்கிறான்.

அன்றைக்கு இரவுக் காட்சி முடித்து வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு நல்ல பசி. மெல்ல சமையற்கட்டில் நுழைந்து, அவனுக்கென வைத்திருக்கும் தட்டில், சோற்றினைப் போட்டு, குழம்பினை ஊற்றிப் பிசைந்து சாப்பிடும் நேரம் சித்தி வந்துவிட்டாள். இரண்டாவது கவளம் தொண்டையை அடைத்து இறங்க மறுத்தது. கண்களில் நீர் கோர்த்து விக்கலிட ஆரம்பித்தான். பார்த்த சித்தி கொஞ்சம் வேகம் காட்டி அருகில் வந்தாள். முதன் முறையாக கோபம் மறைத்து நெருங்கி நிற்கும் சித்தியை ஆச்சரியத்தோடுப் பார்த்தான். அவளது புடவைத் தலைப்பால் இவனது கண்களைத் துடைத்து முடித்து, பக்கத்திலிருந்த நீர்க் குவளையை எடுத்தவள், என்ன நினைத்தாளோ ? அவளே புகட்டினாள். ‘போதும் சித்தி ‘ என பயத்துடன்

நிமிர்ந்தவனை மார்பில் வாங்கிக் கொண்டாள்.

மறுநாளும், அதனைத் தொடர்ந்த இதர நாட்களும் அவனை நெருப்பில் துவட்டின. விழுந்த

ஜுரத்திலிருந்து மீள ஒரு வாரம் தேவைப் பட்டது. அழுதப் பாட்டியை அமைதிப்படுத்தி, அவளது சேமிப்பில் டிக்கட்டை வாங்கிக் கொண்டு அப்பாவைப் பார்த்தும், சித்தியை பார்க்காமலும் விடை பெற்றுக் கொண்டு பிரான்சுக்கு வந்தவனுக்கு இந்தியா மறந்தே போய்விட்டது.

நந்தகுமாரனிடமிருந்து மறுபடியும் கிரீச்சிட்ட குரல்.. சுவர்களாற் தடுக்கப்பட்டு மெள்ள வழிந்து மீண்டும் அவனையே தொட்டு கடந்து போகின்றது. வெளியே சோவென்று மழை. உள்ளே முரணாக அமைதி. எந்தச் சிறிய ஓசையையும் பெரிதுபடுத்தி சிரிக்கும் அமைதி. கணப்படுப்பின் சட சட.. சுவர்க் கடிகாரத்தின் டிக்.டிக்.. மின்சார உபகரணங்களின் ஸ்ஸ்.. என வரிசையாக ஆர்பாட்டம் செய்வதை அறியவைக்கும் அமைதி.

நந்தகுமாரன் உடைந்து போயிருந்தான். கிழே குடித்துமுடித்த ஜானி வாக்கர் விஸ்கி போத்தல்கள் உருண்டு கிடக்கின்றன. தேம்பித் தேம்பி அழுதான். வலி ஏற்படும்வரை தலையிலடித்துக் கொண்டு அழுதான். உதடுகளில் பற்களை அழுந்தப் பதிக்க, இரத்தம் சுரந்து அவனது பெரிய பற்களின் ஈறுகளிற் பரவ அதனை நுனி நாக்கினால் சுவைத்துப் பார்த்து அழுதான். பிதற்றினான். கூச்சலிட்டான்.

அவனறிந்த பெண்களெல்லாம் துர்த்தேவதைகள். அம்பிகைகள் அல்ல. இரத்தம் தோய்ந்த நாக்கும் சிவந்த கண்களுமாய்க் கைகளிற் கட்டாரியும் சூலமும் ஏந்தி, கால்களிற் போட்டு மிதிப்பதற்காவே எங்கே எங்கேயென்று விடாமல் துரத்தும் துர்த்தேவதைகள்.

