தோணியும் அந்தோணியும்

0 minutes, 15 seconds Read
This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

சைதன்யா


அவை எங்களுக்கான கணங்களாய் அமைந்தன.

விளக்க முடியாதவை அவை. மேலே வானம். சுற்றிலும் கடல். வானத்தில் இருந்து நீலம் வழிந்து கடலில் இறங்கியிருக்கிறது. மெல்லிய குளிர். சல்லாத் துணிபோலும் இருள். நிலக்கடலையின் பாதித்தொலிபோல் சிறுபடகு. கூட மைக்கேல். நாங்கள் பேசிக்கொள்ள எதுவும் இல்லாமல் கிடந்தோம். எங்கள் உள்மெளனங்கள் ஒன்றையொன்று தழுவிக் கிடந்தன. பேசி அந்தக் கணத்தைக் கொச்சைப்படுத்திவிட வேண்டாமாய் இருந்தது. உணர இயற்கை ஆயிரம் விஷயங்களை உள்ளே நிரப்பிக் கொண்டேயிருக்கிறது. பிரமிப்போ மயக்கமோ கூட, சிறுவார்த்தையாடலோ கூட அதை அசக்கிவிடும். குறிப்பாக அந்தக்கணம் தன் பவித்ரத்தினை இழக்க நேர்ந்து விடும். இயற்கை என்பது பூதம். வார்த்தை என்பது குப்பி. பூதம் சீசாவுக்குள் மாட்டிக் கொள்வதாவது ?… என்ன குரூரம். இருவருமே அதை விரும்பவில்லை. மனதின் அந்தரங்க வளாகங்களையும் சற்று இறுக்கம்-தளர்த்திக் கொள்ள, ஆசுவாசப்பட வேண்டித்தானே இருக்கிறது ? திருமணம் என்கிற அளவில்… மனதுக்கினியவர்கள்… பெரியவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொள்வதுபோல…. நாங்கள் இயற்கை முன் அதை வழிபாட்டுணர்வுடன் அடிபணிந்து நிற்கிறோம். எங்கள் இருவருக்குமாய் இயற்கை தன் காருண்யத் தழுவலை நிகழ்த்துகிறது. நாங்கள் அதன்முன் ஒட்டிப் பிறந்த ரெட்டைப்பிள்ளைகளாய் உணர்கிறோம். ஒரு தாயின் இரு தனங்களையும் பற்றி ஆளுக்கொரு பக்கம் அமுதுண்கிறோம். அவன் பெறும் தட்பநுட்பம் எனக்கானதாகவும் என் அனுபவம் அவனுடையதுமாகவும் அமைகிறது. மொழியால் இதை விளக்க முடியுமா ? கூடுமா ? இணக்கமான மெளனத்திலும் ஆழங்காற்பட்டு உள்ளிறங்க வேறு எதாலும் இயலுமா ? அன்பின் பரிமாற்றத்தினை ஒரு மெளனம் விளக்கும் அளவு, சிறு புன்னகை தெளிவிக்கும் அளவு மொழி தெரிவிக்க எந்நாளும் சாத்தியப்படாது. உணர்வுக் கடலுக்கு பாத்திவெட்டி விடுகிறது மொழி.

