நண்பர் பரிமளத்திற்கு எனது பதில்

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

விஸ்வாமித்ரா


‘ஈ வெ ரா வின் அவமரியாதைத் திருமணத்திற்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல ‘ என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, இன்னொருபுறம் வக்காலத்து வாங்கியிருக்கிருக்கும் உங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஈ வெ ராவின் ஆதரவாளர்களிடமிருந்து இது போன்ற முரண்பாடுகளையன்றி வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

எதைப் பற்றியும் ஆராய்ந்து படித்து அறியாமல், அரைகுறையாக படித்து விட்டு, கண்மூடித்தனமாக கண்டிக்க வருவது உங்களின் வழக்கமாக இருக்கிறது என்பேன் (எனது பெருமதிப்பிற்குரிய திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு நீங்கள் அளித்த பதில்கள் ஏனோ இந்த இடத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது!).

ஈ வெ ரா சொன்னது என்ன ? வயதுக்குப் பொருந்தாத திருமணம் பொருந்தாத் திருமணம் என்கிறார். நன்கு கவனிக்கவும், குழந்தைத் திருமணம் என்று அவர் எங்குமே கூறவில்லை. வயதுக்குப் பொருந்தாத திருமணம் என்றால் என்ன அர்த்தம் ? மணமக்களிடையே ஒரு இருபது, முப்பது வயது வித்தியாசம் இருப்பின் அத்தகைய வயது வித்தியாசம் உள்ள திருமணங்களை, வயதுக்குப் பொருந்தாத் திருமணம் என்று வைத்துக் கொள்ளலாம் அதைத்தான் அவர் தெளிவாக தன் குடியரசுக் கட்டுரையில் பின்வருமாறுக் குறிப்பிடுகிறார்:

‘ ‘மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்,

பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர்

தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற

நிர்ப்பந்த முறையில் நடப்பது சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்றே

சொல்லலாம். ‘ ‘

(குடியரசு 3-6-1928)

வார்த்தைகளை மீண்டும் நன்றாக உற்றுக் கவனித்துப் படிக்கவும். ‘போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும் ‘ தமிழ் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டுப் புரிந்து கொண்டு விவாதிக்க வரவும். ‘போதிய வயது ‘ என்றுதான் சொல்லியிருக்கிறார், சிறு வயது என்றோ மைனர் வயது என்றோ சொல்லவில்லை. போதிய வயது என்று எழுதும் பொழுது, மணமக்களிடையே ஒன்றிலிருந்து பத்து வயதுக்குள் இருக்கக்கூடிய வயது வித்தியாசத்தைத்தான் ஈ வெ ரா சுட்டுகிறார் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. ஈ வெ ரா எழுதியதையே புரட்டிப் போட்டு மாய்மாலம் செய்து விதண்டாவாதம் புரிபவர்களை எப்படி அழைப்பது ? அது சரி, ஈ வெ ராவின் சீடர்களிடம் நேர்மையான விவாதங்களையா எதிர் பார்க்க முடியும் ?

நான் சுட்டிக்காட்டிய மேற்படி குடியரசுக் கட்டுரையில், ஈ வெ ரா எங்கே குழந்தைத் திருமணத்தைக் கண்டிக்கிறார் ? சட்டபூர்வமாகக் கூட ஒரு வயதுக்கு வந்த பெண் ஒரு கிழவனைக் திருமணம் செய்து கொண்டால் அது பொருந்தாத் திருமணம் என்று தான் ஈ வெ ராவே கூறுகிறார். அப்படி எழுதிய மை காய்வதற்குள் தன் தள்ளாத வயதில் ஐம்பது வயது இளைய ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அதைத்தான் நான் முரண்பாடு என்று குறிப்பிட்டேன். அந்தத் திருமணத்தை தவறு என்று நான் குறிப்பிடவில்லை, அதிலுள்ள முரண்பாடுகளைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன்.