இவளும் அதில் ஒன்று…

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒர் இரவு விடுதியின் அதிகாலை முதற் சந்திப்பில், அவளை ‘அம்பாள் ‘ என்றே நினைத்தான். அந்த முதல் நாள் சந்திப்பு இன்றைக்கும் ஒட்டுண்ணியாக மனதை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. தனித்து நின்றவனிடம் இயல்பாய் நெருங்கி புன்னகைத்து கைகைளைப்பற்றி ‘ஆந்த்ரே ரியோவின் ‘ வயலின் இசைக்கு ஆடுவதற்கான அவளழைப்பில் இவன் ஈர்க்கப்பட்டதும், விடிய விடிய நடனமாடி அவளிடம் ஒட்டிய தன்னுடலைப் பிரிக்கவியலாமல் அவஸ்தை பட்டதும், அவளது தோள்மீது தலைசாய்த்து டாக்ஸி பிடித்ததும், டாக்ஸி பயணத்தில் டிரைவரின் கனைப்பை அலட்சியம் செய்து வழிநெடுக இருவரும் பரஸ்பரம் முகர்ந்து கொண்டதும்ம்ம்ம்…

அந்த முதல் நாள் சந்திப்பிலேயே பல நாட்களுக்கான வாசனை… பிறகு அனைத்துமே சர்வ சுதந்திரத்துடன் சுபமாகவே தொடர்ந்தது. நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

காலையில் முத்தங்களுடன் பிரிந்து, வேலை நேரங்களில் தொலைபோனித்து, மாலையில் மீண்டும் முத்தங்களுடன் சேர்ந்து, ‘வீக் எண்ட் ‘ களில் இரவு விடுதிகளுக்கும் ஆசிய ரெஸ்டாரெண்ட்களுக்கும் சென்று, நேரமும் விருப்பமும் இருக்கும் போதெல்லாம் உறவுகொண்டு, விடுமுறைக்கு உல்லாசக் கப்பலில் பயணித்து வந்தவர்களுக்கிடையே திடுமென்று சிலமாதங்களாக எல்லாமும் நின்று விட்டது.

அவள் பதிலில் ‘ச்சீ போடா ‘ என வாழ்க்கையைப் பார்க்கும் ஐரோப்பிய ஆணவம் இருந்தது. வளர்த்துக் கொண்ட கனவுகளைத் திடுமென்று பறித்து சுடுமணலில் எறிந்துவிட்டு ‘அப்படித்தான் ‘ என்கின்றாள். கொதித்துப் போய்விட்டான்.

நேற்று நடந்தவைகளை வரிசையாக மனதில் நிறுத்திப் பார்த்தான். அப்படி நிறுத்திப் பார்ப்பதில் குழப்பமே மிஞ்சியது. குடித்திருந்த அவனது மூளை ‘இப்போதைக்கு ஞாபகப் படுத்த முடியாது என்று தெளிவாகவே சொல்லிவிட்டது.

நான்கு ஆண்டுகால வாழ்க்கையை அவள் பொய்யென்கிறாள். ஒரு ‘குட் பை ‘ யினால் கலைக்க நினைக்கிறாள். அவனை அந்தரத்தில் நிறுத்திவிட்டு சுபம் என்கிறாள். ‘விட்டது சனியன் ‘…எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்ததில். ஒரு துர்த்தேவதையை சம்ஹாரம் செய்த எக்களிப்பு.

எரிந்து கொண்டிருக்கும் கணப்படுப்பைப் பார்க்கிறான். நேற்று உச்சக் கட்ட விவாதத்தில், இந்தியர்களுக்கேயான குணத்துடன் தான் ‘தீயிட்டுக் கொள்வேன் ‘ என்று பயமுறுத்தியதும், அவள் உதட்டைச் சுழித்துத் தோளைக் குலுக்கியதும் கொஞ்சமாக நினவில்வந்து அவனுக்கு எரிச்சலூட்டியது. அதிலும் இதுவரை மறந்துபோயிருந்த சித்தியின் பெரிய மார்புகள், அவளது தோளோடு சேர்ந்து குலுங்கியபோது, காத்திருந்த வன்மம் தலைக்கேறியதில் ஏதோ நடந்திருக்கிறது….

