நடை -புத்தூரில் கட்டு – பாகம் 3

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


சுருளிப்பேட்டையில் சாப்பிட்டுச் சுருண்டு போனோம். எங்கும் காலில், தலையில் தடவியத் தைலங்களின், களிம்புகளின் வாசனைப் பரவியிருந்தது. சரியானத் தலையணை இல்லாமல், தோளில் எடுத்து வந்த பைகளைத் தலையில் வைத்துச் சமாளித்தோம். படுத்ததோ, பாயில்லாத வெறும் தரை. காலையில் காய்ந்த ஆந்திரா வெயில் சூட்டினை நன்றாகத் தரையில் பாய்ச்சியிருந்தது. சாப்பாடும் அதிகமாக இருந்தபடியால், தரையில் படுத்தவுடன் தூக்கம் கண்களை மூடியது. கனவில் கால்கள் எனக்கு மிக வீங்கி, பூதம் போன்று ஆன மாடிரி இருந்தது. தலை சற்று கிறு கிறுத்து, தலையில்லாத முண்டமாகக் கனவுகள் வந்தது. குறுக்கே வைகுண்டத்தில் சங்கு சக்கரமாகப் பெருமாள் வந்து போனார். நமக்கெல்லாம் கூடத் தரிசனம் கிடைக்குதே என்று எண்ணுகையில், விடியற் காலை 2 மணி அளவில் பாழாய்ப் போன என் நண்பன் என்னை எழுப்பி விட்டான். ‘மச்சி ! இப்ப பல் தேய்த்து விட்டுக் கிளம்பினால் தான் காலை ஏழு மணிக்குள் நாகலாபுரம் போகலாம் ‘ என்றான். ஏதோ ‘கணவனே கண் கண்ட தெய்வம் ‘ படத்தில் ஜெமினி நாகலோகத்திற்குப் போக நண்பன் வழி காட்டுவதைப் போல எனக்குப் பட்டது. என் உதடுகளில் இருந்த கிண்டலைக்கண்ட என் நண்பன் – ‘அங்கு ஒரு சூப்பர் பெருமாள் கோவிலிருக்கு. பெருமாளைப் பார்த்து விட்டு, காலை எட்டு மணிக்கு ஆமை வடை போடும் ஒரு கடையில் அமர்ந்து இட்லி, வடையைச் சாம்பாருடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் …. ‘ என்று என் வயிற்றில் பால் வார்த்தான். பெருமாளை விட வடையைப் பார்

க்கும் ஆர்வத்தில் எழுந்து உட்கார்ந்தேன்.

பர பரவென்று அனைவரும் கிளம்பச் சித்தமாயினர். இருண்டத் தெருவில் மங்கிய டியூப் லைட் வெளிச்சத்தில் குழுக்களாக பலர் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

நானும் நாறிப் போன என் ஸாக்ஸைத் திரும்பப் போட்டுக்கொண்டு (அடுத்த தடைவையாவது வரும் போது பத்து ஸாக்ஸ் வாங்கி வர வேண்டும்) நடக்கலானேன். ‘டேமேஜ் பாண்டி ‘ நடக்க ஆரம்பிச்சிட்டாண்டோய் …. ‘ என்று என் நண்பன் உற்சாகப் படுத்த குளிர் காற்றில் ‘விறு விற் ‘ வென்று நடக்கலானேன். கையில் வெறும் டோள் பை. அதில் சிலத் துணிமணிகள், மற்றும் அழுக்கு மூட்டைகள். மடியில் கனமில்லாமல் கும்மிருட்டில் சுருளிப்பேட்டை எல்லையில் புளிய மரங்கள் அடர்த்தியான ஒரு ரோட்டில் நடக்காலானோம்.

