நடிகன்

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

கமலாதேவிஅரவிந்தன். சிங்கப்பூர்



அனுபமா அரண்டுபோய் அழுதாள். விம்மி விம்மி அழுதாள். சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எல்லோருமே ,தன் ஆக்ஞைக்குட்பட்ட நடிக நடிகையர்களாயிற்றே, என்ற ப்ரக்ஞை கூட இன்றி, வெட்கத்தை விட்டு ,அவள் அழுததைக் கண்டும் சந்திரசேகர் ஓயவில்லை. மேலும் பத்து நிமிஷத்துக்கு
அவளைத் திட்டித் தீர்த்தபிறகே ,அவ்விடம் விட்டகன்றார்.பின் என்ன?

கொள்ளிக்கட்டை ‘ என்று தெரிந்தே தலையில் எடுத்து சொறிந்து கொண்டால்,அதன் பலனை அனுபவிக்க வேண்டாமா? இன்னும் இரண்டே மணிநேரத்தில் நாடகம் தொடங்கவேண்டும். மதியமே, அரங்க ஒத்திகை, தொடங்கும்போதே வந்து சேரவேண்டிய செட்டிங் இன்னும் வந்து சேரவில்லை..
கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டியவன் மத்தாயிக்குட்டி. பொறுப்பாய் ”ஞான் போய் கொண்டுவருகிறேன்,’ என்றபோதே எப்படி நம்பினாள்?“வேண்டாம், கொள்ளிக்கட்டை, உன் தயவே இங்கு தேவையில்லை,’என்று முகத்தைப் பார்த்து எப்படி மறுப்பது , என்று முக தாட்சண்யம்,பார்த்ததன் பலன்,அடிவயிற்றில் நெருப்பாய், இதோ அனுபவிக்கிறாள்.

செட்டிங்கும் வைத்து, ஒத்திகை நடத்தினாலே,, நிகழ்ச்சியின் போது,இடப்பக்கம் போவதற்குப் பதில் வலப்பக்கமாய் போய்விட்டு,
பார்வையாளர்களிடையே, இவளை மாட்டிவிடும், நடிக நடிகையரிடையே, இந்த நிமிஷம் வரை செட்டிங் வரவில்லையென்றால், நிகழ்ச்சியின்போது நடக்கும்
வேடிக்கை இருக்கட்டும்..எதை வைத்து நிகழ்ச்சியைத் தொடங்குவது? திரை விலகும்போதே வெற்று அரங்கத்தில் நடிக்க இவளது வீதி நாடகமோ,
அல்லது பரீக்‌ஷார்த்தனை நாடகமோ அல்லவே.
சமூக நாடகத்தில் முற்றிலும் புத்திலக்கிய பாணியில், இவளே அருமை அருமையாய் ,எழுதித் தயாரித்த இந்த நாடகத்தில்,
செட்டிங், மைக், பிண்ணணி, என எல்லாமே வேண்டுமே.
என்ன செய்வது?
அய்யோ, பாவி, மத்தாயிக்குட்டி, எங்கே போய் தொலைந்தாய்?
உக்கி, உருகி,அப்படியே மடிந்து உட்கார்ந்து அனுபமா அழுததைக் கண்டபோது, சுற்றி நின்ற அத்தனை பேருக்குமே கூடகண்ணீர் வந்துவிட்டது.
ஆனாலும் மத்தாயிக்குட்டி வரவில்லை. யாரிந்த மத்தாயிக்குட்டி,?
ஹூம்,அந்த வயிற்றெரிச்சலை பகிர்ந்து கொள்வதற்கு முன்னர், அவனுடைய கல்யாண குணங்களைத் தெரிந்து கொள்ளவேண்டாமா?
நான்கு ஆண்டுகட்கு முன்னர், ஒரே நேரத்தில் எல்லா அமைப்புக்களுக்குமே நாடகம் இருந்ததால், நடிகர் பஞசம் ஏற்பட்டது.
அப்போது குழுவைச்சேர்ந்த மூத்த கலைஞர் ஒருவரின் சிபாரிசில்,வந்து சேர்ந்தவன் தான் இந்த மத்தாயிக்குட்டி.