‘தேவடியா சிறுக்கி! ‘ மீண்டும் கூச்சலிட்டான்.

மது அவனை கோழையாக்கியிருந்தது. தற்கொலை செய்து கொள்வதென தீர்மானித்தான். ஏன் எதற்கென காரணம் வேண்டாத முடிவு. நிறையக் குடித்திருந்தான். உடல்முழுக்க- மூளைவரை விஸ்கியும் ஒயினும் இரத்தநாளங்களில் கலந்து பரவியிருந்தது.

எப்படி இறப்பது ? யோசித்துப் பார்த்தான். மெதுவாக எழுந்து தள்ளாடி நடந்து குளியல் அறையின் ‘பார்மஸி ‘ பெட்டியில் ஏதேனும் மாத்திரைகளிருக்குமா என்று பார்த்தான். சுத்தமாக துடைத்திருந்தது. அவனிடம் துப்பாக்கிகள் ஏதுமில்லை.

அவனது நாற்பதாண்டுகால வாழ்வில் பாட்டியைத் தவிர மற்றவர்களுக்கு அருவமாகவே இருந்திருக்கிறான். கருவேப்பிலையாகவே பயன்காட்டி வந்திருக்கிறான். பாட்டிக்கு, சித்திக்கு, அப்பாவுக்கு, வேலையிடத்து எஜமானர்களுக்கு, கடைசியாக இந்த ராட்சசிக்கு. அவனது இருப்பை எவரும் உணர்ந்தவர்களில்லை. விடை தெரியாத குழப்பம்- சோர்வு.

இறந்தாகிலும் தனது இருப்பினை இந்தக் கூட்டத்திற்குச் செய்தியாக்க வேண்டும். அந்தச் செய்தி எப்படி இருக்கும் ? நினைத்துப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. பிரெஞ்சு தினசரிகளில் ‘இந்தியன் ஒருவன் தற்கொலை ‘ என்கிற தலைப்பில் வாசகனின் கவனமற்ற பக்கங்களில் வரலாம். அல்லது இரவு பத்து மணிக்குமேல், தூக்கம் வராத நேரங்களில் ஹவானா சுருட்டுகளைப் பற்களில் இடுக்கி, பணத்திற்காகப் படுத்திருக்கும் தனது ஆறாவது இளம் மனைவியை இடைக்கிடை தொட்டு, பூதக்கண்ணாடி உதவியோடு செய்தித்தாைளைப் புரட்டும் பிரெஞ்சுக் கிழவனுக்குத் துணுக்காகிப் போகலாம். சரி, அந்த ராட்சஷி இந்தச் செய்தியை எப்படி எடுத்துக் கொள்வாள். ‘ அட.. செத்துட்டானா! ? ‘ என்று ஒற்றை வரியில் ஆச்சரியப்பட்டு அடுத்த கணமே மறந்தும் போகலாம்.

‘ராட்சஷீ..!. அடி வயிற்றிலிருந்து வந்துவிழுந்த வார்த்தையின் உக்கிரம் தாங்காமல் சுவர்கள் ஆடின.

இந்தியாவிலிருந்தவரை சித்திக்கு, நந்த குமாரன் ‘தரித்திரம் பிடித்தவன் ‘. அப்பாவுக்கு ‘உருப்படாதவன் ‘, பாட்டிக்கு ‘அப்பாவி ‘, நண்பர்களுக்குக் ‘குணா ‘. இங்கே இவளுக்கு ‘முட்டாள் ‘. எல்லோரும் அவரவர் பங்கிற்குக் குட்டியிருக்கின்றார்கள். தண்டித்திருக்கின்றார்கள்

எங்கே எப்போது என்ன குற்றம் செய்தான் ?

