தொ(ல்)லைக்காட்சியின் கதை!

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

ராஜூ



சென்னையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1975ல் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது ஒரு விசித்திரமான பொருளாக இருந்தது. ஏனெனில் அந்த நாட்களில் அனைவரிடமும் வானொலி தான் இருந்தது.

திடீரென்று எங்கள் தெருவில் ஒருவர் ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியை வாங்கினார். அவ்வளவுதான்! எங்கள் பகுதியில் இருந்த எல்லா சிறுவர்களுக்கும் கொண்டாட்டம் தான். தினமும் அவர்கள் வீட்டுக்கு மாலை 7 மணிக்கு சென்று தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து விடுவோம். பெரியவர்கள் மட்டும் சும்மாவா? ஏதோ சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு சரியாக 7 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து விடுவார்கள்! அவர்களுக்கும் ஒரு ஆவல் தான், தொலைக்காட்சியில் அப்படி என்ன தான் காண்பிக்கிறார்கள் என்று!

அவர்கள் வீட்டு பையன் மிகவும் மோசமாக கிரிக்கெட் ஆடுவான். ஆனால் தொலைக்காட்சி பெட்டியை அவர்கள் வாங்கிய உடனே எங்கள் மத்தியில் அவனுடைய மவுசு பெருகி விட்டது. அவன் LBW அவுட் ஆகி விட்டால் கூட அவுட் இல்லை என்று அம்பயர் கூறி விடுவான். அப்போது தானே அவனை ஓசியில் டீ.வீ. பார்க்க விடுவான்! அதே போல அந்த பையனை மட்டும் அதிகமாக bat செய்து காஜி அடிக்க விடுவார்கள். அவன் bat செய்யும் போது வேண்டுமென்றே பந்தை பிடிக்காமல் விட்டுவிடுவார்கள்.
அப்போதெல்லாம் சனி, ஞாயிறன்று திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். வெள்ளி தோறும் “ஒளியும் ஒலியும்” என்ற நிகழ்ச்சி இருக்கும். இந்த இரு திரைப்படங்களையும் “ஒளியும் ஒலியும்” நிகழ்ச்சியையும் பார்ப்பதற்கென்றே அவர்கள் வீட்டில் கூட்டம் கூடி விடும். அடுத்த வாரம் என்ன திரைப்படம் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருக்கும்.

அந்த வீட்டுக்காரருக்கோ ஒரே கடுப்பு. ‘ஏன் தான் இந்த தொலைக்காட்சியை வாங்கினோம்’ என்று தோன்றி இருக்கும் போல. ,ஏனென்றால் எப்போது பார்த்தாலும் வீடே ஒரு திரைப்பட அரங்கு மாதிரி ‘ஜே ஜே’ என்று இருக்கும். பார்த்தார் மனிதர். திடீரென்று டீ.வீ. இருக்கும் அறையில் ஒரு உண்டியலை வைத்தார். சிறுவர்களுக்கெல்லாம் 25 பைசா, பெரியவர்களுக்கு 50 பைசா என்று வெளியே ஒரு போர்டை தொங்க விட்டார் (70க‌ளில் 50 பைசா என்ப‌து ஒரு பெரிய‌ தொகைதான், வீட்டு வாட‌கையே 300 ரூபாய்தான் அப்போது!)

இதை அறிந்த‌ பெரிய‌வ‌ர்க‌ள் கூட்ட‌ம் திடீரென்று குறைந்த‌து! ஆனால் ப‌ச‌ங்க‌ள் யாருமே இதை க‌ண்டுகொள்ள‌வில்லை. வ‌ழ‌க்க‌ம் போல‌ அவ‌ர்க‌ள் வீட்டுக்கு ப‌டை எடுப்போம். வீட்டுக்கார‌ரும் நாங்க‌ள் எல்லோரும் வந்து உட்கார்ந்த உடனேயே தொண்டையை கனைத்துக்கொண்டு உண்டிய‌லை ஒரு முறை குலுக்குவார். நாங்க‌ள் தான் ய‌ம‌காத‌க‌ ப‌ய‌ல்க‌ள் ஆயிற்றே! அதை ஓர‌க்க‌ண்ணால் கூட‌ பார்க்காம‌ல், த‌ன் முய‌ற்சியில் ச‌ற்றும் ம‌ன‌ம் த‌ள‌ராத‌ விக்ர‌மாதித்ய‌ன் போல தொலைக்காட்சி பெட்டியையே பார்த்து கொண்டிருப்போம்.

வாரா வார‌ம் அவ‌ர்க‌ள் வீட்டுக்கு இந்த ப‌டை எடுப்பு தொடர்ந்தது. சில‌ வார‌ங்க‌ளுக்கு பிற‌கு வீட்டுக்கார‌ருக்கே அலுத்து போய் விட்ட‌து. ‘எக்கேடாவ‌து கெட்டு போங்கள்’ என்று நாங்க‌ள் உள்ளே நுழைந்த‌வுட‌ன் அவ‌ர் எங்காவ‌து சென்று விடுவார்.

அத‌ற்கு பிற‌கு ப‌ரீட்சை நேர‌ம் வ‌ந்த‌தால் எல்லோர் வீட்டிலும் வெளியே செல்வ‌த‌ற்கு த‌டை விதித்திருந்த‌ன‌ர்.
இதற்குள் ஒரு 3 மாதங்கள் ஓடி விட்டது. எல்லா பயல்களும் தத்தம் பெற்றோர்களை தொலைக்காட்சி வாங்குமாறு நச்சரிக்க தொடங்கினர். நாளடைவில் எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டியை வாங்க துவங்கினார்கள். மெல்ல மெல்ல வானொலியை கேட்பதையே அனைவரும் நிறுத்தி விட்டிருந்தனர்.

பல வருடங்களுக்கு பிறகு வண்ண தொலைக்காட்சி பெட்டி வந்தது. அதற்கு பிறகு பல channelகள், பல குப்பை நிகழ்ச்சிகள், சில தரமான நிகழ்ச்சிகள் என்று காலம் உருண்டோடி விட்டது. இப்போது வானொலியில் மீண்டும் FM நிகழ்ச்சிகள் வர தொடங்கிய பின் நல்ல பாடல்களை கேட்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். ஆனால், என்ன இருந்தாலும், சிறுவர்களாக இருந்த போது வானொலி முன்பு அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு “பாப்பா மலர், ஒலிச்சித்திரம்” ஆகியவற்றை கேட்ட இன்பம் இனி மீண்டும் வருமா என்றுதான் தெரியவில்லை.


nraju99@gmail.com

Series Navigation