தோப்பில் முகமது மீரானின் சமீப சிறுகதைகள்: நினைவுக் கிடங்கும், ஆறாத ரணங்களும்

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

சுப்ரபாரதிமணியன்


பிறந்த தினம் பலருக்கு முன்பெல்லாம் எதேச்சையாகப் பதிவு செய்யப்படுகிறவைதான்.பிறப்பு, இறப்பு கட்டாயப் பதிவு என்றாகி விட்ட போதுதான் அவை முறைப்படுத்தப்பட்டன. அதற்கு முன் பதிவு செய்யப்படுகிறவைகளில் பல சிறு பிழைகளைத் தாங்கி இருந்திருக்கல்லாம். பிறந்த நேரம் தீர்க்கமானதாக இல்லாமல் ஏகதேசமாகக் குறிக்கப்படும்.இவை ஜாதக ரீதியாக நம்புகிறவர்களுக்கு பல சங்கடங்களையும் பின்னால் கொண்டு வரக்கூடும். பிறந்த தினம் தெரியாமல் குத்து மதிப்பாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டகுழந்தைகளாக பழைய தலைமுறையினரைப் பார்க்கலாம். பிறந்த தினம் பற்றின
தேடுதலில் ஈடுபடுபவன் தன் பிறப்பு பற்றினத் தேடுதலைச் செய்கிறனாக பல சமயங்களில் மாறிப் போகிறான். இதில் ஏற்படும் ரணங்களும் சாதாரணமாகிப் போகின்றன.இந்த ரணங்கள் தோப்பில் முகமது மீரானின் மனிதர்களுக்கு சதாரணமானவை. உயர்ந்த பிறப்பினனாக இருந்தலூம், பஞ்சப்பராரியாக இருந்தாலும் பிறப்பு பற்றின ஆர்வமும், சிந்தனைகளும் மனிதர்களை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன.
பிறப்பு உயர்ந்ததாக இருந்தாலும் குப்புறத்தள்ளிவிட்ட வாழ்க்கையிலிருந்து மீள முடியாதவர்களின் மீட்சிக்கான அக்கறை தோப்பில் மீரானின் படைப்புகளில் உண்டு. இந்த அக்கறையை மையமாகக் கொண்டு தன் வாழ்க்கையை பின் நோக்கிப் பார்க்கிற நினைவின் ஓடையில் சதா நீந்துகிறவராக மீரான் இருக்கிறார்.
குட்டன் பிள்ளை சாருக்கோ, காலண்டர் பாவாவுக்கோ, முத்தம்மைக்கோ நினைத்துப்பார்த்துக் கொள்ள பல வருட அனுபவங்கள் இருக்கின்றன. அப்படி நினைத்துப்பார்த்துக்கொள்வதைத் தவிர வேறு ஆறுதலும் இல்லை. அது ஆரம்பத்தில் சுகானுபவமாக இருக்கிறது. பின்னர் ரணங்களின் வலியின் காரணமாக அழுகைக்கான விடயமாகி விடுகிறது. இந்த நினைவுக்கிடங்கிலிருந்து அள்ளி அள்ளி எடுத்து வைக்க பல அனுபவங்கள் மீரானுக்கு இருக்கிறது. தீராத சுனையாக ஊறிக் கொண்டே இருக்கிறது.அது
பெரும்பாலும் உறவினர்களாக இருக்கிறார்கள். தன்னுடன் படித்தவர்களாக இருக்கிறார்கள்
தான் வைத்தியம் பார்க்கப் போன மருத்துவர் முதல் தனது மனதிற்கு பிடித்த பால்யகாலப் பெண் வரைக்கும் இருக்கிறார்கள். இந்த மனிதர்களிடமிருந்து மீரானைத் தவிர்த்துப்பார்ப்பது இயலாத காரியம். காரணம் அவர் எழுத்திற்காக தன் வாழ்க்கையை ஒட்டின அனுபவங்களையே தேர்வு செய்து கொள்கிறார். அதுதான் இலக்கியம் என்றும் நம்புகிறார்.எனவே அவர் கதைகளில் நவீனத்துவம் சார்ந்த வடிவங்களையோ, முத்திரைகளிளையோ எதிர் பார்க்கத்தேவையில்லாதபடி செய்துவிடுகிறார். ஆனால் நவீனத்துவம் மாறி வரும் வாழ்க்கையின் அதிரடி நிலைகளும், உலகளாவிய பல் வேறு சமூகப்பொருளாதார மாற்றங்கள் வாழ்க்கையை பாதிப்பதுதான் என்பதை படைப்பில் உணர்த்துபவராக இருக்கிறார்.
சாதாரணமாற்றங்கள் முதிய வயதை ஒத்தவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியவைதான். அதை வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். காலம் தங்களை அனாதைகளாக விட்டு தூர ஓடி விடக்கூடாது என்ற அக்கறை அவர்களுக்கு இருக்கிறது. அதை மறுதலித்து விட்டு ஒதுங்கி நின்று வெறும் கல் தூண்களாக அவர்கள் இருக்க விரும்புவதில்லை. காலண்டர் பாவா தன் இயலாமையை முமுமையாக்கி ஒதுங்கி நின்றிருந்தால் அவர் கல்தூணாக நினைவுச்சின்னமாகி இருப்பார். அதற்கான வாய்ப்பை அவர் தருவதில்லை.