தொலைந்தவை

This entry is part [part not set] of 6 in the series 20000827_Issue


நா.விச்வநாதன்


பாண்டியாடத் தெரியாதென
வீடியோ கேம்ஸுக்கு ஓடினாள்
பம்பாயிலிருந்து வந்த மாமா பெண்.


கிட்டிப்புள் ஆடாமலே
கம்ப்யூட்டர் எஞ்சினியராகிவிட்டான்
என்னோடு படித்த கணேசன் –
பிரபந்தம் மறந்துவிட்டு
பாரீஸ் போன மகனின் கடிதத்துக்காய்
ஈசிச்சேரில் காத்திருப்பார் நரசிம்மாச்சாரி
திருமண் இட்ட அடையாளம் மட்டும்
அழியாது தெரியும் லேசாய்-

மழையில் நனைந்தால்
உடம்புக்காகாதென்று
உள்ளே விரட்டுவாள் அம்மா –
கெட்ட வார்த்தைகளைப் பேசியே
பஞ்சாயத்து முடிக்கும் தாத்தாவிற்கும்
வயசாச்சு –
மூலையில் பழந்துணிகளோடு அவரும் –
அரசியல் கொடிகள் ஏழெட்டு பறக்கின்றன
ஏற்றியவர் ஒவ்வொருவரும்
கட்சி மாறியதறியாமல் –

சருகை உதிர்த்து பூமியைமூடும்
வேப்பமரத்தை வெட்டியாயிற்று
நல்ல விலைக்கு –
ஈரப்புடவை உடலை அழுந்த
தெருவை அடைக்க
குளித்து திரும்பும் குமரிப்பெண்களும்
காணாத சூனியம் தெருவெல்லாம் –

விளக்கின்றி இருட்டுக்குள் தவிக்கும்
பிள்ளையாருக்குத் துணையாய்
எல்லோரும் எதையோ தொலைத்ததுபோல்
சந்தோஷம் தொலைத்த நான்

***

 

 

  Thinnai 2000 August 27

திண்ணை

Series Navigation