தெரு நாய்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

அருண் கொலட்கர் – ( மொழியாக்கம் இரா.முருகன் )


—-
1

நகர்ந்து போகும் நாளில்
எனக்குப் பிடித்த பொழுது இது.
இந்த நேரத்தில்
நகரமே என்னுடையது.

போக்குவரத்துச் சந்திப்பின் மத்தியில்
இப்படிப் படுத்துக் கிடப்பது தவிர
விருப்பமான காரியம் ஏதுமில்லை.

(அதாவது இந்த மு.போ.தீவில் –
மும்முனைப் போக்குவரத்துத் தீவு.
ஓரம் வளைந்த மூன்று முனைகள்.)

வேலை நாட்களில் இந்த இடம்
ஐம்பது சொச்சம் கார்களை
அடைத்து வைக்கும் பட்டி.

காலைப் பொழுதில் தீவு
வெறுமையாகக் கிடக்கிறது.
பூமியில் இப்போது புத்தியுள்ள சீவன்
என்னைத் தவிர வேறேயில்லை.

என் வயிற்றுக்குக் கீழே
கரடுமுரடாக, தட்டையாக,
தணுத்துக் கிடக்கும்
கான்கிரீட் நடைபாதை.
முன்னங்கால் மடிப்பில் என் தாடை.

நான் படுத்திருக்கும் இடத்துக்கு
நேர்மேலேதான்
குதிரைவீரன் சிலை –
பேர் என்னமோ சொல்வார்களே –
அங்கே தான் இருந்தது ஒரு காலத்தில்.
இல்லை, என் கற்பனையோ என்னவோ.

2

ஏழு தீவுகள் சேர்ந்த பம்பாய் நகரின்
பதினேழாவது நூற்றாண்டு வரைபடம் போல
நான் ஒரு சாயலுக்கு.

இன்னும் இணையாத ஏழு தீவுகள்.
பழைய பழுப்புக் காகிதம் போன்ற உடம்பில்
அட்டைக் கருப்பாக வரைந்தவை.

என் நெற்றியில் கிழவித் தீவு.
புட்டத்தில் மாஹிம்.
மற்றவை என் நெஞ்சிலும்
பின்னங் கழுத்திலும்,
அடிவயிற்றிலும் இடுப்பிலும்
சாவதானமாக விரிந்தவை.

வரைபடக் கலைஞன் தயாரித்த
துல்லியமான படம் இல்லை.
கடற் கொள்ளைக்காரன்
உத்தேசமாக எழுதி வைத்திருப்பது.

3

என் வம்சாவளியை நினைத்துப் பார்க்கிறேன்.
ஆதாரம் ஏதும் இல்லை என்றாலும்.
வலுவான குடும்பப் பின்னணி எனக்கு.

அம்மா வழியில் மூத்த பெண்டு
கடினமான சூழ்நிலையையும் சகித்து
உயிரோடு இருந்த ஒரே பெண்நாய்.

முதலாவதாக ஒரு நீண்ட பயணம்.
அப்புறம் இந்த ஊரின் மோசமான வானிலை.
ரெண்டும் சேர,
கூட வந்த மற்ற முப்பது
வேட்டை நாய்களும்
இறந்து போயின.

என்னமோ இந்த ஊருக்கு
நரிவேட்டை இல்லாததுதான் குறைச்சல் என்று
பம்பாயில் நரிவேட்டையை அறிமுகப்படுத்தக்
கிறுக்குத்தனமான திட்டம் போட்டு
பார்ட்டில் பெரேர் துரை
ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து நாலாம் வருடம்
இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்தவை அவையெல்லாம்.
.

4

அப்பா வழியில் என் வம்சம்
தருமபுத்திரரோடு கூடப்போன
நாய் வழிவந்தது.

முதலில் பாஞ்சாலி. அப்புறம் சகாதேவன்.
தொடர்ந்து நகுலன். அர்ச்சுனன்.
கடைசியில் பீமன்.