சிங்கையின் மிகப் பிரபலமான ஒரு கம்பனியில் இரண்டாவது உயர் அதிகாரியாகப் பணிபுரியும், அமெரிக்காவில் பட்டம் பெற்ற
எம்.பி.ஏ,பட்டதாரி எனத் தன்னை அறிமுகப்படுத்தியபோது,அனுபமா உண்மையிலேயே பெருமிதப்பட்டாள்..இத்தகு உயர்கல்வி கற்ற மனிதர்,,
கலைக்கு சேவை செய்ய வந்துள்ளாரே,என்று. ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்று ,அவனை வைத்து மல்லுக்கட்டும்போதுதான் தெரிந்தது.
அடக்கம் என்றாலே கிலோ என்ன விலை என்று கேட்பவனாக இருந்தான். நாலுவரி வசனம் சொல்வதற்குக் கூட அவனுக்கு ’ப்ராம்ப்டிங்[’பிண்ணணி]
தேவையாக இருந்தது.சொல்லிக் கொடுத்தாலாவது அவன் ஒழுங்காகச் சொல்வானா? நுனினாக்கில் ஆங்கிலம் கொப்புளிக்க, வசனைத்தைக் கொலைசெய்வான்.
கண்ணிலிருந்து ரத்தம் வடியாக் குறையாக, ஒருவழியாக,ஒப்பேற்றினால், ’’என்ன டைரக்டர்,இவ்வளவு சிரமப்பட்டு, நாங்கள் எல்லாம் கலை சேவை செய்ய வந்துள்ளோம்.ஒருவரி பாராட்ட மாட்டீர்களா? என்று சக நடிக நடிகையரை வைத்து சோகமாகக் கேட்பான். அடுத்த வினாடியே மற்ற நடிக நடிகையருக்கும் கூட இந்த வியாதி பரவிவிடும். ஒருமுறை பொறுக்க முடியாமல், இவனுக்குக் கற்றுக் கொடுப்பதை விட ஒரு கழுதைக்குக் கற்றுக்கொடுக்காலாம், என்று பொருமி விட்டாள் அனுபமா,
மறு நாள் பசு என்றால் பசுபோல் அவ்வளவு அடக்கமாக ஒத்திகையில் கேட்கிறான்.

, டைரக்டர்’ ஒரு நிமிஷம், இந்தக் கவிதையைக் கொஞ்சம் எக்ஸ்பிரஷனோடு எனக்கு வாசித்துக் காட்டமுடியுமா?’ அலுவலகத்தில் எனக்கு
தேவைப்படுகிறது, என்றிட, பார்த்தால்,, ஷெல்லியின் வரிகள் .இவள் சொல்லிக் கொடுத்த மறுவினாடியே , பட்டாசு கொளுத்தினாற்போல்,
அனைத்துப் பேருமே கை தட்டுகிறார்கள். என்னவாம்??
’’ஹிப் , ஹிப், ஹூர்ரே, என்னை கழுதை என்று சொன்ன டைரக்டர், வாயாலேயே,காதல்வசனமே பேசவைத்துவிட்டேனே,
இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்?’’ என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பெருமையடித்துக் கொள்கிறான்.
அன்று அழுகையை அடக்க இவள் பட்ட பாடு கடவுளுக்கே வெளிச்சம்.
இதில் வேடிக்கை என்னவென்றால்,அனுபமாவுக்கும் மத்தாயிக்குட்டிக்கும் தான், சதா நாத்தனார், மதனி சண்டையே தவிர, மற்ற அனைத்துப் பேருக்குமே அவன் ரொம்பவும் பிடித்தவனாகவே இருந்தான்.ஏன், ஆரம்பத்தில் அனுபமாவின் குற்றச் சாட்டைக் கேட்டு ,ஒத்திகையில் வந்தமரும் அவள் கணவர் சந்திரசேகரையே அவன் வளைத்துப் ோட்டுவிட்டான், என்றால் எங்கு போய் முட்டிக்கொள்ள.?? இரண்டே நாட்கள் மட்டுமே அவனிடம் பேசிய சந்திரசேகரே மனைவியிடம் கூறுகிறார்.