பிரித்தரியும் முதிர்ச்சி தந்த காலத்தால் சிதைபவர்களாக இருந்தாலும் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறவர்கள் அவர்கள். சமூகமும் அரசியலும் தத்துவங்களும், மதரீதியான நம்பிக்கைகளும் ஒன்றை ஒன்று விழுங்கக் காத்திருப்பவையாக இருந்தாலும் அவை தரும் படிப்பினைகள் அவர்களுக்கு மாற்றங்களை எதிர் நோக்கச் செய்கின்றன. இந்த மாற்றங்களை வாசகர்களும் உள் வாங்க வேண்டிய அவசியத்தை சுலபமாக உணர்வார்கள். அதற்கான நியாயங்களை தன் எழுத்தில் நிறுபுபவர் மீரான்.
குழந்தைகளின் விளையாட்டாகட்டும், முதுமையின் ஆசுவாசமாகட்டும் இவையெல்லாம் ரசிக்கக் கூடியதாவே மீரான் தனது கதைகளில் காட்டுகிறார். அதன் மூலம் அவற்றை அனுபவிக்காமல் தவிர்க்க விடுவதை உறுத்தலாக்கி விடுகிறார். கையறு நிலையிலிருக்கிற அப்பாக்களோ, குடும்ப நிலையைப் புரிந்து கொள்ளாத குழந்தைகளோ கதாபாத்திரங்களாகக் காணக் கிடக்டைக்கிற போது அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ளும் வாய்ப்புகளை கதைகளின் முடிவுக்குள்ளேயே நிகழ்ந்து விட வேண்டும் என வாசகனும் விரும்பும் வண்ணம் மனதிற்கு வெகு அருகாமையில் கொண்டு வந்து விடுகிறார். இது மனிதர்களுடன் கதாசிரியர் நெருங்கி நிற்கும் இயல்பைக் காட்டுகிறது.குழந்தைகளுடனான நெருக்கம் போலவே காதலியுடனான நெருக்கமும் பிரிவின் தேவையை உணர்த்துவதும் யாதார்த்தமானவை. குடும்பம் மற்றும் சமூக நிலைகளில் தேர்ந்து கொள்ளப்பட வேண்டுபவை என்பதை நெருக்கமானப் பெண்கள்
உணரவைக்கிறார்கள்.முதுமையை நோக்கிச் சென்று கொண்டிருப்பவன் மலை முகட்டில் சூரியன் மறைவதை ரசிக்கக் கூட அவனுக்கு விருப்பமான பெண்ணுடன் அபூர்வமாகத்தான் அனுபவிக்க நேர்கிறது.
முஸ்லீம் பிரதேசங்களின் நுணுக்கமான விவரிப்புகளும் மூஸ்லீம்களின் பேச்சு வழக்கும்
இக் கதைகளின் தனித்தன்மையை நிலைநாட்டுகின்றன. இது சில சமயங்களில் பிற சமூகம் சார்ந்த வாசகர்களை அந்நியமாக்கும். ஆனால் பிற மதத்தினரை பற்றின கதாபாத்திரச் சித்தரிப்பும் வாழ்வும் எவ்வித துவேசமும் துளியும் தென்படாமல் சிதிகரிக்கப்பட்டிருப்பது சாதாரண விடயமல்ல.
தனி மனித பிரச்சைசனைகளும் உள் நோக்கியப் பயணங்களும் அல்லாமல் உலகமயமாக்கல் நிகழ்த்தி வரும் பேரபாயங்களை தனித் தலைப்பிட்டோ வகைப்படுத்தியேயோ கதையாக்காமல் வெகு நுணுக்கமாக காதல் மற்றும் பிரிவின் ஊடாகவும் எடுத்தாள்வது தீவிரபடைப்பின் தன்மையை உணர்த்தி விடுகிறது. தண்­ர்
பிரச்சனை மற்றும் அது பாட்டிலுக்குள் அடைபட்டுப்போகிற உலக அவலத்தை காதல்
கதையூடே உணர்த்துவது உதாரணம். இதனூடே வாழ்க்கையின் புதிர் தன்மையை உணர்த்துவதிலும் சில கதைகள் முயற்சித்து வேறு பரிமாணங்களுக்கும் படைப்பைக் கொண்டு செல்கின்றன,.பாடம் சொல்லாத பிள்ளைகளை அடிக்க வைத்திருந்த புளியம்மாறு குளியலறை கதவு இடுக்கு வழியாக வேகமாக வெளியேறி ஆகாய வீதியில் பறந்து போவது போன்றக் குறீயிடுகளும்,தனி மனித அனுபவங்களும், மனிதர்கள் கடந்து போகிற வெளிகளை குறியீடாக்கும் மீரானின் கதைகளின் படைப்புத்தீவிரத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன.


( ஒரு குட்டித் தீவின் வரைபடம்: தோப்பில் மீரான் சிறுகதைகள்.
ரூ 55. அர்ச்சுனா பதிப்பகம், ஸ்ரீராம் குடியிருப்பு, 212எ/156சி-2 சூளைமேடு நெடுஞ்சாலை, சென்னை

சுப்ரபாரதிமணியன் , 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602
srimukhi@sancharnet.in

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்