காலம் உறைந்து கிடந்தது எங்களுக்கு வெளியே. அலைக்குதிரைகள் கட்டிக் கிடக்கின்றன. நாங்கள் மல்லாக்கப் படுத்திருந்தோம். மேலே வானம் – பயமுறுத்த வேணாமோ அந்த வானத்தின் முகம். நான் தனியே இப்படி வானத்தைப் பார்த்துப் படுத்துக் கிடக்கவும் கூடுமோ ? வெப்பம் வெளிக்கசிய குளுமையைத் தக்க வைத்துக் கொள்ளும் மண்பானை போல அந்த இணக்கமான நல்லமைதி, நிசப்தம் பிரம்மாண்டத்தோடு தொப்புள்கொடி சுற்றிக் கிடந்தது. ஆ… கூட அவன். நாங்கள் எங்கள் ஆத்மாக்களை இதோ இந்தக் கடலில் வானத்தின் நீலம்போலும் அலசிக் கொண்டிருக்கிறோம் ஒருசேர. எங்கள் மெளனம் ஒருவருக்கொருவர் சமிக்ஞைகளைப் பரிமாற்றம் செய்து கொண்டே யிருக்கிறது. ஆத்மாவின் மெளனம் சதா எதையாவது எப்போதும் பரிமாறிக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அதை உணர்வதில்லை. தனிமையில்… குறிப்பாக இளவயதின் தனிமையில் உணர்வதேயில்லை. அதை உணர்த்த… உணர… கூட யாராவது வேண்டியிருக்கிறது. அவரும் வெளிப்படையான மனதுடன், பரிமாறும் பெருவிருப்புடன்… அதை வெளிப்படுத்த எவ்விதக் கட்டாயத்தையும் நிர்ப்பந்தத்தையும்… சுயநலமான எதிர்பார்ப்பையும் கொள்ளாதவராய் அமைய வேண்டியிருக்கிறது – எத்தனை ifs and buts, provideds – அப்படி நட்பும் சாத்தியப்பாடுகளுமே… வெகு அரிதாகவே கிடைக்கின்றன. பேசி அதை இழத்தல் தகாது. விளக்கியுரைத்து அதைக் குழப்பிவிடுதல் மகாபாவம்.

பாற்கடலில் துயில்கொண்ட பரமன். மகாலெட்சுமி. அருகே செல்லமோ செல்லமான மனைவியில்லாமல் பரந்தாமனால் அப்படிக் கண்மூடிக் கிடந்திருக்க முடியுமா என்ன ? ஐயோ நான் ஏன் இந்தக் கணங்களுக்காய் வார்த்தைகளைக் குதப்பிக் கொண்டிருக்கிறேன் எனக்குள் ? அவரவர் உள்வாசனையை அவரவர் எட்டிப் பிடிக்க நான் ஒதுங்கி வழிவிட வேண்டும். அதற்கு சக மனிதனை நம்பு. நேசி. கைப்பிடித்துக் கொள். சிரி. ரசி. மனதை – நுரையீரலை விரியத் திற. ஏதாவது உள்நுழையக் காத்திரு. வசதி பண்ணிக் கொடு…. வானத்தின் நீலம் இறங்க இறங்க வெளிற வேணாமோ ? வானம் மேலும் அடிவணடலாய்க் கலங்கி, கெட்டிப்பட்டு… நீலம் கருநீலமாகி… கருப்பாகி விட்டது. நேரமாகி விட்டது. அப்பா தேடுவார். அழகியசிங்கர். கோவில் கைங்கர்யகர்த்தா. பரம்பரை பாத்யதையில் கோவில்சேவகம். வயதாகி விட்டது. என்றாலும் தானே தன் கைப்பட பிரசாதமும் திருத்துழாய்த் தீர்த்த சடாரியும் நல்குவதை ‘அவர்கெளரவமாய் ‘ ஏற்றுக் கொண்டவர். என் கை தளரட்டும். சக்தி ஓயட்டும். உள்ரத்தம் சுண்டட்டும். மனம் ஒடுங்கட்டும்… பிறகு நானே பொறுப்பைக் கைமாற்றுகிறேன், என்கிறார். அவனுடன் பட்டணம் வந்து தங்க அவரால் ஒருக்காலும் இயலாது. அவர் சம்மதியார்.