மத்தாயிக்குட்டி அறிவாளிதான், இன்றைய அரசியலை அவன் அலசும் நேர்த்தியே அலாதிதான் தெரியுமா?’’ என்கிறார் என்றார் , பார்த்துக் கொள்ளுங்கள்..
ஒரு நாள் ஒத்திகைக்கு போய்ச் சேர்ந்தபோது, மிகப் பெரிய ரோஜாமாலையும், நான்கு அட்டைபெட்டிகள் நிறைய ஸ்வீட் ‘டும்கண்டு மலைத்துப்போய் நிற்க, ஒல்கி ,ஒசிந்து ,னடந்து வந்து இவள் கழுத்தில் ஒரு மாலையைப் போடுகிறாள், ஒரு புதிய பெண். யாரிவள்?
எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்?என அனுபமா விக்கித்துப்போய் நிற்க, அட்டகாசமாய் ,எல்லோரையும் பார்த்து சொற்பொழிவாற்றுகிறான் மத்தாயிக் குட்டி.
’’ நம்முடைய டைரக்டர் நம்மிடம் சொல்லாமல் ஒளித்து வைத்தாலும் , திருசூர் ’கைரளி சமாஜம் ,’இவரது ’,இஷ்டமானு ,பக்‌ஷெ,’
நாடகத்தை தேர்வு செய்துள்ளது, என்ற தகவலே எனக்கு நேற்று தான் தெரிய வந்தது.
அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஏதோ இந்த எளியவர்களால் முடிந்த சிறு காணிக்கை’’
இவளுக்கு வெட்கமாகவும் இருந்தது. சிரிப்பும் வந்தது. அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. திடீரென்று இன்றைக்கு உச்சந்தலையில் ,
அய்ஸ் வைக்கிறான், என்றால், நரி முட்டையிடுவது நன்மைக்கல்லவே? இந்த முறை இவள் ஏமாறத் தயாராக இல்லை.. இவள் கணிப்பு சரி என்பது போல்,
இவளுக்கு மாலை அணிவித்த புதுப் பெண்ணுக்கு, ஒரு சின்ன ரோலாவது, இந்த நாடகத்தில், கொடுக்க முடியுமா?என்று மத்தாயிக்குட்டி,,
மிகப் பவயமாகக் கேட்டபோதே , பட்டென்று, தன் முடிவைக் கூறிவிட்டாள் அனுபமா. அவ்வளவுதான், வந்ததே மத்தாயிக்குட்டிக்கு கோபம்.
‘டைரக்டர், இவள் ஒன்றும் எடுபிடி அல்ல, பலகலைக்கழக மாணவியாக்கும், கலைத்தாகம் கொண்டுதான் நடிக்க வந்திருக்கிறாள்.
தவிரவும் இவள் ,என்டெ நெருங்கிய உறவினரின் மகளும் கூட.
’’அதனாலேயே தான் ,இவளுக்கு சான்ஸ் இல்லை,’’ என்று நா வரை ,வந்த வார்த்தையை விழுங்கிக் கொண்டு , அனுபமா கூறினாள்.
‘’இதோ பார், மத்தாயிக் குட்டி, பல்கலைக் கழகத்தில் இப்பொழுது தேர்வு நேரம்..முதலில் படிக்கும் மாணவிகளை மட்டும்,
தயவுசெய்து நடிப்புக்கு இழுக்காதே? முதலில் படிப்பு முடியட்டும்.பிறகு பார்க்கலாம்.,’’ என்று கூடுமானவரை,பொறுமையாகப் பதில்
கூறியதாகத்தான் ஞாபகம் அனுபமாவுக்கு. ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்களில்,இந்த வன்மத்தை மனதில் வைத்துக்கொண்டு,
மத்தாயிக்குட்டி அடித்த கூத்து இருக்கிறதே? பூமாதேவி எப்படி இரண்டாய் பிளந்து அவனை விழுங்காமல் போனாள்.?

வழக்கம்போல் ””வா மத்தாயிக்குட்டி ,””என்று ஒரு நடிகர் ,அழைக்கப் போக,””யாரடா, மத்தாயிக்குட்டி, என்னை மேத்யூஎன்று அழை””
என்று விட்டானே ஒரு டோஸ்.