நான் எழுதியதை கூர்ந்து படிக்கவும், நான் எங்குமே பொருந்தாத் திருமணம் தவறு என்று சொல்லவில்லை, சொல்பவர், ஒரு சிலரால் ‘பெரியார் ‘ என்றும் ‘தந்தை ‘ என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடப்படும் ஈ வெ ராமசாமி நாயக்கரே. குழந்தைத் திருமணத்தைப் பற்று ஈ வெ ரா எழுதவில்லை. பொருந்தாத் திருமணத்தைப் பற்றித்தான் அவர் எழுதினார். ஆக உங்கள் பகுத்தறிவுப் படி ஒரு எண்பது வயது கிழவன், பருவமடையாத 16 வயது பென்ணைத் திருமணம் செய்து கொண்டால் அது தவறு, ஆனால் அதே கிழவன், பருவமடைந்த 16 வயது சிறு பெண்னைத் திருமணம் செய்து கொள்வது சரி அப்படித்தானே ? ஆனால் அண்ணாத்துரை போன்ற ஈ வெ ராவின் சீடர்களோ, ‘என்னய்யா பகுத்தறிவு இது ? கேவலமாக அல்லவா இருக்கிறாது ? ‘ என்கிறார்கள்.

மற்றவர்களுக்கு எல்லாம் ஏன் ஈ வெ ரா பதிவுத் திருமணத்தை சிபாரிசு செய்யவில்லை என்பதுதான் எனது கேள்வி. பதிவுத் திருமணமும் சுயமரியாதைத் திருமணம் என்றால் தன்னை நம்பி வந்த கூட்டத்திற்கும் சட்டத்திற்குட்பட்ட அதே பதிவு திருமணத்தைச் செய்து கொள்ள அறிவுறுத்துவதுதானே ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளம் ? சட்டபூர்வமாக செல்லாது எனும் பொழுது, தன் தொண்டர்கள் சொத்து எக்கேடும் கெட்டுப் போகட்டும் அவர்கள் எல்லோரும் தன் சொல்படி தன் தலைமையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆனால் தான் மட்டும் மிகவும் விவரமாக தன் சொத்தைக் காப்பற்றிக் கொள்ளும் பொருட்டு பதிவுத் திருமணம் செய்து கொள்வேன் என்பது எந்த மாதிரியான பகுத்தறிவு ? எவ்விதக் கொள்கை ? தனக்கொரு கொள்கை, பிறருக்கொரு கொள்கை என்பதில்தான் அவரது நேர்மையின்மை வெளிப்படுகிறது. அந்த அயோக்கியத்தியத்தனத்தைதானய்யா நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவரைப் போய் பெரியார் என்றுக் கொண்டாடும் போக்கைத்தான் வன்மையாக எதிர்க்கிறேன்.

சொல்லும் குற்றசாட்டு என்ன என்பது கூடப் புரியாமல் வாதிடும் நண்பர் பரிமளம் போன்றவர்கள் ஈ வெ ராவைத் ‘தந்தை ‘ என்று ஏற்றுக் கொள்வது மிகவும் பொருத்தமானதுதான்.

சுயமரியாதைத் திருமணம் எந்த அரசால் அங்கீகரிக்கப் பட்டது என்பது இங்கு தேவையில்லாத கேள்வி. அதைக் கேட்டு தன் அதிபுத்திசாலியாகக் காட்டிக் கொள்ள முயல்பவர்களைக் கண்டு நகைக்கத்தான் என்னால் முடியும். இங்கு நான் எழுப்பியுள்ள கேள்விக்கும் யார் அதை சட்டபூர்வமாக்கியது என்பதற்கும் சம்பந்தம் கிடையாது. அது போலவே மணியம்மையின் உணர்வுகளும். யார் வேண்டுமானாலும் அந்தச் சட்டத்தை இயற்றி இருக்கட்டும், மணியம்மைக்கு எவ்வித உணர்வுகளும் இருந்து விட்டுப் போகட்டும், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஈ வெ ரா தன் சொத்தைக் காப்பதற்காக ஒரு வழியில் திருமணம் நடத்திக் கொண்டு, தன் தொண்டர்களின் சொத்துக்களைப் பற்றி அக்கறைப் படாமல் அவர்களுக்கு வேறொரு வழியில் திருமணம் நடத்தி வைத்த சுயநலத்த்தைப் பற்றி தான் இங்கு குற்றசாட்டே. மற்றபடி, நீங்களாகவே, ஈ வெ ராவின் பணப்பித்து பற்றியும், அண்ணாத்துரை கும்பல்களின் பதவி வெறி பற்றியும் ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. இது போன்ற திசை திருப்பும் பதில்கள் எனக்கு புதிதல்ல.