அடடா எதற்கும் முடிவு என்று இருக்கிறது. பிரிவு என்றிருக்கிறது. இருநிலைப்பாடு கொண்ட அறிவு. மனது. அதன் புரிதல்கள். அதன் வழிப்பட்ட கணிப்புகள். அவை துயரங்களைச் சுமத்துகின்றன. இதைத் தவிர்க்க முடியாதா ? அந்தக் கணங்களின் பவித்ரத்தை எப்போது எந்தப் புள்ளியில் இழந்தான் தெரியவில்லை… இனியொரு வாய்ப்புக்கு – இயற்கைமுன் நிர்வாணப்பட்டு கூச்சமின்றி நான் நானாக, ஆ ‘நானற்ற ‘ நானாக… பிரபஞ்சத்தின் சொத்தெனவே அது உணரும்படி, என்னைக் கறைப்படுத்திக் கொள்ளாமல், தலைபணிந்து என்னை ஒப்படைப்பதற்குக் காத்திருக்க வேண்டியதுதான். காத்திருந்தாலும் வாய்க்குமா ? ஹ்ம்… பார்க்கலாம். மெல்லிய கதகதப்புடன் மைக்கேலின் கரத்தைப் பற்றி ஒரு சிற்றழுத்தத்தைக் கைமாற்றுகிறான். ரத்தநாளங்களில் மன அலை கோஷமிட்டு முட்டிமோதி கால்நடை மந்தையென சிற்றிரைச்சலான ஒழுங்கற்ற ஒலிப்புழுதியைக் கிளப்புகிறது. ஹ்ம், என்கிறான் மைக்கேல் உள்மேகப் பொதிவில் இருந்து கலைந்து. என்ன மோகன் ? – அப்பா தேடுவார். அவனைப் பிரிய, துக்கம் உள்ளே விக்குகிறது. ஆ, வேறு வழியில்லை. ஒரு சுவாச ஆசுவாசத்துக்குப்பின் உள்த்திரும்புகின்றன கடல்மீன்கள். இனி வெளியே அமைதி நிலவட்டுமே. நாங்கள் மனதின் – அறிவின் உள்ளிரைச்சல்களைச் சுமந்து திரிகிறவர்கள் ஆவோம்.

சற்று வெளியே இருந்தது மீனாங்குப்பம். கதவுகளற்ற சிறு வீடுகள். பறவைக் கூடுகள் போல. சிறு தேவாலயத்தில் இயேசப்பா. மேற்சட்டையில்லாத அந்த நிர்வாணம். கைவிரிந்த கையறு நிலை. அதன் விரிந்த தன்மை சொல்லும் பிரம்மாண்டமான துயர வெறுமை. அந்தக் கண்களின் உருக்கத் தத்ரூபம். மீனவர்கள் தத்தமது மாற்றுருவாகவே அந்தத் திருவுருவைக் கண்டார்கள். அப்படியாய் அந்த எளிமையும் ஏழ்மையும் அமைந்திருந்தன. இளவெயிலில் உலர்த்திக் கிடக்கிற வலைகளைச் சுருட்டித் தோளில் எடுத்துவந்து ஆண்டவர்முன் சமர்ப்பித்து வணங்கிவிட்டுக் கடலில் இறங்கப் பிரியப்பட்டார்கள் மீனவர்கள். சூர்ய ஒளியாகிய இனிப்புப் பதார்த்தத்தின் ஜரிகைக் காகிதம் போல காலம் இருளை மெல்லப் பிரிக்கிற வேளையில் அவர்கள் கடலில் இறங்கி விடுகிறார்கள். ஒலிகள் நடமாட்டம் நாயோட்டமாய்த் துவங்கி அந்த வளாகம் சுறுசுறுத்து விடுகிறது. பெரும்படகும் சுற்றிலும் சில சிறு தோணிகளுமாக அவர்கள் கடலில் இறங்குகிறார்கள்…. ஆண்டவர் சாட்சியாக.

குதிகாலைக் கூசச் செய்யும் அதிகாலைக் குளிர். கடற்கரை வளாகம் சுறுசுறுப்பாகி விடுகிறது. தேவாலயமே ஒளிபூத்து மேற்புரக் கண்ணாடிகளின் விதவிதமான நிறங்களில் மினுமினுக்கிறது. அதன் மேல்விதானத்து விளக்கு ஏற்றப்பட்டிருப்பது சேவலின் வைகறை அறிவிப்பு போலிருக்கிறது. அவர்கள் படகுகளைக் கடலுக்குள் செலுத்துவதை ஆண்டவர் ஒருகண் திறந்து பார்க்கிறாற் போல சிறு பிரமை. நம்பிக்கையும் உற்சாகமுமான தருணங்கள். அலைகள் தாண்டிய சிறு துாரத்திலேயே பெரும் படகு நிற்க, தோணிகளின் வளைய வியூகம்.. பெரும்படகு வலையை வீசிப்பரத்துகிறது. விருட்சத்துச் சல்லிவேர் என நீரில் அமிழ்ந்து மிதக்கும் வலை. மீன்பட்டாளம் மேலெழும்பித் தளும்புகின்ற அந்தக் கணம்… வளையவியூகம் பெரும் உற்சாகக் கொந்தளிப்பாய் இரைச்சலாய் குழப்பமாய் வெடிக்கிறது. மீன்கூட்டம் பதறி நிலைகுலைந்து திகைத்து வலைப்பக்கம் ஒதுங்கி சிறைப்படுகின்றன. துரிதமாய் வலை துாக்கப்படுகிறது. சிக்கிய மீன்களைப் பெரும் படகின் ஆட்கள் பிரித்துக் கூடையில் போடுகிறார்கள்… கணநேர அமைதி- காத்திருத்தல்- திடுமென ஒலியெடுப்பு. பிரளயம். பரபரப்பு. வேகவியூகம். மீண்டும் அமைதி… என பெரும் symphony அது. கேட்கத் திகட்டாக் கவிதை. தளிர்க்குளிர். காலைகளில் ரோஜாப்பனித்துளியாய் மினுமினுக்கிறார்கள் அவர்கள்.