இன்னொரு நடிகை,”” இன்றைக்கென்ன? டையும் ப்ரீப்கேசுமாகவே ,ஒத்திகைக்கு வந்து விட்டீர்களே?””என்று கேட்க,
அமெரிக்காவில் போய் எம் பி.ஏ பட்டம் பெற்ற எனக்கு டை கட்டி நடக்கக்கூட அனுமதி தேவை, என்று தெரியவில்லையே?”
என்று கருவினானே, பார்க்கலாம்.
இந்த லெட்சணத்தில்,ஒத்திகை பாதியிலேயே,, எனக்குக் கடுமையான தலைவலி, என்று உடனே புறப்பட்டும் போய் விட்டான்.
பிறகு ஒரு வாரத்துக்கு ஒத்திகை பக்கமே காணமுடியவில்லை.. நடிகர்களை விட்டு அழைக்கும் போதெல்லாம் கூட பிடிக்க
முடியாமல் கண்ணாமூச்சி ஆடினான். வேறு வழியின்றி, அனுபமாவே ஒரு நாள் தொலைபேசியில் அழைக்க,
இல்லாத பிசுக்காரம் எல்லாம் பண்ணிக் கொண்டு, சற்றும் பிகு குறையாமல் தான் வந்தான்.
இந்த அனுபவத்துக்குப் பிறகு, கடந்த இரண்டு வருடங்களாகவே, மத்தாயிக்குட்டியை இவள் பிறகு அழைக்கவேயில்லை.
சுத்தமாய் அவனை தலைமுழுகி விட்டதாய் தான் அனுபமா இறுமாந்திருந்தாள். மறந்தும் கூட இந்த ஜென்மத்தில் மத்தாயிக்குட்டியை,
நாடகப் பக்கமே அண்ட விடக் கூடாது ,என்று கூட எண்ணியிருந்தாள்., நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்,பிறகு , தெய்வத்துக்கு என்ன வேலை?
விதி என்பதா? தலையெழுத்து என்பதா?
கடவுள்+விதி + தலையெழுத்து, என்று மூன்று கோணங்களில் இருந்தும், சோதனை, பொட்டிலறைந்து கொண்டு அனுபமாவை நோக்கி வந்தது.
மீண்டும் ஒரு இக்கட்டான நிலைமை. வேறு யாருமே இல்லாமல் போனதால், வேறு வழியின்றி, மத்தாயிக் குட்டியையே, அந்தக் ‘’கறுப்பு ரோலுக்கு’’ அழைக்க வேண்டியதாகி விட்டது. என்ன ஆச்சர்யம்? எந்த கிண்ணாரமுமே காட்டாமல், உடனே அவன் நடிக்க ஒப்புக்கொண்டதே, புலி பதுங்கியது
பாய்ச்சலுக்குத்தான் என்று, அவளுக்குப் புரியாமல் போய்விட்டது.
இந்த முறை ஒழுங்காகவே , ஒத்திகைக்கு வந்தான்.இரண்டு ஆண்டுகளாகவே, ஒதுக்கி வைத்ததால் , புத்தி வந்துவிட்டது போலும், என்றுதான்
அவள் நம்பினாள். அந்த நம்பிக்கையில் தான், செட்டிங், கொண்டுவரும்பொறுப்பை,மத்தாயிக்குட்டி, தானே, அட்சதையை, தலையில் போட்டுக் கொண்டு,
கேட்டபோது,மகிழ்ந்துபோய், ஒப்படைத்து விட்டாள்.இதோ, இன்னும் ஒரு மணினேரத்தில், திரை விலக வேண்டும்.போச்சு, எல்லாமே போச்சு,
இன்று மானம் பறிபோகப் போகிறது.

’” என்ன டைரக்டர், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல், இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்? சிரமப்பட்டுப் போய், செட்டிங்கை, கொண்டுவந்து சேர்த்த எனக்கு, நன்றி’ சொல்லக்கூட ஆளில்லை,.இதற்குத்தான், பெண்,டைரக்டர்களிடம், வேலை செய்யக் கூடாது, என்பது.
