தைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

மதுமிதா


இனிய நண்பர்களே!
ஆழமான இருள் சூழ்ந்த கிணற்றில் அடியில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன விதமான உலகைப் பார்ப்பீர்கள்?
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு சிறிய தவளை ஆழமான இருள் சூழ்ந்த கிணற்றில் அடியில் வசித்து வந்தது. நாமும் கீழே போய் அது என்ன விதமான வாழ்க்கை வாழ்கிறது என்று பார்த்து வருவோம் வாருங்கள்.

இது ஒரு பழைய கிணறு. ரொம்பவும் குறைந்த தண்ணீரே ஆழத்தில் இருந்தது. கிணற்றின் சுவர்கள் பச்சைப் பாசியால் மூடப்பட்டிருந்தன.
குட்டித் தவளை தாகம் எடுத்தால் கொஞ்சம் கிணற்றுத்தண்ணீர் குடித்துக் கொண்டும், பசித்தால் சின்ன பூச்சிகளை சாப்பிட்டுக்கொண்டும்
இருந்தது. களைப்படைந்தால் கிணற்றின் அடியில் இருந்த ஒரு கற்பாறையில் ஓய்வெடுத்து, மேலே ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் கடந்து செல்லும் மேகங்களைப் பார்க்கும். மிகவும் மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் இருந்தது குட்டித் தவளை.

குட்டித் தவளை பிறந்ததிலிருந்து கிணற்றின் அடிப்பாகத்திலேயே இருந்தது. ஒருபோதும் அது வெளியுலகைப் பார்த்ததில்லை. எப்போதேனும் ஒரு பறவையோ அல்லது பறவைகளோ கிணற்றுச் சுவரின் அருகே வந்தால் உடனே மேலே பார்த்து குட்டித் தவளை பெருமையுடன் பேச ஆரம்பிக்கும்,
“ஹலோ! கீழே வந்து என்னுடன் விளையாடினால் என்ன! இங்கே இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். பாருங்கள். குளிர்ந்த நீர் குடிப்பதற்கு இருக்கிறது. உண்பதற்கு கணக்கில்லாது பூச்சிகள் கிடைக்கின்றன. கீழே வாருங்கள். இரவில் நான் மின்னும் நட்சத்திரங்களைப் பார்ப்பேன்; சில சமயங்களில் அழகிய நிலவையும் பார்ப்பேன்.”

சிலநேரங்களில் பறவைகள் தவளையிடம் சொல்லும், “ஹேய்! குட்டித் தவளையே! வெளியுலகம் இன்னும் பெரியது; உன்னுடைய சிறு கிணறை விட பல மடங்கு அழகானது.”

ஆனால் குட்டித் தவளை அவற்றை நம்பவில்லை. “பொய் சொல்லாதீர்கள். இதைவிட சிறந்த இடம் ஒன்று இருப்பதை நான் நம்பவே மாட்டேன்”
என்று சொல்லும் குட்டித்தவளை.

நாளாக ஆக அனைத்து பறவைகளும் குட்டித் தவளையை வெறுத்தன. வலிமையாக குட்டித் தவளை அடம் பிடிக்கிறதென்று அதனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டன.

குட்டித் தவளைக்கு ஏன் ஒருவரும் இந்த அழகிய இடத்துக்கு வர விரும்பவில்லை என்று புரியவேயில்லை.

ஒரு நாள் மஞ்சள் சிட்டுக் குருவி ஒன்று கிணற்றின் சுவரருகில் வந்தது. மிகுந்த மகிழ்வுடன், ஆர்வத்துடன் தவளை அதனை வரவேற்றது. “ஹலோ! மஞ்சள் குருவி. எப்படி இருக்கிறாய்? எனது அழகிய வீட்டுக்கு தயவு செய்து வாயேன்” என்றது.

மஞ்சள் குருவி எதுவும் சொல்லாமல் பறந்து விட்டது. மறுநாள் அப்பறவை மறுபடியும் வந்தது. மறுபடியும் இதுவே நிகழ்ந்தது. ஆறு நாட்கள் இப்படியே தொடர்ந்தது.

ஏழாவதுநாள் மஞ்சள் குருவி சொன்னது, “குட்டித் தவளையே! நான் உனக்கு வெளியுலகைக் காட்டட்டுமா?”
ஆனால் குட்டித் தவளை உடனே மறுத்துவிட்டது.

மஞ்சள் குருவி கோபம் அடைந்தது. கிணற்றின் ஆழத்துக்குப் பறந்தது. தனது முதுகில் குட்டித் தவளையைச் சுமந்து கிணற்றுக்கு வெளியே பறந்து வந்தது.

“அய்யோ!” வியந்தது குட்டித் தவளை. “இவ்வளவு பெரிதா வெளியுலகம்!”

