நகங்கள்

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

சாரங்கா தயாநந்தன்


நகங்கள் அழகானவை.மென்சிவப்பு அல்லது சற்றே வெண்மைக்குக் கிட்டவான நிறத்தில் காணப்படுபவை. தட்டையாக அல்லது நீள்சதுரமாகத் தசைப்பரப்போடு ஒன்றியிருப்பவை. அவற்றை அடிக்கடி கவனித்தாக வேண்டும் . வெட்டிச் சீர்ப் படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது அவை குறிப்பிட்டவரின் அலட்சியத் தன்மைக்கு அல்லது அசுத்தமற்ற தன்மைக்கு ஆதாரமாகும். ஆரோக்கியம் காட்டும் கண்ணாடிகளாக அவை. ஆனாலும் அந்த ஷைலாவின் நகங்கள்…. ஆடம்பரமும் அழகும் நவீனமும் நளினமும் நாகரீகமும் இணைந்த வார்த்தைசொலா அற்புதங்கள்.அவற்றை அவனுக்கு மறக்கவே முடியாதிருந்தது.செல்வனின் மனம் முழுதிலும் அந்த நகங்கள் தான். அவன் ஷேவ் செய்து கொண்டிருந்தான்.

நேற்றும் கூடத் தற்செயலாகத் தான் அவளது நகங்கள் அவன் பார்வையில் விழுந்திருந்தன. அலுவலகம்.

‘சேர்…. ‘ ‘ அலுவலகத்தினுள் தான் குயில் கூவிற்று.

நிமிர்ந்தான். பிரகாசமான பளீரிடும் அழகு. வயது சொல்லாத வசீகரம். நியமனத்தின் பின் ஒருமாதம் வேலை செய்கிறாளெனினும் தினமும் அவளைப் பார்த்திருந்தாலும் கூடத் தினம் ஒரு அழகாய்ச் சொட்டும் பார்க்கச் சலிப்பில்லாத அழகு. இவனது பார்வையில் உயர்ந்த இமைகளில் தொக்கியிருந்த கேள்விக்குப் பதில் சொன்னாள்.சிவந்த ரோஜா வர்ண உதடுகள். அழகிய இயன்றவரை தமிழ் தவிர்க்கும் ஆங்கிலம். சொற்கள் நுனி உதட்டின் வழி நளினமாய் இறங்குவதைத் தன்னை மறந்து உற்றுப் பார்த்ததைப் பார்த்தபிறகே மனமுணரத் தலைகுனிந்தான். கட்புலனும் செவிப்புலனும் தன்னையறியாதே கூர்மையுற மனம் அவளைக் கொண்ட பாக்கியவானின் அதிஷ்டம் வியக்க அவள் தந்த தாள்களை வாங்கிய போது தான் அந்த நகங்களைத் தற்செயலாகக் காண நேர்ந்தது. நீள நீளமாய் வளர்த்து மேனியின் மென்மஞ்சளைத் தூக்கலாக்கும்படியான வர்ணத்தில் சிறு ஓவியங்கள் வரையப்பட்டிருந்த அழகிய நகங்கள். அவள் வெளியேறிய பின்னரும் கூட அவளது நினைவுகள் அவன் நெஞ்சத்தில் தங்கின அவள் விலகியபிறகும் விலகாத ஏதோ ஒருவகை சுகந்தத்தைப் போல.