பேசாமல், நீங்கள்,கதாசிரியராகவே ருந்திருக்கலாம்.உங்களுக்கேன் டைரக்டராகும் ஆசை?””
மத்தாயிக்குட்டியா? பாவி, பாவி, , மத்தாயிக்குட்டியேதான்.
இவ்வளவு எகத்தாளமும் திமிரும், , இந்தப் பாவியைத் தவிர , வேறு யாருக்கு வரும்? அமிலக்கட்டி உடைந்தது நெஞ்சில் ,என்றாலும் அடிவயிற்றிலிருந்து , பீறிட்டெழுந்த ஆக்ரோஷத்தை,காட்ட இதுவா நேரம்? அவள் அரும்பாடுபட்டு, எழுதி, இயக்கிய நாடகமல்லவா?
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். பிறகு மூச்சு விடக்கூட நேரமில்லை அனுபமாவுக்கு.
மத்தாயிக்குட்டி வந்துவிட்டான், என்ற உடனேயே சூழ்னிலை, சகஜத்துக்கு வந்து விட்டது.
நிகழ்ச்சி தொடங்கும் முன்னர், அனைவரும் சபை நமஸ்காரத்துக்கு [இயக்குனரான] இவளிடம் வந்தபோது அனைவரையும் வாழ்த்தினாள்
அப்போதும் மத்தாயிக்குட்டியின் அலட்டல் நிற்கவில்லை. இடுப்பை வளைத்து, அனியாயத்துக்கு குனிந்து,அதீத பவ்யத்துடன்,
“டைரக்டர், உங்கள் ஆசி,என்டெ பாக்கியம்,””என்றவாறே, பக்தியோடு வணங்க முற்பட, வெறுப்பின் எல்லைக்கே போய் விட்டாள்.
’’இந்தக் கழுதைக்கு, வாழ்த்தும் ஒரு கேடா? நிகழ்ச்சி முடியட்டும், உனக்கு இருக்கிறது.’’
அருமையாய், அட்டகாசமாய், தொடங்கியது நிகழ்ச்சி.
மூன்றாவது, காட்சி, நிகழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் அனுபமாவின் கண்களில் பட்டது.பிண்ணனி கொடுக்கும் ப்ரொஜெக்டரிலிருந்து என்னது?
புகையா?
ஹா, ஹா?என்னாயிற்று? அடுத்த சீனுக்கான, லைட்டிங், உடனே கொடுத்தாக வேண்டுமே? காலையிலிருந்தே, அனுபவித்து வந்த டென்ஷன், பதட்டம், பச்சைத்தண்ணீர் கூட, பல்லில் படாமல் பணியாற்றிய பலவீனம்,, எல்லாமே மறந்தவளாய்,அனுபமா ஓடினாள்.
ப்ரொஜக்டரை நோக்கி ஓடியவள், ப்ளக்கில் , கை வைத்தாளா, தெரியவில்லை.
“அனு,”’ என்றலறிய சந்திர சேகரின் குரல் கேட்டது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது அனுபமாவுக்கு.எங்கோ தூக்கி எறியப்பட்டதும்,
பாறாங்கல் தலையில் விழுந்து, மண்டையே , பிளந்தாற்போல்,மரணவலியில் ,எல்லாம், எல்லாமே , இருட்டாகிவிட்டது.
மீண்டும் நினைவு வந்தபோது, மருத்துவமனையில் தான் கண் விழித்தாள் அனுபமா.
கவலையோடு எதிரே அமர்ந்திருந்த சந்திரசேகரும், சுற்றி நின்றவர்களையும், பார்த்தபோதுதான், முதல்னாள் சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.
””அய்யோ,என்னாயிற்று எனக்கு, என்டெ நாடகம், என்டெ நிகழ்ச்சி,’’ என்று சகலமும் பதறியவளாய்,எழ முற்பட்டவளை, ’’அமைதியாய் இரு, ’’
என்று அதட்டிய சந்திரசேகர், விளக்கினார்.
’நாடகம் ,எந்த வில்லங்கமுமே இல்லாமல் ஒருவாறு நடந்தேறிவிட்டது,’’என்று சொல்லி முடிப்பதற்குள் ,
‘ஆனால் மத்தாயிக்குட்டி, மத்தாயிக்குட்டிக்குத்தான்,என்ற அப்புக்குட்டனால் பேசமுடியவில்லை?
