தோழன் புஸ்பராஜாவுக்கு

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


காத்திரு நண்ப
கட்டாயம் நான் வருவேன்.

பரீசில் வெய்யிலா.
இனி வசந்தம் ஆனாலும்
இங்கே துருவத்தில்
இன்னும் கொடுங் கூதிர்.
சன்னலின் வெளியே
பறவைகளும் பாடவில்லை.
புல்வெளியிலும்
இலையுதிர்த்த தோப்புகளிலும்
வெண்பனியாய் வானம்
வெறுப்பை உமிழ்கிறது.
என்னுடைய பட்டாம் பூச்சி மனசும்
வீட்டுச் சிறையுள் முடங்கிச் சிடு சிடுக்கும்.

கழுத்துக்கு மேலோர் கத்தி
நூலிளையில் ஆட
எப்போதும் விசாரணையுள் வாழ்ந்தமடா.
வாழ்வை ஒருபோதும்
விசாரித்தோம் இல்லையடா.
துப்பாக்கிக் காவலர்கள் வந்து
‘எழடா இனி எல்லாம் முடிந்தது ‘
என்றிட்ட போதெல்லாம்
எங்கிருந்தோ வருவான் ஒருவன்
இரு என்பான்
எம் கிண்ணத்துள் மது வார்ப்பான்.
யார் அது.
இந்த மதுக்கடையின் விதி என்ன.
இன்னும் வருவானா.

கொண்டாட்டம் எப்பவோ முடிந்துவிட்டது
மாலை தோரணங்களும் குப்பையில்.
பிரதம விருந்தாளி ஆயினும்
நண்பனே நாம்
விடைபெற்றே ஆகவேண்டும்..

முன்னொருநாள்
மானுடத்தைக் காதலித்ததாலே
கனவாளித் தோழர்களும் நாமும்
போராளிகளாய் முடிந்தோம்.
யாரும் வரலாற்றை ஆரம்பித்ததுமில்லை
அது யாரோடும் முடிகின்றதுமில்லை.
ஆனாலும் வரலாற்றுப் பாதையிலோர்
சிறு கவடாய் நாமும் இருந்தோம்.
இன்று புதியவர்கள்.

சிதறிவிட்டோம் நண்ப.
தோழர் பலர் தாய் மண்ணுள்.
நம்மிடையே கருத்துக்கள் முரண்பட்டு
காட்டாறாய் பாய்ந்தாலும்
நட்பென்ற பாலம் எப்போதும் உயர்ந்தபடி.

இந்தியா செல்கின்றேன் என்றாய்
மகிழ்ச்சி நண்ப.
தமிழ்நாடு நம்முடைய தாய்க்கும் தாய்
தயவான சித்தத்தாள்.
அன்னை மடி இழந்த நமக்கெல்லாம்
அவள் மடியே பொன்னம்பலமாகும்.

சென்னையில் உன் காதல் மனைவியுடன்
எஞ்சிய திருக்கள் அனைத்தையும் முழுசாக
வாழ்ந்துவிடு நண்ப.
விடை சொல்ல வருகின்றேன்.

—-
visjayapalan@yahoo.com

Series Navigation