நகங்கள் மட்டுமென்ன. பெயரும் கூட அழகுதான். ‘ஷைலஜா… ‘ தனக்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்தான். இனித்தது. ஆனால் முதல் நாளில் தன்னை அவள் ‘ஷைலா ‘ என்றே அறிமுகப் படுத்தியிருந்தாள். அலுவலகச் சினேகிதர்கள் அவளை ‘ஷைலு ‘ என்று கூப்பிடுவதையும் அவன் கேட்டிருக்கிறான். ‘செங்கமலம்… ‘ தனக்குள் சொல்லிப் பார்த்தான். கசந்தது. அதென்ன செங்கமலம்…வெங்கமலம்… கருங்கமலம்… என்று…. பெண் பேசி வந்த பொழுதிலேயே இவனுக்கு பிடிக்கவில்லை. என்ன செய்வது ? அம்மாவும் அப்பாவும் ‘இவளே உன் வாழ்க்கைத் துணை ‘ எனச் சுட்டுவிரல் நீட்டியதில் மறுக்கமுடியாமல் மூன்று முடிச்சுக்களை போடவேண்டியாகி விட்டது. நிலபுலன்கள் நகைகளும் வீடுவளவும் பெண்ணும் கொடுத்தவர்களுக்குத் தாலியைப் பரிமாற்றம் பண்ணிக்கொண்டாகி விட்டது. பிறகு கிடைக்கப்பட்டதோடு திருப்தியுறச் சொல்லும் ஆன்மீகக் கருத்துகளை மனம் நிறுத்தியதில் மணவாழ்வில் வார்த்தைப்பிசகுகள் வராமல் காப்பாற்ற முடிந்தது. திருமணமான புதிதில் கிடைத்தவளை மெருகிடும் முயற்சியில் இறங்கியவனுக்கு முழுத் தோல்விதான். ‘கமல் ‘ என்று குரல் இனிக்க அழைத்து தன்விழிகள் மனைவியின் விழிகளில் பொருந்த தான் கொண்டுவந்த பரிசுப் பொருள் எதுவென வினவியவனுக்கு, சலனம் ஏதுமில்லாமல் அதை வாங்கிக் கொண்டு ‘ஆம்பிளைப் பேரிலை ஏனப்பா கூப்பிடுறீங்கள் ‘என்ற அப்பாவித்தனத்தை நேசிக்க அவனுக்கு முடியவில்லை. ஆக, கமலா என்ற அழைப்போடு திருப்திப் பட வேண்டியிருந்தது.

அலுவலகத்திலிருந்து திரும்பியவனின் கண்களில் முதலில் பட்டது சற்றே சிறிய தட்டையான தேய்ந்த கமலாவின் நகங்கள் தான். அந்த நகங்களின் வெண்மை ஆரோக்கியக் குறைவு சொன்னது. பிள்ளைகளுக்காகவும் மாமா மாமியருக்கும் உருகிப் பணிவிடை பார்ப்பதில் தன் மீது சிரத்தையுறக் கிடைக்காத தருணங்களையே வாழ்வென்றபடி சுழல்கிறது அவள் வாழ்வு. ஏன் ? ஏன் இவளுக்குச் ஷைலா போலிருக்க முடியவில்லை ? அழகு சாதனங்கள் அத்தனையும் குவிக்கத் தக்க ஆற்றல் அவனிடம் உண்டு. பதவி பெயர் புகழுடனான கணவன் அவளுக்கு உண்டு. ஆனாலும் ஏன் ஆடம்பரங்களில் அக்கறையற்று இருக்கிறாள் ? ஷேவிங் முடித்துத் திரும்பவும் மனைவியின் குரல் கேட்டது.

‘ ‘இஞ்சாருங்கோப்பா…. ‘ ‘

தேவையற்றுக் குமிழ்க்கிற ஆத்திரத்தை மேவி ‘என்ரை கணேஷ் சொல்லுவார்…. ‘ என்ற ஷைலாவின் தேன்குரல் மனமேறிற்று. ஒப்பிடும் பொழுதிற்கு வந்துவிட்ட மனத்தினுள் மறைந்து வசிக்கிற சலனத்தைத் தானே கண்டு கொண்ட பொழுதில் விகாரமுறுகிற மனத்தை வலிந்து சாதாரண நிலைக்குத் திருப்பினான்.

‘ ‘என்ன…. ‘ ‘

‘ ‘பின்னேரம் வேளைக்கு வர முடியுமெண்டால் யதுவை ஒருக்கால் சலூனுக்குக் கொண்டு போக வேணும்…. ‘ ‘

‘ ‘உமக்குக் கூட்டிக் கொண்டு போக ஏலாதோ ?…. ‘ ‘

‘ ‘நீங்கள் எண்டால் சொல்லி வடிவாய் வெட்டுவிக்கலாம்…. சரியாய் வெட்டாட்டிலுக்குப் பிள்ளைக்குத் தலை வேர்த்தால்…தடிமன் வந்திடும்…. ‘ ‘

‘ ‘ஏன் நீர் சொல்லி வெட்டுவிக்கேலாதோ ?… ‘ ‘சற்றே கோபமாய்த் தான் கேட்டு விட்டான்.

