நகுலன் கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue


(வெளியீடு : காவ்யா 16, 17th E Cross, Indira Nagar II Stage, Bangalore 560003 விலை ரூ 100)

வண்ணாத்திப் பூச்சிகள்

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி
கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்
விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்துவிட்டார்கள். வெயிலில்
வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.

*****************

ஒருவரிக் கவிதைகள்

* உடமை என்பது உன்னுள் இருப்பது

* நான் நானாக ஒரு ஜீவித காலம்.

* பிரம்மாண்டமான விருக்ஷங்களில் சிதில
ரூபங்கள் காலம் ஒரு கலைஞன்

* வாடகை வீடு காலியாகிவிட்டது

* கடைசி அத்தியாயம்: கவிதை முடிந்து விட்டது

***********
கையெழுத்து
(என்னுள் நான் ஒரு எழுத்தாளன் என்பதை முதலில் போதமூட்டிய க நா சுவிற்கு)

சுசீலாவின் கைவிரல்கள்
பார்த்த பரவசம்
அறையில் மீண்ட பிறகும்
அதன் பாதிப்பு;
ஐந்து விரல்களையும் இணைத்து
விரித்த வெற்றிலை போன்ற
என் கை கண்டு வெறிக்கின்றேன்.
ஒரு கணம்
கபிலரின் கை நினைவு;
மறுகணம்
‘எவ்வளவு பாபகிருத்தியங்கள்,
துஷ்பிரயோகங்கள்,
மனமறிந்த பொய்கள் ‘
இவ்வளவும் ஒரு கைப்பரப்பில்
அரசு செலுத்துகின்றன.
என்ற நினைவில் மனம் புரட்டுகிறது.
அப்படி எழுதத் தெரியாதவனுமில்லை.
பாஸ்டர்நாக் கவிதை ஞாபகம் வந்தது.
‘உனக்கு உரியவை அனைத்தையும் கொடுப்பது
இது தான் படைப்பு. ‘
அப்படி இல்லாமல்,
காது செவிடாகக் கூக்குரலிட்டு ஆக்கிரமிப்பது
அது இல்லை.
எவ்வளவு கேவலம்
எழுதுவதற்கு ஒன்றும் இல்லாமல் எழுதிக் குவிப்பது,
அதன் பொருட்டு அனைவரும் பாராட்டுவது என்பது. ‘
அகஸ்மாத்தாகத் திரும்பிப் பார்த்தபொழுது தான் என் நாய்
(எனக்கும் ஒரு நாய் இருக்கிறது) அதன் வாலைத்
துரிதமாக ஆட்டியது.
எனக்கு என்னிடமிருந்து எப்படித் தப்புவது என்று
தெரியவில்லை.
அடுத்தகணம் ஒரு பிரமை.
என் கையில் தொழு நோய் பிடித்துவிட்டது போல்.
இந்தக் கையை வைத்துக் கொண்டு நான்
எவ்வாறு சுசீலாவை அணுக முடியும் ?

**********

Series Navigation

செய்தி

செய்தி