நான் ‘வேப்ப மர உச்சியிலே பேயொன்று ஆடுது …. ‘ என்று உச்ச ஸ்தாயில் கர்ண கடூரமாகப் பாட, ஒரு நண்பன் ‘பயந்து ஓட ‘ ஆரம்பித்தான். அவரவர்கள் விரைந்து நடக்க நான் ‘சட் ‘ டென்று தனிமையானேன். மேலே ஆகாயத்தில் நிலா குளிராகக் காய்ந்து விட்டிருந்தது. அதைச் சுற்றி ஒரு வட்டம் இருந்தது. மேலும் நிறைய நட்சத்திரங்கள் வானில் தெரிந்தது. நகரத்தில் வாழ்ந்ததால் நட்சத்திரம் தெரியாமல், வானம் பார்க்காமல் திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தனத்தில் வாழ்ந்த எனக்கு, இயற்கையின் முழுத் தோற்றம் பிரமிப்பையும், இதையெல்லாம் தினமும் பார்க்காமல் அடைந்து வாழ்வதைப் பற்றி வருத்தம் வந்தது. கண்ணுக்கெட்டிய தோரம் மரங்களும், கறுமையான வயல் பரப்புக்களும், அதில் தெரியும்ம் பனை மரத்து ஓலைகளின் நிழல்களும் மனதைக் கவர்ந்தது. அவ்வப்போது வரும் பம்ப் செட்களின் அருகே ‘மினுக் மினுக் ‘ கென்று எரியும் டியூப் லைட்களும் அதைச் சுற்றி வரும் பூச்சிகளும் புதிதாகவே எனக்குப் பட்டன.

கரீக் கரீக்கென்று கவுளி சத்தம் போட்டது. மணிக்கு ஐந்து கி.மீ வேகத்தில் நடந்திருக்க வேண்டும். சடுதியில் மைல்கற்களைக் கடந்து சடுதியில் கிராமங்களைக் கடந்தேன். ஒரு கிராமத்தில் திருருவிழா போலும். தெலுங்கு ‘சின்ன தம்பி ‘ படத்தில் வெங்கடேஷ் ஆட, ‘டெக் ‘ கில் வீட்டின் வெளியே தாள்வாரத்தில் கூட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆந்திராவில் சினிமா மோகம் அமோகம். மணி அப்போது காலை 3.00. டா கடைகள் இன்னும் திறக்கப் படவில்லை. ஆர்வத்தைக் கட்டு படுத்திக் கொண்டு நடக்கலானேன். ஒரு இடத்தில் சாலை திடாரென்று மேடாகி கல் மலைகள் போன்று இருந்த மேடுகளினிடையே ஒரு பள்ளத்தாக்கை நோக்கிப் போனது. நக்ஸலைட் யாராவது எங்களைப் பிடிப்பாரோ என்று பயந்து கொண்டு சில தூரம் நடந்தோம். நண்பர்கள் குழு, குழுவாகப் பிரிந்துச் சென்ற வண்ணம் இருந்தனர். சிலரைக் கடந்து போகுமுன் ‘எப்படி இருக்கே ‘ என்று இரண்டொரு வார்த்தைகளைப் பேசிவிட்டு மேலும் விரைவாக நடந்தோம். கால்கள் நடக்க நடக்க நடை பிடித்து உடம்பு கால் சொன்ன படி கேக்க ஆரம்பித்தது. ஆறு மணிக்கு ஏதாவது பம்ப் செட்டில் குளியல் போடலாம் என்று சொன்ன நண்பன் என்னைக் கடந்து சென்று விட்டான். அவனை எப்படியும் பிடிக்கவேண்டுமென்ற வேகத்தில் நானும் நடந்தேன். அவனை எட்டிப் பிடித்துவிட்டால் ஒரு சாதனையைப் படைத்துவிட்ட சந்தோஷம் மிஞ்சியது. ஆனால் என்க்கும் முன்னால் சில ‘பெரிசுகள் ‘ முந்திக் கொண்டிருந்தன. இப்படியாகப் போட்டா போட்டியுடன் நாகலாபுரத்திற்கு நாலு கி.

மீ தொலைவில் ஒரு பம்ப் செட் அருகே நண்பர்கள் அனைவரும் குழுமினோம்.