எல்லோரும் வழியிலேயே விழுந்து இறக்க,
பின்னால் நாய் மட்டும் தொடரத்
தட்டுத்தடுமாறி அடியெடுத்து வைத்தான் தருமன்.

இமயத்தின் குளிர்த் தரிசுகளூடே
ரணமாகப் பிடுங்கும் உறைபனியும்
பார்வையை மறைக்கும் பனித்திரையுமாக
பசியால் தலை கிறுகிறுத்துச்
சுவாசம் முட்டி
மயங்கி விழுந்து மரிக்கும் நிலையில்
பறக்கும் தேர் ஒன்று
அவனுக்கு உதவியாக வந்து சேர்ந்தது.

சொர்க்கத்துக்குக் கூட்டிப்போக வந்த
ஆகாய விமானத்தில்
நாயை அனுமதிக்காவிட்டால்
நானும் ஏறமாட்டேன் என்று
தீர்மானமாகச் சொல்லிவிட்டான் அந்தப் புண்ணியவான்.

ஆக, பதிவான வரலாற்றில்
சொர்க்கம் போன ஒரே நாய்
என் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் தான்.

5

நாயின் மேல் மனிதன் கொண்ட
கூடுதலான பக்திக்கு
எடுத்துக்காட்டு வேணுமென்றால்
வரலாற்றை விட்டு வெளியே வரணும்.

சில ஆயிரம் வருடம் தாண்டி வந்தால்
அறிவியல் புனைகதை ஒன்று கிட்டும்.
ஹர்லான் எல்லிசனின் ‘ஒரு பையனும் அவன் நாயும் ‘.

உலக நாய் வர்க்கத்தின்
தத்துவப் புத்தகம்.
அதில் வரும் பையனுக்கு
எசமானன் ஒரு நாய்.
காதலியைப் பலியிட்டு
பசியால் வாடும் எசமான நாய்க்கு
விருந்து வைப்பான் பையன்.

6
உ என்று கூப்பிடுவார்கள் என்னை.
வெறுப்போடு விரட்டுகிற
ஓரெழுத்து வசவில்லை.

உபநிடம் என்பதில் முதல் எழுத்தான உ.
உகேகலிகாடு என்ற பெயரின் சுருக்கம்.
நாலு வேதமும் தலைகீழாகச் சொன்ன
பழையகால நாயின் பெயர் அது.

வேதம் பற்றிய என் அறிவு குறைவு.
பத்தாயிரத்து ஐநூற்று ஐம்பத்திரெண்டு
பாடல் கொண்ட ரிக்வேதத்தில்,
அறுபத்திரெண்டாம் பாடலில்
பத்தாவது மந்திரம்
மட்டும் தெரியும்.
காயத்ரி யாப்பில் அமைந்தது.

ஓம் தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன ப்ரசோதயாத்.

முதலில் வரும் ஓம் சேர்த்து
சரியாக இருபத்துநாலு சீர்.
இதுக்கு அர்த்தம் மட்டும்
தயவு செய்து கேட்காதீர்கள்.

சூரிய தேவனுக்குச் சொல்லும் வந்தனம்
என்பதும் மட்டும் எனக்குத் தெரியும்.

சூரியன் உதிக்கக் காத்துக் கொண்டு
நான் படுத்துக் கிடக்கும்
இந்தக் காலை வேளையில்
சொல்ல ஏற்ற மந்திரம் இது.
அவன் என் மனதின் ஆற்றலை
அதிகப் படுத்தட்டும்.

7

அங்கங்கே கட்டை பெயர்ந்து விழுந்த
வாசிப்புப் பலகையாகப்
கான்க்ரீட் கட்டிகள் எல்லை வகுக்கும்
போக்குவரத்துச் சந்திப்பே
தனிப் பெரும் இசைவெளியாகத்
தரையை அணைத்தபடி
மடிந்த முன்காலில் தாடையை இருத்தி
விழியால் சுருதி மீட்டி
மகோன்னத இசைப் படைப்பை
உருவாக்கிக் கொண்டிருக்கிற
இந்த இடமும் நேரமும்
எனக்குப் பிரியமானவை.