உடனே அருகில் நின்ற மூத்த கலைஞர், சங்கரன்குட்டி, தான் துக்கம் தொண்டையை அடைக்க விஷயத்தை விண்டுரைத்தார்.
ஜெனெரேட்டரில் கோளாறு, என்பதை உணர்ந்த,சந்திரசேகர் தான், அடுத்த காட்சிக்கான ” டிம்லைட்,”தேவை இல்லை, என்று கூறிட,
டெக்னிஷியன் தைரியமாக , ப்ரொஜெக்டரை, பரிசோதித்துக் கொண்டிருக்க, இதை அறியாத அனுபமா ”ப்ளக்கில்” கையை வைக்க
ஓடியிருக்கிறாள்.ஒரு நிமிஷம் தப்பியிருந்தாலும் அனுபமாவை அவ்வளவு உயர் பவர் கொண்ட மின்சாரம், பலி கொண்டிருக்கும்,
ஆனால், நிலைமையைப் புரிந்துகொண்ட, மத்தாயிக்குட்டிதான், மின்னல் வேகத்தில் ஓடி வந்து அவளைக் காப்பாற்றி இருக்கிறான்.
ஆனால் அவளைப் பிடித்துத் தள்ளியதில், இரும்பு ஸ்டூலில் இடித்து, தலையில் அடிபட்டு, ஸ்மரணை தப்பிவிட்டது அனுபமாவுக்கு.
ஆனால் மத்தாயிக்குட்டிக்கோ,இவளத்தள்ளி விட்டுத், திரும்பும் போது, காலில் வயர் சிக்கி,ப்ரொஜெக்டரின் மேலேயே விழுந்ததில்,
எலெக்ட்ரிக் ஷாக் அடித்ததில்——
ஹா ஹா, உண்மைதானா? தான் கேட்பதெல்லாம் உண்மைதானா? மத்தாயிக்குட்டிக்கு இடது பக்கம் அப்படியே செயலிழந்து விட்டதா?
அய்யோ. மத்தாயி, மத்தாயிக்குட்டி,. உலகமே ஸ்தம்பித்துப் போனது அனுபமாவுக்கு,. காற்று கூட தன் இயக்கத்தை நிறுத்திவிட்டாற்போல்,
மருத்துவமனை, தான் படுத்திருந்த அறை,, சுற்றி, நிற்பவர்கள், என எல்லாமே சூன்யமாகிப் போனது.
வெற்றுப்பார்வையால், விட்டத்தை வெறித்தாள் அனுபமா.
மத்தாயிக்குட்டி, இனி நீ, நடக்கவே மாட்டாயா? என்னை, இந்த துரதிருஷ்டம் பிடித்தவளைக் காப்பற்றப் போயா நீ செயலிழந்து போனாய்?.
நடக்கவே தெரியாதே உனக்கு? சதா ஓட்டமும் துள்ளலும் தானே? ஒத்திகைக்குள் நுழையும்போதே அட்டகாசம் தானே?
கறுப்புத்தான் என்றாலும் நம்பர் ஒன், மினுக்கனாயிறே? அலட்டலும் ஸ்டைலும் இல்லாமல் பேசவே தெரியாதே?
இதெல்லாம் இனி கட்டிலோடு கட்டிலாய் முடங்கி விட்டதா? எப்படி? எப்படி? நடந்தது? ஏன் நடந்தது?
சதா உன்னை கரித்துக்கொட்டினேனே? இந்தப்பாவியின் கரி நாக்கால் தான் அஸ்வினி நட்சத்திரங்கள் , ததாஸ்து கூறிவிட்டதா?
அழக்கூடத் தெம்பில்லாமல்,அலமலந்துபோய், நடுங்கும் குரலில், கேட்டாள் அனுபமா.
இப்பொழுது மத்தாயிக்குட்டி, எந்த மருத்துவ மனையில்?
இதே மருத்துவமனையில்தான், நான்காவது வார்டில்,ஆண்கள் பகுதியில், என்று தங்கச்சன் கூறி முடிக்கவில்லை.