எப்படியும் மோகன் மேலேபடித்து பஸ்ஸேறி விடுவான், தெரியும். பிராமணப் பிள்ளை அல்லவா ? புத்தக வாசிப்பில் ருசியுள்ள சமூகம். கம்பியூட்டரும் சோதனைகளும் என கனாக்கறி, புலன்-உணவுக்காரர்கள். மைக்கேல் அவனுடன் பன்னிரண்டாவது வரை படித்துவிட்டு தன்திசை விலகிக் கொண்டான். கையெழுத்திடவும் கணக்கு பார்க்கவும் கடிதம் எழுதவும் மனிதன் படிப்பதாக நம்பும் சமூகம் அது. பெண்களோவெனில் இதற்கும் முன்னதாகவே தாவணி போடுகிற அறிகுறிகள் தென்பட்டாலே படிப்பில் இருந்து விடுபட்டு விடுகிறார்கள். பருவம் பாண்டி ஆட்டம்போல கட்டங் கட்டமாய் அவர்களின் வளர்ச்சியை, வாழ்வம்சங்களை வரையறுக்கிறது – தொடர்ந்து விடுமுறை தினங்கள் என அமைகையில் மோகன் ஊர் திரும்புவான் என்று தெரியும். பஸ்நிறுத்தத்தில் அதிகாலையில் காத்திருக்கிற மைக்கேல். அவர்கள் தழுவிக் கொள்கிறார்கள். சிறு விசாரிப்புகள். பஸ்சில் ஜன்னல்களை ஊடறுத்துப் புகும் குளிர் தாளவொண்ணாமல் மோகன் ஸ்வெட்டர் போட்டிருக்கிறான். மைக்கேல் பெயரளவில் ஒரு சட்டை. தலைமேல் டப்பாக்கட்டு. ஈரிழை குற்றாலத்துண்டு. அதன் இறுக்கத்தில் சொருகியிருக்கும் பீடிக்கட்டு. காலை புகைபிடித்தல் கதகதப்பைத் தருகிறது. அழகியசிங்கர் மைக்கேலுக்கும் சேர்த்து தவறாமல் காபி கலந்து தருவார். ‘ஐயா நாளை மோகனுக்கு எங்க வீட்ல சாப்பாடு- மீன்கறியோட… ‘ என்று சிரிப்பான் மைக்கேல். என்ன அழகான சிரிப்பு… ஆன்மாவின் ஜொலிப்பு அது.

கடல் சுவாரஸ்யமானது. பூமியின் பெரும் பங்கு. தரைப்பரப்பு- ஆசுவாசப்பட என மேற்புறம் வந்த மீன்போல. தாய்க்கருகே பெரும் நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை தரை. கடல் தாய் போன்றது. மைக்கேல் கடலைப் பற்றிய கதைகள் பேசுவான். கடலின் அந்தரங்கத்தின் அநேகச் சாவிகள் மைக்கேலிடம் அலையொதுங்கி யிருந்தன. காற்றின் திசை பார்த்து மீன்களின் வரத்தைக் கணித்தல். வானத்தின் ‘நாடி ‘ பார்த்து மழையறிவித்தல். மெளனத்தின் பரிபாஷை அது…. மேலே படிக்க மைக்கேலுக்கு ஆசை இருந்தது. ரோஜாவியாபாரியிடம் ஒரு பாரசிகக் கவிஞன் – இந்தப் பூக்களை விற்று இதைவிடச் சிறந்த எதை வாங்கிவிடப் போகிறான்… என வியந்தது ஞாபகம் வருகிறது.

சிறு குளிருக்கும் கதவடைத்துக் கொள்கிற இவன். மைக்கேல் வீட்டுக்குக் கதவுகளே இல்லை. அவன் தந்தை அந்தோணி… வெளியே போட்ட கயிற்றுக் கட்டிலில் அவர் தலைக்குயரம் எதுவுமின்றிப் படுத்திருப்பது பைநாகப்பாய் கண்ட பரமனை ஒத்திருந்தது ஏனோ. அந்த வயதின் உடல்ச் சுருக்கங்களுக்கு வெறும் முதுகுடன் அதுவும் கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்க முடிவதே ஆச்சரியம். இந்த சிறு வயதில் அவனால் அதன் உறுத்தலைத் தாளவியலாது… சட்டையணிந்து அவரைப் பார்த்த ஞாபகமேயில்லை. குரூஸ்கோவிலில் ஒரு திருமணம். அந்தோணி மைக்கேலின் சட்டையைப் போட்டுக் கொண்டிருந்தார். எல்லாரும் ‘மாப்ள வந்தாச்சியப்போவ்… ‘ என்று கலகலக்கிறார்கள். மனசில் திருவிழா கண்ட கணங்கள்.

வேலையுமாகி திருமணமுமாகி நகரவாசம் என்று வாழ்க்கைப் போக்குகள். அலைவாய்க்கரை வர வாய்ப்புகள் தேய்ந்துகொண்டே வந்தன. அழகியசிங்கர் இன்னும் மனந்தளரவில்லை. அதிகாலைப் பனியிலும் எழுந்துகொள்ளச் சுணங்கவில்லை. திகைக்கவில்லை என்பது ஆச்சரியம். ஓய்வென ஒதுங்கிக் கொள்ளாத ஏங்காத அந்தத் தலைமுறை. காலத்தின்பாற்பட்டு நாம் ஓய்வு எனத் தனியே பிரித்து நேர-பட்ஜெட் போடுவது வேடிக்கைதான். வேறு வழியுங் கிடையாது. பிறர் உதவியின்றித் தனியே கோவிலுக்கு வருகிறார். பெருங்கதவுகளை மகாசாவிகள் கொண்டு திறக்கிறார். கதவைத் தள்ளிக்கொண்டு உள்நுழைகிறார். அந்த அதிகாலை யார் வரப்போகிறார்கள் ? ‘திறந்து வை. காத்திரு… நம் வேலை அது ‘ என்று சிரிக்கிறார். ‘நேரம் என்பது நம் கணக்கல்லவா ? இறைவன் எக்கணமும் விழித்திருக்கிறான்… கோவிலில் நான் தனியே இல்லை… ‘ அப்பா அவனைப் பார்த்தார். ‘நீ பிறருக்காகவா உன் நியதிகளை வகுத்துக் கொள்கிறாய் மோகன் ? ‘ – ஆம், ஆனால் அது தவறுதான், என ஒத்துக் கொள்கிறான்.

ஊருக்கு வந்தால் அநேகமாக அப்பாவுடன் விழிப்பு தட்டிவிடுகிறது. அவரது மனதில் ஓடுகிறது கடிகாரம். அப்பா பச்சைத்தண்ணீரில் குளிப்பார். அவர் கிளம்பும்போது தன்னியல்பாய்க் கோவில்வரை கூடப் போவது பழக்கமாகி யிருந்தது. அந்த இருளொளியில் அல்லது ஒளியிருளில் மெல்ல வீதிகளில் நடப்பது சுகம். மென்காற்று. மரவட்டையாய்ச் சுருண்டுகிடக்கிற தெருநாய்கள். கூட்டுறவு பால்டிப்போவில் மாடு-கறக்கிறவர்கள். கன்றுகளை நக்கிக்கொடுக்கும் அல்லது புல் – வைக்கோல் மேயும் மாட்டின் சலங்கையொலி. காலைகளை ரசிக்கக் கற்றுத் தந்த ஆண்டாளுக்கு நன்றி. செல்லப் பெண்டாட்டியின் உடலில் இருந்து அவள் உறக்கம் கலையாதபடி பிரித்துக் கொள்வதுபோல இருள் பிடியுருவிக் கொள்வதைக் காணுதல்… உணர்தல் அழகு.