நான் மீண்டும் மீண்டும் கூற வருவது ஈ வெ ராவின் முரண்பாட்டுக் கொள்கைகளைப் பற்றி மட்டும்தான். பத்தாம் பசலித்தனமாகப் பேசியது நானல்ல, வயது பொருந்தாமல் திருமணம் செய்வதைப் பொருந்தாத் திருமணம் என்று வர்ணித்த ஈ வெ ராவும், பின் அவரே செய்து கொண்ட ஒரு திருமணத்தை, விமர்சித்த அவரது கண்ணீர்த் துளிகளும் மட்டுமே. நண்பர் பரிமளம் யாருக்காவது பத்தாம்பசலித்தனம் பற்றி அறிவுரை செய்ய வேண்டுமானால் அது அவரது பகுத்தறிவுப் பாசறையில்தான் முதலில் ஆரம்பிக்க வேண்டும். இங்கு நான் எங்குமே எது பொருந்தும் திருமணம் எது பொருந்தாத் திருமணம் என்று ஆராய்ச்சி செய்யவில்லை என்பதை நான் எழுதியதை சாதாரண பகுத்தறிவு கொண்டு படித்துப் பார்த்தாலேயே நன்கு விளங்கும். பொருந்தாத் திருமணம் பற்றி பத்தாம் பசலித்தனமாகப் பேசியதும், எழுதியதும் ஈ வே ராவும், அவரது பகுத்தறிவுப் பகலவன்களும் மட்டுமே; விஸ்வாமித்ரா அல்ல, அல்ல. விஸ்வாமித்ரா எழுதியது ஈ வெ ராவின் கொள்கை முரண்பாடுகள் பற்றி மட்டுமே. நண்பர் பரிமளம் யாருக்காவேனும் பரிதாப் பட விரும்பினால் தாராளமாக ஈ வெ ராமசாமி நாயக்கருக்காகவும், அண்ணாதுரைக் கும்பல்களுக்காகவும் பரிதாபப் பட்டுக் கொள்ளட்டும். கூடவே, நானும் சேர்ந்து பரிதாபப் படுகிறேன்.

மீண்டும் ஒரு முறை தெளிவாகக் கூறுகிறேன்:

வயது முதிர்ந்த ஆண்கள் வயது குறைந்த பெண்களை (சிறுமிகளை உட்பட) மணப்பதைப் பொருந்தாத் திருமணம் என்று சொன்ன ஈ வெ ரா, தானே அதேப் பொருந்தாத் திருமணத்தைப் புரிந்து கொள்கிறார். அது அவரது கொள்கை முரண்பாட்டைக் காட்டுகிறது.

இது போன்று தமிழ் மொழி, இந்தி மொழி எதிர்ப்பு, ஆங்கிலேயர் எதிர்ப்பு என்று ஒவ்வொரு விஷயத்திலும் இந்த ஈ வெ ரா முன்னுக்குப் பின் முரணாகவே நடந்து வந்துள்ளார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஆகவே இவரும், இவரின் கொள்கைப் பிடிப்பில்லாத, போலித்தனமான கொள்கைகளும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல, அவை புறந்தள்ளப்பட வேண்டியக் குப்பைகளே என்பதே எனது தெளிவான வாதம்.

இதற்கு மேலும் பரிமளக் கும்பல்களுக்குப் புரியாவிட்டல் ஈ வெ ரா சிலைக்கு மாலை அணிவித்து, சூடம் காண்பித்து, மொட்டைப் போட்டுக் கொள்ளட்டும், ஒரு வேளை விளங்கினாலும் விளங்கும்.

ஈ வெ ராவின் இரட்டை வேடங்களையும், போலி முகங்களையும் வெளிக்கொணரும் பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களைப் போன்றவர்களின் அரை வேக்காட்டுப் பதில்கள் மிகுந்த ஊக்குவிப்பு அளிக்கின்றன. அதற்காக மிக்க நன்றி.

விஸ்வாமித்ரா

viswamitra12347@rediffmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா