நடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

ஜெயஸ்ரீ ரகுராம்


வீட்டைவிட்டு வெளியேறிய புத்தர் புறஉலக அலைச்சலிலும் வாசத்திலும் நேருக்குநேர் கண்ட பசி, பிணி, மூப்பு, மரணம் அனைத்தும் ஏன் ஏன் என்று தனக்குள்ளே பல கேள்விகளை உருவாக்கிக்கொண்டு, அக்கேள்விகளின் சுமையோடு போதிமரத்தடியில் அமர்ந்தபோது ஞானம் பெறுகிறார். மண்ணுக்கும் பேரரசர் பட்டத்துக்கும் ஆசைப்பட்டு போர்போர் என ஓயாமல் அலைந்து இறுதியில் மூர்க்கமாக நிகழ்த்திய கலிங்கத்துப்போரில் பலியாகி இறந்துகிடக்கும் ஆயிரக்கணக்கான உயிரற்ற உடல்களைக் கண்டதும் அசோக சக்கரவர்த்தியின் அகக்கண்கள் திறக்கின்றன. மனிதனின் பேராசையோ எதையும் அடைந்துவிடும் வெறியோ, தான் என்று நிலைநிறுத்திக்கொள்ளும் வேகமோ, தானே பெரியவன் எனக் காட்டிக்கொள்ளும் அடக்குமுறையோ, கோபமோ எதுவுமே முடிவில் அர்த்தமற்று அன்பும் கனிவும் மட்டுமே வாழ்க்கையில் இன்பம் தரும் என்பதை நாமும் அறிந்துகொள்ளலாம். ஆனால் அதைக் கண்டுகொள்ளும் வரையிலான நீண்ட நெடும் வாழ்க்கைப் பயணத்தில் நம் கண்ணில்படும் சம்பவங்களாலும் மனிதர்களாலும் உருவாகும் கேள்விகள் தொடர்ச்சியானவை. சில கேள்விகளுக்கு விடைகள் உடனடியாக உதிப்பதைப்போலத் தோன்றினாலும் பல கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறியமுடிந்ததில்லை என்பதே உண்மை. நாம் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கநேர்ந்துவிடும் ஏராளமான நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடந்தபடியே உள்ளன. சாதாரணமானவையாக அவற்றை எடுத்துக்கொள்ளும் மனிதர்கள் நடுவே, அவற்றைப்பற்றிய அழுத்தமான சித்திரத்தையும் அவை துாண்டிவிடும் எண்ணங்களையும் துக்கங்களையும் கேள்விகளையும் தொகுத்துப்பார்க்கும் கண்ணோட்டத்துடன் கட்டுரைகளாக முன்வைக்கிறார் பாவண்ணன். ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ தொகுப்பில் உள்ள எல்லாக் கட்டுரைகளும் இத்தன்மை கொண்டவை.

தொகுப்பில் 22 கட்டுரைகள் உள்ளன. கதைபோலவும் நிகழ்ச்சி விவரணைபோலவும் தோற்றமளிக்கும் இக்கட்டுரைகள் கதையின் எல்லையையும் சித்தரிப்பின் எல்லையையும் தாண்டி வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் ஒரு மனத்தின் ஓய்வற்ற பயணமாக விரிவடைந்தபடி இருக்கின்றன. பெண்கள், குழந்தைகள், மரணம், இயற்கை என நாம் சாதாரணமாகப் புறக்கணிக்கக்கூடிய பல அம்சங்களைப்பற்றிய எண்ணங்களைத் துாண்டிவிடுகின்றன. கட்டுரையின் மொழி பல தருணங்களில் கேட்டு அனுபவிக்கமட்டுமே முடிகிற இனிய இசையின் தடத்துக்கு நிகராக உள்ளது. சில இடங்களில் பிஞ்சுக்குழந்தையின் மென்மையான தீண்டல்போல உள்ளது. மேலம் சில இடங்களில் தழுவிக்கொண்டோடும் தென்றலாக உள்ளது. எல்லா வகைகளிலும் நம்மைக் கலைத்துப்போடுபவையாக உள்ளது என்பது மிகையான கூற்றாகாது.

‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ கட்டுரையில் தான் கண்ட பல ஊர்களைச் சேர்ந்த கடல்களின் தன்மையை வெவ்வேறு உவமைகளோடு பாவண்ணன் குறிப்பிடும்போது அக்கடல்களின் சித்திரங்கள் நம் மனத்திலும் மாறிமாறி தோற்றம் கொள்கின்றன. ‘அதிகாலை நடையும் அறியாமையும் ‘ என்ற கடடுரை எளிமையான விதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் ஆழமான பொருளை உடையதாக உள்ளது. கட்டுரையில் அதிகாலைநடை நடக்கச் செல்லும் நபரால் கடைசிவரை யாருக்கும் சரியான வழிகாட்ட இயல்வதில்லை. கேட்டதும் சரியாகச் சொல்வதற்கென்றே அவர் வளர்த்துக்கொள்ளும் தகவலறிவு பயன்படுத்த இயலாத செல்வமாக பெருகிக்கொண்டே போகிறது. அறியஅறிய அறியாமையின் எல்லை விரிவடைந்தபடியே செல்கிறது. இந்தப் புள்ளியில் கட்டுரையின் தொனி அழகாகத் தளமாற்றம் பெற்றுவிடுகிறது. ஏதோ ஒரு நோக்கத்துக்குத்தான் நாம் ஒன்றைத் தொடங்குகிறோம். ஆனால் நோக்கம் கடைசிவரை நிறைவேறுவதில்லை. மாறாக, நோக்கத்துடன் தொடங்கப்பட்ட காரியங்களின் பாரம் மிகவும் வெற்றிகரமாக கூடிக்கொண்டே செல்வதில் எத்தடையும் நேர்வதில்லை. சந்தோஷத்துக்குச் செல்வம் வேண்டுமெனச் சேர்க்கத் தொடங்குகிறோம். செல்வம் சேர்ந்தபடியே செல்கிறது. ஆனால் சந்தோஷத்தைத்தான் அடையாளம் கண்டறியமுடிவதில்லை. இப்படி அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே செல்வதற்குத் தோதாக கட்டுரை பல வாசல்களைத் திறந்துவிடுகிறது.

‘தரைக்கு இழுக்கும் அதிர்ச்சி ‘ என்ற கட்டுரையில் மரணத்தின் வெவ்வேறு வடிவங்களைச் சொல்லிச் செல்கிறார் பாவண்ணன். தன் தந்தைக்குக் கொள்ளிவைக்க கையில் தீச்சட்டியோடு நிற்கும் சிறுவன், பிறந்து சில நாட்களேயான குழந்தை எதிர்பாராத கணத்தில் இறந்து விட, அக்குழந்தையில் உயிரற்ற உடலைச் சுமந்துசெல்லும் தந்தை, காசநோயால் மனைவியை இழந்த கணவன், வரதட்சணைக் கொடுமையால் கணவனோடும் வாழ வழியில்லாமல் தந்தைக்கும் பாரமாக இருக்கும் விருப்பமுமில்லாமல் துாக்குபோட்டுக்கொண்டு உயிர்துறக்கும் இளம்பெண்ணின் மரணத்தைப்பற்றிய சித்திரம் என மரணத்தின் வெவ்வேறு சித்திரங்களைத் தீட்டிக்காட்டும் பாவண்ணன் வாழ்வுபற்றிய சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறார். உண்மையிலேயே தான் மட்டுமே நிச்சயம் என்று ஆழ்மனத்தில் ஆணவத்தோடு திரிகிற ஒவ்வொருவரையும் தரைக்கு இழக்கும் அதிர்ச்சிதான் மரணம்.

பெண் கொல்லப்படுகிறாள். அல்லது விற்கப்படுகிறாள். இரண்டுமே பொருளாதாரம் ஏற்படுத்தும் நெருக்கடிகள். கணவன் வீட்டில் கேட்கும் பொருளைத் தராமல் ஒரு பெண் தற்கொலை செய்துகொள்கிறாள் என்றால் இலட்சத்தில் ஒருத்தி என்ற கட்டுரையில் சொல்லப்படும் பெண்ணின் கதை வாசிப்பவர் கண்களைக் குளமாக்கக்கூடியது. குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தந்தையே தன் மகளைப் பாலியல் தொழிலுக்கு அனுப்பிவைக்கிறான். இச்சம்பவம் விலைமாதர்கள்மீது இரக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஆணாக இருப்பதையே அவமானமாக உணர்ந்தேன் என்று பாவண்ணன் கூறும்போது ‘அறியாமையால் அவர்கள் செய்யும் பாவங்களை நான் சுமக்கிறேன் ‘ என்று சொல்லும் இயேசுநாதரின் சித்திரம் கண்முன் எழுஸகிறது.