குளிக்கும் போது சொம்பில் ஊற்றிக் கொண்டு குளிக்கும் பழக்கத்திலிருந்த எனக்கு, பம்ப் செட்டில் குளிப்பது ஒரு நீர்வீழ்ச்சியைப் போலவே இருந்தது. என் ஆபிஸில் திருநெல்வேலி பக்கமிருக்கும் நண்பர்கள் எல்லாம் குற்றாலம், சுருளிஅருவி என்று பேசும் போது வாய் பிளந்து கேட்டிருக்கின்றேன். ஆனால் அனுபவம் கம்மி. தலை முடி லேசாக, நுரை வர குளிப்பதும் அற்புதமாக இருந்தது. எங்கே, சென்னையில் பெரும்பாலும் கடல் தண்ணீரையே மொண்டு குளிக்கிறோம் அல்லவா ?. சிலீரென்று வரும் தண்ணிரில் தலையைக் கொடுத்து மொட்டென்று பொத்தென விழும் தண்ணீரைத் தலையில் தாங்கிக் கொண்டு உடம்பைக் காண்பிப்பது சுகம் தான். குளித்து விட்டு, கிளம்பும் போது, கால்களுக்குப் புத்துணர்ச்சியாக இருந்தது. காலையும் ஏழானது. நாகலாபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பக்தி மிகக் கடவுளைக் கும்பிட போனேன். கோவிலின் கலை அழகும்,, நகரக் கோவிலில் உள்ளாத அமைதியும் (மக்கள் தொகை அங்கு கம்மி, அதான்!), காலை வேளையின் சில்லென்றிருந்த கோவில் பிரகாரங்களும் மனதைக் கவ்வின. அதோடு கோவிலில் கொடுத்த பொங்கலையும் வாயால் அள்ளி, வடையைக் கவ்வினோம்.

வெளியே வரும்போது அங்கு இருந்த சிறு கடையில் கீரை வடையும் சாப்பிட்டோம். பிறகு, மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். ஊர் எல்லை மிகவும் பசுமையாக இருந்தது. வயிற்றில் உணவு, காலையில் புத்துணர்ச்சியான குளியல், கோவில் கொடுத்த மனத் தெம்பு அனைத்தும் சேர விறு விறுவென்று புத்தூரை நோக்கி நடந்தோம். போகும் வழியில் ஒரு அணையிருந்ததால் (கல்லட்டி அணை ? பெயர் மறந்து விட்டது.), அதைக் குறுக்கே கடக்க வேண்டும். இல்லையென்றால் அதைச் சுற்றி தார் ரோடில் மேலும் 3 கிமீ நடக்க வேண்டும். அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது. தைரியமாக இன்னும் ஒன்பது மாதத்திற்கு தண்ணீர் வராது என்ற தைரியத்தில் படிக்கட்டுக்கள் வழியே காய்ந்த வண்டல்/களி மண்ணில் காலை வைத்தோம். மெத் தென்றிருந்தது. தூரத்தே தெரிந்த கரையை நோக்கி சரக் சரக் கென்று நடந்தோம். கரையினருகே இரு ரைஸ் மில் இருந்தது. அங்கு தான் மதிய உணவு. அங்கு ஒரு பம்ப் செட்டும் இருந்தது. அடடா ! என்ன அழகு ?. திருப்பதி போயிட்டு வருவதற்குள் பம்ப் செட் எங்களை மயக்க வைத்து விட்டது.

