தொலைக்காட்சித் தொடர்கள் தொலைத்த பிரச்சினைகள்

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

எஸ். காமராஜ்


சிறைக்குள்ளிருக்கும் அபி கட்டம்போட்ட பட்டுச்சேலை உடுத்தியிருக்கிறாள். சிறைக்குள்லிருக்கும்போது மட்டும் கொஞ்சம் மிதமான ஒப்பனை, அதற்க்காகவே ரோஸ் வண்ண உதட்டுச்சாயம் பூசப்பட்டிருக்கிறது. எதற்காக சிறைக்குவந்தாள் என்று கேட்டால், அவள் சொந்த அண்ணனோடும், சித்தப்பாவோடும், உடன் பிறந்த தம்பியோடும், போராடிக்கொண்ட்டேயிருக்கிறாள். விவாகரத்தான கணவனும், மாமியாரும் அவளோடு கூட இருந்துகொண்டே குழிதோண்டுகிறார்கள். அலுவலக வேலைக்குப்போனவள் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுகிற ஒப்பந்தந்தக்காரியாக உயர்கிறாள். இது போலவே சித்தி அண்ணாமலை, செல்வி, அரசியென்று தினம் பகலும் இரவும் ஒரு பெரும் படையொன்று நமது வரவேற்பறையில் வந்து நின்று இந்த உலகமகா பிரச்சினைகளைச்சொல்லியவண்ணம் பொழுதுகடத்துகிறது. செரிக்காத நேரத்து வாந்தியைப்போல தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

விஞ்ஞானம், எதார்த்தம், நடப்பு இதில் எதோடும் ஒப்பிட்டுப்பார்க்கமுடியாத உணர்ச்சிகளும், கண்ணீருமே கொட்டிக்கிடக்கிற சீரியல் நாடகங்களைக்கடந்து இனி தமிழ் உலகம் வாழ்வது அரிதாக மாரிப்போனது. ஊடகங்கள் காலத்தின் கண்ணாடியென்றால் இந்த மாயக்கண்ணாடியில் இரண்டாயிரம் சதுர அடி பரப்புக்கொண்ட வீடுகள், அதற்குள்ளிருக்கும் மாமியார் மருமகள் மற்றும் இரண்டுதார சிக்கல்கள் மட்டும் தான் பிரதிபலிக்கபடுமா. ஏழுகோடிக்கும் மேலுள்ள ஜனத்தொகையில் வெறும் பத்துசதவீதம் மட்டுமே இருக்கும் இந்த மாளிகை மனிதர் தவிர மிஞ்சிய மக்கள் எல்லாம் கதைப்பரப்புக்குள் வரவே மாட்டார்களா.

தினம் இரவு நேரங்களில் எல்லாப்பெரு நகரங்களிலிருந்தும் பதின்மூன்றிலிருந்து பதினெட்டு வயதுக்குட்பட்ட எம் தேசத்து இளம் பெண்கள் கோவை திருப்பூர் பின்னலாடை ஆலைகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்களே அது எப்படித் தப்பிப்போகிறது. அவர்கள் தங்களின் வசந்தகாலத்தை பணியன் கம்பெனிகளில் தொலைக்கிறபோதே கூடவே இந்த தேசத்தின் தொழிலாளர் நலச் சட்டங்களையும் சேர்த்துத் தொலைக்கிறார்கள். விடிந்தும் விடியாத பொழுதுகளில் எம் கிராமத்துத் தாய்மார்கள் வேலிச்செடி தேடி காலைக்கடன் கழிக்கப் போவது பிரச்சினையில்லையா?. கடனை அடைக்க வயிற்றைக்கழுவக் கிட்னி விற்கிற பெண்கள் யாரும் பெண்களில்லையா? தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராசிமன்றங்களில் பெண் தலைவர்களைத் திரும்பவும் தள்ளிவிட்டு விட்டு தங்களின் கணவன்மார்கள் உட்க்கார்ந்துகொண்டு மீசை திருக்குகிறார்களே அது இந்த ஊடகத்துக்குத்தெரியவில்லையா. இவை யாவும் இயல்பாகவா நடக்கிறது இந்தப்புறக்கணிப்பு சூழ்ச்சியில்லையா. அதோ நெல்லை மாவட்டம் சன்கரன் கோவில்தாலுகா நக்கலமுத்தன் பட்டியில் ஒரு விதவைப் பெண் வயதுக்கு வந்த தன் மகளோடு உட்கார்ந்து கொண்டு இந்த உலகத்தை வெறித்துப்பார்த்தபடியிருக்கிறார்களே அது கூட எப்படித் தப்பிப்போகிறது.