யோசித்துப் பார்த்ததில்…ஒரு முறை சின்ன வயதில் வீட்டுக்கருகில் இருந்த ஒரு வெற்றிலைப் பாக்குக் கடையில், கடைக்காரரான கறீம் பாயின் கவனம் திரும்பியிருந்த சமயம், அவர் கல்லாவில் வைக்கமறந்த நாலணாவைத் திருடியதாக ஞாபகம். பிறகு சித்தி அவளது நோஞ்சான் மகளுக்கு வாங்கி வைத்திருந்த ஹார்லிக்ஸ் மாவைத் திருடியதில் கையும் களவுமாக பிடிபட்டு அவளிடம் சூடு பட்டிருக்கிறான். இதைத் தவிர பெருசாக எதுவும் செய்திருக்கவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நந்த குமாரர்கள்தான். ஆனால் விதிக்கபடுகின்ற தண்டனைகளில்தான் ஏற்ற தாழ்வுகள்.

சோபாவிலிருந்து மீண்டும் எழுந்தான். எங்கே சென்றிருப்பாள் என்று யோசித்தான். உதடுகள் நடுங்கி சொற்கள் சிதறுண்டன. ‘ எங்கே போனாலும் அவளை விடக்கூடாது! கண்டு பிடிப்பேன்! ‘ மீண்டும் கூச்சலிட்டான்.

கடந்த நான்கைந்து மாதங்களாகவே அவள் போக்கில் மாறுதல்கள். குறிப்பாக அவள் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியை இரத்தப் பரிசோதனை என்றைக்கு உறுதி செய்ததோ அன்றைக்குத் தொடங்கிவிட்டது. ஐரோப்பாவில் இளமைக்கால ஆண் பெண் உறவென்பது ஒரு ‘ஒரு இரயில் பயணச் சந்திப்பு ‘ என்கின்ற ஞானம் அவள் விஷயத்திலும் உண்மையாகிவிடுமோ என்கின்ற இயல்பான அச்சம் இந்த நான்கு மாதங்களில் உறுதிபடுத்தப்பட்டது. காரணத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினான். அவளது நாட் குறிப்பு, தொலைபேசி உரையாடல்கள், ஆடையில் வருகின்ற வாசனைகள், முரண்படும் அவளது அன்றாட செயல்கள் அனைத்திலும் கேள்விகள் கேட்டுக் குழம்பிப் போனான்.

இரண்டு வருடங்களாக ஏப்ரல் மாதங்களில் அவளது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சிக்காக பாரீஸ் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் பயிற்சி முடித்து அவள் திரும்பும்போதெல்லாம் தவறாமல் இரயில்வே நிலையத்திகு இவனும் செல்வான். ஒரு வார பிரிவுக்குப் பிறகு அவளை மீண்டும் சந்திப்பதில் கிடைக்கும் அந்தச் சுகத்தை விவரிப்பது கடினம். அவளைத் தொடுவதில், இறுக அணைப்பதில், அழுந்த முத்தமிடுவதில் தொடரும் சந்தோஷ நொடிகளை அவனது இளமை மட்டுமே அறியும்.

நேற்றையச் சந்திப்பில் இவை அனைத்துமே தவிர்க்கபட்டன. அவளைப் பார்த்தது, கையசைத்தது, கைப்பையையும் இதர பெட்டியையும் வாங்கி கொண்டது, கார் நிறுத்துமிடம் வந்து பெட்டியை டிக்கியில் வைத்துவிட்டு கதவினைத் திறந்து அவள் உட்காருவதற்கு முன் எஞ்சினை உறுமவைத்தது என எல்லாவற்றிலும் இருவருக்கும் இடையில் உஷ்ணம். அரைமணி நேர காரோட்டத்திற்குப் பிறகு தங்கள் குடியிருப்பினை அடையும்வரை வாயைத் திறப்பதில்லையென இருவருமே முடிவெடுத்திருக்கவேண்டும், பேசிக்கொள்ளவில்லை.

வீட்டை அடைந்து, காரினைக் கேரஜில் நிறுத்தி இறங்கிக் கொண்டபோதும் அவர்களிடம் அசாத்திய மெளனம். அவளிடமிருந்த திறப்பினைக் கொண்டு உள்ளே நுழைந்தவள், ஜன்னல்களைத் திறந்துவைத்து நுரையீரல் கொள்ள சுவாசித்தாள். இவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

‘நந்தா..! உன்னிடம் பேசவேண்டுமென்றாள் ‘

எதிர்பார்த்தோ என்னவோ வழக்கத்திற்கு மாறாக நிறையக் குடித்து அவனும் தயார் நிலையில் இருந்தான்.

‘ம்.. ‘

‘இப்போது வேண்டாம். எனக்கு நிறைய பசி. சாப்பிட்டுக் கொண்டே பேசலாம். மீண்டும் அவள்.

அவசர அவசரமாக சாப்பாட்டு மேசையில் மெழுகு வர்த்தியை ஏற்றிவைத்து தட்டுகளையும், முட் கரண்டிகளையும் கொண்டுவந்து வைத்தாள். பதப்படுத்தபட்ட உணவைச் சூடாக்கிக் கொண்டு வந்தனர். கோதுமை ரொட்டி துண்டுகளும், மரக்கறி சாலட்டும் கொண்டுவரப்பட்டன. நந்தகுமார் 1990 ம் ஆண்டு சிவப்பு ஒயினை கோப்பையில் பறிமாறிவிட்டு உட்கார்ந்தான். அந்தச் சூழலிலும் லூயிஸ் ஆர்ம்ஸ்ற்றாங்கின் ஜாஸ் இசையை குறுந்தகட்டில் ஒலிக்கச் செய்ய அவள் தவறவில்லை. இருவரும் பிரெஞ்சு முறைப்படி ‘போன் அப்பெத்தி ‘ சொல்லிக் கொண்டார்கள். அனைத்துமே இயந்திரத்தனமாக நடந்தது.

‘என்னவோ சொல்லவேண்டுமென்றாயே ? இவன்தான் ஆரம்பித்தான்.

‘நந்தா.. நீ கோபப்படக்கூடாது ‘ என்ற பீடிகையோடு ஆரம்பித்தாள்.

இவன் மெளனமாக இருந்தான்.

‘உனக்குக் கொஞ்ச நாட்களாக என் மீது சந்தேகமிருக்கிறது. எங்கே உன்னைவிட்டு நான் போய்விடுவேனோ என்று அச்சுமிருக்கிறது… ‘

இவன் மனம் பரபரத்தது. திடாரென்று ஒரு வித பயம். ஒரு துர்த்தேவையிடம் ஏற்படுகின்ற பயம். அவனைக் காலிற் போட்டு மிதிப்பதற்கான களத்தினை அவள் தயார் செய்வதால் ஏற்பட்ட பயம். சிவப்பு ஒயினைக் குடிப்பதிற் கவனமாயிருந்தான்.

‘…………….. ‘

‘ஒயின் குடிப்பதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் காதில் வாங்கு! ‘

‘ம்… ‘ நிமிர்ந்து நேராக அவளது விழிகளைப் பார்த்தான்.

‘ஆமாம். உன்னைவிட்டு போகப் போவதென்பது உண்மைதான். இப்போதல்ல, நான் உன்னை முதன்முதற் சந்தித்தபோதே அது முடிவாகிவிட்டது. ‘

‘என்ன உளறலிது ? ‘

‘உளறலில்லை உண்மையைத்தான் சொல்கிறேன். எனக்கு வேறு உறவிருப்பது உண்மை. ஆனால் நீ நினப்பதுபோல ஒரு ஆணோடு அல்ல பெண்ணோடு. நம்புவதென்பது கடினமாகத்தானிருக்கும் ஆனால் அதுதான் உண்மை. அவள் எனக்கு நீீண்டகால தோழி. எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும். அந்தக் குழந்தையும் இயல்பாய், இயற்கையாய் பிறக்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். உன்னிடம் முன்பே சொல்லியிருந்தால் நீ பெரும்பாலும் இணங்கியிருக்கமாட்டாய். உயிரியல் ரீதியில்- குழந்தைகான தந்தை என்ற வகையில் எல்லா உரிமைகளும் பிறக்கப்போகும் குழந்தைமீது உனக்குண்டு. அதில் நாங்கள் குறிப்பிடமாட்டோம் ‘ பேசிக் கொண்டேபோனாள்.