அணையில் நடக்க நடக்க வெயிலின் உக்கிரம் அதிகரித்து கானல் நீர் காண பாலைவனத்தில் நடப்பதைப் போன்று நடந்தோம். கரையின் அருகே இருந்த கருவேல முள் செடிகள், புதர்கள் இருந்தன. அந்தச் சமயத்திலும் காலைக் கடன் (நண்பகல் கடன் ?) கழித்துக் கொண்டிருந்த சில ஆன்மாக்களைப் பார்த்தேன். வீட்டில் போகப் பிடிக்கவில்லை போலும். பசி கிள்ளியது. காலில் தேய்ந்து தோல் எரிந்தது. நண்பர்கள் வேறு எரிச்சலான ஜோக்குகளைச் சொல்லி கடுப்பேற்றிக் கொண்டிருந்தனர். வெயிலில் உக்கிரத்தால் காலையில் சரியாகக் காலைக் கடன் போகாததால் பின்புறமும் எரிந்தது. மேலும் ஒரு கும்பல் மெதுவாக வாங்கப்பா! நாங்க முன்னால போய் “ரைஸ் மில்லில்” இடம் பிடிக்கிறோம் என்று “உவ்வே” காட்டினர். “ரைஸ் மில்ல்” வேப்ப மரங்களுக்கு நடுவில் சின்ன தம்பி படத்தில் வரும் கிராம வீடுகள் போன்று காட்சி அளித்தது. பளிச் பச்சைக்கு நடுவில் பளிச் வெள்ளையாக இருந்த இடத்தில் நமது நண்பர்கள் குழாம் முன்னாலேயே போய் சேர்ந்திருந்தது. உச்சி வெயில் காயும் இடத்தில், அருவியெனக் கொட்டும் பம்ப் செட் இருந்தது. துணிகளைக் களைந்து விட்டு சட்டென்று குத்தித்தோம். அவ்வளவு ஆசையாக ஆடைகளைக் களைந்தது பிறகு திருமணம் ஆன புதிதில் தான். அப்போ எரிந்த உடம்புக்கு, தலைக்கு, கால்களுக்கு அருவி (எங்க பம்ப்) நீர் சுகமாக இருந்தது. ஜாலியாக ஜலக் கிரீடை பண்ணினோம். குளித்து விட்டுப் பிறகு கொஞ்சம் கிரிக்கெட் (நிழலில் தான்). மீண்டும் சூடாகச் சாம்பார் சாதம் மற்றும் தய

ிர் சாதம். குடிக்க நீர் மற்றும் கிடைக்கவில்லை. ஃபில்டர் தண்ணீர் மட்டும் குடிக்கும் இந்தக் காலத்தோட ஒப்பிடும் போது நாங்கள் கிருமிகள் நிறைந்திருக்கும் பம்ப் தண்ணீரைக்குடித்தோம். ஒன்றும் பண்ணாததற்கு எங்கள் உடம்பு காரணம் இல்லை. ஒன்றும் ஆகலை. அவ்வளவு தான். மஞ்சள் காமாலை வந்திருக்கலாம். வரலை. பாலாஜி எங்களைக் காப்பாற்றினார். பல பெரிசுகள் அந்த நீரைக்குடித்தே பல வருடங்களாய்த் திருப்பதிக்கு நடக்கின்றனர். அப்படியே ஒருநாள் வைகுண்டம் போவதற்காக இருக்கும்.

மீண்டும் நடை! என் நண்பனிடம் “என்னடா எப்ப புதூர் போவோம்” என்று கேட்டு வைத்தேன். அதற்கு, மாலை நாம ஒரு தோப்பில் தங்குவோம். அங்கு இளநீர் கிடைக்கும். குடித்து விட்டு நடந்தால், மாலை சுமார் 6 மணிக்கு புதூர் போகலாம் என்று என்னைத் தேற்றினான். காலும் புத்தூரில் கால் கட்டு போடுமள்விற்கு தேய ஆரம்பித்தது.

தோப்பில் தொந்தி தெரிய சின்னதாக உடை உடுத்திய ஒரு மனிதர் சைக்கிளில் இளநீர்களளக் கொத்து கொத்தாக மாட்டியிருந்தார். சர்க்கென்று போடும் அரிவாளால் கொய்து எங்களிடம் தந்தார். ஆரோக்யமான நீரைப் பருகியதில் மிக மகிழ்ச்சி. கீழே விழுந்த ஓடுகளை வைத்து அமெரிக்கர்களைப் போன்று “ரக்பி” (அமெரிக்கா ஃபுட்பால்) விளையாடினோம். பெரிசுகள் மரத்தடியில் வேட்டியை அவிழ்த்து போட்டு, டிராயருடன் படுத்துறங்கினர். அந்த இடத்தை விட்டு வர மனமில்லாத நிலையில் புறப்பட்டோம். எங்களுடன் வந்த இரு சிறுவர்கள் விறுவிறு வென்று முன்னால் ஓடினர். நாங்க ஒடிந்தக் கால்களை ஒவ்வொரு அடியாகப் போட்டபடி மேலும் நடந்தோம். ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீர் வரும் கால்வாய் இங்கு தான் இருக்கு. அருகே சென்று பார்த்தால் சிமெண்ட் கால்வாய் இருந்தது. நீர் இல்லை. அப்படிதான் பெரும்பாலும் இருக்குமென்று சொன்னார்கள். பம்ப் செட்டில் அதிகம் நீர் பார்த்த எங்களுக்கு அது நகைச்சுவையாக இருந்தது. ரசித்த படி புத்தூர் எல்லையில் ஒரு கோவிலின் அருகே செல்லும் போது மழை கொட்ட ஆரம்பித்தது. சரி, வயல் வழியே போனால் சீக்கிரம் போகலாமென்று போனோம்.