‘ ‘ம்…. ‘ ‘

கண்ணீிர் பளபளக்கும் விழிகளுடன் மனைவி விலகிய பிறகு தான் பாவமாயிருந்தது.புதியவர்கள் எவருடனும் கதைக்கத் தயங்கும் கூச்சம் அவளது சுபாவம். ஆயத்தமாகி இவன் அணிவதற்காக எடுத்து வைக்கப் பட்டிருந்த மென்னீல ஷேர்ட், கறுப்பு ஜீன்ஸ் அணிந்து மதியச் சாப்பாடு எடுத்து மோட்டர்பைக் எடுக்க வாசல் வரை வர வந்து வழியனுப்புகிற மனைவியில் ஒரு மகாலக்ஷ்மித்தனம் இருக்கிறாது தான். ஆனாலும் சினேகிதர்கள் பொறாமைப்படும் அழகோடு ,ஆற்றலோடு ஷைலா போல இவள் இருந்திருந்தால் எவ்வளவு நல்லமாயிருந்திருக்கும்.

‘ ‘ஷைலா இண்டைக்கு லீவு….கொஞ்ச குறிப்புகள் வாங்க….ஷைலா வீட்டையும் போகவேணும்…. வரட்டா போயிற்று ?…. ‘ ‘விடைபெற்றான்.

இவன் வீட்டு முற்றத்தில் பவள மல்லிகைப் பூக்கள் சொரிந்திருந்தன. வெறுங்கரும்பச்சை இலைகளோடு..சின்னச் சின்னப் பூக்களோடு…. வெண்பூவுக்கு செந்நிறத் தண்டு படைத்தவன் யார் ? ஒரு தோற்றப் பொருத்தம் வேண்டாமா ?வெண்ணிறப் பூக்களுக்கு வெள்ளை அல்லது மென்மஞ்சள் தண்டுகளே பொருத்தமானவை. வாழ்வு கூட இப்படித் தான் போய்விடுகிறது சில பேருக்கு. இவன் அழகிய செந்தண்டாகவும் கமலி வெறும் மங்கல் வெள்ளைப் பூவாகவும் தோன்றினார்கள்.

ஆனாலும் பவள மல்லிகை மரம் மெளன அழகுடையது. மிருதுவான பூக்களைச் சுமக்கும்.. கறுப்பு இருளினுள் மெல்லக் கண்விழித்து வாழும் சூழல் முழுதும் சுகந்த நறுமணம் பரப்பும் .வாசனை கட்டி இழுக்கும் மனதோடு நள்ளிரவில் யன்னலூடு பார்த்தால் ‘சிவனே ‘ என்று சின்ன நட்சத்திரங்கள் போல மினுங்கிக் கொண்டிருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினர் கவனத்தை இழுக்கும் வித்தையை அது அறியாது.பகலில் வாசம் கரைந்து போயிருக்க உதிர்ந்தும் உதிராததுமான பூக்கள் கொண்டிருக்கும்.பெரும்பாலும் எவரும் அதைப் பார்க்க மாட்டார்கள். சிலர் மட்டும் கண் திருப்புவார்கள். ‘ ‘அட …பவள மல்லிகை…. ‘ ‘ வியப்பார்கள். ‘ ‘எல்லா இடத்திலையும் கண்டபடி வராது … ‘ ‘விமர்சிப்பார்கள். தெய்வத்துக்கு இடவும் உகந்த மிருதுவான மலர்கள் அதனது.