ஆனால் கடற்கரை சுறுசுறுத்துக் கிடக்கிறது. சிவப்பு பீடிக்கங்குகள் மினுமினுக்கின்றன. அந்தோணி எழுந்தமர்ந்திருக்கிறார். அவர் மீனாட்டத்துக்குப் போவதில்லை. பின்பக்கமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு அவர் நடக்கிறார். குரூஸ்கோவில் வளாகத்து வாசற்படிகளில் வெண்சிறு தேன்கூடாக நரைத்த குறுந்தாடியைத் தடவியபடி உட்கார்ந்திருக்கிறார். அந்தோணியை இங்கிருந்து பார்க்க ஆண்டவர் சிலுவையில் இருந்து இறங்கி வந்தாற் போலிருக்கிறது. பிடித்த விஷயங்கள் மனதில் கவிதைப்பதிவு செய்துகொள்கின்றன தாமே. ‘போயிட்டு வாரன் ‘ என அருகே வந்து நிற்கிறான் மகன். அவர் எழுந்து மைக்கேலை சற்று நடுங்கும் விரல்களால் தொடுகிறார். வார்த்தைகள் அர்த்தமிழந்த உலகில் சில சிறுதழுவல்கள் ஸ்பரிச நெகிழ்ச்சிகள் ஹெர்க்குலிஸ்போல உலகைத் தாங்க வல்லவை. எங்கிருந்தாலும் அவனுடன் அவன் அப்பாவின் நிழல் கூடவே வருகிறாற் போலத் தோணுகிறது.

அந்தமுறை ஊர்திரும்புகையில் மைக்கேல் பஸ்நிறுத்தத்துக்கு வரவில்லை. ஆச்சரியம். வராமல் இருக்க மாட்டான். என்னாயிற்று மைக்கேல் உனக்கு ? சூட்கேஸைவிட அதிகமாய் அந்த நினைவின் கனம். அப்பா தகவல் சொன்னார்- தனித்தோணியில் போன மைக்கேல் திரும்பவே இல்லை… பல்வேறு யூகங்கள் ஊரில். அவன் வழிதவறி யிருக்கலாம். பெரும்சுறா போல எதற்கும் இறையாகி யிருக்கலாம். தோணி கவிழ வேறு கரைக்கு நீந்தியிருக்கலாம்- தகவல் வரலாம் அது பற்றி. இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்குப் பிடிபடுகிற அளவில் எல்லை தாண்டி தவறுதலாய்த் தோணியெடுத்திருக்கலாம். ஆ சுடப்பட்டிருக்கலாம். ஒருவாரமாக அவனைப் பற்றிய தகவல்கள் இல்லை.

உலகம் புரண்டுபடுத்து தன் மறுபக்கத்தை முதுகுப்புறத்தைக் காட்டினாற் போலிருந்தது. நதிநீர் இருட்குகைக்குள் புகுந்தாற் போல. குரூஸ்கோவில் ஒளியை எட்டுவைத்து தானே நடை வேகமெடுக்கிறது. ஆண்டவர் வளாகத்தில் பெரியவர் இல்லை. அந்த மணலில் மண்டியிட்டு ஆண்டவரை வணங்குகிறான். என் மைக்கேல்… மைக்கேலுக்கு எதும் ஆகியிருக்கக் கூடாது. ஆண்டவரே ரட்சியும்… வலியும் வேதனையுமான ஆண்டவரின் கரங்கள் அவன் தோளில் கைவைத்தாற் போல ஒரு பிரமை. உடம்பு சிலிர்த்து நடுங்குகிறது. தன்னியல்பாய் மனது, ஆண்டவா அந்தோணியைக் காப்பாற்றும் எனக் குரலெடுக்கிறது. முழுப் பிரார்த்தனையும் முடிக்க முடியாதபடி உள்விக்கல்.

