தோற்றுப்போகாதே….

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

சேவியர்


தற்கொலை…

இது கோழைகளால் எழுதப்பட்டு

கோழைகளால் வாசிக்கப்படும் வாக்கியம்.

சுண்டெலித் தொல்லைக்குத் தீர்வு

குடிசைக்குத் தீயிடுவதா ?

விட்டில்களோடு பயமென்றால்

விளக்குகளைப் பலியிடுவதா ?

தோல்விகள் வந்து தோல் கிழித்தால்

பாம்புகளாய் மாறி

தோலுாிக்கக் கற்றுக் கொள்வது தான் வீரம்.

ஏமாற்றத்தின் சந்தை தான்

கலாச்சாரத்தின் கடைசித் தெரு.

சூழ்நிலைகள் உன்னை சுற்றிக் கிழித்தால்

சுருக்கு மாட்டுவதா வீரம் ?

ஒவ்வோர் மனசுக்குள்ளும் ஓராயிரம் ஆசைகள்

நிறைவேறாத ஆசையோடு செத்துப்போனால்

ஆவியால் அலைவோமாம்….

அது சாி,

எவனிங்கே நிறைவேறிய ஆசையோடு

மாித்துப்போனது ?

ஒவ்வோர் கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி

இன்னோர் கனவு,

ஒவ்வோர் ஆசைக்கதவுகளுக்கும் அப்பால்

இன்னுமோர் வாசல்…

யாாிங்கே திருவோடுகளோடு திருப்திப்படுவது ?

பட்டுப்பூச்சி தேடிப்போனவன் கைகளுக்குள்

பட்டுப்போன பூச்சிகள்,

அர்ச்சுனர் மார்பில் அல்லியாின் அம்புக்காயங்கள்,

யாாிங்கே

வெற்றிகளோடு மட்டும் சுற்றித்திாிவது ?

தற்கொலை இன்னொரு தோல்வி.

தோல்விக்குப் பயந்து தோல்விக்கு வெற்றிகொடுக்கும்

இன்னொரு தோல்வி.

உனக்குத் தேவை

தோல்விகளோடுள்ள தொடர் ஒப்பந்தமல்ல…

துடுப்புகள் தொலைந்துபோனால்

உள்ளங்கையை விாித்துக் கொள்,

இலக்குகளை இறுக்கமாய் பற்றிக்கொண்டால்

பனிப்பாறை ஓரத்திலும் பாதைகள் புலப்படும்.

இல்லையேல்,

காலில் சிக்கும் பாசிகள் கூட

சவக்குழிகள் செய்து குவிக்கும்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்