ஆனால் இவன் விருப்பப்படி மதிலோரம் செழித்துள்ள போகன்விலக்கள் பவளமல்லிகைக்கு முரண்பாடானவை. அவை பளீரிடும் ரத்தச் சிவப்பில் அடர்த்தியாய்ப் பூக்கும். பார்ப்போர் கண்பறிக்கும் . பார்க்காதோரிடம் பார்த்தோரைத் தன் பற்றிச் சொல்ல வைக்கும். மதில் மீது முகம் எட்டி போகிற வருகிறவர்கள் யாவரும் ஆசையுற வைக்கும். தாக்கபட்டாலும் உதிர்வதில்லை. சற்றே அசைந்து கொடுத்து விட்டு நாட்கணக்கில் வாடாது சிரிக்கும்.முள் உண்டு. தன்னை வருடுவது குழந்தை எனினும் கைகிழிக்கும். தூர இருந்து ரசித்தால் அற்புதம். நடு முற்றத்தில் வைப்பது சாத்தியமில்லை.

ஷைலா வீட்டின் முன் மோர்ட்டர்பைக் நிறுத்திய போது 7.42 என்றது கைக்கடிகாரம். சுத்தமான அழகிய வீடு. எப்படி சகலதிலும் நேர்த்தி வாய்க்கிறது இந்தப் பெண்ணுக்கு. வியந்தான். கமலா எப்போது இப்படியாகப் போகிறாள் ? நினைத்தபடியே அழைப்பு மணியை அழுத்தக் கையெடுத்த போது ஷைலாவின் குரல் கேட்டது.

‘ ‘மைண்ட் யுவர் ஓண் பிஸினஸ் கணேஷ்… ‘ ‘

நளினம் சுத்தமாய்த் தொலைத்த வாளாய் இறங்கும் குரலின் முழுமை ஆத்திரத்தில் புதைந்திருந்தது.

‘ ‘சாப்பிட ஏலுது… பக்கத்து வீட்டோடை வம்படிக்க ஏலுது…. வீடு வாசல் நீற்றாய் வைச்சிருக்கச் சொல்ல வருத்தம் வந்திடுது…. சிலதுகளைச் சொல்லித் தான் திருத்த வேணும் கணேஷ்…. ‘ ‘

எதற்கும் பதட்டப்படுகிற ,தவறுக்கு நகம் கடித்து விழிகளால் வருத்தம் தெரிவிக்கிற அதே ஷைலா தானே இது ? அதிர்ந்தான். வாசல் மணி அழுத்தினான். குளிக்க மறுத்து அடம் பிடிக்கிற குழந்தைக் குரலும் கோபமாய் குழந்தைக்கு அறை வைக்கிற தந்தையின் குரலும் கேட்டன. அதற்கு மேலும் தாமதிக்க பிடிக்காமல் அழைப்பு மணியை அழுத்தினான். இரு குழந்தைகள் கலைந்த தலையுடன் முகம் கழுவாது நின்றிருந்தன. இந்த நேரத்துக்கு தூய வெண்ணிற சட்டையில் ,செய்யப்பட்ட வீட்டுப்பாடங்கள் எல்லாமும் அம்மாவால் சரிபார்க்கப்ப்பட்டு சந்தோசம் பொங்க சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு கமலா சாப்பாடு ஊட்டிக்கொண்டிருப்பாள். அந்த ஒற்றை நிமிஷத்தில் அறியாதே கைவந்த வரம் அவன் மனைவி என்பது புரிந்தது.

சாதாரணமாய் முகத்தை வைத்தபடி ஷைலாவிடம் குறித்த தாள்களைப் பெற்றுக் கொண்டு திரும்பினான். இப்போது நேற்றைய நாள் முழுதும் அவன் மனதில் தங்கி வருத்திய அந்த அழகான நகங்கள் தன் பார்வையில் படாததை எண்ணி வியந்தான். பவளமல்லிகை வாசம் மனமேறிற்று .அன்பு மனைவியின் காதுகளில் ரகசியமாய்ப் பெயர் சொல்லி அழைத்த ஒரு அழகான பொழுது நினைவில் நிரம்பியது. இனிய நினைவுகளோடு மெல்லிளம் தென்றல் சுகமாய் வருட அவன் பயணித்துக் கொண்டிருந்தான்.அந்தப் பயணம் சுகமானது.

—-

nanthasaranga@gmail.com

Series Navigation