முதுமையின் கொடுமை பெரிது பெரிது. ‘ஒரு தாயின் கதை ‘ கட்டுரை எதார்த்த உண்ாமயை அப்பட்டமாகப் படம்பிடிப்பது. கி.ராஜநாராயணன் எழுதிய ‘பெத்த மனம் ‘ என்னும் கதை ஞாபகத்துக்கு வந்துபோகிறது. இன்று ஏன் பல இடங்களில் முதியோர் இல்லங்கள் பெருகுகின்றன என்றெல்லாம் ஒரு கட்டுரையாளரின் தொனியோடு சொல்லாமல் நம் கண்ணில் சாதாரணமாகப் பட்டு விலகியிருக்க வாய்ப்புள்ள ஒரு சின்ன நிகழ்ச்சியை விவரிப்பதன் வழியாக அக்கேள்விகள் மனத்தில் திரண்டெழும்படி செய்யப்பட்டுவிடுகிறது. கட்டுரையை வாசித்தபிறகு அம்மா தாயே என நம்மை நோக்கி கோயில் வாசலில் கையேந்தும் வயதான எந்த மூதாட்டியைப் பார்த்தாலும் எந்தப் பிள்ளைகளால் கைவிடப்பட்டவராக இவர் இருக்கக்கூடும் என்ற கேள்வி எழாமல் கடந்துசெல்ல முடிந்ததில்லை. ஐந்து பிள்ளைகள் பெற்ற தாய் ஆதரிக்க யாருமின்றி கோயில் வாசலுக்குப் பிச்சையெடுக்க வந்துவிடுகிறாள். மரணத்துக்குப் பின்னர் அடக்கச்செலவுக்கான தொகையைப் பிச்சையெடுத்துச் சேர்த்து அருகில் இருக்கும் கடைக்காரரிடம் கொடுத்துவைக்கிறாள். உறவென்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லாத- புதுக்கட்டடங்களில் இரவுக் காவல்காரராக வேலைசெய்யும் பெரியவர் எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்பார்த்தவராக சட்டைப்பையில் அடக்கச்செலவுக்கான பணத்தோடும் கோரிக்கைக் கடிதத்தோடும் வாழ்க்கையை ஓட்டுகிறார். முதுமையின் நிலை இதுதான் என்றால் வாழ்க்கையின் பொருள்தான் என்ன என்னும் கேள்வி தவிர்க்கமுடியாத வண்ணம் நம் மனத்ில் எழுகிறது. நன்றியுணர்வு, பெரியோரைப் போற்றுதல் எல்லாம் ஏட்டறிவுமட்டும்தானா ? கஷ்டப்பட்டு குழந்தைகளை முன்னேற்றும் அந்த அம்மாவின் முடிவு ஏன் அப்படிப் போனது ? பணமும் பொருளும் பெண்ணும் மட்டுமே வாழ்க்கையா ? அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.

‘நெருங்கமுடியாத இடைவெளி ‘ என்ற கட்டுரை அருமையான ஒன்றாகும். குழந்தைகள் முழுக்கமுழுக்க பெற்றொரையே சார்ந்திருந்துவிட்டு வளரவளர அவர்கள் தங்களுக்கென்று ஓர் உலகத்தை வரித்தக்கொள்ளும்போது, குழந்தைக்கும் பெற்றோருக்குமான இடைவெளி என்பது பெரிதாகிக்கொண்டே மெல்லமெல்ல அதிகமாகிக்கொண்டே போகிறது. பாவண்ணன் பல நிலைகளில் தன் மகனுடனான பள்ளிக்கூட வாழ்க்கைநாள்களிலிருந்து ஒவ்வொரு நிலையைப்பற்றியும் விரிவான அளவில் சொல்லிச்செல்லும்போது, இக்கட்டுரையோடு நாமும் ஒன்றிவிடுகிறோம். கையை ஒதுக்கி விலக்கிவைப்பது அவர் மகன் மட்டுமல்ல, நம் பிள்ளைகளும்தான் என்ற ஞாபகம் வந்துபோகிறது. வியாசரிடமிருந்து சுகர் பிரிந்துசெல்லும் கதையை ‘பிரிவு என்ற தலைப்பில் ஏற்கனவே பாவண்ணனே எழுதி வெளிவந்த சிறுகதையும் ஞாபகத்துக்கு வந்துபோகிறது.

தொகுப்பின் பல கட்டுரைகள் எவ்விதப் பாசாங்குமற்று எதார்த்த வாழ்வின் சாயலோடு எழுதப்பட்டுள்ளன. இவற்றை ஒருசேர வாசிக்கும்போது நாமும் சந்தித்த நிகழ்ச்சிகள் மனத்தில் மிதந்துவருகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்க்கைபற்றிய கேள்விகளை எழுப்பக்கூடியனவாக இரக்கின்றன.

( தீராத பசிகொண்ட விலங்கு- கட்டுரைகள், பாவண்ணன். புதுமைப்பித்தன் பதிப்பகம், அசோக் நகர், சென்னை-83)

Series Navigation

ஜெயஸ்ரீ ரகுராம்

ஜெயஸ்ரீ ரகுராம்