எங்களை ஓநாய்களென நினைத்து ஒருவர் அரிவாளுடன் துரத்த ஆரம்பித்தார். கீழே பார்த்தால் நாற்று நடப்பட்டிருந்தது. நாங்கள் செருப்பு காலுடன் மிதித்து துவம்சம் பண்ணியிருந்தோம். பாரதிராஜா படத்தில் மட்டும் பார்த்திருந்த நெல் வயல்களை நேரில் பார்த்தோம். சக்தியாக இருந்தது. பெண்களும், ஆண்களும் வியர்வை வழிய பாடு பட்டுக் கொண்டிருந்தனர். பட்த்தில் மட்டும் தான் சுகன்யாக்கள் நல்ல விமல் புடவைகளைக் கட்டுக் கொண்டு கவுண்டர்களுடன் நடனம் ஆடுவர். நேரில் நைந்த புடவைகளைக் கட்டிக் கொண்டு அயர்ச்சியாக இருந்தனர். மழையினால் உடம்புத் தெப்பலாக நனைந்திருந்தது. ஒருவழியாக மீண்டும் தார் ரோட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

தூரத்தே புத்தூர் தெரிந்தது. ஒரே ஒரு அறையிருக்கும் ஓடு வீடுகள் பலவற்றை பார்த்தோம். அதில் வாழும் மனிதர்களைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதலாம். சினிமாப் படங்கள் எடுக்கலாமென்று தோன்றியது. எங்களைப் பார்த்தால் சென்னையில் பிச்சைக்காரன் என்று விரட்டுவார்கள். ஒரு வீட்டின் திண்ணையில் இளைப்பாறினோம். அந்த வீட்டுப் பெண்மணி குளிர்ந்த நீரை எங்களுக்கெல்லாம் அளித்தார். உற்சாகமாய்ப் பேசினார். வீட்டில் வேறு ஏதாவது “ஃபிகர்” இருக்கா என்று பார்த்தோம். ஒன்றும் பார்க்கவில்லையாததால் அந்த உறவை அப்படியே துண்டித்துவிட்டு, ஊரினை நோக்கி நடைப் பயிலலானோம். ஒருவன் புத்தூரில் அப்படியே ஒரு நல்ல “பெண்ணைப்” பார்த்து ஓட்டலில் ஒதுங்குவதாகக் கூறினான். சாமியைப் பார்க்க போகிறபோதுகூட இம்மாதிரி மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டே சென்றான். ஆண்டவன் அவன் கூட வந்த எங்களை மன்னிக்க ! ஆனால் பாருங்கள் அடுத்த நாள் முழுவதும் அவன்ருகே வரும்போது எங்களுக்கு “எய்ட்ஸ்” வந்த மாதிரி நடித்து அவனைப் பயமுறுத்தினோம்.

புத்தூருக்கு ரயில் கேட் வழியே நடந்து வந்து கல்யாண மண்டபத்தில் அடைக்கலம் வரும் போது சுமார் அறுபது கால்களுக்கு புத்தூர் மாவு கட்டு தேவையாயிருந்தது. கால்கள உடைந்து, கொப்புளங்களோடு சாதித உள்ளங்களோடுச் சாப்பிட்டுத் தூங்கிப் போனோம்.

Series Navigation