‘ஏய்… ‘ தொடர்ந்து தமிழில் அவன் கூச்சலிட்டதை அவள் ஏற்பதாக இல்லை. எழுந்து கொண்டாள். இவன் மூர்க்கமடைந்தான். நிற்கின்ற துர்த்தேவதையை எதிப்பதற்கான பலத்தினை அவன் குடித்திருந்த விஸ்கியும், ஒயினும் கொடுத்திருந்தன. எதிரே முழுதாகவிருந்த இன்னொரு ஒயின் பாட்டில் கண்ணிற் பட்டது. எடுத்து முழுவேகத்தோடு குறிவைத்து எறிந்தான். அவள் எதிர் பார்க்கவில்லை. தலையைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்தாள். விரல்களுக்கிடையே ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்…..

பிறகென்ன நடந்திருக்கும்….. யோசித்தபோது இவன் தலையிலும் விண் விண்னென்ற வலி. கைவத்துப் பார்க்கிறான். இரத்தம் உறைந்து முடியோடு சேர்ந்து கட்டிப் போயிருக்கின்றது. குடியிருப்பில் அவளது இருப்பிற்கான எந்த அடையாளமும் இல்லை.

‘போடி! போயிட்டியா.. இனிமே வராதே..ஒழிஞ்சி போ…! ‘ கையிற் கிடைத்ததையெல்லாம் தூக்கியெறிந்து களைத்து போனான்.

எடுத்த முடிவைச் செயல்படுத்துவதெனத் தீர்மானித்தான். மெல்ல மெல்ல நடந்து கேரேஜுக்கு வந்தான். நீண்ட கயிறை எடுத்துக் கொண்டு மீண்டும் வரவேற்பறைக்கு வந்தான். நாற்காலியை நிறுத்தி அலங்கார மின்சார விளக்கினைத் தாங்கிக் கொண்டிருந்த வளையத்திற் கயிற்றினை வாங்கி சுருக்கினைத் தொங்கவிட்டான். யோசித்தான். அழுதுகொண்டே கழுத்தினைக் கொடுத்தான்…

கதவினைத் சாவிகொண்டு திறக்கின்ற சத்தம்.

‘என்ன மயக்கம் தெளிஞ்சிருக்குமா ?

‘ இருக்கலாம். எனக்கும் நேற்று என்ன செய்யறதுன்னு புரியலை. என்னைக் காப்பாற்றிக் கொள்ளனுங்கற வேகத்துல நாற்காலியால நானும் தாக்கினேன். அவன் குடிச்சிருந்ததால சமாளிக்க முடிஞ்சுது. என்னை மன்னிச்சுடு. நந்தகுமாரை என்னால பிரியறதுக்கில்ல. நேற்று நம்ம முடிவைச் சொன்னபோது எப்படித் துடிச்சுபோயிட்டான் தெரியுமா. நானும் அவனும் இனி சேர்ந்துதான் குழந்தையை வளர்க்கப் போறோம் ‘

‘ஆமாம்..அவளுடைய குரல்தான்…. ‘ . நந்தகுமார் நெஞ்சை மெல்ல வருடி, வந்தடைந்த குரல். ‘நன்றிக் கடவுளே….. ‘ சொல்லிக் கொண்டான்.. கயிற்றிலிருந்து விடுபட நினைத்து முயற்சித்தான்..இவன் எண்ணத்தைப் புரிந்துகொள்ள மறுத்து இறுகியது. மீண்டும் மீண்டும்…. பலனில்லை அது மேலும் மேலும் இறுகிக்கொண்டிருந்தது.

—–

Na.Krishna@wanadoo.fr

Series Navigation