அதோ அந்தோணி கடலைப் பார்க்க நிற்கிறார். கடல் அவரது கூட்டுக்காரன் அல்லவா ? அதனிடம் பகிர்ந்து கொள்ளாமல் இந்தக் கணங்களின் அழுத்தத்தை யாரிடம் அவர் பகிர்ந்து கொள்வார் என்றிருக்கிறது. அவரைத் தொந்தரவு செய்யாமல் அருகில் போய்நிற்கிறான்.. பேசிக் கொள்ள அவசியப்படாத கணங்கள். சிறு தோணியெடுத்து கடலுக்குள் இறங்க அந்தோணி முற்படுகிறாப் போலிருந்தது. ஆ…அவனும் மைக்கேலும் இப்படிப் பயணித்திருக்கிறார்கள். கூட ஏறிக் கொள்ளட்டுமா ஐயா ? அவர் மறுக்கவும் இல்லை. அங்கீகரிக்கவுமில்லை… மீன்பிடிக்கும் ஆரவாரங்களைத் தாண்டிச் செல்கிறது தோணி. சில்லென்ற மெளனம். தண்ணீரை இங்க்ஃபில்லரில் எடுத்தாற்போல பனித்துக் கிடக்கிற காலை. ஆ… அலங்காரங்கள் வேண்டாமே… கடலை மைக்கேலின் கல்லறை என உணர்ந்தாரா அவர் ? ஐயோ அவன் திரும்பி வருவான். கட்டாயம் வருவான். நான் ஏன் இப்படி துக்கங்களை பேன்ட்டுக்குள் சட்டையாக ‘இன் ‘ செய்து கொள்கிறேன்.

துடுப்புகளை மாட்டிவிட்டு படுத்துக் கொள்கிறார் பெரியவர். ஏனோ தன்னை அப்போது மைக்கேலாய் உணரும் மனம். ஒலிகளில் இருந்து, காலத்தில் இருந்து கயிற்றுப்பிடி கழற்றிக் கொண்டிருந்தது தோணி. கடல். வானம். மற்றும் அவர்கள். நியதிகளுக்கு அப்பாற்பட்ட கணங்கள் அவை. மனிதனற்ற கணங்கள். பூசிய கெட்டியான அடிவயிற்றுக் குளிர். இந்தக் கணங்கள் பூமியில் அனைவருக்கும் வாழ்வின் அசுபமுகூர்த்தங்களில் ஆன்மாவில் தட்டவே செய்கின்றன. அவை இயற்கை உன்னில் கருமையாய் இறங்குகிற கணங்கள். இயற்கைக்குத்தான் எத்தனை நிறங்கள். அழுத்தமான… வெண்ணிற… சாம்பல்பூத்த… என நிறக்கலவைகள். காலம் பதிவு செய்யப்படாத கணங்கள்… கண்ணிகளில் கட்டிக் கிடந்தது காலம். சொற்பகாலம். அற்பகாலம். ஆனால் மனதில், நீண்ட, கடற்பாசி உணர்வு மிதவைகளை உணர்த்தும் இயற்கை. எதற்கும் முடிவென்பது நிர்ப்பந்தம் இந்த மானுட சஞ்சார பூமியில். சிறுகாற்றுக்கு உலுக்கப்பட்ட தோணி நியதிகளை அறிவுறுத்துகிறது. நீலஉறையைக் கீறி வானக்காகிதத்தில் சேதி வருகிறது. அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. பேசுவதை அபத்தமாய்க் காட்டிக் கொடுத்தது அந்தச் சூழல். ஹ்ரும்… எனச் செருமி எழுந்து கொள்கிறார் அந்தோணி. அவன் அறிவினால் எட்டவொண்ணாப் பெருவெளியில் கிடந்தார் அவர் என்றே பட்டது. வாழ்க்கை விசித்திரங்கள் நிறைந்தது. புதிர்கள் நிறைந்தது. பெருந்தனிமைக்காரரோ ?

ஒருவேளை அவன் அப்பாவை அவர் இன்னும் இதமாய் உணரக்கூடும். வெயில் உக்கிரப் பட்டிந்தது. கடற்கரையை நெருங்க அவனுக்காய் அழகியசிங்கர் காத்திருப்பதை அந்தோணி பார்த்தார்.

ஃஃஃ

/ஏப்ரல் 2- 2003 இந்தியா டுடே வார இதழில் வெளியான கதை/

storysankar@rediffmail.com

Series Navigation

author

சைதன்யா

சைதன்யா

Similar Posts