பியானோவில் இசைக்க ஏற்ற
முப்பிரிவு இசைமாலை.
சளசளக்கும் பறவையின் சங்கீதம்,
மருத்துவமனை ஊர்தியின் சங்கொலி,
துளைபோடும் கருவியின் சத்தம்
மூன்றும் தூண்ட எழுந்த படைப்பு.

சரியாகப் பார்க்க முடியாவிட்டாலும்
விழியால் கான்க்ரீட் வாசிப்புப் பலகையில்
கட்டைகளை வருடித் தடவி வாசிக்கும்
கருப்பும் வெள்ளைக் கலைஞன் நான்.

8

நான் இசைக்கும்போது
அடையாள எண் இட்ட ஒவ்வொரு கல்லாக
இந்த நகரம் திரும்ப எழும்புகிறது.

ஒவ்வொரு கல்லும்
தன் சகோதரர்களைத் தேடுகிறது.
சுற்றத்தோடு சேருகிறது.

ஒவ்வொரு விரிசலும்
தன் படவுக் கல்லுக்குத் திரும்புகிறது.
எல்லாத் தவறும் மன்னிக்கப் படுகிறது.

மரங்கள் தாமாகவே வந்து
இலைகளின் கணக்கை
ஒப்பிக்கத் தயாராக நிற்கின்றன.

காவலனைப் பார்த்ததும்
திருடிய நகைகளை
விட்டுவிட்டு ஓடும்
அனுபவம் இல்லாத திருடன் போல்

பறக்கும் விதைகள் கொண்ட
குடலையை வழியோரம்
கவிழ்க்கிறது தேவதாரு மரம்.

ராத்திரி குடித்துக் கும்மாளமிட்டு
செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு
வீட்டுக்குள் நுழையும் கணவன் போல்
மாதாகோவில் காலடிச் சத்தமின்றித்
தன்னிடத்துக்குத் திரும்புகிறது.

பல்கலைக் கழகம்
எப்போதும் வழிதவறிப் போவதில்லை
என்பது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகலாம்.
ஞாபக மறதி இருந்தாலும்
சட்டைப்பையில் தன் விலாசத்தை
அது எப்போதும் வைத்திருக்கிறது.

9

என் மூக்கு விடைக்கிறது.
சந்தனமும், வெகுளித்தனமும்,
மெல்லிய வியர்வை நெடியும்
நகச் சாயமும் மரவாடையும்,
ஒப்பனைக் குழம்பு வாசனையும்
பலவண்ண மணமாக
கொளுத்திப் போட்ட பூத்திரிபோல்
விறுவிறுத்து நாசியில் ஏறுகிறது.

வழக்கம்போல் வயலின் வகுப்புக்குத்
தாமதமாகி, போக்குவரத்துச் சந்திப்பின்
குறுக்கே விரைந்து நடக்கும்
இளம் பெண்ணின் அழகான கால்கள்.

என் நிம்மதியான ஓய்வு
முடியப் போகிறதென்று எச்சரிக்கை.

இந்த நகரத்தை
அதன் எசமானர்கள் என்று
சொல்லப்படுகிறவர்களிடம்
நான் ஒப்படைக்க வேண்டிய நேரம்
வந்து கொண்டிருக்கிறது.

அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – Pi-dog
மொழியாக்கம் இரா.முருகன் டிசம்பர் ’04

gayatri metre –

The Gayatri Mantra iswritten in vedic-metre called ‘gayatri’. Thegayatri-metre is generally constituted of threelines of eight syllables each. Sometimes, thethree lines of a mantra written in gayatri metre,is preceded by pranava and vyahrtis.

Series Navigation