எனக்கு உடனே அவனைப் பார்க்க வேண்டுமே?என்று இவள் பதற,
பேசாமல் இரு, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், என்று, கணவர் அதட்ட, கல்லும் கரைந்துருகும் விதத்தில் இவள் அழுதாள்,
அடுத்த பத்தாவது நிமிஷம், , சந்திரசேகரின் கைத்தாங்கலில்,மத்தாயிக்குட்டியின் தலைமாட்டில் வந்து நின்றாள் அனுபமா.
அழுதழுது, மிளகாய்ப்பழமாய் முகம் சிவந்து நிற்கும் இந்தப் பெண் எங்கோ பார்த்த முகமாய் தெரிகிறதே?
ஓ, மத்தாயிக்குட்டி, ஒருமுறை நடிக்க சான்ஸ் கேட்டு வந்த அவனுடைய உறவுப்பெண் இல்லையா?
உதடு கோணி, ஒரு கண் குறுகி,ஜடமாய் கிடந்த நிலையிலும், அனுபமாவைக் கண்டதும், “ டை,,–டை,-ல,-க்-ட்டல்”என
குழறலாய், மத்தாயிக்குட்டி அழைத்த வினாடியில் உடைந்து சிதறினாள் அனுபமா.அத்தனை நேரமும் அடக்கிவைத்ததிருந்த துக்கம்,
மடை திறந்தாற்போல், கிட்டத்தட்ட கதறிவிட்டாள்.
’” மத்தாயிக்குட்டி, உன்னை, உயிரோடு கொன்றுவிட்டேனே? மத்தாயி, மத்தாயி,கடவுளிடம் கூட எனக்கு மன்னிப்பு கிடையாதே,”
“டை –ல–க்-க-ட்ட ல்,” மிகவும் தீனமாய் அழைத்தான், மத்தாயிக் குட்டி.
“தயவு செய்து அழாதீர்கள்., என் கவலை எல்லாம் உங்கள் நாடகத்தில் ,ஒரு ஹீரோவாக நடிக்கவிருந்த என் லட்சியம்
நிறைவேறாமல் போய்விட்டதே, என்பதுதான்.””
அனுபமா தேம்பித் தேம்பி, அழுதாள். விம்மி விம்மி அழுதாள்.போதும் அழாதே ,என்று தடுத்த ,கணவரைப்பற்றிக்கொண்டு அப்படி அழுதாள்.
அய்யோ, மத்தாயி, நின்டெ உடம்பு மட்டும் தேவலையாகட்டும். நிச்சயமாக, அடுத்த நாடகத்தில் நீ தான் ஹீரோ,”
அனுபமா சொல்லி முடிக்கவில்லை.அடுத்து கண்ட காட்சியில் இதயத்துடிப்பே ஒரு வினாடி நின்றுவிட்டு, பிறகுதான் துடித்தது.
சுற்றி நின்ற அனைத்து நடிகர்களுமே,கை தட்டி, ஆர்ப்பரிக்க,வார்டைச் சேர்ந்தஒரு தாதி கூட வேடிக்கை பார்க்க,
குதிரைக்குட்டியாய் கட்டிலில் விருட்டென்று எழுந்தமர்ந்தான் மத்தாயிக்குட்டி.
தான் காண்பது நினைவுதானா? மத்தாயிக்குட்டிக்கு ஒன்றுமே இல்லையா? கை, கால் எல்லாமே, கரணை, கரணையாய்,,
சற்றுமுன்,ஒரு கண்குறுகி,உதடு கோணியமுகம் திடீரென்று, தீபாவளிப் பட்டாசாய், உலகையே வென்ற மகிழ்ச்சியில் பூரித்து நிற்கிறதே.
இரண்டு கையாலும் வாரி, வாரி,ஸ்வீட், டை அனைவருக்கும் வழங்கிய மத்தாயிக்குட்டிக்கு ஒன்றுமே இல்லையா?
மத்தாயி, -உனக்கு ஒன்றுமே ஆகவில்லையா?
பின் ஏன் இந்த நாடகம்?