நக்கலமுத்தன் பட்டி ஒரு கிராமம் விவசாயம் பெருத்த நாயக்கர் ஜாதி வாழும் அந்த ஊரில் உள்ள அருந்ததிய அடிமைகளில் ஒருகுடும்பம் அது. திருப்பதி நாயக்கரின் மனைவி ரெஜினா மேரி முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவி. நடந்து முடிந்த தேர்தலில் அந்த பஞ்சாயத்து தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதால் தனது அடிமைகளில் ஒருவரும் அந்த பஞ்சாயத்தில் துப்புறவு பணிபார்த்தவருமான ஜக்கனை தனது பினாமியாக நிறுத்திய திருப்பதி மனைவியிருந்தபோது சம்பாதித்த மாதிரியே அடிமையை வைத்தும் சம்பாதிக்க ஆசைகொண்டு தேர்தலில் முதலீடு செய்தான். இது அங்கு மட்டுமல்ல எங்கெங்கே பெண்களுக்கும் தலித்துகளுக்கும் உள்ளாட்சிப்பதவிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் இதுதான் நிலை. அரசியல் சாசனம் தலித்துகளையும், பெண்களையும் மேலே தூக்கிவிட நினைக்கிறது, ஆனாதிக்கமும் மேலாதிக்கமும் நிறைந்த ஜாதிவெறியும் பலவந்தமாகக் குறுக்கே படுக்கிறது.

ஜெயித்து வந்த ஜக்கன் அரசியல் அதிகாரத்தை தானே பயன்படுத்த நினைத்தார், அதனால் சுயேச்சையாக நிர்வாகம் நடத்துவதற்கு பழைய கணக்குகளைக் கேட்டார். அதனாலேயே ஒரு அதிகாலையில் நடு ரோட்டில் பல பேர் முன்னிலையில் ஜக்கன் அடித்துக்கொல்லப்பட்டார். நடுரோட்டில் வாகனத்தில் அடிபட்ட நாய்க்குக் கிடைகிற அனுதாபம்கூட ஜக்கனுக்கு கிடைக்கவில்லை. நாய்களுக்குள் ஜாதியில்லை. விதவையானாலும் வெள்ளாடை உடுத்தாத அந்த பாப்பா என்கிற ஆறுமுகத்துக்கு ஒரு ஜாதியிருக்கிறது. அது மனித வாழ்கை வாழ முடியாமல் தடுக்கப்பட்ட ஜாதி. நானூற்றி ஐம்பத்தாறு ஜாதிகளடங்கிய தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதர்கள். நடந்து முடிந்த பஞ்சாயத்துதேர்தலில் மேலாதிக்கத்திமிரும், ஒடுக்குமுறையும் காவுகொண்டுபோனது. மலினப்பட்டுப்போன லட்சோப லட்சம் உயிர்களில் ஒன்றாகிப் புதைந்து போனது ஜக்கனின் கணவுகள். இருந்த பத்துக் குடும்பத்தில் ஒரு குடும்பம் சிதைந்துவிட்டது.
மீதமிருக்கிற எண்ணிக்கை எப்படி நம்பிக்கையத்தரும். அவர்களது பயத்தின் மேல் இன்னொரு பயங்கரத்தை ஏற்றிவைத்திருக்கிறது ஜாதியக்கட்டுமானம்.

இது சாதாரணக் கொலையல்ல ஒரு சமூக நீதியை அமல்படுத்துவதற்கு எதிரான கொடூர வண்முறை. எல்லோரும் சமம் என்னும் கருத்துக்கு எதிரான சவால். இந்தச்சவாலுக்கு ஊடகங்கள் என்ன பதில் வைத்திருக்கிறது,
சோப்பு சீப்பு கண்ணாடி விற்கிற வேலையைத்தவிர கேடுகெட்ட ஊடகமே சீரியலே உனக்கேதும் தெரியாதா. பெப்சி, ப்ரக்டர் அண்ட் கேபிள் இந்துஸ்தான் லீவர் நிறுவனங்களுக்கு விற்பனைப் பிரதிநிதியாவதற்கு மட்டும்தானா நண்பர்களே உங்களுக்கு கதாசிரியர், இயக்குனர் என்கிற பட்டமெல்லாம் ?.

Series Navigation