பலநாட்கள் கிணற்றின் அடியிலேயே இருளிலேயே வசித்ததால், பிரகாசமான சூரிய ஒளியில் அதனால் கண்களைத் திறக்கவே இயலவில்லை.
பிரயாசைப்பட்டு கண்களைத் திறந்து பார்த்தது.

கடைசியில் கண்களைத் திறந்து பார்த்ததும், அதனால் பலவற்றைப் பார்க்க முடிந்தது. “ஹேய்! ஜாக்கிரதை! இதில் இடித்து விடாதே. பச்சையாக உயரமாகவும், தாழ்வாகவும் இருக்கும் இவைகள் என்ன?”

மஞ்சள் குருவி மகிழ்வாய் சிரித்தது. “ஹா!ஹா1ஹா! இவை மலைகளும், பள்ளத்தாக்குகளும். இமயமலை, சுவிஸ் ஆல்ப்ஸ் மலை, ராக்கிஸ் மலை ……… என்று எண்ணிலடங்கா மலைகள் இந்த உலகில் இருக்கின்றன.”

குட்டித் தவளையால் இவ்வுலகில் இவ்வளவு பெரிய மலைகள் இருப்பதை நம்பவே முடியவில்லை. பெரிய மலைக்குமேல் பறக்கையில் தெரிந்த அந்தக்காட்சி குட்டித்தவளையை மேலும் வியக்கச் செய்தது.

“இதென்ன நீண்ட வெள்ளியாய் மினுங்கும் காட்சி?”

“இது ஏரி” மஞ்சள் குருவி பதிலளித்தது.

“அப்படியென்றால் அந்த மிகப் பெரிய நீல நிறமாயிருப்பது என்ன?”

“அது கடல்.” மஞ்சள் குருவி பதிலளித்தது.

“அந்த கடலும் ஏரியும், எவ்வளவு தண்ணீர் கொண்டிருக்கின்றன? இவை எவ்வளவு பெரியவை என்னுடைய கிணற்றைவிட? பல கோடி மடங்கு அதிகமான தண்ணீரையல்லவா கொண்டிருக்கின்றன என்னுடைய கிணற்றைவிட.”

தன்னுடைய கிணறு எவ்வளவு சிறியது என்பதை உணர ஆரம்பித்தது குட்டித் தவளை.

“நாம் கீழே செல்லலாம். என்ன?”

மஞ்சள் குருவி தவளையை கீழே விட்டுவிட்டு பறந்தது.

குட்டித் தவளை புல்வெளியில் குதித்தது; பல்வேறு நிறங்களில் உள்ள பல அழகிய மலர்களைக் கண்டது. இதுவரை இத்தகைய அழகிய மலர்களைக் கண்டதும் இல்லை. இனிமையான நறுமணத்தை நுகர்ந்ததும் இல்லை. அப்படியே செல்லச் செல்ல காடைச் சென்றடைந்தது. காட்டில்
பல உயர்ந்த மரங்களைக் கண்டது. கீழே விழுந்து கிடந்த பலவித கனிகளையும் கண்டது.

ஒரு ஆப்பிள் பழம் எடுத்து ருசித்துப் பார்த்தது.
“வாவ்! என்ன ஒரு இனிப்புச் சுவை!”

பறவைகளின் இனிய இசையைக் கேட்டது. அழகிய அணில்கள் குதித்தோடிச் சென்றன. குரங்குகள் கிளைக்குக்கிளை தாவிச் சென்றன.
மான்கள் வேகமாய் விரைந்தோடின.

குளத்தில் தாமரை மலர்கள் காற்றில் அசைந்தாடின. தாமரை இலைகள் குளத்து நீரில் குடைகளாய் மிதந்தன. நீரில் பல மீன்கள் இருந்தன.

“வெளியுலகம் மிகப் பெரியது, மிக அற்புதமானது, மிகவும் அழகானது!” குட்டித் தவளை மகிழ்ச்சியில் உரத்துக்கூறி குளத்தில் குதித்தது.
பெரியதொரு தாமரை இலையில் ஏறி புது வாழ்க்கையை அனுபவித்தது.

மறுபடி வந்த மஞ்சள் குருவி தவளையிடம் கேட்டது, “குட்டித் தவளையே! வெளியுலகம் எப்படி இருக்கிறது. பெரியதாய்? இல்லை. அழகானதாய்?”

“நன்றி. ரொம்பவும் நன்றி மஞ்சள் குருவி. நீ என்னை வெளியுலகுக்கு அழைத்து வரவில்லையென்றால், எனக்கு இவ்வளவு அழகிய விஷயங்கள்
கிணற்றுக்கு வெளியே இருப்பது தெரியாமலேயே போயிருக்கும்.”

குட்டித் தவளை அதற்குப் பிறகு தனது பழைய கிணற்றுக்குப் போக விரும்பவேயில்லை.


madhuramitha@gmail.com

Series Navigation