ஒருமுறை நடிப்புக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு எடுபிடி ரோலுக்குக் கூட அருகதை அற்றவன், சுத்தக் கழுதை , ”
என்று அனுபமா, திட்டியதாகக் கேள்விப்பட்ட அன்றே,சபதம் செய்தானாம்.. இதே டைரக்டர், வாயாலேயே,னீதான் என் நாடகத்தில் ஹீரோ, என்று சொல்ல
வைக்கிறேனா, இல்லையா, பாருங்கள். என்று. அதனால்தான் அனுபமாவைக் காப்பாற்றியபோது, தன் உடலில் ஏற்பட்ட ஊமைஅடிக்கும்,
சிராய்ப்புக்கும், மத்தாயிக்குட்டியும் ஒருனாள் மருத்துவமனையில், தங்க வேண்டி வந்தபோதே,அவன் மூளையில் உதயமாகிவிட்டதாம்,
இவ்வளவு அருமையான யோசனை. ஆமாம், இந்த சதியில் சந்திரசேகருக்குமா பங்கு? எரித்துவிடுவதுபோல் கணவரை ஏறிட்டபோது,
புன்னகையே, முகமாய்,மந்தகாசமாய்க் கூறுகிறார் சந்திரசேகர்.
”என் மனைவியின் உயிரையே காப்பாற்றியவனுக்கு, ஞான் இந்த உதவியைக் கூட செய்யக் கூடாதா?
தவிரவும், ஆற்றல் எங்கிருந்தாலும் அதை மதிப்பவன் ஞான்.
இவ்வளவு அருமையாக மத்தாயிக்குட்டிக்கு நடிக்கவரும் , என்பதை ஞானே இன்றுதான் அறிகிறேன்.”
நீங்களுமா புரூட்டஸ்? ”என்று மனசு ஒரு வினாடி, மருகினாலும்,என்ன ஓர் நிம்மதி? சுற்றுப்புறமெல்லாம் ,திடீரென்று, தென்றல்காற்று வீச,
கூடை மல்லிகைப்பூக்கள், தலையில் மணக்கமணக்க விழ,அம்மாடி, அம்மாடி, என்ன ஒரு ஆசுவாசம்,
மத்தாயிக்குட்டி, உனக்கு ஒன்றுமே இல்லையே, இதுபோதும், இனி, இனி ஒரு போதும் இப்படிச் செய்யாதே?,
எனும்போதே, கண்ணிலிருந்து, ஆனந்தக் கண்ணீர், பொலபொலவென்று வழிய, கணவர் அணைத்துத் தேற்ற,
ஆஹா, ஆஹா, என்ன அருமையான ரொமாண்டிக் சீன், டைரக்டர் ,நாங்கள் இத்தனை பேர் இங்கே நிற்கிறோம், என்பதுகூட நினைவில்லையா,
என்றுஅசரீரியாய் மீண்டும் கேலிகேட்க, படீரென்று கணவர், அவன் முதுகில் அறைய,
”பின் என்ன, ஸ்டுப்பிட் மாதிரி ப்லக்கில் போய் கை வைக்கவா ஞான் எம் பி.ஏ, பட்டம் பெற்று வந்தேன்,
ஆமாம், எனக்காக இப்படியா அழுவது? எனக்கு ஒரு கேடுமில்லை, , டைரக்டர், அழாதீர்கள்?” வேறு யார்? மத்தாயிக்குட்டிதான்,
என்ன ஒரு குத்தல் என்ன ஒரு நக்கல், ?இவன் தான் மத்தாயிக்குட்டி,
இதெல்லாம் நடந்து முடிந்து மூன்று மாதங்களாகிவிட்டது.அடுத்தவாரம் அரங்கேறவிருக்கும் நாடகத்தில்
மத்தாயிக்குட்டிதான் ஹீரோ, ஹீரோயின் வேறு யாருமல்ல. ஒல்கி, ஒசிந்து, நடக்கும் அவன் உறவுப்பெண் தான்.
அனைவரும் மறவாது நாடகம் காண வாருங்களேன்.
அனுபமாவின் நடிகனின் ஆற்றலைக் காண வேண்டாமா?

[முற்றும்]

நன்றி—தமிழ்முரசு

Series Navigation

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்